கயமை
பொதுவியல்
[அதாவது மூடத்தனம். இதுவும் முந்திய அதிகாரத்தைச் சேர்ந்தது.]
351. ஆர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும்
காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந்து
எருவைபோல் போத்தறார் புல்லறிவி னார்.
(இ-ள்.) ஆர்த்த அறிவினர் - நிறைந்த அறிவுள்ளவர்கள், ஆண்டு - வருஷங்களிலே, [வயதிலே], இளையர் ஆயினும் - இளையவர்களானாலும், தம்மை -, காத்து ஓம்பி - நன்றாகக் காத்து, அடக்குப - (யோக்கிய காரியங்களிற் புகவொட்டாமல்) அடக்குவார்கள்; புல் அறிவினார் - அற்பபுத்தி யுள்ளவர்கள், மூத்தொறும் - வயது முதிருந்தோறும், தீ தொழிலே - கெட்ட காரியங்களிலேயே, கன்றி - உழன்று வருந்தி, திரிதந்து - திரிந்து, எருவை போல் - கொறுக்கையைப் போலே, போத்து அறார் - உள்ளே தொளையாயிருப்பது நீங்கமாட்டார், எ-று.
அறிவுள்ளவர் சிறியரானாலும் தாம் இந்திரியங்களுக்கு வசப்பட்டுத் தீமை செய்யாமல் அடங்குவார்கள்; புத்தியீனர் வயது முதிர முதிரத் தீத்தொழிலே செய்வார்கள் என்பது கருத்து.
எருவைபோல் - கழுகு போல், போத்து அறார் - குற்ற நீங்கார், என்றும் உரைக்கலாம். கழுகு குரூரகுணமுள்ள பக்ஷி என்பது பிரசித்தம். போத்து - பொத்து - குற்றம், அது முதல் நீண்டது. கொறுக்கைபோல் உள்ளே தொளையாயிருப்பது நீங்கார் என்றால் மேற்பார்வைக்குத் தடித்த ரூபமுள்ளவராகி உள்ளே ஒன்றுமில்லாதவர் என்பதாம். இது சிறப்பன்று என அறிக.
ஆர்ந்த என்பது ஆர்த்த என வலிந்தது. காத்தோம்பி - ஒரு பொருட்பன்மொழி. அடக்குப - இது இங்கே காலங்குறியாது தன்மை குறித்து நிற்கும். மூத்தொறும் - மூ - முதனிலைத் தொழிற் பெயர், கன்றல் - வருந்தல்.
352. செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாம் தேரை; - வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன்று இல்லாதார்
தேர்கிற்கும் பற்றி அரிது.
(இ-ள்.) செழு பெரு பொய்கையுள் - செழிப்பான பெரிய குளத்தில், என்றும் வாழினும் - எந்நாளும் வாழ்ந்து கொண்டிருந்தாலும், தேரை - தவளைகள், வழும்பு அறுக்ககில்லா - (தம்மேலுள்ள) வழுவழுப்பான அழுக்கை நீக்கிக் கொள்ள மாட்டா; வழும்பு இல் சீர் - குற்றமில்லாத சிறப்பையுடைய, நூல் - சாத்திரங்களை, கற்றக்கண்ணும் - கற்றாலும், நுணுக்கம் ஒன்று இல்லாதார் - நுட்பபுத்தியாகிய ஒரு பொருள் இல்லாதவர், தேர்கிற்கும் பெற்றி - நூற்பொருளைத் துணியுந் தன்மையானது, அரிது - இல்லை, எ-று.
பெரிய குளத்தில் வெகு நாளிருந்தும் தவளை தன்மேலழுக்கைக் கழுவிக் கொள்ள மாட்டாமைபோல் மூடன் எப்படிப்பட்ட நூலைப் படித்தாலும் அதன் தாற்பரியத்தை யறியும்படியான புத்திசூக்ஷ்ம மில்லாதவனாம்.
அறுக்ககில்லா - அறு - பகுதி, கு, அ - இரண்டும் சாரியைகள், கில் - ஆற்றலைக் காட்டும் விகுதி, ஆ - எதிர்மறைப் பலவின்பால் விகுதி. ஆம் - அசை. இல்சீர் - "இல்லெனின்மைச் சொற்கையடைய" என்கிற சூத்திரத்தால் இயல்பாயிற்று [மெய்யீ. சூ. 30], கற்றக்கண் - எதிர்கால வினையெச்சம். நுணுக்கம் - பண்புப் பெயர், நுண் - பண்படி, பகுதி, அம் - விகுதி, உகர ககரங்கள் பண்பின் விகாரம்; இது அத்தன்மையான அறிவுக்கு ஆகுபெயர்.
353. கணமலை நன்னாட! கண்ணின்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால் - குணன் அழுங்கக்
குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ நா.
(இ-ள்.) கண மலை நல்நாட - கூட்டமாகிய மலைகளுள்ள நல்ல நாட்டின் அரசனே!, கண் நின்று - எதிரில் இருந்து, ஒருவர் குணனேயும் - ஒருவர் குணத்தையும், கூறற்கு அரிது - சொல்லுதற்கு (நா எழல்) அருமையாயிருக்கும்; (அப்படியிருக்க) உழை நின்று - அவரிடத்திலிருந்து, குணன் அழுங்க - குணம் அழியும்படி, குற்றம் கூறும் - குற்றங்களை எடுத்துச் சொல்லுகிற, சிறியவர்கட்கு - கயவருக்கு, நா - நாக்கு, எற்றால் இயன்றதோ - எப்படிப்பட்ட பொருளினால் செய்யப்பட்டதோ, எ-று.
குணங்கூறுவது சாதாரணமானாலும் அவர் என்ன நினைப்பாரோ என்று பயந்து அதைக் கூறுவதும் கூடாமலிருக்க, ஒருவரிடஞ் சென்று அவர் குணங்களெல்லா மறையும்படி கயவர் குற்றங் கூறுகிறார்களே அவர்களுக்குக் கொடிய பொருளால் நாக்கு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கவி வியந்து கூறினார்.
ஆல் - அசை, எற்றால் - என் - வினாவிடைச் சொல், பகுதி, று ஒன்றன் பால் விகுதி.
354. கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர்.
(இ-ள்.) கோடு ஏந்து அகல் அல்குல் பெண்டிர் - பக்கங்களுயர்ந் தகன்ற வல்குலையுடைய குலமக்கள், தம் பெண் நீர்மை - தமது பெண்தன்மையை, சேடியர் போல செயல் தேற்றார் - (தமக்குப் பணிசெய்யும்) பாங்கியர் போல அலங்கரித்துக் கொள்ளுதலை அறியார்; மற்றையவர் - வேசிமார், புது பெருக்கம் போல் - புதிய வெள்ளம்போல், கூடி - (ஆடவரோடு) கலந்து, தம் பெண்ணீர்மை மதித்து காட்டி - தமது பெண் தன்மை மேம்பட அலங்கரித்துக்காட்டி, இறப்பர் - (அவர்களிடத் துள்ளவற்றை யபகரித்து) நடப்பர், எ-று.
குலப்பெண்கள் அலங்காரங்களாலே, தம்மை வியக்கச் செய்து பிறரிடத்துப் பொருள் பறிப்பதில்லை, வேசிமாரோ அப்படிச் செய்வார்கள்; அதுபோல், யோக்கியர் தங்குணங்களைக் காட்டி வியக்கச் செய்யாமல் அடங்கியிருப்பார்கள், அயோக்கியர் வெகு மேன்மை யுள்ளவர் போல நடித்துக் காட்டி வஞ்சித்துப் பொருள் பறித்துக் கொண்டு போவார்கள் என்பதாம்.
355. தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா
உளிநீராம் மாதோ கயவர்; - அளிநீரார்க்கு
என்னானுஞ் செய்யார் எனைத்தானும் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின்.
(இ-ள்.) தளிர் மேலே நிற்பினும் - துளிரின் மேல் நின்றாலும், தட்டாமல் - (ஒருவர்) தட்டித்தள்ளாமல், செல்லா - போகமாட்டாத, உளி நீரர் - உளியின் தன்மையுடையவர்கள், கயவர் -, அளி நீரார்க்கு - மெத்தென்ற தன்மையுள்ளவர்க்கு, என்னானும் செய்யார் - எந்தவுதவியுஞ் செய்யமாட்டார்கள்; இன்னாங்கு செய்வார் பெறின் - துன்பஞ் செய்பவர்களை அடைந்தால், எனைத்தானும் - எவ்வளவை யாகிலும், செய்ய - செய்வார்கள், எ-று. மாது, ஒ - இரண்டும் அசை.
உளியானது மெதுவான வஸ்துவின் மேலும் தானே வியாபியாமல் ஒருவர் தட்டித் தள்ளினால் செல்வது போல் கீழ்மக்கள் எவ்வளவு அற்ப காரியத்திலும் பிறர் ஏவாமல் பிரவேசிக்க மாட்டார்; நல்லவருக்கு ஒன்றுங் கொடார்; அடித்துக் குத்திப் பலவிதத்தில் துன்பப்படுத்துவோர்க்கு எதையுங் கொடுப்பார்கள் என்பதாம்.
"இரணங் கொடுத்தாற் கொடுப்பர் கொடாரே, சரணங் கொடுத்தாலுந் தாம்." இயற்கையாப் பொல்லாங்கு செய்யும் அயோக்கியருக்கேயன்றி யோக்கியருக்குக் கொடார் எனினும் பொருந்தும்.
அளிநீரார் - அளிந்த நீர்மையை உடையவர்கள் அல்லது அளிக்கும்படியான [இரங்கும்படியான] நீர்மையை உடையவர்கள். ஆனும் - ஆயினும் என்பதின் இடைக்குறை; இங்கு உம்மை - ஐயம். எனைத்தானும் - இங்கு உம்மை சிறப்பு.
356. மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
செய்நன்று உள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை
வைததை உள்ளி விடும்.
(இ-ள்.) குறவன் -, மலை நலம் - மலையின் வளத்தை, உள்ளும் - நினைப்பான்; பயந்த - பயனைத்தந்த, விளை நிலம் - விளைகின்ற நிலத்தை, உழவன் - பயிர்செய்பவன், உள்ளும் -, சான்றோர் - பெரியோர், ஒருவர் செய்த நன்று - (தமக்கு) பிறரொருவர் செய்த நன்மையை, சிறந்து உள்ளுவர் - சிறந்ததா நினைப்பார்கள்; கயம் - கயவன் [கீழ் மகன்], தன்னை -, வைததை - (ஒருவன்) திட்டினதை, உள்ளிவிடும் - (தீர) நினைப்பான், எ-று.
குறவனுக்கு மலையிற் பழக்கமாதலால் மலைநல முள்ளுவான்; அப்படியே உழவனும் சான்றோர் பிறரைச் சிறப்பித்தலை மேற்கொண்டவராதலால் செய்த நன்று உள்ளுவர். கயவனுக்கு வேறொரு நினைப்புமின்றித் தன்னை மேலாக எண்ணுவது இயற்கை யாதலால் அதற்குத் தாழ்மை வரும்படி வைததையே நினைப்பனென்பது கருத்து.
குறம் - சாதிப்பெயர் அதனையுடையவன் குறவன். உழவன் - உழு, அ, அன் - பகுதி, சாரியை, விகுதிகள், சிறந்து - சிறக்க என்பதின் திரிபு. கயவனைக் கயம் என்றது இழிவினால்.
357. ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின்
எழுநூறும் தீதாய் விடும்.
(இ-ள்.) ஒரு நன்றி செய்தவர்க்கு - ஒரு உபகாரஞ் செய்தவர் திறத்தில், ஒன்றி எழுந்த - சேர்ந்து உண்டான, பிழை நூறும் - நூறு குற்றங்களேயானாலும், சான்றோர் -, பொறுப்பர் - பொறுத்துக் கொள்ளுவர், கயவர்க்கு -, எழு நூறு நன்றி செய்து - எழு நூறு நன்மைகளைச் செய்து, ஒன்று தீது ஆயின் - ஒரு தீமை செய்தானாயின், எழுநூறும் தீது ஆய்விடும் - எழுநூறு நன்மைகளும் தீதுபோலவே முடியும், எ-று.
மேலோர் அற்ப நன்மையைச் செய்தவனும் பல தீங்கு செய்தால் நன்மையாகவே எண்ணிப் பொறுத்துக் கொள்வார்கள், கீழோரோ இதற்கு மாறாயிருப்பார்கள் என்றால் அவரவரியற்கை அப்படித் தோன்றுமென்பது கருத்து.
செய்தவர்க்கு - குவ்வுருபு இடப்பொருளில் வந்தது. கயவர்க்கு - கோடற்பொருளில் வந்தது. ஆயின் என்பதோடு செய்தான் என ஒரு சொல் கூட்டிக் கொள்க. அல்லது செய்து என்பதைச் செயவெனெச்சத் திரிபாவைத்து அவற்றுள் ஒன்று தீதாயின் என்று உரைக்க தீதாய் விடும் - விடு உறுதியைக் காட்டும்.
358. ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்; - கோட்டை
வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி
செயிர்வேழம் ஆகுதல் இன்று.
(இ-ள்.) வாள் கண்ணாய் - வான் போன்ற கண்ணுடையவளே!, இல் பிறந்தார் - நற்குடிப்பிறந்தவர், ஏட்டை பருவத்தும் - தளர்ச்சியான காலத்திலும் [தரித்திரத்திலும்], செய்வன - செய்கிற நற்காரியங்களை, முழு மக்கள் - மூடர்கள், மோட்டிடத்தும் - உயர்வான காலத்திலும் [செல்வப்பெருக்கிலும்], செய்யார் - செய்யமாட்டார்கள்; கோட்டை - கொம்பில், வயிரம் செறிப்பினும் - பூணைப் பூட்டினாலும், பன்றி - பன்றியானது, செயிர் வேழம் ஆகுதல் - வீரங் காட்டும் படியான யானை ஆகுதல், இன்று - இல்லை, எ-று.
பன்றிக் கொம்புக்கு யானைக் கொம்புக்குப் போடுவது போலப் பூண்கட்டினாலும் அது யானையாகாதது போல், மூடர் மிகுந்த செல்வம் பெற்றாலும் நற்குடிப் பிறப்பாளர் தரித்திரத்திற் செய்யுமளவும் விருந்து பாராட்டல் முதலாகிய நற்காரியஞ் செய்யமாட்டார்கள், என்றால் மேலோரியற்கையும் கீழோரியற்கையு மாறா என்பது கருத்து.
பிறந்ததற்பின் படிப்பு முதலியவைகளாலே கிஞ்சித்தும் தளராதிருப்பது பற்றி மூடரை முழுமக்கள் என்றது. கோட்டை - வேற்றுமை மயக்கம்.
359. இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
நின்றாதும் என்று நினைத்திருந்து - ஒன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர்.
(இ-ள்.) இன்று ஆதும் - இன்றைக்குச் (செல்வமுடையர்) ஆவோம்; இந்நிலையே - இப்பொழுதே, ஆதும் - (செல்வமுடையர்) ஆவோம்; இனி - மேல், சிறிது நின்று - சொற்ப காலமிருந்து, ஆதும் -, என்று நினைத்து இருந்து - இப்படி சிந்தித்துக் கொண்டிருந்து, ஒன்றி உரையின் மகிழ்ந்து - சேர்ந்து சொல்வதனாலே சந்தோஷித்து, தம் உள்ளம் வேறு ஆகி - தமது நினைப்பு மாறி, மரை இலையின் - தாமரையிலை போலே, பலர் - அநேகர், மாய்ந்தார் - அழிந்தார்கள், எ-று.
எமக்கு இன்று செல்வம் வரும் நாளை வரும் என்று பிறரிடம் சொல்லி மகிழ்ந்திருந்து, அது அப்படி வராமையாலே மனம் வருந்தி அழிந்தவர் பலர் என்றால், வீணெண்ணத்தினால் ஜம்பம் பேசுதல் சுயவரியற்கை என்பது கருத்து.
தாமரையிலை செழிப்பா யிருந்து நாள் வட்டத்தில் அங்கேயே அழிவது போல் அழிந்தார் என்பதாம்.
மரை - மான்கள்; அவை தின்ன இலைபோல் எனப் பொருளுறைப்பாரு முண்டு அப்பக்ஷத்தில் தின்பதற்கு முன் செழிப்பாய்க் காணப்பட்டுப் பின் சொரூபமே தெரியாமல் அழிந்தது போல் என வலிந்து கருத்து கொள்ள வேண்டும்.
ஆதும் - தன்மைப்பன்மை வினைமுற்று, எதிர்காலம் - தும் - விகுதி. "தவ்வொடிறப்புமெதிர்வும்" என்பதை நினைக்க. உரையின் - ஐந்தனுருபு, ஏதுப்பொருளில் வந்தது. உள்ளம் வேறாகி - சினைவினையாதலின் செய்தெனெச்சம், முதல் வினையொடு முடிந்தது.
360. நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத் தில்லாகும்; - ஓரும்
நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப் பெருங்கல் அன்னார் உடைத்து.
(இ-ள்.) நீருள் பிறந்து - தண்ணீரிலுண்டாகி, நிறம் பசியது ஆயினும் - நிறத்தில் பசுமையானதா யிருந்தாலும், கிடையகத்து - சடையினுள்ளே, ஈரம் இல் ஆகும் - ஈரமானது இல்லாதாகும்; நிறை பெரு செல்வத்து - நிறைவான பெரிய செல்வத்திலே, நின்றக்கடைத்தும் - இருந்தாலும், அறை பெரு கல் அன்னார் - பாறையாகிய பெரிய கல்லைப் போன்றவர்களை [மனதில் பசையில்லாதவரை], உடைத்து - (இவ்வுலகம்) உடையதா யிருக்கின்றது, எ-று.
தண்ணீரிருந்தும் உள்ளீரமில்லாத சடையைப் போலே கன்னெஞ்சுடைய மூடர் இவ்வுலகத்திற் பலருண்டென்பதாம்.
மனதிற் பசையாவது தயாதாக்ஷிணியங்கள். ஓரும் - அசை; நீர் அறியும் என்னவுமாம். நிறை - முதனிலைத் தொழிற்பெயர்; வினைத்தொகை என்றால் தொடைபற்றி ஒற்று மிகுந்ததெனக் கொள்க.
