அகலிகைப் படலம் - 508
சூரியோதய வருணனை
கங்கையைக் காணல்
508.
காலன் மேனியின் கருகு இருள்
கடிந்து. உலகு அளிப்பான்
நீல ஆர்கலி. தேரொடு
நிறை கதிர்க் கடவுள்.
மாலின் மா மணி உந்தியில்
அயனொடு மலர்ந்த
மூல தாமரை முழு மலர்
முளைத்தென. முளைத்தான்.
காலன் மேனியின்- யமனது நிறம்போலக்; கருகு இருள் கடிந்து-
கறுத்துள்ள இருட்டை நீக்கி; உலகு அளிப்பான் - உலகத்தைக்
காக்கும் பொருட்டு; நிறை கதிர்க் கடவுள் - நிறைந்த கதிர்களையுடைய
கதிரவன்; தேரொடு - தனது இரதத்தோடு; நீலம் ஆர்கலி -
நீலக்கடலிலே; மாலின் மாமணி அயனொடு வந்த - திருமாலின் கரிய
அழகிய உந்தியிலே பிரமனோடு தோன்றிய; மூலத் தாமரை முழுமலர்
முளைத்தென - முதன்மையான பெரிய தாமரை மலர் முளைத்தது
போல; முளைத்தான் - உதித்தான்.
தற்குறிப்பேற்ற அணி. கடலுக்குத் திருமால்; அக் கடலில் கதிரவன்
தோன்றுகிற உதயமலைக்குத் திருமாலின் உந்தி; கதிரவனுக்கும்
பிரமன்; தேருக்குத் தாமரை மலர் ஆகியவை உவமைகள் ஆயின. 4
