அகலிகைப் படலம் - 555
கௌதமன் இந்திரனுக்குச் சாபங் கொடுத்தல்
555.
‘தீ விழி சிந்த நோக்கி.
செய்ததை உணர்ந்து. செய்ய
தூயவன். அவனை. நின் கைச்
சுடு சரம் அனைய சொல்லால்.
‘’ஆயிரம் மாதர்க்கு உள்ள
அறிகுறி உனக்கு உண்டாக’’ என்று
ஏயினன்; அவை எலாம் வந்து
இயைந்தன. இமைப்பின் முன்னம்.
(அப்பொழுது) செய்ய தூயவன்- (நடுநிலை வழிச் செல்லக் கூடிய)
மனத் தூய்மையுடைய அம் முனிவன்; விழி தீ சிந்த நோக்கி -
கண்கள் தீப்பொறியைக் கக்குமாறு கோபித்துப் பார்த்து; செய்ததை
உணர்ந்து - (இருவரும்) செய்த தீச்செயலை அறிந்து; நின்கைச் சுடு
சரம் அனைய சொல்லால் - உனது கையால் ஏவப்படும் கொடிய
அம்பு போன்ற சுடு சொல்லால்; அவனை - அந்த இந்திரனை;
ஆயிரம் மாதர்க்கு உள்ள - பெண்களுக்கு உள்ள ஆயிரம்; அறிகுறி
உனக்கு - குறிகள் உனக்கு; உண்டாக என்று - உண்டாகட்டும் என்று;
ஏயினன் - சாப வார்த்தையை ஏவினான்; அவை எலாம் -
(அவ்வாறே) அப்பெண்குறிகள் ஆயிரமும்; இமைப்பின் முன்னம் -
இமைப் பொழுதிலே; இயைந்தன - அவன் உடம்பில் வந்து
பொருந்தின.
செய்ய தூயவன்: தன்னோடு எவ்வித உறவும் இல்லாத
இந்திரனுக்குச் சாபம் கொடுத்தான். அத்தோடு அமையால் தன்
மனைவிக்கும் ஒரு சார் அன்பு காட்டாமல் சாபம் கொடுத்தான்.
ஆதலின் கௌதமன் தூயவன் ஆனான். இந்திரனுக்கு அமைந்த
சாபம்: ஒரு பெண்ணின் குறியிடத்து இந்திரன் மிகவிருப்பம் கொண்டு
இழிந்த செயல் புரிந்தமையால் அதனிடம் வெறுப்பு உண்டாகும்
பொருட்டு அவனுடம்பு முழுவதும் பெண்குறிகள் அமையுமாறு சாபம்
அளிக்கப் பெற்றது. சுடு சரம் அனைய சொல்: இராமனது அம்பு
பகைவரைக் கொல்லுதலாகியத் தன் பயனை விரைந்து தருதல்போல
முனிவர் சொல் கொடியவரை அழித்தலாகிய தன் பயனைத் தவறாமல்
விரைந்து தரும் என்பது குறிப்பு. 21
