அகலிகைப் படலம் - 562

bookmark

562.

‘அஞ்சன வண்ணத்தான்தன்
   அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை
   வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை
   நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன
   முனிவனும். கருத்துள் கொண்டான்.*
 

அஞ்சன    வண்ணத்தான்   தன் -  மைபோல்    கரியதிரு
மேனியுடைய    இராமனது;    அடித்துகள்  -    திருவடிப்பொடி;
கதுவாமுன்னம் - தன்மேல்   படுவதற்கு    முன்பே   (பட்டதும்);
வஞ்சிபோல்   இடையாள்  - வஞ்சிக்கொடிபோலும் இடையுடைய
அகலிகை; முன்னை வண்ணத்தள் -  பழைய  வடிவத்தை;  ஆகி
நின்றாள்  -   உடையவளாக  எழுந்து   நின்றாள்;  நெஞ்சினால்
பிழைப்பு  இலாளை  -  நெஞ்சாரக் குற்றம் செய்யாத இவளை; நீ
அழைத்திடுக என்ன - நீ அழைத்துச்  சேர்த்துக்  கொள்க  என்று
விசுவாமித்திரன்  கூற;  கஞ்ச மா மலரோன் அன்ன  முனிவனும்
-  தாமரை   மலரில்   தோன்றிய  பிரமனைப்  போன்ற  கௌதம
முனிவனும்;   கருத்துள்     கொண்டான்  -   (அச் சொற்களை)
மனத்திலே ஏற்றுக்கொண்டான்.  

நெஞ்சறியக் குற்றம் செய்யாத அகலிகையை ஏற்க வேண்டுமென்று
விசுவாமித்திரன் சொல்ல. அதை உணர்ந்த கௌதமனும் ஏற்கலானான்.
நெஞ்சில்   பிழைப்பிலாள்:   நெஞ்சினால்  சிறிதும்  குற்றம்  செய்ய
எண்ணாதவள்.                                           27