பேதைமை
பொதுவியல்
[அதாவது முழுமூடத்தனம்.]
331. கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியாது அந்நீர் படிந்தாடி அற்றே
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.
(இ-ள்.) கொலை வல் - கொலைத் தொழிலில் சாமர்த்தியமுள்ள, பெரு கூற்றம் - பெரிய எமன், கோள் பார்ப்ப - எடுத்து கொண்டு போகுங் காலத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, ஈண்டை வலை அகத்து - இவ்வுலக வாழ்க்கையாகிய வலையினிடத்து, செம்மாப்பார் மாண்பு, இறுமாந்திருப்பவருடைய பெருமை, கொலைஞர் - கொலை செய்பவர், உலை ஏற்றி - உலையிலே போட்டு, தீ மடுப்ப - நெருப்பை மூட்ட, ஆமை - ஆமையானது, நிலை அறியாது - (தனக்கு வந்திருக்கிற) கதியை அறியாமல், அந் நீர் படிந்து - அந்தத் தண்ணீரில் மூழ்கி, ஆடியற்று - விளையாடுவது போலாம், எ-று.
இவ் வுலகவாழ்க்கையைச் சதமென நம்பிச் சந்தோஷிப்பது ஆமையைச் சமைக்கத் தீ மூட்டிய விடத்து அது உலைநீரில் விளையாடுவது போலாம். ஏனெனில் உடனே கேடுவர இருப்பதால் என்கிறபடி.
கொலைஞர் - ஞகரம் பெயர்ப்பகுபத விடைநிலை. மடுப்ப - நிகழ்காலம். ஆடி என்பது ஆடினால் என்பதின் திரிபு; ஆடினால் அதுபோலாம் என்பது பொருள்; ஈறுகெட்ட தொழிற் பெய ரென்னவுமாம். அற்று - அன் - பகுதி, று - விகுதி. வல்பெருங்கூற்றம் - பண்புத் தொகை. கோட் பார்ப்ப - கோட்பு ஆர்ப்ப எனப்பிரித்து, கொள்ளுதற்கு இரைந்து கொண்டிருக்க எனவு முரைக்கலாம். செம்மாப்பார் - செம்மா - பகுதி.
332. பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.
(இ-ள்.) இல் செய் - குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய, குறைவினை நீக்கி - காரியக் குறைகளைப் போக்கி, அறவினை மற்று அறிவாம் - தரும காரியத்தைப் பின்னாலே யோசிப்போம், என்று இருப்பார் மாண்பு - என்று அலக்ஷியமாயிருக்கு மனிதருடைய பெருமையை, பெரு கடல் ஆடிய சென்றார் - பெரிய கடலிலே மூழ்கப் போனவர்கள், ஓசை - கடலோசையானது, ஒருங்கு - ஒருமிக்க - ஸ்நானஞ் செய்வோம், என்றற்று - என்றிருந்தாற் போலாம், எ-று.
சமுசார காரியங்களை நன்றாத் தீர்த்துத் தருமகாரியங்களைப் பார்ப்போமென் றிருப்பவர் கடலோசை அடங்கியபின் முழுகலாமென் றிருப்பார் போலே என்றபடி. கடலில் தொனி ஓயாதது போல் சமுசார காரியமும் ஓயாதென்றதாம்.
ஆடிய - செய்யிய என்னும் வாய்ப்பாட்டெச்சம். ஒருங்கு, உடன் - இரண்டுக்கும் பொருளில் அதிக பேதமில்லை, ஆதலால் ஒரு பொருட் பன்மொழி என்னலாம். ஆடுதும் - தும் - விகுதி, எதிர்காலத் தன்மைப் பன்மையில் வந்தது. ஆல் - அசை. குறைவினை - இன் - சாரியை. மற்று - வினைமாற்றில் வந்தது "வினைமாற்றசைநிலை பிறிதெனுமற்றே" என்பது சூத்திரம். மாண்பு என்பது அவர் நினைப்பின்படி கூறிப் பரிகாசஞ் செய்தபடி.
333. குலந் தவங் கல்வி குடிமைமூப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற
மையாறு தொல்சீர் உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்.
(இ-ள்.) குலம் - நற்குலமும், தவம் - நல்ல விரதமும், கல்வி - படிப்பும், குடிமை - குடித்தன இயல்பும், மூப்பு - (ஒழுக்கத்தில்) முதிர்ந்திருப்பதும், ஐந்தும் - (ஆகிய இவ்) வைந்தும், விலங்காமல் எய்தியக் கண்ணும் - (ஒருவனுக்கு) தப்பாமல் பொருந்தின போதும், நலம் சான்ற - நன்மை மிகுந்த, மை அறு தொல் சீர் - குற்றமற்ற பழமையான சிறப்பையுடைய, உலகம் அறியாமை - உலகத்துக்கு ஏற்றதை அறியாமலிருப்பது, நெய் இலா பால் சோற்றின் - நெய் இல்லாத பால்சோற்றுக்கு, நேர் - சமானமாகும், எ-று.
குலமுதலியவை ஒருவனுக்கு அமைந்தும் உலகத்துக்கு ஏற்ற நற்காரியம் அறியாமல் அவன் நடப்பது நெய்யில்லாத பால் சோறு போல் இனிப்பாயிராது என்பதாம். நெய் இலாமையைப் பாலிற்குக் கூட்டுக; சாரமற்ற பால் என்பதாம்.
இது இவ்வதிகாரத்துக்குப் பொருந்தாதே ஆயினும் ஒரு சங்கதியின் தொடர்ச்சிமேல் தொடர்ச்சியாய் வந்ததெனக் கொள்க. குல முதலியவை பெயர்ச்செவ்வெண், தொகை பெற்றது [இடை. சூ. 9]. எய்தியக்கண் - வினையெச்சம். உம்மை - உயர்வு சிறப்பு. சோற்றின் - நான்காம் வேற்றுமைத் தொகை, சோற்றினொடு என மூன்றாம் வேற்றுமைத் தொகையுமாம். நேர் - பகுதியே நேரும் என்னும் வினைமுற்றுப் பொருட்டாய் வந்தது.
334. கல்நனி நல்ல கடையாய மாக்களின்;
சொல்நனி தாமுணரா வாயினும் - இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்று
உற்றவர்க்குத் தாம்உதவ லான்.
(இ-ள்.) சொல் - (பிறர்) சொல்லுஞ் சொல்லை, நனி - நெருக்கமாக, தாம் -, உணரா ஆயினும் - அறிந்து கொள்ளாதவை யானாலும், உற்றவர்க்கு - தம்மை அடைந்தவர்களுக்கு, இன் இனியே - அப்போதே, நிற்றல் - நிற்பதும், இருத்தல் - உட்கார்வதும், கிடத்தல் - படுப்பதும், இயங்குதல் - நடப்பதும், என்று - என்று சொல்லுகிற (இவர்களுக்கு) உதவுலால் - உதவியாவதனாலே, கல் - கல்லுகள், கடை ஆய மாக்களின் - ஈனமான மனிதரைக் காட்டிலும், நனி நல்ல - மிகவும் நல்லவைகள், எ-று.
ஒருவன் கற்களினிடம் சென்று நிற்க உட்காரப் படுக்க அதன் மேல் நடக்க இப்படி எதைச் செய்ய விரும்பினாலும் அததுக்கு அக்கற்கள் உபயோகப் படுவதினால் பிறர்க்கு உதவாத மனிதரைக்காட்டிலும் மேலானவை என்பதாம்.
நனி என்னு முரிச்சொல் நெருக்கத்துக்கு வந்தது. நெருங்கிக் கேட்க மாட்டாதவை எனக்கொள்க. இது உலக இயல்பைக் குறித்தது. ஆய - யகரம் இறந்தகால இடைநிலை என்பர்; ஆகிய என்பதின் விகாரமென்னவுமாம். இனி என்பது அடுக்கி இன்னினி என்று விகாரப்பட்டது. நிற்றல் முதலிய பெயர்ச்செவ்வெண் விகாரத்தால் தொகை பெறா வாயின.
335. பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் - கறுவினால்
கோத்தின்னா கூறி உரைக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல தினத்து.
(இ-ள்.) பெறுவது ஒன்று இன்றியும் - தாம் பெறத்தக்க பயன் ஒன்று இல்லாதே யிருந்தும், பெற்றானே போல - ஒரு பயனை அடைந்தவன் போல், ஏலாதார் மாட்டும் - (தன் கோபத்தை) ஏற்கத் தகாதவரிடத்திலும், கறுவு கொண்டு - பகைகொண்டு, கறுவினால் - கோபத்தினால், இன்னா கோத்து - பிரியமல்லாத சொற்களைக் கூட்டி, கூறி உரையாக்கால் - சொல்லாமற் போனால், பேதைக்கு - புத்தியீனனுக்கு, நல்ல சுனைத்து - நல்லதான தினவானது, நா தின்னும் - நாக்கைத் தின்றுவிடும், எ-று.
பயனில்லாமலே எப்படிப்பட்டவர் மேலும் தூஷணைகளைக் கற்பித்துச் சொல்லாவிடின் மூடனுக்குத் திருப்தியில்லை என்பதாம்.
இன்னா - இனி என்னும் பண்படி வினைப்பகுதியிற் பிறந்த எதிர்மறை வினையாலணையும் பெயர். கூறி யுரைத்தல் - ஒரு பொருட் பன்மொழி. சுனைத்தல் - சொறிதல் காரணமாகிய தினவுக்கு ஆகு பெயர்.
336. தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை
எங்கண் வணக்குதும் என்பர் - புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று.
(இ-ள்.) தங்கண் மரபு இல்லார் பின் சென்று - தம்மிடத்து (ஒரு நன்மை செய்யும்) முறை யில்லாதவரிடம் போய், அவரை -, நாம் -, எங்கண் வணக்குதும் - எங்களிடத்து வணங்கிநிற்கச் செய்வோம், என்பவர் புல் கேண்மை - என்று சொல்லுகிறவர்களுடைய அற்பமான உறவு, நல் தளிர் புன்னை - நல்ல தளிர்களோடு கூடிய புன்னை மரங்கள், மலரும் கடல் சேர்ப்ப - மலரும்படியான கடற்கரை யரசனே!, கல் கிள்ளி - கல்லைக் கிள்ளி, கை இழந்தற்று - கையைப் போக்கிக் கொண்டது போலாம், எ-று.
தமக்கு யாதொரு நன்மையுஞ் செய்யும்படியான முறையில்லாதவரைச் சுவாதீனஞ் செய்ய முயல்வது கல்லைக்கிள்ளிக் கைபோவதற்கொப்பமாம் என்றால், பயன்படாமற் போவதுமன்றித் தனக்கொரு நஷ்டமுமாம் என்றபடி, இதெல்லாம் பேதைமை.
வணக்குதும் - தன்மைப்பன்மை எதிர்கால வினைமுற்று. கேண்மைக்குப் புன்மையாவது இவர் நினைப்பினால் மாத்திரமுண்டாயிருத்தல்.
337. ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; - யாதும்
கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.
(இ-ள்.) ஆகாது எனினும் - கிட்டாதானாலும், அகத்து - உள்ளே, நெய் உண்டாகில் - நெய் இருக்குமானால், எறும்பு -, போகாது - (அந்தப் பாத்திரத்தை) விட்டு நீங்காமல், புறம் சுற்றும் - வெளிப்பக்கத்திலே சுற்றிக் கொண்டிருக்கும்; யாதும் கொடார் எனினும் - எதையும் கொடாதவரானாலும், உடையாரை - பொருளுள்ளவர்களை, பற்றி - சேர்ந்து, உலகத்தவர் - உலகத்திலுள்ள ஜனங்கள், விடார் - விடமாட்டார்கள், எ-று.
உள்ளே புகுந்து நெய்குடிக்கக் கூடாமலிருந்தாலும் அந்தக் கலசத்தை எறும்பு சுற்றிக் கொண்டிருப்பதுபோல் ஒரு காகம் கொடாராயினும் தனவான்களிடத்தில் பேதைகள் சுற்றிக் கொண்டிருப்பார்கள் என்பதாம்.
உலகத்தவர் - உலகம் - பகுதி, அர் - பலர்பால்விகுதி, அத்தும் அகரமும் - சாரியைகள்.
338. நல்லவை நாடொறும் எய்தார் அறஞ்செய்யார்
இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார் - எல்லாம்
இனியார்தோள் சேரார் இடைபட வாழார்
முனியார்கொல் தாம்வாழும் நாள்.
(இ-ள்.) நாள் தொறும் - ஒவ்வொரு நாளும், நல்லவை - (பெறத்தக்க) நன்மைகளை, எய்தார் - அடையார்கள்; அறம் செய்யார் - கருமத்தைச் செய்யமாட்டார்கள்; இல்லாதார்க்கு - தரித்திரர்க்கு, யாது ஒன்றும் ஈகலார் - எதையாகிலும் கொடுக்க மாட்டார்கள்; இனியார்தோள் - இனிமையான தம் பெண்டிர்களது புஜங்களை, சேரார் அடையார்கள்; இசைபட - கீர்த்தி யுண்டாகும்படி, வாழார் - வாழ மாட்டார்கள்; (ஆதலின் மூடர்) தாம் வாழும் நாள் எல்லாம் - தாங்கள் பிழைத்திருக்குங் காலங்களையெல்லாம், முனியார்கொல் - வெறுக்கமாட்டார்களா, எ-று.
நாள்தோறும் எய்தத்தக்க நன்மைகளாவன - பின்னே தங்களுக்கு க்ஷேமலாபங்களை யுண்டாக்கத்தக்க கல்வி கேள்விகளும் பொருளுமாம். ஆகவே, அறம் பொருளின்பங்களைத் தாங்கள் அடையாமலும் பிறர்க்கு உபகாரஞ் செய்து கீர்த்தி பெறாமலும் வீணாய்க் கழிக்கிற தங்கள் வாழ்நாள் மேல் தங்களுக்கே வெறுப்பில்லாம லிருப்பது அதிசயந்தான் என்கிறபடி.
இல்லாதார்க் கியாதொன்றும் - "யவ்வரினிய்யாம்" என்பதனால் குற்றியலுகரம் இகரமாகி "யகரம்வரக் குறளுத்திரியிகரமும்" என்பதனால் குற்றியலிகரமாயிற்று. அவ்விகரம் "சீருந்தளையுஞ் சிதையின் சிறிய அ இ உவ்வளவோ டாரு மறிவ ரலகு பெறாமை" என்கிற காரிகைச் சூத்திரத்தினால் அலகு பெறாது வாளா நின்றது.
339. விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்கும் கேண்மை - தழங்குகுரல்
பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு.
(இ-ள்.) ஆய் நலம் இல்லாதார்மாட்டு - ஆராயப்பட்ட சற்குணமில்லாத மூடரிடத்தில், ஒருவர் - (எவராகிலும்) ஒருவர், விழைந்து - விரும்பி, தம்மை வியப்ப - தம்மைக் கொண்டாட, ஒருவர் - (கொண்டாடப்பட்ட) மற்றொருவர், விழைந்திலேம் - நாங்கள் விரும்பினோமில்லை, என்று இருக்கும் கேண்மை - என்று ஏற்பட்டிருக்கிற சிநேகமானது, தழங்கு குரல் - கோஷிக்கிற தொனியையுடைய, பாய் திரை சூழ் வையம் - பாய்ந்து வருகிற அலைகளுள்ள - கடல்சூழ்ந்த பூமியை, பயப்பினும் - தருவதாயிருந்தாலும், இன்னாது - பிரியமாயிராது, எ-று.
தம்மை விரும்பிச் சிநேகித்தவரைச் சிநேகியாத மூடருடைய கூட்டுறவு எவ்வளவு பிரயோசனந் தருவதானாலும் யோக்கியருக்கு இஷ்டமாயிராது என்பது கருத்து.
வியப்ப - நிகழ்காலத்தில் வந்தது. விழைந்திலேம் - உடன் பாட்டெதிர்மறை வினைமுற்று; விழை -, பகுதி, த் - இடைநிலை, சந்தியால் வந்த தகரம் நகரமானது விகாரம், இல் - எதிர்மறைப்பண்படி, இடைநிலை அல்லது விகுதி, ஏம் - தன்மைப்பன்மை விகுதி. பாய் திரை - அன்மொழித் தொகை. திரை - கடல், எனக்கொள்ளின் வினைத்தொகையாம்.
340. கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும்.
(இ-ள்.) கற்றனவும் - தாம் கற்ற கல்விகளும், கண் அகன்ற - அதிகமான, சாயலும் - மேன்மையும், இல் பிறப்பும் - நற்குடிப் பிறப்பும், பக்கத்தார் - அயலார், பாராட்ட - கொண்டாட, பாடு எய்தும் - பெருமையை அடையும்; தான் உரைப்பின் - (அவைகளை உடையவன்) தானே சொன்னால், மைத்துனர் - மைத்துனர்கள், பல்கி - அதிகப்பட்டு, மருந்தில் - மருந்தினாலும், தணியாத - தீராத, பித்தன் என்று - பைத்தியக் காரனென்று, எள்ளப்படும் - இகழப்படுவான், எ-று.
ஒருவனுடைய கல்வி பெருமை முதலியவற்றைப் பிறர் கூறின் நன்றாயிருக்கும்; தானே கூறினால் பரிகாசஞ் செய்யப் படுவான் என்பது கருத்து.
பரிகாசஞ் செய்ய உரியவராதலின் மைத்துனர் என்றது. பாரில் ஆடல் செய்தல் - பாராட்டல், எள்ள - இதைத் தொழிற்பெயராக் கொள்ள வேண்டும். தணியாத என்பது பித்தன் என்பதின் பகுதியான பித்து என்பதோடு முடிந்தது.
