பொது மகளிர்

bookmark

இன்ப, துன்பவியல்

 

 [அதாவது வேசையர் தன்மையைக் குறித்துச் சொல்லியது. அவர்கள் ஒருவர்க்கே வாழ்க்கைப்படாமல் பணங்கொடுத்தவர்கெல்லாம் வாழ்க்கைப்படுதலால் பொதுமகளிர் என்னப் பட்டார்.]

 

371. விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
     துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும்
     நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
     கையற்ற கண்ணே அறும்.

     (இ-ள்.) விளக்கு ஒளியும் - விளக்கினது பிரகாசமும், வேசையர் நட்பும் - பொதுமகளிரது அன்பும், இரண்டும் - (ஆகிய) இரண்டும், துளக்கு அற நாடின் - சஞ்சலமில்லாமல் யோசித்தால், வேறு அல்ல -வேறுவகைப்பட்டன அல்ல; விளக்கு ஒளியும் - விளக்கினது பிரகாசமும், நெய் அற்ற கண்ணே - நெய் வற்றிய அப்போதே, அறம் நீங்கும்; அவர் அன்பும் - அவ்வேசையர் நட்பும், கை அற்ற கண்ணே - கைப்பொருள் நீங்கிய பொழுதே, அறும் - நீங்கும், எ-று.

     விளக்கின் பிரகாசமானது நெய் வற்றிய பொழுது நீங்குதல் போல வேசிமார் நட்பும் பொருள் வறளுமளவே யன்றிப் பின்பு கிஞ்சித்தும் இராதென்பதாம். இதனால் அன்பில்லா தாருடைய போகம் இனிதன்று என்பது கருத்து.

     வேசையர் - வேஸ்யா என்னும் வடசொல்லின் திரிபு. நட்பு - பண்பையுணர்த்தும் தொழிற்பெயர்; நள் - பகுதி, பு - விகுதி. வேறல்ல என்பது வெவ்வேறு தன்மைகளுள்ளன வல்ல என்பதாம்; அவ்வொரு தன்மையாவது காரணமுள்ள அளவே காரியமிருத்தல். அற்றகண் - பெயரெச்சத் தொடர். அறும் - நீங்குந் தன்மையுள்ளதெனத் தன்மையைக் காட்டினதேயன்றிக் காலங் காட்டினதல்ல; இதற்கு விதி "இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்" என்பது.

 

372. அங்கோட்டு அகல் அல்குல் ஆயிழையாள் நம்மோடு
     செங்கோடு பாய்துமே என்றாள்மன்; - செங்கோட்டின்
     மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே
     காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.

     (இ-ள்.) அம் கோடு அகல் அல்குல் - அழகிய பக்கங்களுள்ள அகன்ற அல்குலை யுடையவளான, ஆய் இழையாள் - ஆய்ந்தெடுத்த ஆபரணத்தை யுடையவள் [வேசைப் பெண்], நம்மொடு - நம்மோடு கூட, செம் கோடு - செம்மையான மலையினுச்சியிலிருந்தும், பாய்துமே மன் என்றாள் - (உன்னுடன் ஏறி) கீழே விழுவோம் என்று உறுதியாகச் சொன்னாள்; காணம் இன்மையால் - (நம்மிடத்தில்) பணமில்லாமையால், செம் கோட்டின் மேல் - செம்மையான மலையுச்சியின் மேல், மேவாது - (நம்முடனே) சேராமல், கால் - (தன்) காலில், கால் நோய், வாத நோயை, காட்டி - காண்பித்து, சுலுழ்ந்து - கலங்கி அழுது, ஒழிந்தாள் - நீங்கினாள், எ-று.

     ஒருவன் உயிர்க்குயிராய் வைத்திருந்த ஒரு வேசையின் நடக்கையைச் சொல்லியது. நீ மலைமேலேயேறி வீழ்ந்தாலும் நான் கூட விழுவேனே யல்லது உயிர் பிழைத்திரேன் என்று நான் பணம் கொடுத்த போதெல்லாஞ் சொல்லி, நானோர் ஆபத்தால் மலைக்கோடேறி விழும்படி நேரிட, அப்போதும் அவளைப் பிரிய மனமில்லாமல் கூட வாவென்று அழைக்க, அதற்குத் தன் காலில் நோயுண்டென்று காட்டிப் பொய்யழுகை யழுது என்னைவிட்டு நீங்கிப் போனாள் என்றான் என்பதாம். இதனால் வேசையர் வஞ்சித்தும் பணம் பறிப்பா ரென்பதாயிற்று.

     பாய்தும் - தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று; தும் - விகுதியே காலம் காட்டும் [பதவியல். சூ. 18].

 

373. அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்
     செங்கண்மா லாயினும் ஆகமன்; - தம்கைக்
     கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளிர் அன்னார்
     விடுப்பர்தம் கையால் தொழுது.

     (இ-ள்.) அம் கண் விசும்பின் - அழகிய இடமுள்ள தேவலோகத்திலுள்ள, அமரர் தொழப்படும் - தேவர்களால் வணங்கப்படுகிற, செம் கண் மால் ஆயினும் ஆக - சிவந்த கண்களையுடைய மகாவிஷ்ணுவே யானாலும் ஆகட்டும், தம் கை கொடுப்பது ஒன்று - தமது கையில் கொடுக்கும்படியான ஒரு பொருள், இல்லாரை - இல்லாதவர்களைக், கொய்தளிர் அன்னார் - கொய்யத்தக்க தளிர்போன்ற மேனியையுடைய வேசிகள், தம் கையால் - தமது கையால், தொழுது - கும்பிட்டு, விடுப்பர் - அனுப்புவார்கள், எ-று. மன் - அசை.

     எவ்வளவு ரூபலாவணியம் முதலிய குணங்கள் வாய்ந்தவரானாலும் பணம் இல்லாதவர்களை இப்போது நீங்கள் வருவதற்கு சமயமில்லையென்று போக்குச் சொல்லித் தடுத்து அனுப்பிடுவார்களேயன்றி அவரைச் சேரார்க ளென்பது கருத்து. இதனால் பணம் ஒன்றையே யன்றி மற்றெந்தக் குணத்தையும் விரும்பார்களென்று அவர்களுடைய ரசமறியாக் குணத்தை யுணர்த்தினார்.

     அமரர் தொழப்படுவதனால் மேன்மையும், செங்கண் என்றதனால் ரூபமும், குறிக்கப்பட்டன. ஆக - வியங்கோள் வினைமுற்று. மன் - அசை.

 

374. ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக்
     காணமி லாதார் கடுவனையர்; - காணவே
     செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
     அக்காரம் அன்னர் அவர்க்கு.

     (இ-ள்.) ஆணம் இல் நெஞ்சத்து - அன்பில்லாத மனத்தையுடைய, அணி நீல கண்ணார்க்கு - அழகுள்ள நீலோற்பலம் போன்ற கண்களையுடைய வேசையர்க்கு, காணம் இல்லாதார் - தனம் இல்லாதவர்கள், கடு அனையர் - விஷம் போலப் பிரியமில்லாதவராவர், காண - யோசிக்குமளவில், செக்கு ஊர்ந்து கொண்டாரும் - செக்காட்டுவோராயினும், செய்த - தேடிய, பொருள் உடையார் - திரவியத்தையுடையவர், அவர்க்கு - அவ்வேசையர்க்கு, அக்காரம் அன்னார் - சர்க்கரை போலினியராவர், எ-று.

     பணமொன்றிலே யல்லாமல் மற்றெதிலும் அன்பில்லாதவராதலால் வேசையர்கள் பணமில்லாதாரை விஷத்து கொப்பாகவும் பணமுள்ளோரை அக்காரத்துக் கொப்பாகவும் கொள்கின்றார்கள் என்றதனால் அவர் போகம் மிகவும் இனிப்பில்லாத தென்பது கருத்து.

     காண - செய்வெனெச்சம், நிகழ்காலத்தில் வந்தது; இதை மத்திமதீப நியாயத்தாலே இருபுறமுங் கொள்க.

 

375. பாம்பிற்கு ஒருதலை காட்டி ஒருதலை
     தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் - ஆங்கு
     மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
     விலங்கன்ன வெள்ளறிவி னார்.

     (இ-ள்.) பாம்பிற்கு - பாம்பினுக்கு, ஒரு தலை காட்டி - ஒரு புறத்தைக்காட்டி, ஒரு தலை - மற்றொரு புறத்தை, தேன் படு - மதுரத்தைப் பெற்றிருக்கிற, தெள் கயத்து மீன் - தெளிந்த தடாகத்திலுள்ள மீனுக்கு, காட்டும் - காண்பிக்கும், மலங்கு அன்ன - விலாங்கு மீனை யொத்த, செய்கை - செய்கையையுடைய, மகளிர் தோள் - வேசையரது தோள்களை, விலங்கு அன்ன - மிருகத்தையொத்த, வெள் அறிவினார் - அறிவில்லாத மூடர்கள், சேர்வார் - அணைவார்கள், எ-று.

     தன்னைப் பிடிக்கவரும் பாம்புக்கும் மீனுக்கும் இது பிடிபடும் என்னும் ஆசையைக் காட்டி ஒன்றினுக்கும் அகப்படாமல் தப்பித்துக் கொள்ளும் விலாங்கு மீனைப் போல் ஆசைகாட்டி மயக்கும் வேசையாரை விவேகமற்றவர்களே சேர்வார்கள் என்பது கருத்து.

     அவர்கள் வஞ்சனை தெரிந்தால் மலம்பட்ட அமுதம் போல் அவருருவமும் போகமும் யார்க்கும் இனிக்கமாட்டா. அதனைத் தெரிந்து கொள்ள மாட்டாமையால் வெள்ளறிவினாரென்றார். மீன் காட்டும் - நான்காம் வேற்றுமைத் தொகை. ஆங்கு - அசை. வெண்மையான அறிவு வெள்ளறிவு; வெண்மையாவது கல்வி கேள்விகளாற் கலப்புறாமை.

 

376. பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும் போல்
     நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த
     பொற்றொடியும் போர்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
     நிற்றியோ போதியோ நீ.

     (இ-ள்.) நூல் - நூலிற் (கோத்த), பொத்த - தொளைத்த, கல்லும் - மணியும், புணர் பிரியா - கூடியிருத்தல் பிரியாத, அன்றிலும் போல் - அன்றிற் பறவைகளைப் போலவும், நித்தலும் - தினமும், நம்மை பிரியலம் என்று உரைத்த - நம்மை விட்டுப் பிரியமாட்டோமென்று சொல்லிய, பொன் தொடியும் - பொன்னாலாகிய வளையலையுடையவளும் [வேசையும்], போர் தகர் கோடு ஆயினாள் - போர்செய்கின்ற ஆட்டினுடைய கொம்பு போல் (திரும்பிய குணமுடையவள்) ஆயினாள்; நல் நெஞ்சே - நல்ல மனமே!, நீ நிற்றியோ - நீ (அவளிடத்தில்) நிற்கின்றாயா?, (அல்லது) போதியோ (என்னுடன்) வருகின்றாயா? (சொல்), எ-று.

     நூலும் மணியும் போலவும் அன்றிலைப் போலவும் உம்மைக் கூடியிருப்பேனேயல்லது பிரிந்திருக்கமாட்டேனென்று சொல்லி, என் கையில் பணம் வறண்ட இக்காலத்தில் சண்டை யாட்டுக்கடாவின் கொம்பு பின்னிட்டு வளைந்திருப்பது போல முன் சொன்னதற்கு விரோதமாகப் பின்னிவிட்டாள். அவள் குணந் திரிந்த இக்காலத்தும் நீ அவளிடத்தில் இருப்பையா அல்லது பிரிந் தென்னோடு வருவையா, மனமே? என்றதனால், வேசையர் குணந்தெரிந்தும் அவளைப்பற்றி யலையாமல் மனதைச் சுவாதீனப் படுத்திக் கொள்ளவேண்டுமென்பது கருத்து.

     பொத்த - பொத்து - பகுதி, அ - பெயரெச்ச விகுதி. நூற்கல் - உம்மைத் தொகை. கல்லும், அன்றிலும் - எண்ணும்மைகள். பிரியலம் - உடன்பாட்டு எதிர்மறைச் சிறப்பு வினைமுற்று; பிரி - பகுதி, அல் - எதிர்மறை விகுதி, அனைத்தும், ஓர் பகுதியாகி, அதன்மேல் அம் - தன்மைப்பன்மை விகுதி, நிற்றீ, போதி - நிகழ்கால வினைமுற்றுகள். நிற்றி - நில் - பகுதி, இ - விகுதி, லகரம் றகரமானது சந்தியும் விகாரமும்; றி - விகுதியென்பது நேர். றி என்பதில் றகரம் இடைநிலை யென்றால் அது இறந்த காலத்தைக் காட்டும், ஆகையால் பொருந்தாது. போதியோ என்பதற்கு அவளை விட்டுப் போகிறாயா? எனவும் பொருள் கூறலாம். இப்பகுதிக்கு வருதலும் அர்த்தமாகிறது. ஓ - இரண்டும் வினா.

 

377. ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு
     சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
     ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே
     தாமாம் பலரால் நகை.

     (இ-ள்.) ஆ மா போல் - காட்டுப் பசுவைப் போல், நக்கி - (இன்ப முண்டாக) பரிசித்து, அவர் - தம்மைச் சேர்ந்தவர்களுடைய, கை பொருள் கொண்டு - கையிலிருக்கும் பொருளைக் கவர்ந்து கொண்டு, சே மா போல் - எருதைப் போல, குப்புறும் - கவிழ்ந்து படுத்துக் கொள்ளுகிற, சில்லைக்கண் - பரத்தையினிடத்துள்ள, அன்பினை - அன்பை, ஏமாந்து - மயங்கி, எமது என்று இருந்தார் - எமக்கே யுரியதென்றிருந்தவர், பலரால் - பலர்களாலும், நகை பெறுப - நகைத்தலைப் பெறுவார்கள், எ-று. தாம், ஆம், எ - மூன்றும் அசைகள்.

     ஆமா இன்புற நக்கும், அதுபோல் இவர்களும் இன்புற ஆலிங்கன முதலியவற்றைச் செய்து அவர் கைப்பணம் பறித்துக் கொண்டு, அவர் அதிக மோகங்கொண்ட சமயத்தில் எருதைப் போல கவிழ்ந்து கொண்டு மோசஞ்செய்கிற வேசையினது அன்பைத் தமக்குரியதென்று நம்புகிறவனைப் பலர் நகைப்பார்கள் என்பது கருத்து.

     சேமா - இருபெயரொட்டுப் பண்புத்தொகை சில்லைக் கண் - உவமைத் தொகை; சில்லை - சிள்வண்டு, அதைப்போன்ற கண்ணுடையாள். வண்டு தேனிருக்கு மிடமெல்லாஞ் சென்று அதைக் கவர்ந்து கொண்டு நீங்குதல் போலப் பணமுடையாரிடத் தெல்லாம் நாடுங்கண்ணளாகையால் சில்லைக்கண் என்றார். கண் என்பது இங்கே உள்நாட்டத்தை. ஏமாந்து - ஏமா - பகுதி. பெறுப - பலர்பால் வினைமுற்று. ப - விகுதி, காலத்தையும் பாலையும் காட்டும்.

 

378. ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த்
     தாமார்ந்தபோதே தகர்க் கோடாம் - மானோக்கின்
     தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே,
     செந்நெறிச் சேர்தும்என் பார்.

     (இ-ள்.) செம் நெறி - நல்லவழியை [வீட்டுநெறியை], சேர்தும் என்பார் - அடையக் கருதுவோர், ஏமாந்த போழ்தின் - மயங்கிய போது, இனியார் போன்று - பிரியமுள்ளவர்களைப் போலிருந்து, தாம் ஆர்ந்த போது - தாம் (வறியராய்) இச்சித்த காலத்து, இன்னார் ஆய் - பிரியமில்லாதவர்களாய், தகர் கோடு ஆம் - ஆட்டுக்கடாவின் கொம்பைப்போ லாகும்படியான, மான் நோக்கின் - மான் போலும் பார்வையையுடைய, தம் நெறி பெண்டிர் - சுதந்திரப் பெண்களாகிய வேசிகளுடைய, தடம் முலை சேரார் - பெரிய முலைகளைச் சேரமாட்டார்கள், எ-று.

     காமுகர் மயங்கிய போது பணத்தைப் பறிக்கும் பொருட்டுப் பிரியமானவர்களாக விருந்து பின்பு அவர் பணம் வறண்டு விரும்பிய போது உடன்படாது மாறுபடுகின்ற வேசிகள் போகத்தை, நல்வழியில் நடக்க விரும்புவோர் விரும்ப மாட்டார்கள் என்றபடி.

     ஆர்தல் - விரும்புதல் மானோக்கின் - இன் - சாரியை. தம் நெறிப் பெண்டிர் - ஒருவர்க்கும் உட்படாமல் தம் மனம் போன போக்கிலே செல்கின்றவர்கள். செந்நெறி - செம்மையான நெறி; பண்புத்தொகை. சேர்தும் - தன்மைப்பன்மை எதிர்கால வினைமுற்று.

 

379. ஊறுசெய் நெங்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
     தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி
     எமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும்
     தமரல்லர் தம்உடம்பி னார்.

     (இ-ள்.) ஒள் நுதலார் - பிரகாசமான நெற்றியை யுடையவர்கள், ஊறு செய் நெஞ்சம் - துன்பஞ் செய்யும் படியான எண்ணத்தை, தம் உள் அடக்கி - (பிறர் அறிய வொட்டாமல்) தம்முள்ளே மறைத்து வைத்து, தேற - (காமுகர்கள்) நிச்சயமாகக் கொள்ளும்படியாக, மொழிந்த மொழி - சொன்ன சொற்களை, கேட்டு - (காதினாற்) கேட்டு, தேறி - (இவர்கள் நல்லவர் என்று) தேறி, எமர் என்று - எமக்குரியவரென்று, கொள்வாரும் - நினைக்கிறவர்களும், கொள்ப - (அப்படி) நினைக்கக் கடவர்கள்; (வேசையர்) யார்க்கும் - எவ்வகைப்பட்டவர்க்கும், தமர் அல்லர் - உரியரல்லர்; தம் உட்மபினார் - தமக்கே உரிய உடம்பின ராவர், எ-று.

     தமது வஞ்சகத்தை வெளிக்காட்டாமல், நல்லவர்களைப் போல நம்பும்படி பேசும் வேசிமாரை நல்லவர்களென் றெண்ணுகிறவர்கள் எண்ணட்டும், அவர்கள் உடம்பை யாருக்கும் வசப்படுத்தாமல் தமக்கே வசப்படுத்தி வைத்திருக்கின்றவர்களென் றறிக.

     ஊறு - உறு என்னும் பகுதி முதல் நீண்ட முதனிலைத் தொழிற்பெயர். எமர், தமர் - கிளைப்பெயர்; யாம், தம - பகுதிகள்.

 

380. உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார்
     கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் - தெள்ளி
     அறிந்த இடத்தும் அறியாராம் பாவம்
     செறிந்த உடம்பி னவர்.

     (இ-ள்.) உள்ளம் ஒருவன் உழையது ஆ - மனமானது ஒருவனிடத்தில் இருக்க, ஒள் நுதலார் - விளக்கமான நெற்றியையுடைய வேசிமார், கள்ளத்தால் செய்யும் - கள்ளத்தினாற் செய்கின்ற, கருத்து எல்லாம் - நினைவுகளெல்லாம், தெள்ளி அறிந்த இடத்தும் - தெளிவாக ஆராய்ந்து அறிந்த போதும், பாவம் செறிந்த உடம்பினவர் - பாவம் நிறைந்த உடம்பை யுடையோர் [அதாவது பாவிகள்], அறியார் ஆம் - அறியமாட்டார்களாம், எ-று.

     மனம் ஒருவர்மேல் நிற்க மற்றொருவர் மேல் காமமுற்றது போல் நடித்துக் காட்டும் வேசியர் கள்ளக்கருத்தை நன்றாயறிந்த போதும் அறியாத மூடரா யிருப்பவர் யாரெனில் பாவிகளென்பதேயாம்.