பொறையுடைமை

bookmark

துறவியல்

 

 [அதாவது எந்தக் காரணங்களாலாயினும் தம்மோடு கலந்தவர் செய்த பிழையைப் பொறுத்தல். இதுவும் சினமின்மையையொடு சேர்ந்ததனாலும் அது சாதாரணமாக அயலார் விஷயமாகவும் இது கலந்தார் விஷயத்தில் விசேஷமாகவும் கூறப்பட்டன என்றறிக.]

 

71. கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
     பேதையோடு யாதும் உரையற்க - பேதை
     உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
     வழுக்கிக் கழிதலே நன்று.

     (இ-ள்.) கோதை அருவி - மாலை போன்ற அருவிகளாலே, குளிர்வரை - குளிர்ந்த மலைகளையுடைய, நல்நாட - நல்ல நாட்டையுடைய அரசனே!, பேதையோடு யாதும் உரையற்க - புத்தியீனனோடு எதையும் சொல்லாதிருக்கக் கடவாய், பேதை - பேதையானவன், உரைப்பின் - சொன்னால், சிதைந்து உரைக்கும் - மாறுபட்டுச் சொல்வான், (ஆதலின்) ஒல்லும் வகையான் - கூடுமான விதத்திலே, வழுக்கி கழிதலே - தப்பித்து நீங்குதலே, நன்று - நல்லது. எ-று.

     அரசனே உன்னிடத்துச் சேர்ந்திருக்கிற வேவலரில் புத்தியீனனாயிருப்பா னொருவனோடு ஒரு சங்கதியும் சொல்லாதே. சொன்னால் அவன் அதைச் சொல்ல வேண்டுமிடத்துச் சரியாய்ச் சொல்லாமல் மாறுதலாய்ச் சொல்வான். அது உனக்குக் கோப காரணமாகும். அப்படி கோபம் வந்தால் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இதைக் காட்டிலும் அந்தச் செய்தியை அவனிடம் சொல்லாமல் தப்பி நீங்குவதே நல்லதென்பது கருத்து.

     பேதையோடியாதும் - "யவ்வரினிய்யாம்" என்கிற விதியால் ஓடு ஓடி ஆயிற்று; இது குற்றியலிகரம். உரையற்க - எதிர்மறைவியங்கோள், உரை - பகுதி. அல் - எதிர்மறை விகுதி, க - விகுதி. உரைப்பின் - பகரம் - இடைநிலை, ககரமும் வரும். அப்போது உரைக்கின் என்றாகும் கழிதலே - ஏகாரம் - தேற்றம். நன்று - குறிப்புமுற்று.

 

72. நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
     தாரித் திருத்தல் தகுதிமற்று - ஓரும்
     புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
     சமழ்மையாக் கொண்டு விடும்.

     (இ-ள்.) நேர் அல்லார் - செவ்வையாகாதவர், நீர் அல்ல - குணவீனமான சொற்களை, சொல்லியக்கால் -, அது தாரித்து இருத்தல் - அதைப் பொறுத்திருப்பது, தகுதி - யோக்கியமாம், மற்று - அதற்கு வேறாகிய பொறாமையை, பொங்கு நீர் ஞாலம் - மேலோங்குகிற சமுத்திரஞ் சூழ்ந்த பூமி [பூமியிலுள்ளோர்], புகழ்மை ஆ கொள்ளாது - புகழத்தக்கதாக் கொள்ளாமல், சமழ்மை ஆ கொண்டு விடும் - அவமதிக்கத்தக்கதாகக் கொள்வார்கள், எ-று.

     அரசனே காரியங்களை நேராகக் கண்டறிய மாட்டாத இயல்புடையோர் குணவீனமாகப் பேசினால் அதற்குக் கோபியாமல் பொறுக்க வேண்டும். அதுதான் உலகத்தார் புகழத் தக்கது. அப்படி பொறுக்காமற் போனால் அது நிந்தனையாம் என்பது கருத்து.

     நேர் - இது பகுதியே பெயரானது அல்ல - பலவின் பெயர். முதலிலிருக்கும் மற்று - அசை, பிந்திய மற்று பெயராக் கொள்ளத்தக்கது. ஒரும் - அசை, [இடை. சூ. 21] புகழ்மை சமழ்மை இவைகளில் மை - தன்மையைக் குறிக்கும் விகுதி. ஞாலம் - இடவாகு பெயர்.

 

73. காதலார் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
     ஏதிலார் இன்சொல்லின் தீதாமோ - போதெல்லாம்
     மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப!
     ஆவ தறிவார்ப் பெறின்.

     (இ-ள்.) போது எல்லாம் - பூக்களிலெல்லாம், மாதர் வண்டு - அழகான வண்டுகள், ஆர்க்கும் - ஒலிக்கின்ற, மலி கடல் தண் சேர்ப்ப - நிறைந்த கடலினது குளிர்ச்சியான, கரையை யுடைய அரசனே!, ஆவது அறிவார் பெறின் - தமக்கு நன்மை யாவதை அறிந்திருப்பவரைப் பெற்றால், காதலார் சொல்லும் சுடு சொல் - தன்னிடத்து அன்புள்ளவர் சொல்லுகிற கடுமையான சொல்லானது, உவந்து உரைக்கும் - சந்தோஷப்பட்டுச் சொல்லுகிற, ஏதிலார் இன்சொலின் - அயலாருடைய இனிமையான சொல்லைக் காட்டிலும், தீது ஆமோ - தீமையைத் தருவதாகுமோ, எ-று.

     தமக்கு நன்மை தருவது இது, தீமை தருவது இது என்று அறிந்திருக்கிற விவேகிகளுக்கு அன்புள்ளவர்கள் கடிந்து சொல்லுகிற உறுதிச்சொல் எதிரிகள் சிரித்துக் கொண்டு பிரியமாய்ச் சொல்லுகிற சொல்லைவிடத் தீதாகாது என்றால் "அழ அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார் பிறர்" என்கிற பழமொழிப்படி, தற்காலத்தில் பிரியமாகாமல் வெறுக்கத்தக்கதாகச் சொன்னாலும் பிற்காலத்தில் நன்மையைத் தருமாதலால் நண்பர் பேச்சையே யோசித்து எடுத்துக் கொண்டு பொறுக்க வேண்டுமல்லாமல், பிறர் தற்காலத்துக்கு இனிப்பாகச் சொல்லும் பேச்சை எடுத்துக் கொள்ளலாகாது என்பது கருத்து. குறள் - "நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண், மேற்சென்றிடித்தற் பொருட்டு."

     பெறின் என்பதனால் அது அருமை என அறிக. ஏதும் இலார் - தமக்கு நன்மை செய்யும்படியான யாதொரு சம்பந்தமும் இல்லாதவர் ஏதிலார். இன்சொல் - இனிமையில் மையோடு இகரமும் கெட்டது. சொலின் - ஐந்தனுருபு எல்லையில் வந்தது. போதெலா மாதர் வண்டார்க்கும் என்பது கடற்கரையைச் சிறப்பிக்கின்றது. அறிவார்ப்பெறின் - உருபு - 18வது சூத்திர விதியால் பகரம் மிகுந்தது.

 

74. அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
     உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால்
     இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
     துன்புற்று வாழ்தல் அரிது.

     (இ-ள்.) அறிவது அறிந்து - அறிய வேண்டிய நன்மை தீமைகளை அறிந்து, அடங்கி - கோபதாபங்களில்லாமல் சாந்தமாகி, அஞ்சுவது அஞ்சி - அஞ்சத்தக்க பழி பாவங்களுக்கு அஞ்சி, உறுவது (தமக்கு) நேர்ந்த காரியத்தை, உலகு உவப்ப செய்து - உலகம் சந்தோஷிக்கும்படி செய்து, பெறுவதனால் - (நியாயத்தின்படி தாம்) பெற்ற பொருளால், - இன்பு உற்று - சந்தோஷத்தை அடைந்து, வாழும் இயல்பு உடையார் - வாழும்படியான சுபாவத்தை யுடையவர்கள், எஞ்ஞான்றும் - எப்பொழுதும், துன்பு உற்று - துன்பத்தை அடைந்து, வாழ்தல் அரிது - வாழுவதில்லை, எ-று.

     இதனால் நமக்கு நன்மையாகும், இதனால் தீமையாகுமென்று தெரிந்து கொண்டு, கோபமில்லாமல் பொறுத்துப் பழிபாவங்களுக்கு அஞ்சித் தாம் செய்ய வேண்டியதை உலகுக்கு இன்பமாச் செய்து பிறரிடத்துப் பொறாமையில்லாமல் தமக்குக் கிடைத்ததைக் கொண்டு சந்தோஷப் படுகிறவர்களுக்கு எப்போதும் துன்பமில்லையென்பது கருத்து.

     அறிவது முதலானவை செய்தது போல் வந்த செயப்பாட்டு வினையாலணையும் பெயர்கள் அரிது - இங்கு இன்மையில் வந்தது.

 

75. வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
     தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
     ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின்
     தூற்றாதே தூர விடல்.

     (இ-ள்.) இருவர் - இரண்டு பேர், வேற்றுமை இன்றி கலந்து - பேதமில்லாமற் சேர்ந்து, நட்டக்கால் - சிநேகிதத்தால், தேற்றா - ஒழுக்கம் - அறிவிக்கக்கூடாத நடக்கை, ஒருவன் கண் உண்டாயின் - ஒருவனிடம் உண்டாயிருந்தால், ஆற்றும் துணையும் - பொறுக்கக் கூடிய அளவும், பொறுக்க - பொறுக்கக் கடவன், பொறானாயின் - பொறுக்கக் கூடாமற் போனால், தூற்றாதே - (பிறர் அறிய) வெளிப்படுத்தாமல், தூர விடல் - (அவன் சிநேகத்தை) தூரத்தில் விடக்கடவன், எ-று.

     சிநேகித்தவனிடத்தில் அயோக்கியமான நடக்கை உண்டாயிருந்தால் கூடிய அளவு பொறுத்திருக்க வேண்டும். கூடாமற் போனால் சிநேகத்தை விடலாமே யல்லாமல் அதைத் தூற்றலாகாது என்பது கருத்து.

     நட்டக்கால் - நள் - பகுதி, கால் - விகுதி; ளகரம் டகரமானது சந்தி, மற்றொரு டகரம் எழுத்துப் பேறு, அகரம் - சாரியை, ககர மிகுதியும் சந்தி. தேற்றல் - தெளியச் செய்தல், அறிவித்தல். தூரவிடல் - அந்தச் சிநேகம் தூர்ந்துபோம்படியாக விடல்; அதாவது அழிந்துபோம்படி எனவும் உரைக்கலாம். விடல் - வியங்கோள் வினைமுற்று.

 

76. இன்னா செயினும் இனிய ஒழிகென்று
     தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்
     கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட!
     விலங்கிற்கும் விள்ளல் அரிது.

     (இ-ள்.) கானக நாட - காடு மிகுந்த நாடுடையவனே!, இன்னாசெயினும் - (நண்பர்) இனிமையாகாதவை செய்தாலும், இனிய ஒழிக என்று - (அந்த இன்னாதவை) இனியவாக நீங்கட்டும் என்று நினைத்து, தன்னையே தான் நோவின் அல்லது - தன்னையே தான் வெறுப்பதல்லாமல், துன்னி கலந்தாரை - சேர்ந்து சிநேகித்தவரை, கைவிடுதல் - விட்டுவிடாதே; விள்ளல் - (சிநேகத்திற்) பிரிதல், விலங்கிற்கும் அரிது - மிருகங்களுக்கும் கூடாத காரியம், எ-று.

     சிநேகிதர் தீங்கு செய்தால் அதற்குக் கோபியாமல் அத்தீங்குகள் நமக்கு நல்லவையா ஒழியட்டுமென்று எண்ணி இப்படியாவதற்குக் காரணம் நம்முடைய பாவந்தான் என்று தன்னைத்தான் வெறுக்க வேண்டுமே யன்றிப் பொறாமல் சிநேகிதரைத் துறப்பது தகுதியன்று. இப்படிச் செய்வது மிருகங்களிலும் இல்லை என்பதாம்.

     இனி + அவ் + ஒழிக என்பது தொகுத்தலாய் இனிய வொழிக என்றாயிற்று எனக்கொண்டு இனி அவ் இன்னாதவை ஒழியட்டுமென்று எனவுமுரைக்கலாம். அவ் - பலவின்பால் சுட்டுப் பெயர். செயினும் என்கிற இழிவு சிறப்பும்மையால் அப்படி செய்தல் பெரும்பாலுமில்லை யென்றாகிறது. நோவின் - இதில் இன் சாரியை, வேற்றுமையுருபு முதலியவின்றித் தனித்துப் பெயரோடு வந்ததெனக் கொள்ள வேண்டும்; செயினென் வாய்பாட்டு வினையெச்ச விகுதி யென்றாகிலும் ஐந்தனுருபென்றாகிலும் கொண்டால் பொருள் பொருந்தாமை அறிக. நோவு - தொழிற்பெயர்; நோவதல்லது என வருவதைக் காண்க. விலங்கிற்கும் - இழிவு சிறப்பும்மை. விலங்கு - குறுக்கு, மனிதரைப் போல் நேரே நிற்பதின்றிக் குறுக்காய் நின்று உணவு முதலாயவற்றைக் கொள்ளுதலாலே விலங்கு என்னப்பட்டது. இதனை வடநூலார் 'திர்யக்' என்பர்.

 

77. பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
     அரிய பொறுப்ப என்றன்றோ - அரியரோ
     ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!
     நல்லசெய் வார்க்குத் தமர்.

     (இ-ள்.) ஒல் என் அருவி - ஒல் என ஒலிக்கின்ற அருவிகளையுடைய, உயர் வரை நல் நாட - உயர்வாகிய மலைகளையுடைய நல்ல நாட்டின் அரசனே!, பெரியார் பெரு நட்பு கோடல் - பெரியோர்களுடைய மேன்மையான சிநேகத்தைக் கொள்ளுதல், தாம் செய்த அரிய பொறுப்பு என்று அன்றோ - தாங்கள் செய்த பொறுத்தற்குக் கூடாத குற்றங்களைப் பொறுத்துக் கொள்வார்கள் என்றல்லவா, நல்ல செய்வார்க்கு - நன்மைகளைச் செய்பவர்க்கு, தமர் - நேசராகிறவர்கள், அரியரோ - (கிடைக்க) அருமையானவர்களோ, எ-று.

     தம்மைச் சேர்ந்தவர்கள் அரிய குற்றங்களைச் செய்தாலும் அவை பொறுப்பது பெரியோரியல்பு. நன்மை செய்பவர்களுக்கு எவரும் நட்பாவாராதலால் அது விசேஷமல்ல வென்றபடி.

     கோடல் - தொழிற்பெயர், கொள், தல் - பகுதி விகுதிகள், பகுதி முதனீட்சி - விகாரம்; இதை எழுவாயாக வைத்து ஆகின்றதெனப் பயனிலை வருவித்துக் கொள்க. பெரியார் பொறுப்ப என்பது இவ்வாக்கியத்தின் உள் வாக்கியம். பொறுப்ப - பலர்பால் வினை முற்று. அன்றோ என்பது பிரசித்தத்தைக் காட்டுகின்றது. தமர் - தாம் என்னுங் கிளைப் பெயரடியாக வந்த பெயர். அரியரோ - ஓகாரம் எதிர்மறை. நல்ல - பலவின் பெயர்.

 

78. வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
     அற்றம் அறிய உரையற்க - அற்றம்
     மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மைத்
     துறக்கும் துணிவிலா தார்.

     (இ-ள்.) வற்றி - (உடம்பில் மாமிச முதலிய) வற்றி, ஆற்ற பசிப்பினும் - மிகவும் பசித்தாலும், அற்றம் - (தமது) வறுமையை, பண்பு இலார்க்கு - சற்குண மில்லாதவருக்கு, அறிய உரையற்க - அறியும்படி சொல்லாதிருக்கக் கடவர்; தம்மை துறக்கும் துணிவு இலாதார் - விசேஷ சங்கடங்களில் தம்மை மாய்த்துவிடும் படியான மனவுறுதி யில்லாதவர். அற்றம் மறைக்கும் துணையார்க்கு - தமது வறுமையை நீக்க வல்லவருக்குச் சொல்லலாமே யல்லாமல் அயோக்கியரிடத்துச் சொல்லலாகா தென்பதாம்.

     இப்பாடல் வேறு அதிகாரத்தில் சேர்க்கத் தக்கது ஆனாலும் பொறுக்கிறதென்கிற வொரு சம்பந்தத்தால் இங்கே சேர்க்கப்பட்டது.

     வாய் திறந்து கொண்டு தூங்கினான் என்பது போல் பசித்து வற்றினாலும் என மாற்றிக் கொள்க. அற்றம் - அது - பகுதி, அம் - கர்த்தாப் பொருள் விகுதி; செல்வம் அற்றிருப்பது. என்பது பொருள். ஏ - அசை.

 

79. இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்
     இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
     ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட!
     பழியாகா ஆறே தலை.

     (இ-ள்.) ஓங்கு அருவி நாட - மேலெழும்புகிற அருவிகளுள்ள நாடுடையவனே! இன்பம் பயந்து - இன்பத்தைத் தந்து, ஆங்கு இழிவு தலைவரினும் - அதிலே தாழ்மை நேர்ந்தாலும், இன்பத்தின் பக்கம் - இன்பம் வருகிற பக்ஷத்திலேயே, இருந்தைக்க - இருக்கின்ற உனக்கு, இன்பம் ஒழியாமை கண்டாலும் - சுகம் நீங்காதிருப்பதைப் பார்த்தாலும், பழி ஆகா ஆறே - பழிப்பு உண்டாகாத வழியே, தலை - முக்கியம், எ-று.

     ஒரு காரியஞ் செய்தால் அதில் இன்ப முண்டாவதோடு பழியும் தாழ்மையு முண்டானால் அதை விட வேண்டும். தாழ்மையைப் பொறுத்து இன்பம் வருவதையே நோக்கி நிற்கிறவனுக்கு ஒழியாத இன்பம் கிடைத்தாலும் அது வரும் வழி பழிப்பில்லாததாயிருக்க வேண்டும் என்றபடி.

     இருந்தைக்க - இருந்தை - முன்னிலை வினையாலணையும் பெயர், கு - நான்கனுருபு, அ - சாரியை பெற்றது. (பெயர். சூ. 61.)

     இப்பாடலும் பழிப்பைப் பொறுத்தல் தகுதியல்ல வென்பது மாத்திரத்தால் இங்கு சேர்க்கப்பட்டதென அறிக. ஏகாரம் - தேற்றம் கண்டாலும் - உம்மை உயர்வு சிறப்பு.

 

80. தான்கெடினும் தக்கார்கேடு எண்ணற்க தன்னுடம்பின்
     ஊன்கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க - வான்கவிந்த
     வையக மெல்லாம் பெறினும் உரையற்க
     பொய்யோடு இடைமிடைந்த சொல்.

     (இ-ள்.) தான் கெடினும் - தான் கெட்டாலும், தக்கார் கேடு எண்ணற்க - யோக்கியருக்குக் கெடுதி செய்ய நினையாதிருக்கக் கடவன்; தன் உடம்பின் ஊன் கெடினும் - தன்னுடம்பில் மாமிசம் வற்றி யழியும்படி யானாலும், உண்ணார் கைத்து - உண்ணத்தகாதவர் கையினால் வரும் உணவை, உண்ணற்க - உண்ணாதிருக்கக் கடவன்; வான் கவிந்த - ஆகாயம் மூடிய, வையகமெல்லாம் பெறினும் - உலகத்தையெல்லாம் பெறுவதாயிருந்தாலும், பொய்யோடு இடைமிடைந்த சொல் - இடையிலே அசத்தியத்தோடு சேர்ந்த சொல்லை, உரையற்க - சொல்லாதிருக்கக் கடவன், எ-று.

     பொறாமையாலே தன்னைப் போல் பிறரும் கெடட்டும் என்று யோக்கியருக்கு கேடு நினையாதிருக்க வேண்டும்; பசி பொறாமையாலே உண்ணாத விடத்தில் உண்ண வேண்டாம்; உலகமெல்லாம் கிடைப்பதா யிருந்தாலும் பொய் சொல்லாமல் தன் வளப்பமின்மையைப் பொறுக்க வேண்டும் என்பது கருத்து.

     முந்திய உம்மை இரண்டும் இழிவு சிறப்பு, பிந்தியது உயர்வு சிறப்பு, கைத்து - கையினால் வருவது; அவரிடுஞ் சோறு; பொருள் எனவுமுரைக்கலாம்; கை - பகுதி, து - விகுதி. பொய்யோடிடைமிடைந்த சொல் என்றதனாலே சில உண்மையானாலும் பொய் சிறிது கலந்ததும் சொல்லலாகாதென்பதாம்.