அகலிகைப் படலம் - 543

bookmark

பொய்கைகளின் சிறப்பு

543.

தூவி அன்னம் தம் இனம் என்று
   நடை கண்டு தொடர.
கூவும் மென் குயில் குதலையர்
   குடைந்த தண் புனல்வாய்.
ஓவு இல் குங்குமச் சுவடு உற.
   ஒன்றொடு ஒன்று ஊடி.
பூ உறங்கினும். புள் உறங்
   காதன - பொய்கை.
 
பொய்கை  -  (அம் மிதிலை நாட்டிலுள்ள) நீர் நிலைகளில்;  தூவி
அன்னம் நடை கண்டு - சிறகுகளையுடைய அன்னங்கள்   (மகளிரின்)
நடையழகைப் பார்த்து; தம் இனம் என்று தொடரும்  - தன் இனமான
அன்னப்  பறவை  என்று  மயங்கி  (அவர்)  பின் தொடர்ந்தன; கூவும்
மென்குயில்  குதலையர்  - (இனிமையாகக்)  கூவுகின்ற மென்மையான
குயிலின்  குரல்போன்ற மழலைச்  சொற்களையுடைய மகளிர்; குடைந்த
- மூழ்கி விளையாடின; தண்புனல் வாய் - குளிர்ந்த நீரில்; ஓவு இல் -
விட்டு  நீங்காத; குங்குமம் சுவடு உற -  குங்குமக் குழம்பின் சுவடுகள்
(தம்மேல்)  பொருந்தியதால்;  ஒன்றோடு  ஒன்று  ஊடி  - ஒன்றுடன்
ஒன்று  பிணங்கி;  பூ உறங்கினும் -  (தண்ணீரிலுள்ள தாமரை முதலிய)
மலர்கள்   உறங்கினாலும்;   புள்   உறங்காதன   -  (அவற்றிலுள்ள)
பறவைகள் தூங்காமல் கிடக்கின்றன.  

மயக்க  அணி: குளங்களில் பெண்கள் இறங்கி விளையாகின்றார்கள்.
அப்பொழுது.   அவர்கள்  உடம்பில்  அணிந்துள்ள குங்குமக் கலவை
அக்குளங்கிலுள்ள   பறவைகளின்  உடல்மேல் படிகிறது. அந்நிலையில்
பிற   பறவைகள்   ஒன்றை    ஒன்று   நோக்கும்போது  தம்  இனப்
பறவைகளையே    பிற   இனப்பறவைகளென    மயங்கித்   தம்முள்
மாறுபடுகின்றன.   கலவிக்   குறி:  நிறம்   வேறுபடுதலும்  நன்மணம்
உறுதலும்.  பூவிக்குத்  தூக்கம்:  இதழ்குவிதல்.   பறவைக்குத்  தூக்கம்:
கலவயைின்றி இளைப்புத் தீரத் தூங்குதல்.                       9