துய்தன்மை
துறவியல்
[துய்தன்மை - இது துய்து அன்மை எனப்பிரித்து, சுத்தமில்லாதது எனப் பொருள் கொள்ளப்படும், ஆதலின் அதைக் குறித்துச் சொல்லிய அதிகாரமாம். தூயதன்மை என்றும் பாடமுண்டு. அதையும் தூயது அன்மை எனப்பிரித்து முன்போல் பொருள் கொள்க.]
41. மாக்கேழ் மடநல்லாய் என்றாற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.
(இ-ள்.) மா கேழ் மடம் நல்லாய் - மாந்தளிரின் நிறம் போன்ற நிறமும் இளமையும் பொருந்திய பெண்ணே! என்று அரற்றும் - என்று கத்துகிற, சான்றவர் - வித்துவான்கள், நொய்யது - அற்பமான, ஓர் புக்கு இல்லை - ஒரு புகத்தக்க வீட்டை, நோக்கார் கொல் - சிந்தியார்களா; ஓர் யாக்கைக்கு - ஒரு உடம்பில், ஈ சிறகு அன்னது - ஈயின் சிறகு அளவான, ஓர் தோல் அறினும் - ஒரு தோல் அற்றாலும். காக்கை கடிவது - காக்கையை ஓட்டும்படியான, ஓர் கோல் - ஒரு கொம்பு, வேண்டும் - வேண்டியிருக்கிறது, எ-று. ஏ - அசை.
அசுத்தமான புண்ணுடம்பைக் கண்டு மாக்கேழ் மட நல்லாய் என்று துதித்துக் கத்திக் கொண்டிருப்பவர் அவ்வுடம்பின் அற்பத்தனத்தைக் கண்டதில்லையோ? ஏனென்றால் உடம்பில் கொஞ்சந் தோல் பேர்ந்தாலும் அப்புண்னைக் குத்த வருகின்ற காக்கையை ஓட்ட ஒரு கோல் தேட வேண்டுமே; இவ்வளவு அருவருப்பான உடம்பை மேன்மையாக நினைத்தல் அசுத்தமேயல்லாது சுத்தமன்று என்பது கருத்து.
அப்படிப்பட்ட அறிவீனரை சான்றவரென்றது எதிர்மறை இலக்கணை, பரிகாசத்துக்குச் சொன்னது. நல்லாள் என்பதின் ஈறு விளியில் யுகரமாய்த் திரிந்தது [பெயர். சூ. 51]. சான்றவர் - வினையாலணையும் பெயர்; சால் - உரிச்சொல், பகுதி. றகரம் - இடைநிலை, அகரம் - சாரியை, அர் - விகுதி, சால்பு = நிறைவு, விவேகத்தால் நிறைந்தவர் என்பது பொருள். நொய்வது - நொய் - பண்படி, பகுதி, அ - சாரியை, து - ஒன்றன்பால் விகுதி. புக்கில் - புகு இல் என்பதில் ககரம் இரட்டி நின்றது, வினைத்தொகை. யாக்கைக்கு - கு உருபு இடப் பொருளில் வந்தது. கடவது - வினையாலணையும் பெயர். கோல் என்பதோடு இருபெயரொட்டுப் பண்புத்தொகையாய்க் கொள்ள வேண்டும்.
42. தோல்போர்வை மேலும் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் - மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்.
(இ-ள்.) தோல் போர்வை - தோலாகிய போர்வையை, மேலும் - மேலேயும், தொளை பல ஆய் - பல துவாரங்களையு முடைத்தாய், பொய் மறைக்கும் - அசுத்தங்களை மறைக்கின்ற, மீ போர்வை - மேல் போர்வையினால், மாட்சித்து - மாட்சிமை யுடையது, உடம்பு -; ஆனால் - அப்படியாதலால், மீ போர்வை - மேற்பார்வையானது, பொய் மறை ஆ - பொய்யை மறைத்து நிற்க, காமல் புகலாது - காமத்தை விரும்பாமல், அதனை - அவ்வுடம்பை, பை மறி ஆ - பையை மறித்ததாக, பார்க்கப்படும் - பார்க்கவேண்டும், எ-று.
இந்த உடம்பு அருவருக்கும் படியான நீர் ஒழுகுகின்ற பல துவாரங்களோடு கூடி மேலே ஒரு தோல் போர்த்து அதனாலே கண்ணுக்கினியதாகத் தோன்றுகின்றதே யன்றி, உண்மையாகப் பார்த்தால் மல மூத்திர முதலிய அசுத்தங்கள் பொதிந்த பைக்குச் சமானமாகும்; அதனை மேலே பார்த்துக் காமங் கொள்ளாமல், மேலே பளபளப்பாயும் மெத்தென்று மிருக்கிற ஓர் அசுத்தப்பையை உட்புறந் திருப்பிப் பார்த்தால் எப்படியோ அப்படிப் பார்த்தால் அதன் அசுத்த நிலை வெளிப்படும் என்பது கருத்து.
மாட்சித்து - குறிப்புவினைமுற்று. அசுத்த வஸ்துக்கள் உண்மையில் அழகில்லாதனவாய்ப் போர்வையினால் அழகுள்ளன போலத் தோன்றுதலால் பொய்யென்றார். மறை = மறைப்பது; கர்த்தாப் பொருள் விகுதி குறைந்து நின்றது. மறி - முதனிலைத் தொழிற்பெயர், மறிதல் = திருப்புதல். ஆ - செயவென் வாய்பாட்டு வினையெச்சம், ஈறு குறைந்து நின்றது. மற்று - அசை, பார்க்கப்படும் - பார்க்க வேண்டுமென்னும் பொருள்ளுள்ள ஒருவகை வியங்கோள் வினைமுற்று; தேற்றப்பொருளுள்ள தொழிற்பெயர் என்று சொல்வாரும் உளர்.
43. தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிப்
பொய்க்கோலம் செய்ய ஒழியுமே - எக்காலும்
உண்டி வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல்.
(இ-ள்.) பெரியோர் - மேலோர், எக்காலும் - எப்போதும், உண்டி வினையுள் - உண்ணுகிற தொழிலால், உறைக்கும் என - துர்க்கந்தப்படுமென்று, கண்டு கைவிட்ட - பார்த்துத் தள்ளிவிட்ட, மயல் - மயக்கமாகிய (தேகம்), தக்கோலந் தின்று - தக்கோலம் என்னும் (வாசனைத் திரவியத்தைத்) தின்று, தலை நிறைய பூ சூடி - தலை நிரம்பப் பூவைச் சூடி, பொய் கோலம் செய்ய - பொய்யான அலங்காரஞ் செய்வதனால், ஒழியுமே - (அந்தத் துர்க்கந்தம்) நீங்குமா? [நீங்காது], எ-று.
பல உணவுகள் சீர்ணிப்பதனால் துர்க்கந்தம் வீசுகிற உடம்பில் வாசனை வஸ்துக்களை மெல்வதும் பூச்சூட்டுவதும் ஆகிய இப்பொய் அலங்காரத்தினால் அந்தத் துர்க்கந்தம் நீங்குமா என்பது கருத்து.
பொய்க்கோலம் - இங்கே [மெய்யீறு. சூ. 21னால்] வலி மிகுந்தது. ஒழியுமே - ஏகாரம் - வினாவிடைச்சொல். வினையுள் - விக்குள் என்பது போல. உள் - தொழிற்பெயர் விகுதியாம், மூன்றாம் வேற்றுமைத் தொகை; அல்லது உள் - ஏழனுருபாய் காரணப் பொருளில் வந்ததென்பது நேர். மயல் என்பது அதற்குக் காரணமாகிய உடம்பிற்கு ஆகு பெயர்.
44. தெண்ணீர்க் குவளை பெருங்கயல் வேலென்று
கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன்.
(இ-ள்.) உள் நீர் - உள்ளேயிருக்கிற நீரை, களைந்தக்கால் - நீக்கிவிட்டால், நுங்கு குன்றிட்ட அன்ன - நுங்கைத் தோண்டியெடுத்தாற் போலிருக்கிற, கண் நீர்மை - கண்ணின் குணத்தை, கண்டு ஒழுகுவேன் - கண்டு நடக்கிற நான், தெள் நீர் குவளை - தெளிவான நீரில் (முளைத்த) கருநெய்தற்பூ - பொரு கயல் - போர் செய்கின்ற கெண்டை மீன்கள், வேல் - வேலாயுதம், என்று - என்று சொல்லி, கண் இல் புல் மாக்கள் - விவேகமில்லாத அற்பமனிதர்கள், கவற்ற - கவலைப்படுத்த விடுவனோ - (என் ஒழுக்கத்தை) விடுவனோ [விடேன்], எ-று.
உள் நீரைத் தோண்டிவிட்டால் நுங்கைத் தோண்டி விட்டாற் போல வெறும்பள்ளமாய் காணப்படுகிற கண்ணை குவளை கயல் வேல் இவற்றோடு உபமானப்படுத்தி விவேகமற்றவர் வருணிப்பதனாலே மயங்க வேண்டாம் என்பது கருத்து.
பொருகயல் என்பது ஒன்றோடொன்று எதிர்முகமாய் நின்று பாய்வதுபோல கண் அசைந்து ஓடும்போது நிற்குநிலையைக் குறிக்கின்றது. இவை பெயர்ச்செவ்வெண், விகாரத்தால் தொகை பெறாதனவாம். என்று - வினையெச்சம். இல்புன் - இங்கே லகரம் [உருபு. சூ. 10னால்] இயல்பாயிற்று. கவற்ற - இது கவற்று என்னும் பிறவினையின் வினையெச்சம். கவல் - தன்வினைப்பகுதி, று - பிறவினை விகுதி. சூன்றுதல் = தோண்டுதல், குன்றிட்டு அன்ன, அல்லது சூன்றிட்ட அன்ன என இருவகையாயும் பிரித்து முற்பாட்டுகளில் காட்டி யிருக்கிறபடி இலக்கணம் கூறலாம். விடுவன் - அன் - தன்மையொருமை விகுதி [வினை. சூ. 12]. ஒழுகுவேன் - தன்மை வினையாலணையும் பெயர்.
45. முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
எல்லோரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன்.
(இ-ள்.) எல்லாரும் காண - யாவருங் காணும்படி, புறம் காடு - சுடுகாட்டில், உதிர்ந்து உக்க - உதிர்ந்து சிந்தியிருக்கிற, பல் என்பு கண்டு - பல்லாகிய எலும்புகளைக் கண்டு, ஒழுகுவேன் நடப்பவனாகிய யான், முறுவல் - பற்களை, முல்லை முகை என்று - முல்லை யரும்புகள் என்றும், முத்து (என்று) - முத்தென்றும், இவை பிதற்றும் - இவற்றை உபமானமாகப் பிதற்றுகிற, கல்லா புல் மக்கள் - (மேலான நூல்களைக்) கற்காத அற்ப மனிதர், கவற்ற விடுவனோ - சொல்லும்படி சும்மா விருப்பேனோ [இரேன்], எ-று.
சுடுகாட்டில் உதிர்ந்து கிடக்கிற பல் எலும்புகளை முல்லையரும்பு முத்து இவைகளோடு ஒப்பிட்டுக் கல்லாதவர் பிதற்றுவதனால் மனவுறுதியை விட்டு மயங்கலாகாது என்பது கருத்து.
புறங்காடு - இது காட்டுப்புறம் என இலக்கணப்போலியாகவும், ஊர்க்குப் புறத்திலுள்ள காடு என்று இலக்கணம் உடையதாகவுங் கொள்ளலாம். உக்க - பெயரெச்சம், உகு - பகுதி.
46. குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்.
(இ-ள்.) குடரும் - குடலும், கொழுவும் - கொழுப்பும், குருதியும் - இரத்தமும், என்பும் - எலும்பும், தொடரும் நரம்பொடு - ஒன்றோடொன்று சேர்ந்திருக்கின்ற நரம்பும், தோலும் - சருமமும், இடைஇடையே - இவற்றின் நடுவே நடுவே, வைத்த தடியும் - வைத்த தசைகளும், வழும்பும் - நிணமும், ஆம் இவற்றுள் - ஆகிய இவைகளுக்குள், ஈர்ங் கோதையாள் - குளிர்ச்சியான மாலையை யணிந்த பெண் என்பவள், எத்திறத்தாள் - எந்தப் பகுதியை யுடையவள், எ-று.
குடல் முதல் வழும்பு ஈறாகச் சேர்ந்திருக்கிற உடம்பைக் கண்டு ஈர்ங்கோதையாளென்று மயங்குகின்றார்களே, உற்றுப் பார்த்தால் எல்லாம் அசுத்த வஸ்துக்களாகவே காணப்படுகின்றன, ஆதலின் இது அஞ்ஞானம் என்பது கருத்து.
உம்மைகள் - எண்ணும்மைகள். ஒடு - எண்ணிடைச் சொல், மற்று - அசை. ஈர்ங்கோதை - பண்புத்தொகை, நிலைமொழியில் அ - கெட்டது. [எழுத்தியல். சூ. 64னால்] ஙகரம் மிகுந்து ஈரெற்றாய் நின்றது.
47. ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை
பெருந்தோளி பெய்வளையாய் என்னுமீப் போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.
(இ-ள்.) ஊறி உவர்த்தக்க - (மலங்கள்) ஊறி வெறுக்கத்தக்க, ஒன்பது வாய் புலனும் - ஒன்பது துவாரமாகிய இந்திரியங்களும், கோதி குழம்பு அலைக்கும் - அசுத்தக் குழம்புகள் சிதறி மோதப் பெற்ற, கும்பத்தை - (உடம்பாகிய) பண்டத்தை, பேதை - அறிவில்லாதவன், மீ போர்த்த கருந்தோலால் - மேலே போர்த்திருக்கிற அழகான தோலினால், கண் விளக்கப்பட்டு - கண்கள் ஒரு பிரகாசத்தையடைந்து, பெருந்தோளி - பெருத்ததோளை யுடையவளே!, பெயவளாய் - வளைகளை இடப்பெற்றவளே!, என்னும் - என்று சொல்வான், எ-று.
கருத்து வெளிப்படை ஊறி என்னும் செய்தென் வினையெச்சம், உவர்த்தலுக்குக் காரணமாதலின் பிறகர்த்தா வினையோடு முடிந்தது. இது செயவென் வினையெச்சத்தின் திரிபென்னலுமாம். உவர்த்தலுக்குத் தக்க = உவர்த்தக்க. வாய்ப்புலனும் என்னும் எழுவாய் அலைக்கும் என்னும் உடம்பின் வினையைக் கொண்டது. [பொது. சூ. 26னால்] அமைந்தது. அதன் உரையைக் காண்க. வாய் என்பதை ஏழாம் வேற்றுமை தொக்கதாகவுங் கொள்ளலாம்.
48. பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தல்
முடைச்சாகாடு அச்சிற்று உழி.
(இ-ள்.) பண்டம் அறியார் - வஸ்துவின் உண்மையை அறியாமல், படு சாந்தும் கோதையும் கொண்டு - பூசத்தக்க சந்தனத்தையும் பூமாலையும் அணிந்து கொண்டு, பாராட்டுவார் - அவ்வுடம்பை ஆதரிப்பவர்கள், பெடை சேவல் வன் கழுகு - பெட்டையும் ஆணுமாகிய கடினமான கழுகுப் பறவைகள், மண்டி - நெருங்கி, பேர்த்திட்டு குத்தும் - பெயர்த்து குத்துகின்ற, முடை சாகாடு - துர்க்கந்தமுள்ள உடம்பாகிய பண்டியை, அச்சு இற்றுழி - (உயிராகிய) அச்சு முறிந்த போது, கண்டிலர் கொல் - பார்த்தார்கள் இல்லையோ, எ-று.
உயிர்போன உடம்பைக் கழுகுகள் குத்த அதின் அசுத்தம் வெளிப்படையா நிற்பதைக் கண்டறியாமல் சந்தனம் மாலை முதலியவற்றால் அதனைப் பாராட்டுகிறார்கள் மூடர்கள் என்பது கருத்து.
அறியார் - முற்றெச்சம். [வினையியல் - சூ. 32.] பெடைச் சேவல் - உம்மைத் தொகை. சாகாடு, அச்சு - இரண்டும் உவமையாகு பெயர்.
49. கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - ஒழிந்தாரைப்
போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
சாற்றுங்கொல் சாலச் சிரித்து.
(இ-ள்.) கழிந்தார் இடு தலை - இறந்தவர்களுடைய (சுடுகாட்டில்) கிடக்கிற தலை, கண்டார் - பார்த்தவர்களுடைய, நெஞ்சு உட்க - மனம் பயப்படும்படி, குழிந்து ஆழ்ந்த கண்ண ஆய் தோன்றி - பள்ளமாகி ஆழ்ந்திருக்கிற கண்களையுடையனவாக காணப்பட்டு, ஒழிந்தாரை - மற்றவர்களை, போற்றி - மேன்மைப்படுத்தி, நெறி நின்மின் - நல்ல வழியிலே நில்லுங்கள், இதன் பண்பு - இவ்வுடம்பின் குணம், இற்று என்று - இத்தன்மையானது என்று, சால சிரித்து - மிகவும் சிரித்து, சாற்றுங்கொல் - சொல்லுகின்றனவோ, எ-று.
சுடுகாட்டில் கிடக்கிற செத்தவர்களுடைய தலையெலும்புகள் கண்ணிருந்த விடத்து ஆழமான பள்ளமாய் இளித்த பற்களுமாய் கிடப்பதைப் பார்த்தால் இவ்வுடம்பு இப்படி அருவருக்கத்தக்கது; இதனை நம்பி வீண் காலம் போக்காமல் நல்லவழியிலே நடவுங்களென்று சிரித்துப் பிறருக்குப் போதிக்கின்றன போலிருக்கின்றன என்பது கருத்து.
கண்ண - சினையடியாகப் பிறந்த பெயர்ப் பகுபதம்; குறிப்பு வினைமுற்று என்னவுமாம். ஆய் - ஆக என்பதின் திரிபு. தலை - பால் பகா அஃறிணை யாதலின் இங்கு பன்மை. இற்று - இன் என்னும் இடைச்சொல்லின் அடியாகப் பிறந்த குறிப்பு வினை முற்று. று - விகுதி. சாற்றும் - "றவ்வொடுகரவும்மை" என்னும் [பதவியல். 18ம்] சூத்திரத்தில் செய்யுநிகழ்பெதிர்வும் என்றமையால் இங்கு நிகழ்காலத்தில் வந்தது. அல்லது இயற்கைப் பொருளை இற்றெனக்கிளத்தல்' என்கிற [பொது. சூ. 53] விதியால் தன்மையைக் காட்டவந்ததுமாம்.
50. உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார்
கண்டிற் றிதன்வண்ணம் என்பதனால் தம்மையோர்
பண்டத்துள் வைப்ப திலர்.
(இ-ள்.) உயிர் போயார் வெள் தலை - செத்தவர்களுடைய வெள்ளையான தலையெலும்புகள், உட்க சிரித்து - (பிறர்) பயப்படும்படி சிரித்து, செம்மாப்பவரை - (இல்வாழ்க்கைச் சுகத்தால்) இறுமாந்திருப்பவர்களுக்கு, செயிர் தீர்க்கும் - (இறுமாப்பாகிய) குற்றத்தை நீக்கும், (ஆதலால்) செயிர் தீர்ந்தார் - குற்றம் நீங்கியவர்கள், கண்டு - பார்த்து, இதன் வண்ணம் இற்று - இதன் குணம் இப்படிப்பட்டது, என்பதனால் - என்று நினைப்பதனால், தம்மை - தங்களை, ஓர் பண்டத்துள் - ஒரு பொருளில், வைப்பது இலர் - வையார்கள், எ-று.
இறந்தவர்களுடைய தலையெலும்புகள் பிறர் பயப்படும்படி சிரிப்பது போலிருத்தலால் உடம்பின் மேல் ஆதாரம் வைத்திருப்பவர்கள் அவ்வபிமானத்தை விடுகிறார்கள்; அப்படி விட்டால் தம்மை ஒரு பொருளாகப் பாராட்டார்கள் என்பது கருத்து.
போயார் - யகரம் இறந்தகால இடைநிலை யெனக் கொள்க. [பொது. சூ. 26னால்] உயிர் என்பது போயார் என்பதின் பகுதியோடு முடிந்தது. வெள் தலை என்பதில் [மெய். 24வது சூத்திரத்தினால்] தகரம் டகரமும் ஆயின. செம்மாப்பவரை - ஐ உருபை கு உருபாகத் திரித்துக் கொள்க; வேற்றுமை மயக்கம். வைப்பது - தொழிற்பெயர்; இதனை எழுவாயாகவும் இரண்டாம் வேற்றுமையாகவும் கொள்ளலாம். இல் என்பது செயப்படுபொருள் குன்றியதும் குன்றாததுமாய் இருக்குமென்பதை முன்னமே காட்டியிருக்கிறோம்.
