அகலிகைப் படலம் - 542
கழனிகளின் சிறப்பு
542.
பட்ட வாள் நுதல் மடந்தையர்.
பார்ப்பு எனும் தூதால்.
எட்ட ஆதரித்து உழல்பவர்
இதயங்கள் கொதிப்ப.
வட்ட நாள் மரை மலரின்மேல்.
வயலிடை மள்ளர்
கட்ட காவி அம் கண்கடை
காட்டுவ - கழனி.
கழனி - (அந் நாட்டு) வயல்களில்; பார்ப்பு எனும் தூதால்-
தங்கள் பார்வையாகிய தூதால்; எட்ட ஆதரித்து - (தம் கணவரைச்)
சேர்வதற்கு விரும்பி; உழல்பவர் - சஞ்சரித்துத் திரிபவராகிய; பட்டம்
- நீர்நிலையி்லுள்ள; வாள்நுதல் - ஒளிபொருந்திய நெற்றியையுடைய;
மடந்தையர் இதயங்கள் - உழவ மகளிரின் மனம்; கொதிப்ப .
வெறுப்பு அடையுமாறு; வயலிடை மள்ளர் - வயல்களிலே உழவர்கள்;
வட்ட நாள்மரை மலரின் மேல் - வட்ட வடிவமான புதிய தாமரை
மலர்களின்மேல்; கட்ட காவி - களை பறித்தெறிந்த கருங்குவளை
மலர்களாகிய; அம்கண் கடை - அழகிய கடைக்கண்களை; காட்டுவ -
வெளிப்படுத்துகின்றன.
வேறு உரை: உழத்தியரின் பார்வைத் தூதால் மயங்கி அவர்களைச்
சேர விரும்பும் ஆடவர் மனம் வெறுக்குமாறு வயல்களில் புதிய
தாமரை மலர்களின்மேல் அம்மகளிர் களைந்து எறிந்த குவளை
மலர்கள் (பெண்களின்) கண்களின் கடைப் பகுதிகளைக்
காட்டுகின்றன. ஆடவர் வெறுப்புக்குக் காரணம்: தாமரை மலரில்
பொருந்திய குவளைப் பூக்களை நோக்கித் தம்மைக் குறிப்பினால் கண்
காட்டி அழைக்கின்ற முகமென மயங்கி அவற்றின் அருகில் வந்த
ஆடவர்கள் உண்மையறிந்து வெறுத்தனர். மயக்க அணி: தமது
குளிர்ந்த கண் பார்வையால் உழவரைத் தம் வசப்படுத்தித் தழுவ
வந்த உழத்தியர் அவ்வயலெங்கும் தாமரைமேல் கருங்குவளைமலர்
படிந்திருப்பதைக் கண்டு. தமக்கு முன்னரே அந்த உழவர்களைக்
கவர்வதற்கு வேறுசில மகளிர் அவர்களைக் கண்களால்
நோக்குகின்றார்களென மயங்கினார்கள்: இனி தமது எண்ணம் கை
கூடுமோ கூடாதோ என்ற ஐயத்தின் மிகுதியால் மனம் வெறுத்தனர்
எனக் கொள்ளலாம். 8
