அப்பூதியடிகள் நாயனார்

bookmark

அப்பூதி அடிகள் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.

அப்பூதியடிகளின் வாழ்க்கை வரலாறு:-

அப்பூதியடிகள் சோழ நாட்டில் திங்களூரில் வசித்தவர். மிகுந்த சிவ பக்தரான இவர், மேற்சொன்ன அறுபத்து மூவருள் முதன்மையான நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசு நாயனார் காலத்தில் 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருநாவுக்கரசர் சைவ சமய வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளையும், அதனால் அவருக்கு நேர்ந்த துன்பங்களையும், அவற்றையெல்லாம் இறை நம்பிக்கையைத் துணைக் கொண்டு வெற்றிகரமாகக் கடந்ததையும் கேள்விப்பட்டு அவர் மீது அளவு கடந்த பக்தி கொண்டார். இதுவே அவரை ஒரு நாயனாராக மதிக்கப்படும் அளவுக்கு உயர்த்தியது.

திங்களூருக்கு ஒரு முறை சென்றிருந்த திருநாவுக்கரசர் அப்பூதியடிகளின் இல்லம் சென்றார். அப்பூதியடிகள் பெருமகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று அமுதுண்டு செல்லுமாறு வேண்டினார். அமுது பரிமாற இலை கொண்டுவரச் சென்ற அப்பூதியடிகளின் மூத்த மகன் பாம்பு தீண்டி இறந்து விடுகிறான். சிவனடியாரின் திருவமுதுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று கருதி மகனின் உடலை மறைத்து விட்டு அப்பரை (அதாவது திருநாவுக்கரசர் அவர்களை) உணவுண்ண வருமாறு அழைத்தார். திருநாவுக்கரசரும் மூத்த மகன் எங்கே என்று வினவினார். வேறு வழியின்றி உண்மையை உரைக்கிறார் அப்பூதியடிகள். அப்பூதியடிகளின் அன்பில் மனமுருகிய திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடி அப்பூதியடிகளின் மகனை உயிர்ப்பித்தார்.

இதுவே அப்பூதியடிகள் நாயனாரின் வாழ்க்கையில் நடந்த ஒரு திருப்புமுனையான சம்பவம். இதனால் அவர் மேலும் ஆன்மீகத்தில் கட்டுண்டு சிவனுக்கு தொண்டு செய்து இறுதியில்  இறை அடி சேர்ந்தார்.