அரசர்கள் வாழ்வில் நடந்த மாபெரும் ஏமாற்றம்

bookmark

முன்னொரு காலத்தில் பானுசாசன் என்ற மன்னன் ஆசியாவின் பெரும் நிலப்பரப்பை ஆண்டு வந்தான். அதில் சீனாவின் பல பகுதிகள், இந்தியாவின் சில பகுதிகள், மற்றும் இன்றைய பாகிஸ்தான் முதல் உச்பேகிஸ்தான் வரையிலான பெரும் நிலப் பரப்புகள் ஆகிய அனைத்தும் அடங்கி இருந்தது. இதன் காரணமாக அந்தக் காலத்தில் பானுசாசன் பேரரசனாகக் கருதப்பட்டார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவர் பெயர் ஷாரியர், இளையவர் பெயர் ஷாஜமான். இந்த அண்ணன் தம்பிகள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் பாசத்துடன் நடந்து கொண்டனர். இவர்களுக்குள் என்றுமே பிரிவினை வந்தது இல்லை. அதை நினைத்து பானுசாசனே பல முறை பெருமை பட்டு உள்ளார். தனது காலத்திற்குப் பிறகு தனது ராஜ்ஜியம் தனது பிள்ளைகளால் நிச்சயம் காக்கப்படும் என்று நம்பினார்.

பானுசாசனுக்கு வயோதிகம் நெருங்கிக் கொண்டு இருந்தது. அதன் காரணமாக உடல் அசௌக்கியம் ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். மரணப் படுக்கையில் கூட தனது பிள்ளைகளை அழைத்து அவர்களுக்கு பல அறிவுரைகள் கூறினார். பிறகு "சாமர்கண்ட்" என்ற நாட்டை ஷாஜமானுக்கு கொடுத்தார். அத்துடன் அந்தப் பகுதிகள் முழுவதும் இளையவருக்கு பிரித்துக் கொடுத்தார். பிறகு ஷாரியருக்கு சீன தேசம் மற்றும் இந்திய தேசத்தின் பகுதிகள் அனைத்தையும் கொடுத்தார். இருவரும் தங்கள், தங்கள் பகுதிகளை நல்ல படியாக ஒற்றுமை குலையாமல் ஆட்சி செய்வதாக ஒப்புக் கொண்டனர். அதைக் கேட்ட சந்தோஷத்திலேயே பானுசாசன் இறைவன் அடி சேர்ந்தார்.

தங்களது தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடன்கள் அனைத்தையும் செய்து முடித்த சகோதரர்கள் இருவரும் தந்தை தங்களுக்கு வழங்கிய நாடுகளை நல்ல முறையில் ஆளுவதற்குப் புறப்பட்டனர். அன்றைய தினம் முதற்கொண்டு அவ்விருவரும் தந்தை தனி ஒருவராக கட்டிக் காத்த ராஜ்யத்தை இருவராக நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தனர். எனினும் ராஜாங்க விஷயமாய் ஒருவரை, ஒருவர் சந்திக்கவே முடியாமல் போயிற்று. அப்படியே ஏறக்குறைய இருபது வருடங்கள் கழிந்தது. இந்த நீண்ட இடைவெளி தம்பியை விடவும் அண்ணன் ஷாரியரையே அதிகம் பாதித்தது.

தம்பியைக் காண வேண்டும் என்ற ஆவல் ஷாரியருக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இனியும் தம்பியைக் காணாமல் இருக்க முடியாது என்ற நிலையில் தனது அமைச்சரை அழைத்து எண்ணற்ற பரிசுப் பொருட்களுடன் தனது தம்பி ஷாஜமானை சமர்கண்ட் சென்று சந்தித்து உடனே அழைத்து வருமாறு கூறினார். அத்துடன் தனது அமைச்சரிடம், "எனது அன்புத் தம்பி வர மறுப்பான் தான். ஏன்? இத்தனை நாட்களாக அண்ணனுக்குக் கூட என்னைப் பார்க்கத் தோன்றவில்லையே என்ற கோபம் கூட அவனது மனதில் இருக்கலாம். அதையெல்லாம் நீர் சமாதானப்படுத்தி அவனை எப்படியாவது இங்கு அழைத்து வர வேண்டும். இது எனது ஆணை" என்றார்.

அந்த அமைச்சரும் எண்ணற்ற விலை உயர்ந்த பரிசுப் பொருட்களுடனும், அதனைப் பாதுகாக்க ஒரு பெரும் படையுடனும் சமர்கண்ட் கிளம்பினார். செல்லும் வழி நெடுக அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. பேரரசரின் அமைச்சர் என்றால் சும்மாவா என்ன?

பல நீண்ட பயணத்துக்கு பிறகு சமர்கண்ட் பகுதியை அடைந்தார் ஷாரியரின் அமைச்சர்.

தனது அண்ணனின் அமைச்சர் தன்னைக் காண வந்துள்ளார் என்ற செய்தியைக் கேட்ட ஷாஜமான் மிகவும் மகிழ்ந்தார். விரைந்து சென்று அனைத்து மரியாதைகளுடன் அந்த அமைச்சரை ராஜிய சபைக்கு அழைத்து வந்தார். அமைச்சர் வந்த நோக்கத்தை அறிந்த ஷாஜமான் மிகவும் சந்தோஷம் அடைந்தார். பிறகு அவரது மனதிலும் அண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் எழுந்ததால், அண்ணனின் அமைச்சருடனையே தான் புறப்பட்டு செல்வதாக ஒரு குறிப்பிட்ட நாளை அறிவித்தார்.

பிறகு தனது அண்ணனின் அமைச்சரையும் அவருடன் வந்த பரிவாரங்களையும் நன்கு கவனித்தார் ஷாஜமான். ஒரு அற்புதமான மாளிகை ஒன்றில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர். அங்கு ஆடல், பாடல் என மகிழ்ந்து திளைத்தனர்.

மறுபுறம் தனது அமைச்சரை அழைத்த ஷாஜமான், தனது அண்ணனை சந்திக்கும் சமயத்தில் அவர் தனக்கு அளித்த பரிசுப் பொருட்களை விட விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை உடனே தயார் செய்யுமாறு ஆணை பிறப்பித்தார். அதன் படி அனைத்துப் பரிசுப் பொருட்களும் உடனுக்குடன் தயார் செய்யப்பட்டது.

இப்படியாக அண்ணன் ஷாரியரைக் காணப் புறப்பட்டுச் செல்லும் அந்த நாளும் வந்தது. தனது அமைச்சரை ராஜ்யத்தை கவனித்துக் கொள்ளுமாறு கூறி விட்டு, பரிசுப் பொருட்களுடன் அண்ணனின் அமைச்சரை அழைத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார் ஷாஜமான். சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு இரவு வேளை வந்ததால், ஷாஜமானின் உத்தரவுப் படி கூடாரம் அமைக்கப்பட்டு அனைவரும் ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்கினார்கள். ஷாஜமானும் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். திடீர் என தனது அண்ணனுக்கு கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்களில் ஒன்றை அரண்மனையிலேயே வைத்து விட்டு வந்ததை ஷாஜமான் உணர்ந்து கொண்டார். உடனே அரண்மனைக்குச் சென்று அதனை எடுத்து வரத் தீர்மானித்தார். அதன் படி புறப்பட்டும் சென்றார்.

ஷாஜமான் அந்தப்புரத்தை அடைந்தார். அங்கு தான் அண்ணனுக்கு அளிக்க வேண்டிய அந்த விலை உயர்ந்த பரிசை அவர் வைத்து இருந்தார். ஷாஜமான் சென்ற நேரம் அந்த அந்தப்புரமே அமைதியாக இருந்தது. எனினும், அமைதியான அந்த அந்தப்புரத்தில் ஷாஜமான் கண்ட காட்சி அவரது உள்ளத்தையே நொறுங்க வைத்தது.

அந்தப்புரத்தில் அவருடன், அவரைத் தழுவிய வண்ணம் இருக்க வேண்டிய அவரது மனைவி (அதவாது அந்த நாட்டு மகாராணி) ஒரு சமையல்காரனுடன் உல்லாசமாகக் கிடந்தாள். இது ஷாஜமானின் உள்ளத்தை நொறுக்கியது. உடனே கோபம் பொங்க அந்த அந்தப்புரத்துக்குள் ஷாஜமான் நுழைந்தார். அவர் வந்ததைக் கூட கவனிக்காமல் இருவரும் சந்தோஷத்தில் சங்கமித்துக் கொண்டு இருந்தனர். ஷாஜமான் தனது வாளை எடுத்து அவர்கள் இருவரையும் பார்த்த அந்த இடத்திலேயே கண்டம் துண்டமாக வெட்டி எறிந்தார். பிறகு தன்னுடைய அந்தரங்கச் செயலாளரை மட்டும் அழைத்து அந்தப் பாவிகள் இருவரின் பிணங்களையும் இரவோடு இரவாக அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று கூறி விட்டுத் தாம் எடுக்க வந்த பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு மீண்டும் பழையபடி கூடாரத்தை அடைந்தார்.

எனினும் கூடாரத்தை அடைந்த பிறகும் கூட ஷாஜமானின் மனம் கலங்கித் தவித்தது. தனது அன்பு மனைவிக்குத் தான் எந்தக் குறையும் வைக்கவில்லையே, பிறகு ஏன் அவள் இப்படி நடந்து கொண்டாள் என தனக்குத் தானே பல முறை கேட்டபடி நொந்து கொண்டார். அதனால், ஒரு கட்டத்தில் அவருடைய உடலும் கெட்டு விட்டது. அன்றைய இரவு அவர் தூங்க முயற்சி செய்தும் கூட அவரால் தூங்க முடியவில்லை. அந்த ஏமாற்றத்தை ஷாஜமானால் தாங்கவே முடியவில்லை.

பிறகு அடுத்த நாள் காலையும் பயணம் தொடர்ந்தது. செல்லும் வழியில் எண்ணற்ற தங்குமிடங்களை முன்பே திட்டமிட்டு அமைத்தபடி ஷாரியரின் அமைச்சர் ஷாஜமானை அழைத்துச் சென்று விட்டார்.

இவ்வாறாக ஷாஜமான் அண்ணனின் ராஜ்யத்தை அடைந்தார். அங்கு தலை நகரில் அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. ஷாரியருக்கு தனது அருமைத் தம்பி வந்து விட்ட செய்தி கிடைத்தது. உடனே விரைந்து அவ்விடம் வந்தார். அத்துடன் சகல மரியாதைகளுடன் தனது தம்பியை அழைத்துக் கொண்டு ராஜ மாளிகையை அடைந்தார். எனினும், வந்து சேர்ந்த நிமிடம் முதல் ஷாஜமானின் முகத்தில் ஒரு வருத்தம் நிழல் ஆடியது. அதனை உணர்ந்து கொண்ட ஷாரியர், தனது தம்பியிடம் இது பற்றிக் கேட்டார்.

ஆனால், அண்ணனிடம் நடந்த விவரத்தைக் கூறத் தயங்கிய ஷாஜமான். இது நீண்ட பயணத்தால் ஏற்பட்ட களைப்பு என்று கூறி ஒரு வழியாக சமாளித்து விட்டார். எனினும், ஷாரியர் தம்பியின் வார்த்தைகளை நம்ப வில்லை. காரணம் அவருக்குத் தனது தம்பியைப் பற்றி சிறு வயது முதற்கொண்டு தெரியும். அதனால், தம்பியின் வருத்தத்தைக் கண்டு தானும் மனதளவில் கலங்கினார். எனினும், விஷயத்தை ஆறப் போட்டுப் பிறகு கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்தார் ஷாரியர்.

பிறகு அண்ணன் ஷாரியருடன் அற்புதமான விருந்தை உண்டார் ஷாஜமான். தனது அருமைத் தம்பிக்கு எல்லா வசதிகளும் நிறைந்த ஒரு அற்புதமான மாளிகையைக் கொடுத்துத் தங்கச் செய்தார் ஷாரியர். அங்கு கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வர அழகிகளும், வேலையாட்களும் காத்துக் கொண்டு இருந்தனர். அழகிகள் அனைவரும் அரை குறை ஆடையுடன் தான் அங்கு காணப்பட்டனர். தம்பியை அந்த மாளிகையில் தங்க வைத்த பின் ஷாரியர் அந்த அழகிகளை அழைத்து தனது தம்பியின் மனதில் உள்ள குறையை நாசுக்காகக் கேட்டு அறிந்து கொள்ளுமாறு ஆணைப் பிறப்பித்தார். அந்த அழகிகளும் அரசர் கட்டளைக்குப் பணிந்தனர். அத்துடன் ஷாஜமானிடம் மிகவும் பக்குவமாக நடக்க முன்வந்தனர். ஆனால், ஷாஜமானின் மனதில் தான் வருத்தம் நிறைந்து காணப்பட்டது. அத்துடன் அவரது மனதில் தனது மனைவியை அணைத்தபடிக் கிடந்த அந்த சமையல் காரனின் முகம் தான் அடிக்கடி ஞாபகம் வந்தது. இந்த நிலையில் ஷாஜமானால் வேறு எந்த ஒரு பெண்ணுடனும் ஒட்டி உறவாட முடியவில்லை. அதனால், அந்த அழகிகள் செய்த எந்த முயற்ச்சிகளும் ஷாஜமானிடம் பலிக்க வில்லை.

இந்நிலையில் மன்னர் ஷாரியர் மூன்று தினங்களுக்குப் பிறகு அந்த அழகிகளை அழைத்து அவர்களிடம் விஷயத்தைக் கேட்டார். ஆனால், அவர்களோ," எதற்குமே உங்கள் அருமைத் தம்பி இடம் தரவில்லை, நாங்கள் தோற்றுப் போனோம், அவருக்கு ஏதோ பெரிய மனக் குறை தான் உள்ளது. அதனை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவர் இருக்கிறார்" என்றார்கள்.

பிறகு தனது தம்பிக்கு ஏதோ பெரிய மன நோய் தான் வந்து உள்ளது போல என நினைத்துத் தனது அரண்மனை வைத்தியர்களை அழைத்து மருத்துவம் பார்க்கச் சொன்னார் ஷாரியர். அவர்களும் ஷாஜமானுக்கு மனதை அமைதிப்படுத்தும் பல மருந்துகளை உணவில் கலந்து அவருக்குத் (ஷாஜமானுக்குத்) தெரியாமல் கலந்து கொடுத்தனர். ஆனால், அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இதனால் ஷாரியரின் அந்தத் திட்டமும் தோற்றுப் போனது.

பிறகு தனது தம்பியின் மனதை வேறு வழியில் திருப்ப யோசித்துக் கொண்டு இருந்தார் ஷாரியர். ஷாஜமானுக்கு வேட்டை ஆடுவது என்றால் அப்படி ஒரு பிரியம். அதன் படி தனது அமைச்சரை அழைத்துக் கானகம் சென்று வேட்டை ஆட அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் படியாகக் கூறினார் ஷாரியர். அதன்படியே வேட்டைக்கான அனைத்து ஏற்பாடுகளும் உடனுக்குடன் செய்யப்பட்டது.

ஷாரியர் தனது தம்பி ஷாஜமானை அவராகவே வந்து அன்புடன் வேட்டைக்கு அழைத்தார். ஆனால் ஷாரியர் வேண்டிக் கேட்டுக் கொண்டும் ஷாஜமான் வேட்டைக்கு செல்ல சம்மதம் தெரிவிக்க வில்லை. அதனால் ஷாரியர் வருத்தம் அடைந்தார். எனினும், வேட்டைக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டதால் ஷாரியர் தான் மட்டுமே வேட்டைக்குச் செல்ல முடிவெடுத்தார்.

இது ஒரு புறம் இருக்க, மன்னர் தனது அருமைத் தம்பியுடன் வேட்டைக்குத் திட்டம் இட்ட இந்த விஷயம் அனைவருக்கும் தெரியும். மாமன்னர் ஷாரியர் அவரது தம்பி ஷாஜமானுடன் மறு நாள் காலையில் வேட்டைக்கு செல்லப்போகிறார், அத்துடன் வேட்டை ஆடி முடித்து விட்டு சில தினங்களுக்குப் பிறகே சகோதரர்கள் இருவரும் திரும்பி வருவார்கள் என்ற விவரம் அனைவரையும் ஏற்கனவே சென்று அடைந்து இருந்தது.

எனினும் அடுத்த நாள் காலையில் தனது தம்பி ஷாஜமான் உடன் வராததால் ஷாரியர் மட்டும் வேட்டைக்குக் கிளம்பிச் சென்றார். ஆனால், எல்லோருமே மன்னர் தனது தம்பியை அழைத்துக் கொண்டு தான் சென்று உள்ளதாக நினைத்தனர். தவிர ஷாரியரும் வேட்டைப் பிரியர் தான். அவர் வேட்டைக்கு என்று கானகம் சென்று விட்டால் திரும்பி வர ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்பது அனைவருக்கும் தெரியும். ஷாரியரின் மனைவியும் கணவன் எப்போது கிளம்புவார் என்று தான் காத்துக் கொண்டு இருந்தாள். அதற்கு ஒரு காரணம் இருந்தது.

இந்நிலையில் அன்றைய இரவுப் பொழுதும் இனிதே வந்தது. ஷாஜமான் தன்னுடைய அறையில் இருந்தபடி, நிலா காய்ந்து கொண்டு இருந்த அந்த நள்ளிரவு வேளையில் சாளரத்தின் வழியாக வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் கண்ட காட்சி அவரது மனதை மீண்டும் ஒரு முறை பாதித்தது.

ஷாஜமான் கண்ட காட்சி இது தான்.

மன்னர் ஷாரியர் நாட்டில் இல்லாத அந்த வேளையில், அதிலும் அந்த இரவுப் பொழுதில் காரணம் இன்றி அரண்மனையின் ரகசிய வாயில் திறக்கப்பட்டது. அந்த இரகசிய வழியின் வழியாக ஒரு கருமை நிறம் கொண்ட அடிமை ஒருவன் தயங்கித், தயங்கி வந்தான். முதலில் ஷாஜமான் இவன் திருடத் தான் வந்து இருக்கிறான் என்று நினைத்தார். ஆனால், சிறிது நேரத்தில் மறு முனையில் கவர்ச்சியான ஆடையை அணிந்த படி ஷாரியரின் அன்பு மனைவி (அதாவது ஷாஜமானின் அன்பு அண்ணியார்) வந்தாள். ராணியும், அடிமையும் தோட்டத்தின் நடுவில் இருந்த நீராழி மண்டபத்தை அடைந்து சந்தோஷமாகவும், உல்லாசமாகவும் பொழுதைக் கழித்தனர். அதற்கு மேல் ஷாஜமானால் கூட அந்தக் காட்சியைக் காண முடியவில்லை. பிறகு விடிவதற்குள் அந்த அடிமையை ராணி பத்திரமாக அந்த ரகசியப் பாதை வழியாக அனுப்பி வைத்தாள். பிறகு ஒன்றும் அறியாதது போல சிரித்துக் கொண்டே அந்தப்புறம் சென்றாள்.

ஷாஜமான் இந்தக் காட்சியைக் கண்ட பின்னர் ஒரு வகையில் அண்ணனின் வாழ்வும் இப்படி ஆகி விட்டதே என்று நினைத்து வருந்தினாலும். மறுபுறம், 'பெரும்பாலும் எல்லா ராஜ குடும்பங்களிலும் இந்த அசிங்கம் இலை மறைவு, காய் மறைவாய் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது போல' என்ற முடிவுக்கு வந்தான். இதனால் அவனது மனம் சற்று ஆறுதல் அடைந்தது.

இவ்விதம் மேற்கண்டவாறு எண்ணிய ஷாஜமான். மறு நாள் முதற்கொண்டு தனது இயல்பு நிலைக்குத் திரும்பினான். இது தான் உலகம் என்று அறிந்தது போலப் பழைய படி உணவு உண்ணத் தொடங்கினான். இன்னும் சொல்லப் போனால் கொஞ்சம் மகிழ்ச்சியுடன் தான் காணப்பட்டான். அத்துடன் அவனாகவே அழகிகளை அழைத்து உல்லாச வாழ்க்கையை வாழத் தொடங்கினான்.

மறுபுறம் வேட்டைக்குச் சென்ற ஷாரியர் மீண்டும் தனது நாட்டுக்குத் திரும்பினான். தம்பியின் நிலை கண்டு ஆனந்தம் கொண்டான். 'எல்லாம் அந்த அழகிகளின் திறமை தான்' என்று மனதிற்குள் கூறிக் கொண்டான். பிறகு தம்பியிடமே சென்று," அருமைத் தம்பியே வரும் போது மிகவும் சோகமாகக் காட்சி அளித்தாய். ஆனால் இப்போதோ சந்தோஷத்துடன் காணப்படுகிறாயே! அப்படி ஒரு வாரத்தில் என்ன மாயம் நடந்தது? அதனை என்னிடமும் கொஞ்சம் சொல்லேன்" என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

ஆனால், தனது அண்ணன் வந்ததும் வராததுமாக உண்மையைக் கூறி அவரது மனதை நோகடிக்க விரும்பவில்லை ஷாஜமான். அதனால் அண்ணனிடம், "அண்ணா! பிறகு ஒரு நாள் நாம் இதைப் பற்றிப் பேசுவோம்" என்று கூறி மழுப்பிவிட்டான். பிறகு அண்ணன் சிறிது நேரம் ஓய்வெடுத்து முடித்த பின்னர். அமைதியாக அண்ணனை அழைத்து மெல்ல விஷயத்தைக் கூறினான் ஷாஜமான்.

தனது மனைவியின் நடத்தையைப் பற்றி தனது தம்பியே கூறும் பொழுது ஷாரியரால் அதனை நம்பாமல் இருக்க முடியவில்லை. அவனது மனதினில், "பாசமிகு தம்பி பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று தான் பட்டது. எனினும், தனது தம்பியிடம் கண்ணீர் வடித்தபடி அவன் சொன்னதை அவனால் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டான்.

அதற்கு ஷாஜமான்," அருமை அண்ணா! தயவு கூர்ந்து தங்களது மனத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ளுங்கள். மேலும் அண்ணியிடம் இதனைத் தாங்கள் நேரடியாகக் கேட்க வேண்டாம். நீங்களே நேரில் இந்த அநியாயத்தைக் காண விரும்பினால், நான் சொல்லும் படியாகச் செய்யுங்கள். அதன்படி ஒன்றுமே தெரியாதது போல ஒரு வாரம் நடந்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு வாரம் கழித்து மீண்டும் நாம் இருவரும் வேட்டைக்குச் செல்லப் போவதாக அறிவித்து விடுங்கள். ஆனால், வேட்டைக்குப் போகாமல், விசுவாசமான ஊழியர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ரகசியமாக எனது அறையில் என்னுடன் இருங்கள். இதில் ஒரு முக்கியமான விஷயம் தாங்கள் வேட்டையாடும் பொறுப்பை அளித்து வனத்திற்கு அனுப்பும் அந்த ராஜ விசுவாசிகள் ஒரு வாரம் கழித்துத் தான் வர வேண்டும். இது ஒரு புறம் இருக்க நாம் இருவரும் ராணியின் நடவடிக்கையை கவனிப்போம். சரிதானே?" என்று கூறி முடித்தான்.

ஷாரியரும் தனது தம்பியின் திட்டத்தை ஒப்புக் கொண்டு அதன் படியே செய்தான். அதனால் நாட்டில் எல்லோருமே மன்னர் மீண்டும் தனது தம்பியுடன் வேட்டைக்குச் சென்று விட்டதாக நம்பினர். அன்றைய தினம் இரவே தனது தம்பி குறிப்பிட்ட அந்த இடத்தை அடைந்தான் ஷாரியர். உடன் அவனது அருமைத் தம்பியும் வந்து இருந்தான். இருவரும் அந்தப்புரத்திற்குச் செல்லும் வழியில் அமைக்கப்பட்ட சாளரத்தைத் திறந்து வைத்துக் கொண்டு அங்கு நடப்பதை இமை மூடாமல் கண்காணிக்கத் தொடங்கினார்கள்.

பின்னிரவு நேரம் வந்தது மாளிகையின் ரகசியக் கதவு திறக்கப்பட்டது. அந்த வழி அரசருக்கும், அரசிக்கும் மட்டுமே தெரிந்த வழி. அதன் வழியாக கருப்பு அடிமை ஒருவன் துணிச்சலுடன் நுழைந்தான் (எல்லாம் ஒருவகையில் ராணி கொடுத்த துணிச்சல் தான்). உடனே ராணி வெளிப்பட்டு அந்த அடிமையை கட்டி அணைத்தபடி தோட்டத்தின் நடுவில் இருந்த நீராழி மண்டபத்தை அடைந்தாள். அங்கு இருவரும் துணிகளைக் கலைந்த படி உல்லாசமாக இருந்தனர். பின்னர் எல்லாம் முடிந்தவுடன் ஆடைகளை உடுத்திக் கொண்டு ராணியும், அடிமையும் தங்கள், தங்கள் இருப்பிடத்தை அடைந்தார்கள்.

இவைகளை எல்லாம் கண் கூடாகக் கண்ட அரசர், ஷாரியரின் மனம் பெரிதும் கலங்கியது என்பது உண்மை. இனிமேலும் அரண்மனையில் இருக்கக் கூடாது என்று எண்ணியவர்களாய் இருவரும் மெல்ல நடந்து சென்றார்கள். கால் போனப் போக்கில் நடந்த அவர்கள் ஒரு கடற் கரையை அடைந்தார்கள். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் அண்ணனைத் தேற்ற ஷாஜமான் தனது மனைவி அவனுக்கு செய்த துரோகத்தை எடுத்துக் கூறினான். மேலும் அதனை நினைத்துக் கொண்டு தான் தான் வருந்தியதையும் கூறி முடித்தான். அதைக் கேட்டு அண்ணன் ஷாரியரின் சோகம் இரண்டு மடங்காக ஆனது. இருவரும் கண்கள் கலங்கிய நிலையில் கடலையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.