பன்னெறி
பன்னெறியியல்
[அதாவது பல விஷயங்களையும் கலந்து சொல்லியது.]
361. மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நினறிமைப்பின் என்னாம்? - விழைதக்க
மாண்ட மனையானை யில்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியதோர் காடு.
(இ-ள்.) மழை திளைக்கும் - மேகம் தவழும்படியான, மாடம் ஆய் - மாடியுள்ளதாய், மாண்பு அமைந்த காப்பு ஆய் - சிறப்புப் பொருந்திய காவலுள்ளதாய், இழை விளக்கு - ஆபரணங்களாகிய விளக்குகள், நின்று இமைப்பின் - நிலைபெற்று விளங்கப்பெற்றாலும், விழை தக்க - விரும்பும்படியான, மாண்ட - மாட்சிமைப்பட்ட, மனையாளை - இல்லாளை, இல்லாதான் - பெற்றில்லாதவனுடைய, இல்லகம் - மனை, என் ஆம் - என்ன பயனுடையதாம், (அது) காண்டற்கு அரியது - பார்ப்பதற்குக் கூடாத, ஓர் காடு - ஒரு காடேயாம், எ-று.
எவ்வளவு செல்வமிருந்தாலும் நல்ல மனையாளில்லாத வீடு பயனில்ல தென்பதாம்.
மழைதிளைக்கு மாடமென்பது உயரத்தைக் குறிக்கின்றது. அது அன்மொழித்தொகை. பண்புத்தொகையா வுரைத்தாலும் பொருந்தும். மாண்பமைந்த காப்பும் இப்படியே.
362. வழுக்கெனைத்தும்இல்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ ராயின் - இழுக்கெனைத்தும்
செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது.
(இ-ள்.) (பெண்கள்) வழுக்கு எனைத்தும் இல்லாத - கொஞ்சமும் குற்றமு மில்லாத வாள் வாய் கிடந்தும் - வாளின் காவலி லிருந்தும், இழுக்கினை - குற்றத்தை, தாம் -, பெறார் ஆயின் - அடையாமலிருந்தாலும், அ சின்மொழியார் - அந்தப் பெண்கள், இழுக்கு எனைத்தும் - குற்றங்களை யெல்லாம், செய்குறா பாணி - செய்யாதகாலம், சிறிதே - சொற்பமேயாம், கை உறா பாணி - ஒழுக்கத்தைப் பெறாத காலம், பெரிது - அதிகமாம், எ-று.
இயற்கையிற் கற்பில்லாத பெண்களுக்குக் காவல் வைத்தாலும் அவர்கள் இழிவான காரியம் பெரும்பாலும் செய்வார்கள் என்பது கருத்து.
வாள் காவலாவது வாள் வைத்துக் கொண்டிருப்பவர்களுடைய காவல், வாள் போன்ற கொடிய காவல் எனினுமாம். பெறாராயின் என்பதோடு சிறப்பும்மை கூட்டிக் கொள்க. இங்கே இழுக்கென்றது முக்கியமாய்க் கற்பின் அழிவை, பெரும்பான்மையாய்ப் பெண்களின் இயல்பைச் சொன்னபடி. செய்குறா - உறு - துணைவினை, கு - சாரியை.
363. எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதான் அரும்பணி; - அட்டதனை
உண்டி உதவாதான் இல்வாழ்பேய்; இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.
(இ-ள்.) எறி என்று எதிர் நிற்பாள் - அடி என்று சொல்லி எதிரில் நிற்கிற பெண், கூற்றம் - எமன், சிறு காலை - காலையில், அட்டு இல் புகாதால் - சமையல் வீட்டிலே போகாதவள், அரு பிணி - அருமையான வியாதி; அட்டதனை - சமைத்ததை, உண்டி உதவாதாள் - உணவாகக் கொடாதவள், இல் வாழ் பேய் - வீட்டிலிருக்கிற பிசாசு; இம்மூவர் - இந்தப் பெண்கள் மூவரும், கொண்டானை - கொண்ட கணவனை, கொல்லும் படை - கொல்லும்படியான ஆயுதம், எ-று.
கணவன் ஏதாகிலும் கோபித்துச் சொன்னால் எதிர்த்து நிற்பதும், காலத்தில் சமைக்க முயலாமையும், கணவன் விரும்பிய போது சோறிடாமையும், புருடனைக் கொல்லுவதற்கு ஒப்பாகும் என்றபடி.
கூற்றம், பிணி, பேய், படை இவை உவமையாகு பெயர்கள். உண்டி என்பதனை ஏவலொருமையாக வைத்து "நீ உண்ணென்று கொடாதவள்" என உரைப்பாரும் உண்டு.
364. கடியெனக் கேட்டும் கடியான், வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்; - பேர்த்துமோர்
இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே
கற்கொண்டு எறியும் தவறு.
(இ-ள்.) கடி எனக் கேட்டும் - (இல்வாழ்க்கையை) நீக்கி விடு என்று (பெரியோர்) சொல்லக் கேட்டும், கடியான் - நீக்கான்; வெடி பட - (தலை) வெடித்துப் போம்படி, ஆர்ப்பது கேட்டும் - தம்பட்ட முதலியவை ஒலிப்பதைக் கேட்டும், அது தெளியான் - (இல்வாழ்க்கை) இத்தன்மையதெனத் தெரிந்து கொள்ள மாட்டான்; பேர்த்தும் ஓர் இல் கொண்டு - மறுபடியும் ஒரு இல்லாளைக் கட்டிக் கொண்டு, இனிது இரூஉம் ஏமுறுதல் - சந்தோஷமா யிருக்கின்ற மயக்கம், கல் கொண்டு எறியும் - கல்லால் எறியும்படியான, தவறு என்ப - குற்றம் என்று சொல்வர் (பெரியோர்), எ-று.
ஒருவன் கலியாண முயற்சியை விடு என்று பெரியோர் சொல்லவும் விடாமல் அவள் இறந்து போனதைக் கண்டும் தெரியாமல் மற்றொருத்தியைக் கலியாணஞ் செய்து கொண்டு மகிழ்ந்திருத்தல் பெருங் குற்றமென்பது கருத்து.
கடி என்பது கலியாணத்துக்கும் பேர். கடியத்தக்கது கடி என்று அதற்கு அவயவப் பொருள் கொண்டு உரைப்பாரு முளர். ஆர்ப்பது - இங்கு சாப்பறையின் ஓசை. இரூஉம் - குச் சாரியை இன்றி அளபெடுத்துப் பெயரெச்சமானது; இது சொல்லிசை யளபெடை. ஏகாரம் - அசை.
365. தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்கு
இடையே இனியார்கண் தங்கல் - கடையே
புணராதென்று எண்ணிப் பொருள்நசையால் தம்மை
உணரார்பின் சென்று நிலை.
(இ-ள்.) ஒருவர்க்கு -, தவம் முயன்று வாழ்தல் - தவத்துக்குரிய காரியங்களில் முயற்சி செய்து வாழ்வது, தலையே - தலைமையான நிலை; இனியார்கண் தங்கல் - இனிமையான மனைவிகளிடத்துச் சேர்தல்; இடையே - நடுத்திறமானது; புணராது என்று எண்ணி - கிடைக்க மாட்டாதென்று நினைத்தும், பொருள் நசையால் - பணத்தின் ஆசையினாலே, தம்மை உணரார் பின் - தமது யோக்கியதையை அறியாதவர்கள் பின்னே, சென்று நிலை - போய் நிற்பது, கடையே - கடைசித் திறமேயாம், எ-று.
மனிதன் தவஞ்செய்து வாழ்வது முக்கியமானது; இல்லாவிட்டால் இல்லறத்தில் வாழவாவது வேண்டும். இது மத்திமம். இரண்டுமில்லாமல் இவர்களால் பணவுதவி யாகமாட்டாதென்று தெரிந்தும் தம் யோக்கியதையைத் தெரிந்து கொள்ள மாட்டாதவரைப் பின் செல்வது அதமம் என்றபடி.
எண்ணி என்பதோடு உம்மை கூட்டிக் கொள்க. நிலை - தொழிற்பெயர்.
366. கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
இனி துண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
முனிவினாற் கண்பா டிலர்.
(இ-ள்.) தலை ஆயார் - தலைமையான அறிவினவர், கல்லா - நூல்களைக் கற்று, கழிப்பர் - (பொழுது) போக்குவர்; இடைகள் - மத்திமர், நல்லவை - கிடைத்த போகங்களை, துவ்வா - அனுபவித்து, கழிப்பர் -, கடைகள் - அதமர், இனிது உண்ணேம் - இனிமையான வுணவை உண்ணப் பெற்றிலோமே, ஆர பெறேம் - (செல்வத்தை) நிரம்பப் பெறவுமாட்டோமே, யாம் - நாம், என்னும் - என்று சொல்லத்தக்க, முனிவினால் - வெறுப்பினால், கண்பாடு - தூக்கம், இலர் - இல்லாதவராவர், எ-று.
நூல்களைக் கற்றுப் பொழுது போக்குவது மேலானவர்கள் தொழில்; கிடைத்தமட்டிலே திருப்தியாய்ச் சுகத்தை அனுபவித்தல் மத்திமர் தொழில்; அதமரோ கிடைத்ததில் திருப்தியில்லாமல் செல்வத்திற்காக ஏக்கம் பிடித்துத் தூக்கமுமில்லாமல் அலைந்து கெடுவார்கள் என்பது கருத்து.
கல்லா, துவ்வா - இரண்டும் செய்யா என்னும் இறந்தகால வினையெச்சம். துவ்வா - து - பகுதி, ஆ - விகுதி, வகரம் எழுத்துப் பேறு, உண்ணேம், பெறேம் என்பன நமக்குக் கிட்டாதென்று வெறுப்பின் விதத்தைக் காட்டும். கண்பாடு - தொழிற்பெயர், முதல் நீண்டது, கண்படுதல் - செய்கையின்றி யழிதல், இதன் காரணமான தூக்கத்திற் காயிற்று, கண்பாட்டை இலர் எனவுமுரைக்கலாம்.
367. செந்நெல்லால் ஆய செழுமுனை மற்றும் அச்
செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
வயல் நிறையக் காய்க்கும் வளைவயல் ஊர!
மகனறிவு தந்தை அறிவு.
(இ-ள்.) செம் நெல்லால் ஆய செழு முளை - நல்ல நெற்களாலுண்டாகிய செழிப்பான முளைகள், மற்றும் - பின்னும், அ செம் நெல்லே ஆகி - அந்த செவ்விய நெல்லாகவே தாம் ஆய், விளைதலால் - (மேன்மேல்) விளைகிறபடியினாலே, அ நெல் - அப்படிப்பட்ட நல்ல நெற்கள், வயல் நிறைய காய்க்கும் - வயல்கள் நிரம்பும்படி விளைகிற, வளம் வயல் ஊர - வளப்பமான வயல்கள் சூழ்ந்த வூர்களையுடைய அரசனே!, தந்தை அறிவு மகன் அறிவு - தகப்பனுடைய புத்தியே மகனுடைய புத்தியாகின்றது, எ-று.
நல்ல நெல்முளையினால் நல்ல நெல் விளைவது போல் தந்தையின் நற்புத்தியால் மகனுக்கும் நற்புத்தி யுண்டாமென்பதாம். இது காரணம் பற்றிப் பெரும்பான்மையான சம்பவத்தைச் சொல்லியது.
விளைதலால் - ஆல் உருபு ஞாபக ஹேதுப் பொருளில் வந்தது. தந்தையறிவு மகனறிவென் றறியப்படுமென்பதாம்.
368. உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால் போல்
கீழ்மேலாய் நிற்கும் உலகு.
(இ-ள்.) உடை பெரு செல்வரும் - பெருஞ் செல்வமுடையோர்களும், சான்றோரும் - கல்வியறிவு நிறைந்தவர்களும், கெட்டு - (தம் நிலைகளிலிருந்து) மாறி, புடை பெண்டிர் மக்களும் - வைப்பாட்டி மக்களும், கீழும் - கீழ் மக்களும், பெருகி - விர்த்தியாகி, கடைக்கால் தலைக்கண்ணது ஆகி - காற்புறத்தி லிருக்க வேண்டியது தலைப்புறத்திருப்பதாகி, குடை கால் போல் - குடையினது காம்பு போல், உலகு - உலகமானது, கீழ் மேல் ஆய் நிற்கும் - கீழோன் மேலோனா நிற்கப் பெறும், எ-று.
செல்வரும் கற்றவரும் நிலைமாறி அயோக்கியர் விர்த்தியாகிக் கீழ்மேலா யிருக்கும் உலக இயற்கை என்றபடி. குடைக்காம்பு அப்படி யிருப்பது முற்காலத்தில்.
கெட்டு, பெருகி, ஆகி - இவை காரணப் பொருட்டாய் வந்த எச்சங்கள்; கெட்டதனால், பெருகினதனால், ஆனதனால் என்றது பொருள். உலகம் கீழ்மேலாவதற்கு இவை காரணம்; ஆதலின் பிற கர்த்தாவின் வினையில் முடிந்தன. செயவெனெச்சத் திரிபென்னவுமாம். இப்படியும் உலகம் மாறிவிடும் என்பது கருத்து. "வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே."
369. இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
தணியாத உள்ளம் உடையார்; - மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
வாழ்வின் வரைபாய்தல் நன்று.
(இ-ள்.) மணி வரன்றி - ரத்தினங்களை வாரிக் கொண்டு, வீழும் அருவி - வீழ்கிற அருவிகளோடு கூடிய, விறல் மலை நல் நாட - மேன்மையான மலைகளுள்ள நல்ல நாட்டின் அரசனே!, இனியார் - சிநேகிதர், தம் நெஞ்சத்து நோய் உரைப்ப - தம் மனதிலிருக்குந் துன்பத்தைச் சொல்ல, அ நோய் தணியாத - அந்தத் துன்பங்களைப் போக்காத, உள்ளம் உடையார் - மனமுடையவர்கள், வாழ்வின் - வாழ்வதைக் காட்டிலும், வரை பாய்தல் - மலையிலிருந்து குதித்து உயிர் விடுதல் நன்று - மேலானதாம், எ - று.
சிநேகிதர் துன்பத்தை நீக்க மனமில்லாதவர் வலுவில் உயிர் விடுதல் மேல் என்பது கருத்து.
தம்மாலே அத்துன்பத்தை நீக்கக் கூடினும் கூடாவிடினும் அதில் மனஞ் செல்லாத பாவிகள் என்பதற்கு "தணியாத வுள்ளமுடையார்" என்றது.
370. புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்புற நாடின்வே றல்ல; - புதுப்புனலும்
மாரி அறவே அறுமே, அவரன்பும்
வாரி அறவே அறும்.
(இ-ள்.) புது புனலும் - (வெள்ளம் வந்த) புதிய நீரும், பூ குழையார் நட்பும் - அழகிய காதணியணிந்த வேசைமாதர்களுடைய சிநேகமும், இரண்டும் -, விதுப்பு அற நாடின் - துரிதமில்லாமல் யோசித்தால், வேறு அல்ல - (ஒரு தன்மை யுடையனவே யல்லாமல்) வேறு தன்மை யுடையன அல்ல; புது புனல் - புதுநீர், மாரி அறவே அறும் - மழை நீங்கினால் நீங்கும்; அவர் அன்பும் - அவ்வோசையருடைய சிநேகமும், வாரி அற - பொருளின் வரவு நீங்க, அறும் - நீங்கும், எ-று.
மழை நின்றால் புதுவெள்ளம் நிற்பது போல் பணவரவு நின்றால் வேசையர் சிநேகமும் நிற்கு மாதலால் அவ்வஞ்சகரோடு சேர வேண்டாம் என்பது கருத்து.
புனலும் நட்பும் - எண்ணும்மைகள். அறவே, அறுமே - ஏ இரண்டும் அசை அல்லது அறவே ஏகாரம் உடனே என்னும் பொருளைக் குறிப்பிக்கும். அறுமே - ஏ பிரசித்தத்தைக் குறிக்கும். அன்பும் - உம்மை எச்சப் பொருளில் வந்தது.
பொருட்பால் முற்றிற்று
