அகலிகைப் படலம் - 534
கங்கையைச் சன்னுமுனிவன் பருகி வெளியிட , அது
சாகரரின் உடல் சாம்பலை நனைத்தல் (534-535)
534.
‘இழிந்த கங்கைமுன். மன்னவன்
விரைவொடும் ஏக.
கழிந்த மன்னவர் கதி பெற
முடுகிய கதியால்.
அழுந்தும் மா தவச் சன்னுவின்
வேள்வியை அழிப்ப.
கொழுந்து விட்டு எரி வெகுளியன்.
குடங்கையில் கொள்ளா.
பூவுலகில் இறங்கிய கங்கையின் பின்னே பகீரதன் விரைந்து
வந்தான்; அக் கங்கையின் வேகத்தால் சன்னு முனிவனின் தவம்
கலைந்தது; வெகுண்ட அம் முனி அந் நீரை உள்ளங் கையில்
மொண்டு கொண்டான் என்பது.
சன்னு முனிவன் பருகிக் காதுவழி வெளியிட்டதால் கங்கைக்குச்
‘சானவி’ என்னும் பெயர் உண்டு. 5-25
