கீழ்மை

bookmark

பொதுவியல்

 

   [அதாவது கீழ்மக்களது தன்மை அல்லது கீழ்ச்சாதியாரது தன்மை.]

 

341. கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
     குப்பை கிளைபோவாக் கோழிபோல்; - மிக்க
     கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
     மனம்புரிந்த வாறே மிகும்.

     (இ-ள்.) காலை - காலத்தில், கப்பி - தானியத்தை, கடவது ஆ - கடமையாக, தன் வாய் பெய்யினும் - தன் வாயிலே போட்டாலும், குப்பை கிளைப்பு - குப்பையைக் கிளறுதலை, ஓவா - விட்டொழியாத, கோழி போல் - கோழியைப் போல், மிக்க கனம் பொதிந்த - மிகுந்த மேன்மை நிறைந்திருக்கிற, நூல் விரித்துக் காட்டினும் - சாஸ்திரங்களை விரித்துத் தெரிவித்தாலும், கீழ் - கீழானவன், தன் மனம் புரிந்த ஆறே - தன் மனது விரும்பியவழியே, மிகும் - மிகுந்து செல்வான், எ-று.

     கோழிக்குக் காலத்தில் தானியம் போட்டாலும் குப்பை கிளறப் போவதுபோல் கீழ்மகன் எத்தனை நல்ல நூல்களை யெடுத்துச் சொன்னாலும் அதைவிட்டுத் தன் மனதுக்கு இசைந்தபடியே செல்வான் என்பதாம்.

     கடவது - கடமையில் கட - பகுதி, அ - சாரியை, து - விகுதி. மிக்க - மிகு - பகுதி, அ - பெயரெச்ச விகுதி, பகுதியில் ககரம் இரட்டிக் காலங்காட்டியது. கீழ் - ஆகுபெயர்.

 

342. காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
     தாழாது போவாம் என உரைப்பின் - கீழ்தான்
     உறங்குவம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
     மறங்குமாம் மற்றொன் றுரைத்து.

     (இ-ள்.) காழ் ஆய - உறுதியான நூற்பொருள்களை, கொண்டு - கற்றுக் கொள்ள, கசடு அற்றார் தம் சாரல் - குற்றமில்லாத பண்டிதரிடத்தில், தாழாது - தாமதப்படாமல், போவாம் என உரைப்பின் - போவோம் என்று ஒருவர் சொன்னால், கீழ் -, உறங்குவாம் என்று எழுந்துபோம் - தூங்குவோம் என்று எழுந்துபோவான்; அஃது அன்றி - அதல்லாமல், மற்றொன்று உரைத்து - வேறொரு சாக்கைச் சொல்லி, மறங்கும் - மறுத்துச் சொல்வான், எ-று. தான், ஆம் - அசைகள்.

     படிக்கப் போவோ மென்றால் எதையாகிலும் சொல்லி அதை மறுத்துத் தூங்கப் போவான் கீழ்மகன் என்பதாம்.

     கொண்டு - கொள்ள என்பதின் திரிபு. "சொற்றிரியினும் பொருடிரியா வினைக்குறை" என்பது சூத்திரம். போவாம் - உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்று; நீயும் நானும்; "அம் ஆம் என்பன முன்னிலையாரையும்" உறங்குவாம் - இதுவுமப்படியே போம்; போகும் அல்லது போவும் என்பதில் ஈற்றுயிர் மெய் கெட்டது. "செய்யுமெனெச்சவீற் றுயிர்மெய் சேறலும்" [வினை. சூத். 22].

 

343. பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையாது
     ஒருநடைய ராகுவர் சான்றோர்; - பெருநடை
     பெற்றக் கடைத்தும் பிறங்கு அருவிநன்னாட!
     வற்றாம் ஒருநடை கீழ்.

     (இ-ள்.) சான்றோர் - பெரியோர், பெருநடை - பெரிய சிறப்பை, தாம் பெறினும் - தாம் அடைந்தாலும், பெற்றி - (தமது) தன்மை, பிழையாது - தப்பாமல், ஒரு நடையர் ஆகுவர் - (முன்னும் பின்னும்) ஒரே விதமான நடக்கையுள்ளவர் ஆவார்கள்; பிறங்கு அருவி நல் நாட - விளங்குகின்ற மலையருவிகளையுடைய நல்ல நாட்டையுடையவனே!, கீழ் -, பெரு நடை - பெருஞ் சிறப்பை, பெற்றக்கடைத்தும் - பெற்ற விடத்தும், ஒரு நடை - (முந்தியநடைக்கு வேறான) நடையிலே, வற்று ஆம் - வல்லமையுடையனாவான், எ-று.

     பெரியோர் அரசரால் எவ்வாறு மேன்மைப்படுத்தப் பட்டாலும் தாங்கள் முன்னிருந்தபடி அடக்கமொடுக்கங்களோ டிருப்பாரே யல்லது மாறார்; கீழ்மகனோ மாறிவிடுவான் என்றபடி. பெற்றக் கடைத்து - ஒருவகை வினையெச்சம்; இதனோடு சேர்ந்த உம் இழிவு சிறப்பு; பெறுவது அருமை என்றபடி. பெற்றி - தொழிற் பெயர்; பெற்றிருக்கும் சற்குணத்துக்கு ஆகு பெயர்; பெறு - பகுதி, இ - விகுதி ஆகுவர் - கு - சாரியை வற்று - வல் என்கிற பண்படி மேல் று - ஒன்றன்பால் விகுதி வந்தது. இழிவினால் கீழ்மகனை அஃறிணையாகவே முடித்தார்.

 

344. தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
     பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்; - பனையனைத்து
     என்றும் செயினும் இலங்கருவி நன்னாட!
     நன்றில நன்றறியார் மாட்டு.

     (இ-ள்.) இலங்கு அருவி நல் நாட - விளங்குகின்ற அருவிகளுள்ள நல்ல நாட்டையுடையவனே!, தினை அனைத்தே ஆயினும் - தினையளவாயினும், செய்த நன்று - (ஒருவன்) செய்த உபகாரத்தை, உண்டால் - அனுபவித்தால், சான்றோர் - நற்குணமிகுந்தவர், பனை அனைத்து ஆ - பனையளவாக, உள்ளுவர் - நினைப்பார்கள்; என்றும் - எக்காலமும், பனை அனைத்து செயினும் - பனையளவான நன்றி செய்தாலும், நன்று அறியா மாட்டு - (உபகாரத்தின் மகிமை) அறியாதவர்களிடத்து, நன்று இல - (அவை) உபகாரமாக நினைக்கப்பட மாட்டா, எ-று.

     அற்பவுபகாரத்தையும் பெரிதா நினைப்பது சான்றோரியல்பு, பெரிய வுபகாரத்தையும் உபகாரமா நினையாமலிருப்பது கீழோர் இயல்பு என்பதாம்.

     தினை - ஒருவகைச் சிறுதானியம். அனைத்து - அன் - இடைச்சொல், பகுதி, ஐகாரம் - சாரியை, து - ஒன்றன் விகுதி, நன்றில - குறிப்பு முற்று, ஒரு மொழியாக் கொள்க.

 

345. பொற்கலத்து ஊட்டிப் புறத்தரினும் நாய்பிறர்
     எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்; - அச்சீர்
     பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும்
     கருமங்கள் வேறு படும்.

     (இ-ள்.) பொன் கலந்து ஊட்டி - பொன் பாத்திரத்தில் (நல்லவுணவை) உண்பித்து, புறம் தரினும் - ரக்ஷித்து வந்தாலும், நாய் -, பிறர் எச்சிற்கு - பிறருண்ட எச்சிற் சோற்றுக்கு, இமையாது - கண்கொட்டாமல், பார்த்திருக்கும் - (கொள்ளத்தகுந்த சமயத்தை) எதிர்பார்த்திருக்கும்; அ சீர் - அத்தன்மையாக, பெருமை உடைத்து ஆ கொளினும் - சிறப்புள்ளவனாக ஏற்றுக் கொண்டாலும், கீழ் -, செய்யும் கருமங்கள் - செய்கிற காரியங்கள், வேறுபடும் - (கனவான்கள் செய்யுங் காரியங்களுக்கு) வேறாகவே யிருக்கும், எ-று.

     நல்லுணவுகளைக் கொடுத்து மேன்மைப் படுத்தினாலும் இழிவான உணவுக்குக் காத்திருக்கும் நாய் போலவே மேன்மையாக் கொண்டாலும் இழிந்த காரியங்களைக் கீழோர் செய்வார்கள் என்பதாம்.

     ஊட்டி - உண் என்பதின் பிறவினையெச்சம், டு - பிறவினை விகுதி, முதல் நீண்டது விகாரம்.

 

346. சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
     எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்
     முந்திரிமேற் காணி மிகுவதேல் கீழ்தன்னை
     இந்திரனா எண்ணி விடும்.

     (இ-ள்.) விழுமியோர் - மேலானவர், சக்கரம் செல்வம் பெறினும் - பூமண்டல அரசாட்சியாகிய சம்பத்தை யடைந்தாலும், எக்காலும் - எந்தத் தருணத்திலாயினும், மிகுதி சொல் - அதிகமான சொல்லை [வரம்பு கடந்த பேச்சை], சொல்லார் - சொல்ல மாட்டார்; எ காலும் - எப்பொழுதாயினும், முந்திரி மேல் - முந்திரி என்கிற சிறுதொகையின் மேல், காணி மிகுவதேல் - காணி என்னும் அற்பத்தொகை அதிகப்பட்டால், கீழ் -, தன்னை -, இந்திரன் ஆ - தேவேந்திரனாக, எண்ணி விடும் - எண்ணிக்கொள்வான், எ-று.

     மேலோர் எவ்வளவு செல்வத்திலும் வரம்பு கடந்து நடப்பதில்லை; கீழோரோ இருக்கிற தாழ்ந்த நிலைக்கு மேல் கிஞ்சித்துச் செல்வம் வந்தால் தம்மை மறந்து துர்மார்க்கஞ் செய்வார்கள் என்பது கருத்து.

     சக்கரம் - மண்டலமாகையால் பூமண்டலத்துக்குக் கொள்ளப்பட்டது. விழுமியோர் - விழுமுதல் - விரும்புதல், பிறர் விரும்பும்படியான நல்ல இயல்பையுடையவர்; விழுமு - பகுதி, இன் - இடைநிலை, ஈறுதொக்கது, ஆர் விகுதியின் ஆ ஒ ஆயிற்று ["பெயர் வினையிடத்து னளரயவிற்றயல்" பொது. சூத். 2]. முதல் எக்காலும் என்பதில் உம்மை முற்றுப்பொருளது, இரண்டாவதில் ஐயப்பொருளது, விகற்பப் பொருளென்க; எப்பொழுதாயினு மென்றபடி. அவர்களுக்குச் செல்வம் வருதல் அருமையென்றதாயிற்று. இங்கே காணி என்பது கீழ்க்காணியை; இக்கால வழக்கத்தின்படி முந்திரியில் அறுபத்தி நான்கிலொரு பங்கு. முந்திரியென்பது முந்நூற்றிருபதி லொருபங்கு. காணிமேல் முந்திரி முகுவதேல் எனச் சொற்களை மாற்றிப் பொருள் கொள்வது நேர்.

 

347. மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
     செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம்;
     எய்திய செல்வந்த ராயினும் கீழ்களைச்
     செய்தொழிலாற் காணப் படும்.

     (இ-ள்.) மை தீர் - குற்றமற்ற, பசு பொன் மேல் - நல்ல பொன்னின்மேலே; மாண்ட மணி - மாட்சிமையான ரத்தினங்களை, அழுத்தி - இழைத்து, செய்தது எனினும் - செய்யப்பட்டதானாலும், செருப்பு -, தன் காற்கே ஆம் - தன் காலில் அணிவதற்கே உபயோகமாம்; எய்திய செல்வந்தர் ஆயினும் - செல்வத்தைப் பொருந்தினவர்களானாலும், கீழ்களை - தொழிலால் - அவர்கள் செய்யுங் காரியங்களால், காணப்படும் - (இவர்கள் கீழ்கள் என்று) அறிதல் கூடும் [அறியலா மென்றபடி], எ-று.

     இரத்தினமிழைத்த செருப்பானாலும் காலில் அணியத் தக்கதே, அதுபோல் கீழ்மக்கள் எவ்வளவு செலவம் பெற்றாலும் கீழ்ப்படியில் வைக்கத்தக்கவரே யன்றி மேற்படியில் வைக்கத் தகார் என்பதாம்.

     மாண்ட - மாண் என்கிற பண்படிமேற் பிறந்த தெரிநிலை யிறந்த காலப் பெயரெச்சம். செய்தது - இது செயப்பாட்டு வினையின் திரிபு; படு - விகுதி குன்றியது. காண - தொழிற் பெயராக் கொண்டு படு என்பதோடு முடிக்க காணப்படும் என ஒருமொழியாகவே கொண்டாலும் பொருந்தும்.

 

348. கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
     இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும், - அடுத்தடுத்து
     வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!
     ஏகுமாம் எள்ளுமாம் கீழ்.

     (இ-ள்.) விறல் மலை நல் நாட - பெருமையான மலைகளுள்ள நல்ல நாட்டையுடையவனே!, கீழ் -, கடுக்கென - கடினமாக, சொல்வற்று - சொல்லுதலிலே சாமர்த்திய முடையவன்; கண்ணோட்டம் - தாக்ஷிணியம், இன்று - இல்லாதவன்; பிறர்மாட்டு - பிறரிடம் (உண்டான), இடுக்கண் - சங்கடத்தை, உவக்கும் - சந்தோஷிப்பான்; அடுத்து அடுத்து - அடிக்கடி, வேகம் உடைத்து ஆம் - கோபாவேசத்தை யுடையவனாவான்; ஏகும் - (பலவிடத்தும்) திரிவான்; எள்ளும் - (பிறரைத் தூஷிப்பான், எ-று.

     கடினமாய்ப் பேசுவதும் யாரிடத்தும் தாக்ஷிணியம் பாராமையும் பிறருக்கு நேரிடுகிற ஆபத்துக்குச் சந்தோஷிப்பதும் அடிக்கடி சும்மாக் கோபிப்பதும் கண்டவிடத்துச் சும்மாத் திரிவதும் பிறரைத் தூஷிப்பதும் கீழ்மக்களியல்பு என்றபடி. ஆம் எல்லாம் அசைகள்.

 

349. பழையர் இவரென்று பன்னாட்பின் நிற்பின்
     உழையினியர் ஆகுவர் சான்றோர்; - விழையாதே
     கள்ளுயிர்க்கும் நெய்தல் கனைகடல் தண்சேர்ப்ப!
     எள்ளுவர் கீழா யவர்.

     (இ-ள்.) கள் உயிர்க்கும் - தேனை ஒழுக்குகிற, நெய்தல் - நெய்தற் பூக்களையுடைய, கனை கடல் - ஒலிக்கிற கடலினது, தண் சேர்ப்ப - குளிர்ச்சியான கரையையுடைய அரசனே!, பின் நிற்பின் - (ஒருவர்) தமது பின்னே நின்றால், இவர் - இவர்கள், பல் நாள் பழையர் என்று - பல நாள் (சிநேகித்த) பழமையானவர்கள் என்று, சான்றோற் -, உழை - அவரிடத்திலே, இனியர் ஆகுவர் - இஷ்டமுள்ளவராவார்கள்; கீழாயவர் - கீழ்மக்கள், விழையாதே - (அவர்களை) விரும்பாமலே, எள்ளுவர் - நிந்திப்பார்கள், எ-று.

     சிலநாள் தம்மிடம் வந்தவர்களையும் பழைய சிநேகிதர் போல் கொள்வார்கள் பெரியோர்; எத்தனைநாள் பழகினாலும் சிநேகியாமல் நிந்திப்பார்கள் கீழோர் என்பதாம்.

     'பன்னாள் பின் நிற்பின்' என உரைப்பது இழிவு. அங்கே சிநேகித்த என்கிற சொல் வருவிக்கப்பட்டது.

 

350. கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும் தீற்றினும்
     வையம்பூண் கல்லா சிறுகுண்டை; - ஐயகேள்,
     எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
     செய்தொழிலாற் காணப்படும்.

     (இ-ள்.) ஐய கேள் - அரசனே கேட்கக் கடவாய், என்றும் - நாள்தோறும், கொய் புல் குறைத்து - அறுக்கத்தக்க புல்லை அறுத்து, கொடுத்து - (தின்பதற்கு) கொடுத்து, தீற்றினும் - (கழுவுதல் முதலியவைகளால்) சுத்தப்படுத்தினாலும், சிறு குண்டை - சிறிய எருதுகள், வையம் - பண்டியை, பூண்கல்லா - பூண்டு இழுக்கமாட்டா; எய்திய செல்வந்தர் ஆயினும் - செல்வத்தைப் பொருந்தினவர்க ளானாலும், கீழ்களை-, செய்தொழிலால் - (அவர்கள்) செய்யுங் காரியங்களால், காணப்படும் - (இவர்கள் கீழ்கள் என்று) அறிதல் கூடும் [அறியலாம் என்றபடி], எ-று.

     எவ்வளவு மேன்மைப் படுத்தினாலும் கன்றுகள் பண்டியிழுக்க மாட்டாமை போல் கீழ்மக்களும் தக்க காரியங்களுக்கு உதவார்கள் என்றபடி.

     கொய் புல்லாவது பக்குவமானபுல். குண்டை - பால்பகா அஃறிணைப் பெயராதலின் ஈண்டு பன்மை.