அமிதாப் பச்சன் - 1

அமிதாப் பச்சன் - 1

bookmark

அமிதாப் பச்சன் , இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அமிதாப் ஹரிவன்ஷ் பச்சன் என்பதன் சுருக்கமே அமிதாப் பச்சன் என்பதாகும். இவர் 'பிக் பீ' மற்றும் 'ஷாஹேந்ஷா' என்ற செல்லப் பெயர்களாலும் அழைக்கப் பட்டார். 1970களில் முதன்முதலாக பாலிவுட் திரை உலகில் 'கோபக் கனல் வாலிபன்' எனப் பெயர் பெற்றுப் பிரபலம் அடைந்தார். மேலும் இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுள் ஒருவராக கருதப்பட்டார்.

பச்சன் தனது பணிவாழ்க்கையில் பற்பல சிறப்பு விருதுகள் வென்றுள்ளார். அதில் மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், மற்றும் பன்னிரண்டு பிலிம்பேர் விருதுகள் அடங்கும். அதிலும் பிலிம்பேர் விருதுகளில், சிறந்த நடிகர் என்ற தேர்வுகளில் அதிக பட்ச எண்ணிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி, பின்னணிப் பாடகர், படத்தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிஅளிப்பவர் என நடிப்புடன் பன்முகங்களையும் வெளிப்படுத்தியவர். 1984-87 வரை இந்தியப் பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தார்.

பச்சன் பிரபல திரைப்பட நடிகை ஜெய பாதுரியை திருமணம் செய்து கொண்டார். பச்சன் தம்பதிகளிக்கு ஷ்வேதா நந்தா மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருபிள்ளைகள் இருக்கின்றனர். மகன் அபிஷேக்கும் தந்தையைப் போலவே நடிகராக உள்ளார். அபிஷேக், நடிகையும் உலகப் பேரழகிப் பட்டம் வென்றவரும் ஆன ஐஸ்வர்யராயை மணந்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தில் ஓர் இந்துக்குடும்பத்தில் பிறந்தவர் அமிதாப் பச்சன். அவர் தந்தை டாக்டர் ஹரிவன்ஷ் ராய் பச்சன் ஒரு புகழ்பெற்ற இந்திக்கவிஞர் ஆவார். அவரது தாயார் தேஜி பச்சன் இன்றைய பாகிஸ்தான், அன்றைய பைஸாலாபாத்தை சேர்ந்த ஒரு சீக்கியப்பெண்மணி ஆவார். ஆரம்ப காலத்தில் பச்சன் 'இன்குலாப்' என்றே அழைக்கப்பட்டார். அந்தப்பெயரானது இந்தியச் சுதந்திரப்போரட்ட காலத்தில் எழுப்பப்பட்ட தாரக மந்திரம் 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அவர் மறுநாமகரணமாக, அமிதாப் என்று அழைக்கப்பட்டார். அதன்பொருளாவது: ' அணையவே அணையாத சுடரொளி' என்பதாகும். ஸ்ரீவத்ஸவா என்பது குடும்பப்பெயராக இருப்பினும், அவரது தந்தை பச்சன் எனும் பெயரைப் புனைப்பெயராக வைத்துக் கொண்டார். அந்தப் பெயரிலேயே, அவரது படைப்புகளை வெளியிட்டு வந்தார். திரைப்படங்களில் முதல்தோற்றத்தில் இருந்து அமிதாப் என்ற பெயரிலேயே நடிக்கத் தொடங்கினார். பச்சன் என்ற பெயரே நாளடைவில் எல்லா பொது நோக்கங்களுக்காகவும் அவரது தற்போதைய குடும்பத்தாரின் பெயராகவே மருவி விட்டது.

அமிதாப், ஹரிவன்ஷ் ராய் பச்சனின் இரு மகன்களில் மூத்தவர் ஆவார். இரண்டாம் மைந்தன் அஜிதாப் ஆவார். அவரது தாயார் நாடகமேடையில் நடித்துள்ளார். அவருக்கும் திரைப்பட வாய்ப்பு தேடிவந்தது. ஆனாலும் குடும்பப் பொறுப்புகளுக்கு முன்னுரிமை தந்து அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பச்சனின் பணிவாழ்க்கையில் விருப்பத்தேர்வுகள் செய்யும் போதெல்லாம் தாயாரின் செல்வாக்கு உரிய தாக்கத்தைச் செய்தது. அவரும் தன்மகன் மேடையில் நடுஇடம் பெறுவதையே வலியுறுத்தி வந்தார். ஆரம்பக்கல்வியை அலகாபாத் ஞான பிரபோதினி மற்றும் சிறுவர்கள் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். பிறகு நைனிடாலில் உள்ள ஷேர்வுட் கல்லூரியில் கலைத்துறையையே முக்கியப் பாடமாகப் பயின்றார்.அதன்பின் டெல்லிப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கிரோரிமால் கல்லூரியில் அறிவியல் பாடம் கற்று அதில் இளங்கலைப்பட்டம் பெற்றார். தற்போதைய கொல்கத்தா அன்று கல்கத்தாவாக இருந்தபொழுது அங்கிருந்த 'பேர்ட் அண்ட கோ' கப்பல் கம்பெனியில் இருபது வயதில் சரக்குத் தரகராக வேலை பார்த்து அதைக் கைவிட்டார். தணியாத தாகம் நடிப்பின்மேல் இருந்ததால் அதையே பின்தொடர்ந்தார்.

1973 ஜூன் 3ஆம் நாள் நடிகை ஜெயபாதுரியை, வங்காளத்திருமணச் சடங்குகள்படிக் கைப்பிடித்தார். தம்பதியர்களுக்கு இருபிள்ளைகள் தோன்றினர். மகள் ஷ்வேதா மகன் அபிஷேக் ஆவார்கள். 1969ல் வெளிவந்த சாட்ஹிந்துஸ்தானி அவரது 'முதல்' திரைப்படமாகும்! ஏழு முக்கிய பாத்திரங்களுள் ஒருவராக அவர் திரையில் முதன்முதல் தோன்றினார்! க்வாஜா அஹ்மத் அப்பாஸ் இயக்கத்தில் உட்பல் தத், மது, ஜலால் ஆகா ஆகியோர் நடிப்பில் வந்த சாட் ஹிந்துஸ்தானி படம் வருவாயில் வெற்றி பெறவில்லை. ஆயினும் பச்சனுக்கு சிறந்த புதுமுகம் என்ற தேசியத்திரைப்பட விருது கிட்டியது.

1971ல் வெளிவந்த 'ஆனந்த்' விமர்சனம் பாராட்டுதலும், வியாபார வெற்றியும் பெற்றது. அதில் ராஜேஷ் கன்னாவுடன் இணைந்து நடித்தார். பச்சனின் வேடம் வாழ்க்கையை வெறுக்கும் சிடுசிடுப்பான டாக்டர் வேடமாகும். அது பிலிம்பேர் சிறந்த துணைநடிகர் விருதுவாங்கித் தந்தது. அதேவருடம் பர்வானா படத்தில் மோகத்தில் லயிக்கும் காதலனாக நடித்தார் உடன் நடித்தது நவீன் நிஸ்சோல், யோகீதாபாலி, மற்றும் ஓம்பிரகாஷ்,ஆவர். அதில் அவரது அபூர்வ வில்லன்திறன் சித்திரிக்கப்பட்டது. பல படங்கள் தொடர்ந்தன ரேஷ்மா அவுர் ஷேரா உள்பட பலர் வந்தாலும், பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெறவில்லை! அடுத்து 'குட்டி' படம் வந்தது. அதில் கௌரவ வேடம் ஏற்றார். அப்படத்தில் அவரது வருங்கால மனைவி ஜெயாபாதுரி தர்மேந்திராவுடன் நடித்தார். ஏற்றஇறக்கம் செய்யும் குரலுச்சரிப்பு வளம் கொண்டிருந்த அமிதாப்பச்சன் அதை 'பர்வார்சி'யில் வெளிப்படுத்தினார். அடுத்து எஸ் ராமநாதன் இயக்கத்தில் வந்த சாலை விபத்தை அடிப்படையாகக் கொண்ட நகைச்சுவைப்படம் 'பாம்பே டு கோவா' வில் நல்லதோற்றம் அளித்தார். அருணா இராணி, மெஹ்மூத், அன்வர் அலி, மற்றும் நஸீர் ஹூசேன் ஆகியோருடன் இணைந்து நடித்தார்.