அடைக்கலக் காதை
புறஞ்சேரிக்குத் திரும்பிய கோவலன், மதுரையிலே கண்டவெல்லாம், கவுந்தியிடம் வியப்போடு எடுத்துக் கூறினான். 'தென்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு என்னிலை உணர்த்தி' என்று சொல்லி மதுரை சென்றவன், அதுபற்றி ஏதுங் கூறவில்லை. கவுந்தியம்மை கவலையடைகின்றார். அவ்வேளை, 'மாடலன்' அங்கே வருகின்றான். கோவலனின் சிறப்புகளைக் கூறுகின்றான். துறந்தோருக்குரிய அவ்விடத்தை விட்டுப் பொழுது மறைவதற்குள் மதுரை நகருட் செல்லுமாறு மாடலனும் கவுந்தியும் கோவலனைத் தூண்டுகின்றனர். அவன் செயலற்று இருக்கவே, அவ்வழியாக வந்த மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாக அளிக்கின்றார் கவுந்தியடிகள். அவளும், கண்ணகியுடன் கோவலனும் பின்வரத் தன்வீட்டிற்கு அவளை அன்போடு அழைத்து போகின்றாள்.
