பிறர்மனை நயவாமை

bookmark

துறவியல்

 

 [அதாவது பிறருடைய மனையாளை விரும்பாதிருத்தல்.]

 

81. அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
     நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால் - நிச்சலும்
     கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம்
     நம்பற்க நாணுடை யார்.

     (இ-ள்.) அச்சம் பெரிது - பயம் அதிகமானது; அதற்கு இன்பம் - அக்காரியத்தில் இன்பமானது, சிறு அளவு - அற்ப பிரமாணமுள்ளது; நிச்சம் - தினமும், நினையுங்கால் - யோசித்தால், கோ - அரசனால், கொலை - கொல்லுதல் (நேரும்); நிச்சலும் - நித்தமும், கும்பிக்கே - நரகத்திற்கே, கூர்ந்த வினை - மிகுந்த செய்கை; (ஆதலால்) நாண் உடையார் - வெட்கமுள்ளவர்கள், பிறன் தாரம் - பிறனுடைய மனையாளை, நம்பற்க - விரும்பாதிருக்கக் கடவர், எ-று.

     பிறர் தாரத்தினிடத்தில் போக எத்தனப்பட்டால் அவளுக்குடையவர் அடிப்பது முதலான செய்கைகளுக்கு அஞ்ச வேண்டுவதும், விஞ்சினால் அரசன் கொலை செய்வானென்கிற பயமும், இத்தனை தான் பொறுத்தாலும் அதில் வரும் சுகமோ அற்பம், பின்பு நரகத்திற்குக் காரணம். இவ்வளவு சங்கடங்களிருப்பதனால் பிறர் தாரம் விரும்புதல் யோக்கியமன்று என்றதாம்.

     அச்சம் - அஞ்சு - பகுதி, அம் - தொழிற்பெயர் விகுதி, வலித்தல் விகாரம். அதற்கு - கு - இடப்பொருளில் வந்தது, வேற்றுமை மயக்கம். நிச்சம் நிச்சல் இரண்டும் 'நித்யம்' என்கிற வடமொழித் திரிபு. கொலை - தொழிற்பெயர்; கொல் ஐ - பகுதி விகுதிகள். கும்பிக்கு - கு - பொருட்டுப் பொருளில் வந்தது. [பெயர். சூ. 41.] ஆல் - நான்கும் அசை. தாரம் - வடமொழி. நாணுடையார் என்பதனாலே அக்காரியத்தில் எல்லாக் குற்றங்களுக்குமுன் நாண முண்டாவது பெரிதென்றாயிற்று.

 

82. அறம்புகழ் கேண்மைபெருமைஇந் நான்கும்
     பிறன்தாரம் நச்சுவார் சேரா - பிறன்தாரம்
     நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
     அச்சத்தோடு இந்நாற் பொருள்.

     (இ-ள்.) அறம் புகழ் கேண்மை பெருமை இந்நான்கும் - தருமம் கீர்த்தி சிநேகம் மேம்பாடு ஆகிய இந்த நான்கு பொருளும், பிறன் தாரம் நச்சுவார் - பிறன்மனையாளை விரும்புகிறவர்களை, சேரா - சேரமாட்டா; பகை பழி பாவமென்று - பகையும் நிந்தனையும் பாவமும், அச்சத்தோடு இந்நால் பொருளும் - அச்சமும் ஆகிய இந்த நான்கு பொருளும், பிறன் தாரம் நச்சுவார் - பிறன் தாரத்தை விரும்புகிறவர்களை, சேரும் -, எ-று.

     அப்பெண்ணைச் சேர்ந்த பலரும் விரோதிகளாவார்களாதலால் கேண்மையில்லை; ஈனகாரியமாதலால் பெருமையும் கீர்த்தியுமில்லை.

     அற முதலிய நான்கும் செவ்வெண் ஆதலின், [இடை. சூ. 9]ன்படி தொகைபெற்றன. பகை முதலிய நான்கு மிப்படியே. என்று என்கிற எண்ணிடைச்சொல், [இடை. சூ. 10]ன்படி பிரிந்து பகை முதலியவற்றோடும் சேர்ந்தன. "இயல்பின் விகாரமும் விகாரத்தியல்பும்" என்கிற [உரு. சூ. 16] விதியால் 'நச்சுவார்ச்சேரா' என வலி மிகுந்தது. நான்கு போய் நான்கு வரும் என்று சொன்னதினால் இது 'பரிவர்த்தனை' என்னும் அலங்காரம்; "பொருள் பரிமாறுதல் பரிவர்த்தனையே" - தண்டியலங்காரம்.

 

83. புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
     துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
     எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
     உட்கான் பிறன்இல் புகல்.

     (இ-ள்.) புக்க இடத்து அச்சம் - (பிறன் தாரத்தினிடம்) போகும் பொழுது பயமுண்டாகின்றது; போதரும் போது அச்சம் - திரும்பி வரும் போதும் பயம்; துய்க்கும் இடத்து அச்சம் - அனுபவிக்கும் போதும் பயம்; தோன்றாமல் காப்பு அச்சம் - (பிறர்) அறியாமல் காப்பதில் பயம்; எக்காலும் அச்சம் தருமால் - எப்போதும் பயத்தைத் தருவதாகையால், பிறன் இல் புகல் - பிறனில்லாளிடம் போவதை, எவன் உட்கான் - எவன் பயப்படமாட்டான், எ-று. கொல், ஓ - இரண்டும் அசை.

     கருத்து வெளிப்படையா நின்றது.

     புக்க - புகு - பகுதி, அ - விகுதி, ககர மிகுதி இறந்த காலங்காட்டும் பெயரெச்சம். உட்கான் - உட்கு - பகுதி. அச்சப் பொருளுள்ள சொல் வந்தவிடத்து அஞ்சத்தக்கதின் மேல் இரண்டாம் வேற்றுமை வருவது தமிழ் வழக்கு. நான்காம் வேற்றுமையும் வரும்.

 

84. காணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்;
     ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீள்நிரயத்
     துன்பம் பயக்குமால்; துச்சாரி, நீகண்ட
     இன்பம் எனக்கெனைத்தால் கூறு.

     (இ-ள்.) காணின் குடி பழி ஆம் - (பிறர்) கண்டால் தன் குலத்துக்கு நிந்தனையுண்டாம்ப்; கை உறில் - அகப்பட்டால், கால் குறையும் - (தண்டனையால்) கால் குறைவுபடும்; மாண் இன்மை செய்யுங்கால் - அந்தத் துஷ்ட காரியஞ் செய்யும்போது, அச்சம் ஆம் - பயமுண்டாம்; நீள் நிரயத் துன்பம் பயக்கும் - (அந்தக் கெட்ட காரியம்) நெடுங்கால மனுபவிக்கும்படியான நரக வேதனையை உண்டாக்கும்; (ஆகவே) துச்சாரி - விபசாரமாகிய துஷ்ட காரியஞ் செய்பவனே! நீ கண்ட இன்பம் எனைத்து - நீ அதில் கண்ட சுகம் எவ்வளவு, எனக்கு கூறு - எனக்குச் சொல், எ-று.

     கருத்து வெளிப்படை. கையுறில் கால் குறையும் என்றால் அகப்பட்ட போது அரசனால் காலை வெட்டுதல் நேரிடும் என்பதாம், துச்சாரி - வடமொழி திரிந்தது; துஷ்ட நடக்கை செய்பவன் என்பது பொருள். ஆல் - இரண்டும் அசை; முதலிலிருப்பதை ஏதுப் பொருள் குறிப்பதாகவுங் கூறலாம்.

 

85. செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்
     கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை
     வலியால் பிறர்மனைமேல் சென்றாரே இம்மை
     அலியாகி ஆடிஉண் பார்.

     (இ-ள்.) செம்மை ஒன்று இன்றி - ஒரு நன்னடக்கையுமில்லாமல், சிறியார் இனத்தர் ஆய் - அயோக்கியரோடு சேர்ந்தவராய், கொம்மை வரி முலையாள் - திரட்சியான ரேகைகள் எழுதப் பெற்ற முலையை யுடையாளுடைய, தோள் மரீஇ - தோளைச் சேரவிரும்பி, உம்மை - முற்பிறப்பில், வலியால் - வலிமையால், பிறர் மனைமேல் சென்றாரே - பிறர் மனையாளிடஞ் சென்றவர்களே, இம்மை அலி ஆகி - இப்பிறப்பில் நபும்சகராய், ஆடி உண்பார் - கூத்தாடி (பிச்சை வாங்கி) உண்கிறார்கள், எ-று.

     முற்பிறப்பில் பிறர் மனையாளிடம் சென்றவர் தாம் இப்பிறப்பில் நபும்சகராகிக் கூத்தாடிப் பிழைக்கிறவர் என்பதாம். ஆதலால், பிறர்மனை நயக்க வேண்டாம் என்பது கருத்து.

     செம்மை ஒன்று இன்றி என்றால், கிஞ்சித்தும் பழி பாவங்களுக்கு அஞ்சி நடவாமல் என்றபடி, அவளைச் சுவாதீனஞ் செய்யப் பலவித சாகசங்களைச் செய்து என்பதை வலியால் என்றார். உம்மை - உகரச்சுட்டின் மேல் காலங்குறிக்க மை விகுதி வந்தது. இம்மையுமப்படியே.

 

86. பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
     கல்யாணம் செய்து கடிபுக்க - மெல்லியல்
     காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
     ஏதின் மனையாளை நோக்கு.

     (இ-ள்.) நாள் கேட்டு - (தக்க) நாளை விசாரித்து, பல்லார் அறிய - பலரும் அறியும்படி, பறை அறைந்து - வாத்தியம் கொட்டி, கல்யாணம் செய்து -, கடி புக்க - காவலைப் பொருந்தின, மெல் இயல் காதல் மனையாளும் - மென்மையான தன்மையுள்ள (தன்னிடம்) ஆசையுள்ள பெண்டாட்டியும், இல்லாள் ஆ - வீட்டிலிருப்பவளாயிருக்க, ஒருவன் -, ஏதில் மனையாளை - அயலான் மனைவியை, நோக்கு - பார்ப்பது, என் - என்ன காரணமுள்ளது, எ-று.

     தான் கிரமம்படி கலியாணஞ் செய்த மனையாட்டி வீட்டிலிருக்க அயல்மனையாளை விரும்புவது மிகவும் அயோக்கியம் என்றபடி.

     ஆனால் கலியாணஞ் செய்தவள் வீட்டிலிராவிடின் அயலான் மனையாளிடஞ் செல்லலாமோ என்று ஆக்ஷேபிக்க வேண்டாம். மனையாட்டி யிருக்க அயலில் செல்வது மிகவும் அயுக்தமென்றும், மகாபாதகமென்றும் அறிவித்தற்கு இப்படி சொல்லியதெனக் கொள்க.

     "வம்புலாங்கூந்தன் மனைவியைத் துறந்து பிறன் பொருடாரமே வெண்ணி; நம்பினாரிறந்தா னமன்றமர்பற்றி யெற்றிவைத்தெரியெழுகின்ற, செம்பினாலியன்ற பாவையைப் பாவி தபவென மொழிவதற்கஞ்சி, நம்பனே வந்துன் னடியிணை பணிந்தே னைமிசாரணியத்து ளெந்தாய்" என்று ஆழ்வார் அருளிச் செய்ததும் காண்க.

     மெல்லியலென்றும் காதலென்றுஞ் சொன்னது, பெண்ணுக்கு இருக்க வேண்டியகுணமுள்ளவள் என்பதை அறிவிக்க. கடி - உரியடியாகப் பிறந்த பெயரெனக் கொள்க, விகுதி குன்றியது. என் - எவன் என்கிற குறிப்புமுற்று இடைக்குறையா வந்தது. நோக்கு இதை முதனிலைத் தொழிற் பெயரென்றாகிலும் விகுதி கெட்ட தொழிற்பெயர் என்றாகிலும் வைத்துக் கொள்க.

 

87. அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ
     வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று - நம்பும்
     நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு; பாம்பின்
     தலைநக்கி யன்னது உடைத்து.

     (இ-ள்.) அயல் அம்பல் எடுப்ப - அயலார் நிந்தனை செய்ய, தமர் அஞ்சி பரீஇ - உறவினர் பயந்து விசனப்பட, மைந்து உற்று - மயக்கங்கொண்டு, வம்பலன் பெண் மரீஇ - அயலான் பெண்டாட்டியைச் சேர்ந்து, நம்பும் நிலைமையில் நெஞ்சத் தான் - (பிறர்) நம்பத்தக்க நிலைமையில்லாத இதயமுடையவனது, துப்புரவு - அனுபவமானது, பாம்பின் தலை நக்கி அன்னது - பாம்பினுடைய தலையை நக்கினாற் போன்ற தன்மையை, உடைத்து - உடையது, எ-று.

     அயலான் மனையாளிடத்துச் செல்லும்போது பலர் தூஷித்தலும் பயமும் இவனாலே நமக்கெல்லாம் இழிவு வருகின்றதே யென்று பந்துக்கள் விசனப்படுவதும் நேரும். இதனையும் லக்ஷியஞ்செய்யாமல் அனுபவித்தல் எப்படிப்பட்டதென்றால், பளபளப்பாயிருக்கிற தென்று பாம்பின் தலையை நக்கினால் விஷம்பட்டு மரணமடைவது போலக் கேட்டை அடையும்படியிருக்கும் என்பது கருத்து.

     அயல் - ஆகுபெயர். பரீஇ - பரிந்து என்பது விகுதி உகரம் இகரமாகி அளபெடுத்துக் காலங்காட்டியது; மரீஇ என்பது மிப்படியே. இவை சொல்லிசையளபெடை. பரீஇ என்பது செயவெனெச்சத் திரிபு; "சொற்றிரியினும் பொருடிரியா வினைக்குறை" இது விதி. வம்பலன் - வம்பல் - திசை, அதாவது வேறிடம், அதிலுள்ளவன் வம்பலன்; தன்னோடு சேராமல் வேறிடத்திருப்பவன் என்பது திரண்ட பொருள். நக்கியன்னது - நக்கினாற் போலுந்தன்மை.

 

88. பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா;
     உரவோர்கண் காமநோய் ஓஓ!- கொடிதே!
     விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்
     உரையாதுஉள் ஆறி விடும்.

     (இ-ள்.) உரவோர்கண் காம நோய் - ஞானமுடையவரிடத்துள்ள காமவியாதியானது, ஓஓ கொடிது - மிகவும் கொடுமையானது, (ஏனெனில்) பரவா - வளராமலும், வெளிப்படா - வெளியாகாமலும், பல்லோர்கண் தங்கா - பலரிடத்துச் சென்று நிற்காமலும், விரவாருள் - வேறானவர்களிடத்து, நாணுப்படல் - வெட்கப்படுவதை, அஞ்சி - பயப்பட்டு, யாதும் உரையாது - ஒன்றுஞ் சொல்லாமல், உள் ஆறிவிடும் - உள்ளேயே தணிந்துவிடும், எ-று.

     ஞானவான்களுக்கும் கருமவசத்தாற் காமமுண்டாகலாம்; ஆனால் அது விர்த்தியாகாமலும் வெளிப்படாமலும் பலவிஷயங்களிற் செல்லாமலும் உள்ளேயே ஆறிப்போம்; ஏனெனில் பலருக்கும் நாண வேண்டியிருப்பதால், ஆனபடியால் அது மிகவும் கொடியது என்றதாம். இங்கே கொடிதென்றது காமத்தின் தீமையை நோக்கி அதைச் சகிக்கிறார்களே என்று வியப்பினால் வந்ததாம்.

     பரவா முதலிய வினையெச்சங்கள் வினைச்செவ்வெண் [இடை. சூ. 11] ஓ - சிறப்பில் வந்தது; இது விசேஷ மிகுதி என்பதற்கு அடுக்கி வந்தது. ஏ - அசை, தேற்றமுமாம். விரவார் - விரவுதல் - கலத்தல். நாணு - உகரம் - சாரியை.

     இப்பாட்டை இவ்வதிகாரத்திற் சொன்னது காமமிகுதியிலும் உரவோர் பிறர்மனை நயவார் என்பதற்கு.

 

89. அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
     வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்; - வெம்பிக்
     கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
     அவற்றினும் அஞ்சப் படும்.

     (இ-ள்.) அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும் - பாணமும் நெருப்பும் விரிந்த கிரணங்களையுடைய சூரியனும், வெம்பி சுடினும் - தீக்ஷணியமாகி சுட்டாலும், புறம் சுடும் - புறத்திலே சுடும்; காமம் - காமமானது, வெம்பி - உக்கிரமாகி, மனத்தைக் கவற்றி - இதயத்தைக் கவலைப்படுத்தி, சுடுதலால் - சுடுவதினால், அவற்றினும் - அம்பு முதலியவற்றைக் காட்டிலும், அஞ்சப்படும் - அஞ்சத்தக்கது, எ-று.

     அம்பு முதலானவை எவ்வளவு வெம்பினாலும் புறமேயன்றி அகஞ்சுடா; காமமோ உள்ளத்தை ஒன்றும் தோன்றாமலிருக்கும்படி கலக்கிச் சுடுமாதலால் அம்பு முதலியவற்றினும் கொடிதென்று பயப்பட வேண்டியதாம்.

     சுடினும் - உம் - சிறப்பு, கவற்றி - பிறவினை வினையெச்சம், கவற்று - பகுதி, அஞ்சப்படும் - இது செயப்பாட்டு வினை; காமம் என்றதை இரண்டாம் வேற்றுமையாகக் கொண்டால் இது ஒருவகை வியங்கோள் வினைமுற்றாம்; காமத்தை அஞ்ச வேண்டும் என்று பொருளாகும். இவ் வினைமுற்றை நன்னூலுரைகாரர் தேற்றப்பொருள்பட்டு வந்த தொழிற்பெயரென்பர்; "வேறில்லை யுண்டைம் பான்மூ விடத்தன" என்கிற சூத்திர வுரையைக் காண்க.

 

90. ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
     நீருள் குளித்தும் உயலாகும்; - நீருள்
     குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
     ஒளிப்பினும் காமம் சுடும்.

     (இ-ள்.) ஊருள் எழுந்த - ஊரில் (பள்ளிக்கொண்டு) ஓங்கிய, உருகெழு செம் தீக்கு - உருவம் சிறந்த நல்ல நெருப்புக்கு, நீருள் குளித்தும் - தண்ணீருள் மூழ்கியாயினும், உயல் ஆகும் - தப்பலாம்; காமம் -, நீருள் குளிப்பினும் சுடுமே - நீரில் மூழ்கினாலும் சுடுமே, காமம் - குன்று ஏறி ஒளிப்பினும் - மலைமேலேறி ஒளித்துக் கொண்டாலும், சுடும்-, எ-று.

     ஊரிற் பற்றிச் செக்கச் செவேலென்று எழும்பிச் சொலிக்கிற நெருப்பு நீரில் முழுகியிருந்தாரை ஒன்றுஞ் செய்யாது; காமமோ குளித்திருந்தாலும் மலைமேலேறிப் போய் ஒளிந்திருந்தாலும் சுடாமல் விடாதென்றபடி.

     குளித்தும் - உம்மை விகற்பத்தோடு கூடிய சிறப்புப் பொருளில் வந்ததாகக் கொள்க. உய்யல் என்பது தொகுத்தலால் உயல் என நின்றது. சுடுமே - ஏ நிச்சயத்தில் வந்தது.