சினம் இன்மை

bookmark

துறவியல்

 

 [அதாவது கோபிக்கக் காரணமிருந்துங் கோபியாமலிருப்பது.]

 

61. மதித்திறப் பாரும் இறக்க மதியா
     மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
     ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
     காயும் கதமின்மை நன்று.

     (இ-ள்.) மதித்து இறப்பாரும் இறக்க - தம்மை மேன்மைப் படுத்திச் செல்லுகிறவர்களும் செல்லுக; மதியாது மிதித்து இறப்பாரும் இறக்க - மதியாமல் தம்மைக் கீழ்ப்படுத்திச் செல்லுகிறவரும் செல்லுக; ஈயும் - (பறக்கும்) ஈயும், மிதித்து ஏறி- (நம்மை) மிதித்து (நம்) மேலேறி, தலைமேல் இருத்தலால் - தலையின் மேல் இருப்பதனால், அஃது அறிவார் - அதை அறிந்தவர், காயும் கதம் இன்மை - சுடும்படியான கோபம் இல்லாதிருப்பது, நன்று - நல்லது, எ-று.

     அறிவுடையோன் மதிப்பான், அறிவிலான் அவமதிப்பான்; அதற்கு ஈயே திருஷ்டாந்தம், ஆதலால் அவமதித்தவனைக் கோபியா திருத்தல் வேண்டும் என்பது கருத்து.

     உம்மைகள் எண்ணில் வந்தவை. ஈயும் - இவ்வும்மை இழிவு சிறப்பு. இறக்க - வியங்கோள். அறிவார் என்னும் எழுவாய் இன்மையின் பகுதியாகிய இல் என்பதற்குக் கருத்தாவாய் நின்றது.

 

62. தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது
     கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி
     அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
     முடிகிற்கும் உள்ளத் தவர்.

     (இ-ள்.) மண்டி - நெருங்கி, அடி பெயராது - வைத்த பாதத்தை வாங்காமல், ஆற்ற இளி வந்த போழ்தில் - மிகவும் அவமதிப்பும் இழிவும் வந்த போதிலும், முடிகிற்கும் உள்ளத்தவர் - (அதற்குக் கலங்காது எடுத்த காரியத்தை) நிறைவேற்றும் படியான மனோபல முள்ளவர்கள், தண்டா சிறப்பின் தம் இன் உயிரை - நீங்காத சிறப்பையுடைய தமது இனிமையாகிய பிராணனை, தாங்காது - தரியாமல், கண்டுழி எல்லாம் - கண்ட விஷயங்களிலும், துறப்பவோ - துறப்பார்களோ, எ-று.

     பிறர் தம்மை யிகழ்ந்ததற்காகக் கோபங்கொண்டு அதற்காக உயிரை விடும் அற்பரைக் குறித்துச் சொல்லியது. மகத்தான இகழ்ச்சியிலும் அதை லக்ஷியஞ் செய்யாமல் எடுத்த காரியத்தை முடிக்கும்படியானவர் கண்ட விஷயங்களில் தம் உயிரைத் துறவாமல் சாந்தமாயே யிருப்பார் என்பது கருத்து.

     'தண்டாச் சிறப்பின்' என்பதை 'சிறப்பின் தண்டா' என மாற்றி "சிறப்பின் நீங்காத" எனவு முரைக்கலாம். சிறப்பின் - ஐந்தனுருபு. நீக்கத்தில் வந்தது; முன் உரைத்தபடியாகில் இன்சாரியை. கண்டுழி - கண்ட உழி என்பதில் ஈறு தொகுத்தல் நியதி; ஏழாம் வேற்றுமைத் தொகை. எல்லாமும் அப்படியே. கண்டுழியெல்லாம் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. துறப்ப - பகரம் - பலர்பால்விகுதி [வினை. சூ. 8]. ஓ - எதிர் மறையில் வந்தது. போழ்தின் என்பதோடு உயர்வு சிறப்பும்மை கூட்டிக் கொள்க. முடிகிற்கும் - முடி - பகுதி, கில் - ஆற்றலைக் காட்டும் விகுதி, கு - சாரியை, உம் - விகுதி.

 

63. காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
     ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
     ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
     காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.

     (இ-ள்.) காவாது - தன் வாயைக் காக்காமல், ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல் - ஒருவன் தன் வாயைத் திறந்து சொல்லுஞ் சொல்லானது, ஓவாதே - ஒழியாமல், தன்னைச் சுடுதலால் - தன்னை வருத்துவதனால், ஓவாதே ஆய்ந்து அமைந்த கேள்வி - ஒழியாமல் ஆராய்ந்து பொருந்திய கேள்வியைப் பெற்ற அறிவுடையார் - விவேகிகள், எஞ்ஞான்றும் - எப்பொழுதும், கறுத்து - கோபித்து, காய்ந்து அமைந்த - உக்கிரமாகி யிருக்கிற சொற்களை, சொல்லார் - சொல்ல மாட்டார்கள். எ-று.

     தம்மைப் பிறன் நிந்தித்த போது தமக்கு உண்டாயிருக்கிற வருத்தத்தையே திஷ்டாந்தமாக் கொண்டு பிறர் விஷயத்தில் கடுமையான சொற்களைச் சொல்லார் விவேகிகள் என்பது கருத்து.

     ஓவாது - எதிர்மறை வினையெச்சம், ஓ அல்லது ஓவ - பகுதி, ஆ - எதிர்மறை விகுதி, து - விகுதி. காய்ந்தமைந்த - பலவின்பால் வினையாலயணையும் பெயர், இரண்டாம் வேற்றுமைத் தொகை; இது அன்சாரியை பெற்றால் 'அமைந்தன' என்றிருக்கும்.

 

64. நேர்த்து நிகரல்லார் நிரல்ல சொல்லியக்கால்
     வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்ததனை
     உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
     துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.

     (இ-ள்.) நிகர் அல்லார் - தமக்குச் சமானமாகாதவர்கள், நேர்த்து - எதிர்த்து, நீர் அல்ல சொல்லியக்கால் - அயோக்கியமான சொற்களைச் சொன்னால், விழுமியோர் - மேலானவர்கள், வேர்த்து வெகுளார் - (உடம்பு) புழுங்கி கோபிக்க மாட்டார்கள்; கீழ் - கீழோன், அதனை ஓர்ந்து - அந்த நிந்தனையை ஆராய்ந்து, உள்ளத்தான் உள்ளி - மனதினால் நினைந்து, உரைத்து - (பலர்க்கும்) சொல்லி, உராய் - உராய்ந்து, ஊர் கேட்ப - ஊராரெல்லாம் கேட்கும்படி, துள்ளி - அதிகமாய் குதித்து, தூண் முட்டும் - தூணில் முட்டிக் கொள்ளுவான், எ-று.

     அற்பர் செய்யும் நிந்தனையைக் குறித்துக் கோபிக்க மாட்டார் பெரியோர். கீழ்மக்களோ தம்மை வெகுமேலாக நினைத்திருப்பதனால் நிந்தனையைக் கேட்ட மாத்திரத்தில் நம்மை இப்படி சொல்லலாமாவென்று மனம் பொறாமல் பலருக்குஞ் சொல்லி நிமிஷத்துக்கு நிமிஷம் கோபம் மிஞ்சுவதனால் துள்ளித் தூணில் முட்டிக் கொள்வார்கள் என்பது கருத்து.

     நேர்த்து, ஓர்த்து - இரண்டிடத்தும் வலித்தல் விகாரம். நீர் - சற்குணம், அதை யுடையதுக்கு ஆயிற்று. அல்ல - பலவின் பெயர் விழுமியோர் - விழுமு - பகுதி, சிறப்பு, விரும்புதலுமாம்; இன் - இடைநிலை ஈறுகெட்டது, ஆர் - விகுதி, ஓர் ஆயிற்று, [பொது. சூ. 2] உராய் - முதனிலையே வினையெச்சமா நின்றது. "வினைமுற்றே வினையெச்சமாகலும்" என்கிற வினையியல் 32வது சூத்திரத்தின் உரையைக் காண்க. 'ஊர் கேட்ப என்றதற்கு துள்ளுதல் முட்டிக் கொள்ளுதலின் ஓசை யாவருக்கும் செவிப்படும்படி எனவும் ஊரார் ஓடி வந்து இதென்னவென்று வினாவ எனவும் கருத்துக் கொள்ளலாம். கீழ் - ஆகுபெயர்.

 

65. இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
     இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
     ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
     பொறுக்கும் பொறையே பொறை.

     (இ-ள்.) இளையான் அடக்கம் - (வாலிபன் பொறிவழிச் செல்லாது) அடங்கி நிற்பதே, அடக்கம் - அடக்கமென்று சொல்லப்படும்; கிளை பொருள் இல்லாஜ்ன் - விர்த்தியாகும் படியான பணமில்லாதவன், கொடையே கொடைப்பயன் - (பிறர்க்குப் பண முதலியவற்றைக்) கொடுப்பதே பயனுள்ள கொடையாம்; எல்லாம் ஒறுக்கும் - எல்லாவற்றையும் வெல்லத்தக்க, மதுகை - தேகபலமும், உரன் - மனவுறுதியும், உடையாளன் - உடையவன், பொறுக்கும் பொறையே - பொறுத்துக் கொள்ளும் பொறுமையே, பொறை - பொறுமையென்று சொல்லத்தகும், எ-று.

     பொறிகளை வெல்லுதற்குக் கூடாத வயதுள்ளவன் இந்திரியங்களை ஜயிப்பது எப்படி சிரேஷ்டமோ, பணமில்லாதவன் கொடுப்பது எப்படி கொண்டாடும்படியான கொடுத்தலோ, அப்படி தேகபல மனோபலங்களை யுடையவன் கோபத்தைப் பொறுத்தல் மேலானது என்பது கருத்து.

     இது ஒப்புமைக் கூட்டம் என்னுமலங்காரம். இளையான் - இளமையுடையவன். அடக்கம் - தொழிற்பெயர், அடங்கு - பகுதி, வலித்தது, அம் - விகுதி. கொடை, பொறை - இரண்டும் தொழிற்பெயர்கள். கொடு, பொறு, - பகுதிகள், ஐ - விகுதி; "முற்றுமற்றொரோ வழி" என்றதனால் உகரம் கெட்டது. கிளை பொருள் - கிளைக்கின்ற பொருள், வினைத்தொகை. 'கொடைப் பயன்' என்பதை 'பயன்கொடை' என மாற்றிக் கொள்க. எல்லாக் கொடையும் பயன்படுவதானாலும் சிறப்பைப் பற்றி இங்ஙனம் சொல்லப்பட்டது. மதுகையுரன் - உம்மைத் தொகை. உடையாளன் - உடையனாதலை ஆள்பவன். பொறுக்கும் பொறை - பெயரெச்சம் தொழிலைக் கொண்டது; பொறுத்தல் என்பதே திரண்ட பொருள், [வினை. சூ. 21] இப்பாட்டில் விதியலங்காரமும் சேர்ந்திருக்கின்றது.

 

66. கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
     எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
     இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
     குடிமையான் வாதிக்கப் பட்டு.

     (இ-ள்.) ஒல்லை - சீக்கிரத்தில், இடு நீற்றால் - மந்திரித்திட்ட விபூதியினால், பை அவிந்த நாகம் போல் - படம் அடங்கின பாம்பைப் போல, தத்தம் குடிமையால் - தங்கள் தங்கள் குலப்பெருமையால், வாதிக்கப்பட்டு - வருத்தப்பட்டு, (யோக்கியர்) கல் எறிந்தது அன்ன - கல்லால் எறிந்தது போலிருக்கிற, கயவர் வாய் இன்னாச்சொல் - மூடர் வாயிலுண்டாகிற கொடுஞ்சொற்களை, எல்லாரும் காண - யாவரும் காணும்படி, பொறுத்து -, உய்ப்பர் - செலுத்துவார்கள், எ-று.

     விபூதி மந்திரித்துப் போட்டால் தலை யெடுக்க மாட்டாமல் அடங்கிக் கிடக்கிற பாம்பைப் போல பெரியோர்களும் தங்களைத் துஷ்டர் வைதால் தங்கள் குலப்பெருமைகளை நினைத்துப் பொறுத்துக் கொண்டு சும்மா விருப்பார்கள் என்பது கருத்து.

     உய்ப்பர் என்பதற்கு அந்த இன்னாச் சொற்கள் தங்கள் மேல் பட்டனவாகப் பாவியாமல் புறத்திற் பட்டனவாக்குவார் என்று அபிப்பிராயம். வாதிக்க - இது பாதிக்க என்னும் வடமொழித் திரிபு. இதற்கே தர்க்கிக்கப்பட்டு எனப்பொருள் கொண்டு, நீர் இந்தப்படி செய்வது இன்னின்ன காரணத்தால் நம் பெருமைக்குத் தகாது என்று தர்க்கஞ் செய்யப்பட்டு எனவும் கருத்துரைக்கலாம்.

     எறிந்தன்ன - 'எறிந்தாலன்ன', 'எறிந்தது அன்ன' என்றிரு வகையுங் கொள்ளலாம். கல் எறிந்து எனவுமாம். உய்ப்பர் - பிறவினை, உய் - தன்வினை பிறவினைகளுக்குப் பொதுவான பகுதி. தத்தம் - தம் தம் என்பது "மவ்விரொற்றழிந்து" என்கிற விதியால் மகரங்கெட்டுத் தகர மிகுந்தது. குடிமை - மை - விகுதி, இயல்பைக்காட்டும்.

 

67. மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
     ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை
     நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
     பேர்த்தின்னா செய்யாமை நன்று.

     (இ-ள்.) மாற்றார் ஆய் நின்று - பகையுள்லவர்களாகி நின்று, தம் மாறு - தம் பகைக்கு உரிய காரியங்களை, ஏற்பார்க்கு மேற்கொண்டவர்க்கு, ஏவாமை - (தானும்) அதை மேற்கொள்ளாம லிருப்பதை, ஆற்றாமை என்னார் அறிவுடையோர் - சத்தியீனமென்று சொல்லமாட்டார் விவேவிகள்; (ஆதலால்) ஆற்றாமை - பொறாமல், அவர் நேர்ந்து - (அப்பகைவரை) எதிர்த்து, இன்னா செய்தக்கால் - கொடுமையானவைகளைச் செய்தால், தாம் அவரை - தாங்கள் அவர்களுக்கு, பேர்த்து இன்னா செய்யாமை - மீட்டும் கொடுமைகளைச் செய்யாதிருந்தால், நன்று - நல்லதாம். எ-று.

     பகை கொண்டவர் அதற்குரிய கொடுமைகளைச் செய்தால் தாமும் அவர்களுக்கு அப்படி செய்யாமல் பொறுப்பது நலம். இவ்வாறு செய்ததனால் விவேகிகளால் சத்தியீனனென்கிற நிந்தை வர மாட்டாது என்பது கருத்து.

     மாறுதலையுடையவர் மாற்றார். மாறு - முதனிலைத் தொழிற்பெயர், மற்று - அசை. இரண்டாம் ஆற்றாமை - எதிர்மறை வினையெச்சம், மை - விகுதி. இன்னா - எதிர்மறைப் பலவின்பாற் பெயர்.

 

68. நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
     கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
     நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
     சீர்கொண்ட சான்றோர் சினம்.

     (இ-ள்.) நீசர் வெகுளி - கீழ் மக்களுடைய கோபம், நெடுங்காலம் ஓடினும் - அதிககாலஞ் சென்றாலும், கெடும் காலம் இன்றி - அழியுங்கால மில்லாமல், பரக்கும் - வியாபிக்கும்; சீர் கொண்ட சான்றோர் சினம் - கீர்த்தி பெற்ற பெரியோர் கோபமானது, அடும் காலை - காய்ச்சும் பொழுது, நீர் கொண்ட வெப்பம் போல - ஜலமானது கொண்ட உஷ்ணத்தைப் போல, தானே தணியும் - பிறர் ஆற்ற வேண்டாமல் ஆறும், எ-று.

     நீசர் தம்மிடத்து மகிமையுளதாக எண்ணி அகங்காரங் கொண்டிருப்பவராதலால் அவர்க்கு வரும் கோபம் காலம் செல்லச் செல்ல வளர்ந்தே வரும், சான்றோர் சினமோ காய்ச்சும் போது நீர் வெப்பங் கொண்டாலும் பின் தானே ஆறுவது போல் தானே ஆறிவிடும் என்பது கருத்து.

     இயல்பில் தண்மையும் பிறர் காயச் செய்தால் வெம்மையும் நீர்க்கு இருப்பது போல் பெரியோர் குணத்திற்கும் இருக்கிறது என்று அவ்வுவமை கூறப்பட்டது.

     இன்று - எதிர்மறைக் குறிப்பு வினையெச்சம். பரக்கும் - பர - பகுதி. தானே - ஏகாரம் பிரிநிலை. தணியுமே - ஏ - அசை.

 

69. உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
     அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
     தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல்
     வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.

     (இ-ள்.) உபகாரம் செய்ததனை - (ஒருவன்) தனக்குச் செய்த உபகாரத்தை, ஓராதே - நினையாமல், தங்கண் - தம்மிடத்தில் [உபகாரஞ் செய்தவரிடத்தில்], அபகாரம் ஆற்ற செயினும் - அபகாரத்தை மிகச் செய்தாலும், தாம் உபகாரம் செய்வதல்லால் - தாங்கள் (அவனுக்கு) உபகாரம் செய்வதேயன்றி, தவற்றினால் - பிசகியும், தீங்கு ஊக்கல் - தீமையைச் செய்ய ஆரம்பித்தல், வான் தோய் குடி பிறந்தார்க்கு - புகழால் வானத்தை எட்டிய குலத்திற் பிறந்தவர்க்கு, இல் - இல்லை, எ-று.

     தாம் உபகாரஞ் செய்திருக்க, தமக்கே அபகாரஞ் செய்த நீசருக்கும் மறுபடி தர்ம உபகாரஞ் செய்வாரேயல்லாது அபகாரஞ் செய்யார் நற்குடிப் பிறந்தோர் என்பது கருத்து.

     உபகாரம் - உதவி, அபகாரம் - அதற்கு எதிரானது. செய்ததனை - செய்தது - செய்யப்பட்டது. "செயப்படு பொருளைச் செய்தது போல்" என்கிற [பொது. சூ. 49] விதி; உபகாரத்துக்கு விசேஷணமாகக் கொள்க. ஆற்ற - வினையெச்சம், ஆற்று - பகுதி, தவற்றினால் - தவறு என்னும், பெயரின் மூன்றாம் வேற்றுமை. ஊக்கல் - விர்த்தி செய்தல்.

 

70. கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
     பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
     கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
     மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.

     (இ-ள்.) நாய் - , கூர்த்து - கோபித்து, கௌவிக் கொளக் கண்டும் - (தம்மைக்) கவ்விக் கொள்வதைப் பார்த்தும், பேர்த்து தம் வாயால் - எதிராகி தமது வாயினால், நாய் கௌவினார் - அந்த நாயைக் கவ்வினவர்கள், ஈங்கு இல்லை - இவ்வுலகத்திலில்லை; (ஆதலால்) கீழ்மக்கள் - அயோக்கியர், நீர்த்து அன்றி - குணமுடைய தல்லாமல், கீழாய சொல்லியக்கால் - ஈனமான பேச்சுகளைப் பேசினால், மேன்மக்கள் - யோக்கியர், மீட்டு - மறுபடியும், தம் வாயால் - , சொல்பவோ - (அப்பேச்சுக்களைச்) சொல்வார்களோ, எ-று.

     நாய் நம்மைக் கடித்தால் எதிரே நாமும் கடித்தல் போலக் கீழோர் வைதால் நாமும் அவரை வைதல் தகாது என்பது கருத்து.

     வைதலுக்குக் காரணம் சினம். கௌவிக் கொள - இதனை வினைப் பெயர் போல் கொள்க. நீர்த்து - நீரையுடையது, நீர் - சற்குணம், கீழாய - பலவின் பெயர். சொல்ப - பலர்பால் வினைமுற்று; ப - விகுதி. ஒ - எதிர்மறை.