துறவு

bookmark

துறவியல்

 

 [அதாவது செல்வ முதலியவற்றிற் பற்று நீங்குதல் வேண்டுமென்பதைக் குறித்துச் சொல்லியது.]

 

51. விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
     தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
     தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
     தீர்விடத்து நிற்குமாம் தீது.

     (இ-ள்.) விளக்கு புக - தீபமானது (ஓரிடத்தில்) பிரவேசிக்க, இருள் மாய்ந்து ஆங்கு - இருட்டு அழிவது போல், ஒருவன் தவத்தின் முன் - ஒருவன் செய்த தவம் விளங்குமிடத்து, பாவம் நில்லாது - பாவச் செய்கைகள் நிற்கமாட்டா; விளக்கு நெய் தேய்விடத்து - விளக்கின் எண்ணெய் முதலியவை குறைந்து போகுமிடத்து, இருள் சென்று பாய்ந்து ஆங்கு - இருட்டுப் போய் பரவுவது போல, நல்வினை தீர்விடத்து - புண்ணிய காரியங்கள் நீங்குமிடத்திலே, தீது நிற்கும் - பாவச்செய்கை வந்து பிரவேசிக்கும், எ-று. ஆம் இரண்டும் - அசை.

     விளக்கின் முன் இருள் கெடுவதுபோலவும் விளக்கினெய் குறையக் குறைய இருட்டு பரவுவது போலவும் புண்ணிய காரியஞ் செய்து வரப் பாவகாரியம் நாசப்படும், புண்ணிய காரியம் தேய்ந்துவரப் பாவகாரியம் வந்து சேரும் என்பதாம். எனவே ஒருவன் இடைவிடாது நற்காரியஞ் செய்துவந்தால் பாவகாரியம் புக இடம்பெறாது நீங்கும். இடைவிட்டுச் சும்மாவிருந்தால் பாவத்திற்கு இடமுண்டாகும் என்பது கருத்து.

     இந்திரியங்கள் வியாபாரமின்றிச் சும்மாவிரா வாதலால் எதையாகிலும் செய்து கொண்டேயிருக்கும். செல்வம் யாக்கை முதலியவற்றுட் பற்றிருக்கின் அவற்றைப் போற்றப் பல அக்கிரமங்களுக்கு மிடமுண்டா மென்பதைப் பற்றி அப்பற்றை விட வேண்டுமென்பது கருத்து. வடநூலார் இந்திரியங்கள் "குர்வத்ரூபங்கள்" என்பர்.

     புக - காரணப் பொருட்டாய் வந்த செயவெனெச்சம். மாய்ந்தாங்கு - மாய்ந்தது ஆங்கு, மாய்ந்து ஆங்கு என இருவகையிலும் கொள்ளலாமென முன்பே தெரிவித்தனம். தேய்வு, தீர்வு - இரண்டும் தொழிற்பெயர், அவையுண்டாம் போதில் எனக் கொள்க.

 

52. நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
     தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
     சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்
     பித்தரின் பேதையார் இல்.

     (இ-ள்.) தலை ஆயார் - மேலானவர்கள், நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி - (உடம்பு செல்வ முதலானவைகளில்) நிலையில்லாமை என்றும் வியாதிகளும் கிழத்தனமும் சாவும் ஆகிய குற்றங்களையுடையவனவென்றும் யோசித்து, தம் கருமம் செய்வார் - தமக்கு உறுதியான காரியங்களைச் செய்து வருவார்கள்; தொலைவு இல்லா - நீங்குதலில்லாத, சத்தமும் சோதிடமும் - சொல்லைக் குறித்த சாஸ்திரங்களும் (கிரகவோட்டமும் அதனால் வரும் பயன் முதலியவற்றையு முணர்த்தும்) சோதிட சாஸ்திரமும், என்று இவை - என்று சொல்லப்பட்ட பல நூல்களையே, பிதற்றும் - (விடாமல்) சொல்லிக் கொண்டு திரிகிற, பித்தரில் - பைத்தியம் பிடித்தவரைக் காட்டிலும், பேதையார் இல் - புத்தியினர் (உலகத்துள்) இல்லை, எ-று.

     செல்வமுதலியவற்றுள் பல குற்றங்களிருப்பதைக் கண்டு அவைகளில் அபிமானத்தை வைக்காமல் தமக்கு நற்கதிக்கேதுவான வேதாந்த சாஸ்திர முதலியவை கற்றுக் காலத்தைக் கழிப்பர் பெரியோர்; இம்மைக்கே பெரும்பாலும் உபயோகப்படுகிற இலக்கண முதலிய நூல்களையே கற்றுக் காலத்தை வீண் போக்குவர் மூடர் என்பது கருத்து.

     சத்தம் என்பது ஐந்திலக்கணங்களும் சங்கீதமும்; தொனிகளுக்கும் பொது. சோதிடம் என்பது கணிதத்துக்குமாம். இப்படிப்பட்ட நூல்கள் இம்மை மறுமைகளிற் சிறிது உபயோகமானாலும் வேதாந்த முதலிய நூல்களைப் போல் முக்கியமா யுதவியாகாமையின் அவற்றையே முக்கியமாகக் கொண்டவரை இப்பாட்டிற் பழித்தது என அறிக. நிலையாமை - ஒரு தன்மையதாயிராமை என்று என்னும் எண்ணிடைச் சொல்லை நிலையாமை முதலிய நான்கிலும் கூட்டிக் கொள்க; [இடை. சூ. 10.] மேற்படி இயல் 9ம் சூத்திரத்தினால் இது தொகைபெறாதாயிற்று. ஆயுள் முழுதுமே போதாதாகையால் 'தொலைவில்லா' என்றார். ஆங்கு - அசை. பித்தரில் - ஐந்தனுருபு எல்லைப் பொருளில் வந்தது. நீக்கப் பொருளெனக் கொள்வாருமுளர்.

 

53. இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
     செல்வம் வலிஎன் றிவையெல்லாம் - மெல்ல
     நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
     தலையாயார் தாம்உய்யக் கொண்டு.

     (இ-ள்.) இல்லம் - மனை, இளமை - வாலிபம், எழில் வனப்பு - மிகுந்த அழகு, மீக்கூற்றம் - செல்வாக்கு, செல்வம் - சம்பத்து, வலி - தேகபலம், என்று இவையெல்லாம் - என்று சொல்லப்பட்ட இவைகளெல்லாம், நிலையாமை - நிலைத்திராமையை, மெல்ல கண்டு - நிதானித்து யோசித்து, தலையாயார் - மேலோர், தாம் உய்யக் கொண்டு - தாங்கள் கடைத்தேறுவதற்கு, நெடியார் - நீடியாதவராகி, துறப்பர் - (இல்ல முதலியவற்றுட்) பற்றை விடுவார்கள், எ-று.

     முதற்பாட்டின் கருத்தே இதிலுமென்றறிக.

     எழில் வனப்பு என்பன ஒரு பொருட் கிளவியாயினும் "ஒரு பொருட் பன்மொழி சிறப்பினின்வழா" என்கிற [பொது. 47வது சூ.] விதியால் அமைந்தன. மீக்கூற்றம் - மீ - மேலான, கூற்றம் - கூறுதல் [சொல்லுதல்]. எல்லாவற்றின் மேலாகச் சொல்லுதலென்றபடி. என்று என்பதை எண்ணிடைச் சொல்லாக் கொண்டு முரைக்கலாம். மெல்ல - மென்மையடியாக வந்த குறிப்பு வினையெச்சம். நெடியார் - எதிர்மறை வினையாலணையும் பெயர்; நெடு - பகுதி, தாமதித்தல், ஆர் - எதிர் மறையையுங் குறிக்கும் பலர்பால் விகுதி, உய்யக்கொண்டு - ஒரு சொல்லாக் கொள்ளுதற் நேர்; தாம் உய்வதைக் கொண்டெனவும் உரைக்கலாம்.

 

54. துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
     இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
     இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையாறு
     அடைவொழிந்தார் ஆன்றமைந் தார்.

     (இ-ள்.) ஏழையார் - விவேகமற்றவர்; பல நாள் துன்பம் உழந்தும் - பலதினம் துக்கத்தை யனுபவித்தும், ஒரு நாளை இன்பமே காமுறுவர் - ஒருதினத்தில் கிடைக்கும் சுகத்தையே விரும்புவார்கள்; ஆன்று அமைந்தார் - அறிவு அதிகமாகப் பொருந்தினவர். இன்பம் இடைதெரிந்து - சுகமானது மாறுபடுவதை அறிந்து, இன்னாமை நோக்கி - அதனால் வருந் துன்பத்தைக் கண்டு, மனை ஆறு அடைவு - இல்வாழ்க்கை வழியில் சேருதலினின்றும், ஒழிந்தார் - நீங்கினார், எ-று.

     புத்தியீனர் இல்வாழ்க்கையிற் பலதுன்பத்தை அனுபவித்தும் ஒரு கால் நேரிடுகிற சொற்ப இன்பத்தைப் பற்றி அதையொழித்தாரில்லை; விவேக மிருந்தவரோ அது மாறிப்போய் பல துன்பங்கள் நேரிடுவதை யோசித்து அதையொழித்தார் என்பதாம்.

     நாளை - ஐ - சாரியை, காமம் - விருப்பம், அதனை உறுவர் காமுறுவர், மரூஉமொழி, காமம் இடைகுறைந்த தென்னவுமாம். இடை - இடைதல் அதாவது நீங்குதல்; முதனிலைத் தொழிற்பெயர். இன்னாமை - இனி என்பதின் எதிர்மறைப் பண்பு. ஆன்று - இது அகன்று என்பதின் விகார மென்பர்; ஆன்றல் என்பது தனித்த ஒரு சொல் எனவுஞ் சொல்லுகின்றனர்.

 

55. கொன்னே கழிந்தன்று இளமையும் இன்னே
     பிணியோடு மூப்பும் வருமால் - துணிவொன்றி
     என்னொடு சூழாது எழுநெஞ்சே போதியோ
     நன்னெறி சேர நமக்கு.

     (இ-ள்.) இளமையும் - இளமைப்பருவம், கொன்னே கழிந்தன்று - வீணாய்ச் சென்றது; இன்னே - இப்பொழுதே, பிணியொடு மூப்பும் வரும் - நோயும் கிழத்தனமும் வந்து சேரும்; (ஆதலால்) துணிவு ஒன்றி - துணிவைப் பொருந்தி என்னொடு சூழாது - என்னொடு ஆலோசியாமல், எழு நெஞ்சே - எழுகின்ற மனமே, நமக்கு நல் நெறி சேர - நமக்கு நல்ல வழியானது கிடைப்பதற்கு, போதியோ - போகிறாயோ, எ-று.

     ஒருவன் திடீரென்று விஷய வாசனை தீர்ந்து நன்மார்க்கத்திற் செல்லத் துணிந்த தன் மனதை நோக்கி "நானு நீயு மொன்றியே எல்லாக் காரியமும் வெகுநாளாய் நடத்தி வந்தோமே, இப்பொழுதென்ன என்னோடே ஆலோசியாம லெழுந்தாய்? கால இயல்பினால் வருந் துன்பங்களைக் கண்டு விஷயப் பற்றை விட்டு நித்திய சுகமான மோக்ஷவழிக்குப் போகிறாய் போலும்" என்று சொன்னது என்பது கருத்து.

     நன்னெறி - மோக்ஷவழி. நமக்கு - உனக்கும் எனக்கும், நீ என்பது மனம்; நான் என்பது ஆத்துமா. மனதின் வழியாகவே சுகதுக்கங்களை யனுபவிப்பது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. நமக்கு என்பது தனித்தன்மைப்பன்மை யென்னவுமாம். கழிந்தன்று - கழி - பகுதி, த் - இடைநிலை, சந்தியால் வந்த தகரம் மெலிந்தது. அன்சாரியை; று - விகுதி, உம்மைகள் எண்ணில் வந்தன. ஆல் - அசை, காரணம் குறித்த தெனவுமாம். துணிவு - நிச்சயமும் தீரமுமாம். போதி - இ - விகுதி. தகரம் - எழுத்துப் பேறு, தி என்பதே விகுதி என்னலாம்; இவ்விகுதி ஏவலுக்கும் நிகழ்காலத்துக்கும் வருகின்றது; அல்லது தகரம் - இடைநிலை; இ - விகுதி, விரைவு பற்றி நிகழ்காலம் இறந்தகாலமான வழுவமைதி என்னலாம்.

 

56. மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்
     பூண்டான் கழித்தற்கு அருமையால் - பூண்ட
     மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
     கடியென்றார் கற்றறிந் தார்.

     (இ-ள்.) மாண்ட குணத்தொடு மக்கள் பேறு இல் எனினும் - மாட்சிமைப்பட்ட குணங்களும் பிள்ளையைப் பெறுதலும் (இல்லாளிடத்து) இல்லாவிட்டாலும், பூண்டான் - கலியாணஞ் செய்து கொண்டவன், கழித்தற்கு அருமையால் - (அம்மனையை) நீக்குவதற்குக் கூடாமையாலே, பூண்ட மிடி என்னுங் காரணத்தின் - (தான்) அடைந்த வருத்தம் என்கிற காரணம் பற்றி, மேல் முறைக்கண்ணே - மேலாகிய ஒழுக்கத்திலே, [அல்லது பூர்வ காலத்திலேயே.] கற்றறிந்தார் - நூல்களைக்கற்று [அதன்படி அனுபவத்தை] அறிந்தவர்கள், கடி என்றார் - (விவாகத்தை) விடு என்றார்கள்.

     நற்குணமும் பிள்ளைப்பேறு மில்லாதிருந்தாலுங் கொண்ட பெண்டாட்டியை விடக்கூடாதாகையால், விவாகம் செய்த பின் இல்வாழ்க்கையில் பலதுன்பங்களுண்டாவதைப் பற்றி முன்னமே அதனை விடு என்று பெரியோர் சொன்னார்கள் என்பது கருத்து.

     கடி என்னுஞ் சொல்லுக்குக் கலியாணமென்றும் ஒரு பொருளுண்டு. அது கடிய வேண்டுவது என்கிற காரணம் பற்றி வந்ததென்பது அபிப்பிராயம். இதைச் செயப்படுபொருள் விகுதி குன்றிய பெயரென்றாகிலும் கடி என்று சொல்லப்படுவதினால் வந்த பெயரென்றாகிலும் கொள்க; நேர்பொருளில் ஏவலொருமை; [உரியியல் "கடியென் கிளவி காப்பே கூர்மை" என்கிற 16வது சூத்திரத்தைக் காண்க.] குணத்தொடு - ஒடு - எண்ணிடைச் சொல், 'என்று மெனவு மொடுவும்' என்கிற [இடை. சூ. 10னால்] பிரிந்து மக்கட்பேறு என்பதோடு சேர்ந்தது. அருமை இங்கே கூடாமை; மனையாளைக் கழித்தற்குக் காரணம் தருமநூலிற் காட்டப்பட்டிருப்பதனால் இதைப் பெரும்பான்மையிற் கொள்க. மிடி - துன்பத்திற்கு ஆகுபெயர். காரணத்தின் - இன் உருபு ஏதுப் பொருளில் வந்தது. கடி என்பதற்கு இங்ஙனம் பொருள் படுத்ததை 'நிருத்தி' அலங்கார மென்ப.

 

57. ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
     தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
     நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
     காக்கும் திருவத் தவர்.

     (இ-ள்.) ஊக்கி - முயற்சிப்பட்டு, தாம் கொண்ட விரதங்கள் - தாம் ஆரம்பித்த விரதங்கள் [தவங்கள்], உள் உடைய - சொரூபங் கெடும்படி, தாக்கு அரு துன்பங்கள் - தாங்குதற்குக் கூடாத தீங்குகள், தலைவந்தக்கால் - அவற்றினிடம் வந்தால், நீக்கி நிறூஉம் உரவோரே - அவற்றைத் தள்ளி (விரதங்கள்) ஸ்திரப்படுத்தும் மனோபல முள்ளவர்களே, நல் ஒழுக்கம் காக்கும் - மேலான துறவற வொழுக்கங்களைக் காக்கும்படியான, திருவத் தவர் - சிறப்பையுடையவர், எ-று.

     உறுதியாகத் தாம் ஆரம்பித்த விரதங்களில் சொரூப மழியும் படியான இடையூறுகள் வந்தால் அவற்றை நீக்கி விரதங்களைக் காக்கத் தக்கவரே துறவிகளாவார் என்பது கருத்து.

     விரதங்களாவன்; தியான தாரணாதிகள், உள் என்பது இங்கே உண்மை. அதாவது சொரூபம். துன்பங்களாவன: தன்னைப் பற்றி வருவனவும், பிருதிவி முதலியவைபற்றி வருவனவும், தெய்வங்களால் வருவனவுமான மூன்று தாபங்கள், தாக்கரு - தாங்கு அரு, வலித்தல், முதனிலைத் தொழிற்பெயர், நான்காம் வேற்றுமைத் தொகை. நிறூஉம் - நிறுவும் என்பதின் விகாரம். திருவத்தவர் - திரு - பகுதி, அத்து, அ - இரண்டும் சாரியை, அர் - விகுதி. திரு - மேன்மை பொருந்திய, அத்தவர் - அப்படிப்பட்ட தவசிகள் எனவுமுரைக்கலாம்.

 

58. தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று
     எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
     எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
     பரிவதூஉம் சான்றோர் கடன்.

     (இ-ள்.) தம்மை இகழ்ந்தமை - தங்களைத் தூஷித்ததை, தாம் பொறுப்பது அன்றி - தாங்கள் பொறுத்துக் கொள்வதுமல்லாமல், மற்று - மேலும், எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - நம்மைத் தூஷித்த செய்கையின் பலனால், உம்மை - மறுமையில், எரிவாய் நிரயத்து - எரிகின்ற வாயையுடைய நரகத்திலே, வீழ்வர்கொல் என்று வீழ்வார்களே என்று, பரிவதூஉம் - இரங்குவதும், சான்றோர் கடன் - (துறவறவியல்பு) மிகுந்தவர்களுடைய கடமை, எ-று.

     தம்மை யிகழ்ந்ததைப் பொறுத்தலோடு இகழ்ந்ததைப் பற்றி அவருக்கு நரகம் நேரிடுமேயென்றிரங்கி அப்படி யில்லாமலிருக்கப் பிரார்த்திப்பதும் துறவிகள் கடமை என்பது கருத்து. இடையூறுகளுக்குப் பின்வாங்காமையும் பிறர்க்குத் துன்பம் நேரிடப் பொறாமையும் துறவிகளுக்கு வேண்டும் என்பதாம்.

     இகழ்ந்தமை - தொழிற்பெயர் விகுதி. உம்மை - மை - இடம். பரிவதுவும் என்பது பரிவதூஉம் என இன்னோசைக்கு அளபெடுத்தது. இப்பாட்டு பின் அதிகாரங்களிலிருப்பது நன்று.

 

59. மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
     ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
     கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
     விலங்காது வீடு பெறும்.

     (இ-ள்.) மெய் வாய் கண் மூக்கு செவி -, என பெயர் பெற்ற - என்று பேர் கொண்ட, ஐ வாய் - ஐந்தின்வழியாய் வருகின்ற, வேட்கை அவாவினை - மிகுந்த ஆசையை, கலங்காமல் காத்து - மனக்கலக்கமின்றி (தம்மிடஞ்சேராமற்) பாதுகாத்து, கைவாய் உய்க்கும் - நல்லொழுக்கத்திற் செலுத்துகிற, ஆற்றல் உடையான் - வல்லமையுடையவன், விலங்காது - தப்பாமல், வீடு பெறும் - மோக்ஷமடைவான், எ-று.

     ஐம்பொறிகளை அடக்கி ஞானவழியிற் செலுத்துகிறவனுக்கு மோக்ஷம் நிச்சயம் என்பது கருத்து.

     மெய் என்பது பரிசேந்திரியம்; வாய் என்பது நாக்கு. இங்கும் 'என' என்னும் எண்ணிடைச் சொல் முன் குறித்த இடையியல் சூத்திரத்தினால் மெய் முதலிய ஐந்தோடும் கூடும். ஐவாய் - ஐந்து வாய் பண்புத்தொகை. இதன்மேல் இவற்றால் வருபவை என்னும் பொருளில் அகரவிகுதி வந்தது; இது தத்திதம். இது வேட்கையவர் என்பதோடு இருபெயரொட்டுப் பண்புத்தொகை; பெயரெச்சமெனவுங் கொள்ளலாம். வேட்கையவா - ஒருபொருட் பன்மொழி, சிறப்பைக் குறிக்கும்.

 

60. துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
     இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
     இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
     பசைதல் பரியாதாம் மேல்.

     (இ-ள்.) துன்பமே மீது ஊரக் கண்டும் - துக்கமே மேலிட்டு வரப்பார்த்தும், துறவு உள்ளார் - துறத்தலை நினையாதவராய், ஏழையார் - புத்தியீனர், இன்பமே காமுறுவர் - சுகத்தையே இச்சிப்பார்கள்; மேல் - மேலானவன், இன்பம் இசைதோறும் - இன்பத்தின் காரணம் கூடுந்தோறும், அதன் இன்னாமை நோக்கி - அதனிலுள்ள துக்கத்தைக் கண்டு, பசைதல் பரியாது - ஆசைப்படுவதை விரும்பான், எ-று. ஆம், மற்று - அசைகள்.

     இதற்கு நாலாம்பாட்டின் கருத்தே பெரும்பாலும் அமையும். பண முதலிய இன்பத்தின் காரணத்திலும் அதனைக் காத்தல் வளர்த்தல் முதலான துன்பங்களை நோக்கி அதனையும் விரும்பார் என்பது விசேஷம்.

     உள்ளார் - முற்றெச்சம்; "வினைமுற்றே வினையெச்சமாகலும்" என்கிற வினையியல் 32வது சூத்திரவிதியைக் காண்க. இசை - முதனிலைத் தொழிற்பெயர். மேல் என்பது ஆகுபெயர்.