புல்லறிவாண்மை
பொதுவியல்
[அதாவது புல் - அற்பமான, அறிவாண்மை - அறிவை ஆளுந்தன்மை. அதாவது, சாரத்தையும், அசாரத்தையும் அறிந்து கொள்ளாமையோடு கர்வப்படுவதுமாம்.]
321. அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர்; - பொருளல்லா
ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
மூழை சுவையுணரா தாங்கு.
(இ-ள்.) அருளின் - கிருபையினால், அறம் உரைக்கும் - தருமங்களைச் சொல்லுகிற, அன்பு உடையார் - (யாவரிடத்தும் இயற்கையில்) அன்புள்ளவர்களுடைய, வாய் சொல் - வாக்கிலிருந்து - (தமக்கு) ஒரு பிரயோசனமாக ஏற்றுக் கொள்வார்கள்; பொருள் அல்லா - ஒரு வஸ்துவே யாகாத, ஏழை - மூடன், அதனை - அப்பெரியோர் சொல்லை, மூழை - துடுப்பு, பால் கூழை - பாற்சோற்றினது, சுவை உணராது ஆங்கு - உருசி யறியாதது போல (அறியாமல்), இகழ்ந்து உரைக்கும் - தூஷித்துப் பேசுவான், எ-று.
பெரியோர் நற்புத்தி போதித்தால் யோக்கியர் அதைத் தமக்கொரு பேறாகக் கொள்வர், மூடரோ அதைத் தூஷிப்பார் என்றதாம்.
கூழை - வேற்றுமை மயக்கம். உணராது - உணராத, மூழை ஆங்கு எனவு முரைக்கலாம். உணராது - வினையாலணையும் பெயர்; மூழை கருத்தாவான போது தொழிற்பெயர்.
322. அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்;
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்வி கொளல்தேற்றா தாங்கு.
(இ-ள்.) தோல் கவ்வி தின்னும் - தோலைக் கவ்வித் தின்னு கொண்டிருக்கிற, குணுங்கர் நாய் - புலையருடைய நாயானது, பால் சோற்றின் -, செவ்வி கொளல் - ருசியைக் கொள்ளுதலிலே, தேற்றாது ஆங்கு - தெளிவில்லாதது போலே, அவ்வியம் இல்லார் - பொறாமை முதலிய மனக்கோட்ட மில்லாதவர், அறத்து ஆறு உரைக்கும் கால் - தருமமார்க்கங்களைச் சொல்லும் போது, செவ்வியர் அல்லார் - நற்குண மில்லாதவர்கள், செவி கொடுத்தும்-, கேட்கலார் - கேளார்கள், எ-று.
இதிலும் முந்தியபாட்டின் கருத்தே அமைந்தது. கவிகள் வெவ்வேறாகையால் ஒரு விஷயத்தையே பலவிதத்திற் கூறுதல் கவித்திற மெனினுமாம். செல்வருடைய நாயாகில் நல்லுணவு நின்றிருக்கும். குணுங்கர் நாயாதலின் அஃதில்லை; தோலைத் தின்கின்றது என்றபடி செவிகொடுத்தும் - செவிகொடுப்பது போல் பாவனையே யல்லது அஃதில்லை என்பது கருத்து.
உம்மை - இழிவு சிறப்பு. கேட்கலார் - கேள் - பகுதி, கு - சாரியை, அல் - எதிர்மறை விகுதி, ஆர் - பலர்பால் விகுதி.
323. இமைக்கும் அளவில்தம் இன்னுயிர்போம் மார்க்கம்
எனைத்தானும் தாங்கண் டிருந்தும் - தினைத்துணையும்
நன்றி புரிகல்லா நாணில் மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்கால் என்?
(இ-ள்.) இமைக்கும் அளவில் -, தம் இனி உயிர் - தமது இனிய பிராணம், போம் மார்க்கம் - போகும் வழியை, எனைத்தானும் - எல்லாப் பிரமாணங்களாலும், தாம் கண்டு இருந்தும் - தாங்கள் பார்த்திருந்தும், தினை துணையும் - தினையளவாயினும், நன்றி - (தருமங்களைக் கேட்பதும் அங்ஙனம் நடப்பதுமாகிய) நற்காரியங்களை, புரிகல்லாத - செய்யாத, நாண் இல் மட மாக்கள் - வெட்கமில்லாத மூட ஜனங்கள், பொன்றில் என் - இறந்தாலென்ன, பொன்றாக்கால் என் - இறவாம லிருந்தாலென்ன, எ-று.
பிரத்தியக்ஷம் முதலானவைகளால் உயிர்போவது தெரிந்திருக்கவும் தருமங் கேட்டு ஆசரியாதவர் இறந்தும் நஷ்டமில்லை இறவாதிருந்தும் லாபமில்லை என்றதாம்.
எனைத்தானும் - முற்றும்மை ஆகலின் எல்லாவற்றாலும் என்று உரைக்கப்பட்டது. எனைத்தானும் போம் மார்க்கம் - எவ்வகையிலாயினும் போம் வழியை எனவு முரைக்கலாம். நன்றி-பண்படியாப் பிறந்த பெயர். நாணில் - தர்மாசரணை செய்கிற பலரைக் கண்டும் நாணாத.
324. உளநாள் சிலவால் உயிர்க்கு ஏமம் இன்றால்,
பலர்மன்னும் தூற்றும் பழியால், - பலருள்ளும்
கண்டாரோடு எல்லாம் நகாஅது எவனொருவன்
தண்டித் தணிப்பகை கோள்.
(இ-ள்.) உள நாள் சில - வாழ்தற்கிருக்கிற நாள்கள் அற்பம், உயிர்க்கு - பிராணனுக்கு, ஏமம் இன்று - (உடம்பை விட்டுப் போக வொட்டாத) காவலில்லை; பலர் - அநேகர், தூற்றும் - வியாபிக்கச் செய்கிற, பழி - நிந்தைகள், மன்னும் - அதிகமாயிருக்கின்றன. பலருள்ளும் - உலகத்திலுள்ள பலபேருக்குள்ளும், கண்டாரோடு எல்லாம் - காணப்படுகிற யாவரோடும், நகாது - (இன்பமாய்ப் பேசிச்) சிரியாமல், ஒருவன் -, தண்டி - கெட்டு, தனி - தனியாயிருந்து, பகைகோள் - பகைகொள்ளுதல், எவன் - என்னபயன்?, எ-று.
வாழ்நாளோ சிறிது, உயிரைப் போகவொட்டாமல் தடுக்கவோ வழியில்லை; உலகத்தார் தூஷணையோ அநேகம்; இப்படியிருக்க, நமக்குக்கிட்டின நல்லோரோடு சிநேகமா யிருப்பதை விட்டு மூடன் பகை கொள்வதிற் பயனென்ன, கேடுதான் பயன் என்பதாம்.
ஆல் - மூன்றும் அசை. ஏமம் இன்று என்பதற்கு சந்தோஷம் இல்லை எனவும் பொருள் கூறலாம். கோள் - முதல் நீண்ட முதனிலைத் தொழிற்பெயர். ஒருவன் அங்கே போய் அடிபட்டதை, அங்கே அடிபடப்போனான் என்பது போல் பகை கொள்வதினால் வருங் கேட்டை, கெட்டுப் பகைகொளல் என்றார்; நிச்சயத்தினால் கெட்டு என இறந்தகாலம் கூறப்பட்டது [பொது. சூ.33].
325. எய்தியிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை; - வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான் வாழும் எனின்.
(இ-ள்.) எய்தி இருந்த அவை முன்னர் - பலர் கூடியிருந்த சபைக்கு முன்னே, ஒருவன் -, சென்று - போய், ஒருவனை - (அங்கிருக்கும்) ஒருவனை, எள்ளி - இகழ்ந்து, வைதான் - திட்டினவனாயிருக்க, வைய வயப்பட்டான் - திட்ட உட்பட்டவன், வாளா இருப்பானேல் - (பொறுத்து) சும்மா இருப்பானானால், வைதான் - திட்டினவன், வாழுமெனின் - வாழ்ந்து கொண்டிருந்தால், வியத்தக்கான் - ஆச்சரியப்படத் தக்கவன் (ஆவன்), எ-று.
புத்தியீனனாகிய ஒருவன் ஒரு சபையிற் சென்று காரணமின்றி யொருவனைத் திட்ட, அப்படி திட்டப்பட்டவன் அதைப் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்க, அந்தத் திட்டினவன் வாழமாட்டானென்பது கருத்து.
முன்னர் - ஏழனுருபுமாம். முதல் வைதான் என்பதோடு ஆக என்றொரு சொற்கூட்டி வினையெச்சமா முடித்துக் கொள்க. வயப்பட்டான் - வசப்பட்டான். விய என்னு முதனிலை வியக்க என்னும் வினையெச்சமா நின்றது.
326. மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
ஊக்கி அதன்கண் முயலாதான் - தூக்கிப்
புறத்திரு போகென்னும் இன்னாச் சொல் இல்லுள்
தொழுத்தையால் கூறப் படும்.
(இ-ள்.) மேல் - (தன்) மேல், மூப்பு வாராமை முன்னே - கிழத்தனம் வாராமைக்கு முன்னேயே, அற வினையை - தரும காரியத்தை, ஊக்கி - மேற்கொண்டு, அதன்கண் முயலாதான் - அந்த விஷயத்தில் முயற்சி செய்யாதவன், இல்லுள் - (தன்) வீட்டில், நூக்கி - தள்ளி, புறத்து இரு - வெளியிலே இரு, போக என்னும் - (இவ்விடம் விட்டு) போகக் கடவாய் என்கிற, இன்னா சொல் - இனிமையில்லாத சொல்லை, தொழுத்தையால் - வேலைக்காரியாலும், கூறப்படும் - சொல்லப்படுவான், எ-று.
மூப்புவராமுன்னமே தரும காரியங்களில் முயன்று நடவாதவனை வெள்ளாட்டியும் இகழ்ந்து பேசுவாள் என்பதால், நற்காரியஞ் செய்யாத புத்தியீனனிடத்து அற்பருக்கும் அலக்ஷியமுண் டென்றபடி. மூப்பு வந்தபின் எதுவும் செய்ய இயலாமை பற்றி வாராமை முன்னே என்றார்.
வாராமை - எதிர்மறைத் தொழிற்பெயர் அறமாகிய வினை அறவினை. ஊக்கி - ஊக்கு - பகுதி. மூப்பு - மூத்தல் - மூ - பகுதி. தொழுத்தை - தொழு - பகுதி, ஐ - கர்த்தாப் பொருள் விகுதி, தகரம் எழுத்துப் பேறு, மற்றொரு தகரம் விரித்தல் விகாரம், வணங்கியிருப்பவள் என்பது பொருள். கர்த்தாப்பெயர் மூன்றாம் வேற்றுமையில் வந்தவிடத்து இரண்டு செயப்படு பொருள் வருமாயின் ஒன்று இரண்டாம் வேற்றுமையிலும் மற்றொன்று முதல் வேற்றுமையிலும் வரும்.
327. தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
ஏமஞ்சார் நன்னெறியும் சேர்கலார் - தாமயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார்.
(இ-ள்.) புல் அறிவினார் -, தாமேயும் இன்பு உறார் - தாமாகிலும் இன்ப மடையார்; தக்கார்க்கும் - யோக்கியருக்கும், நன்று ஆற்றார் - நன்மை செய்யமாட்டார்; ஏமம் சார் - (உயிருக்கு) காவலாயிருக்கும்படியான, நல் நெறியும் - நல்ல தருமவழியையும், சேர்கலார் - சேரமாட்டார்; தாம் மயங்கி - தாங்கள் மயக்கங் கொண்டு, ஆக்கத்துள் தூங்கி - செல்வத்திலேயே ஒன்றும் தோன்றாமலிருந்து, வாழ்நாளை - (தமது) ஆயுசை, அவத்தமே போக்குவார் - வீணாகவே கழிப்பார்கள், எ-று.
புத்தியீனர் செல்வத்தையே சதமாகக் கொண்டு யாதொரு நற்காரியமுஞ் செய்யாமல் தமது வாணாளை வீணாளாக்குவர் என்பதாம்.
தாமே - ஏகாரம் பிரிநிலை, விகற்பமுமாம். இன்பு - இன்பம் என்பதின் ஈறு தொகுத்தல், சேர்கலார் - சேர் கு அல் ஆர் - பகுதி சாரியை எதிர்மறை விகுதி, பலர்பால் விகுதிகள் வாழ்நாள் - வினைத்தொகை.
328. சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம்.
(இ-ள்.) சிறு காலையே - இளமையிலேயே, தமக்கு செல்வுழி - தாம் (மரணமடைந்த பின்) போமிடத்துக்கு, வல்சி - (தருமமாகிய) சோற்றை, இறுக இறுக - மிகவும் அழுத்தமாக, தோள் கோப்பு - தோள் மூட்டையாக, கொள்ளார் - எடுத்துக் கொள்ளாதவர்கள், இறுகி இறுகி - (பணத்தைச்) சிக்கெனவாக் கொண்டு, பின் அறிவாம் - (தருமத்தைப்) பின்னே யோசிப்போம், என்று இருக்கும் -, பேதையார் - புத்தியீனர், கை காட்டும் - (மரண காலத்தில்) கையால் உருவம் காட்டுகிற, பொன்னும் - பொன் உருண்டையும், புளி விளங்காய் - புளிப்பாகிய விளாங்காய் (ஆகும்), எ-று.
நல்ல பருவத்தில் தருமஞ் செய்யாது விட்டுப் பின்பு பார்த்துக் கொள்வோமென்று பணத்தைச் சேர்த்து வைக்கும் பேதையர் மரணகாலத்தில் வாய் அடைத்துப் போன போது தாம் வைத்திருந்த பொன்னுருண்டையைத் தம்மவர் எடுத்துக் கொள்ளும்படி கையினால் திரட்சியைக் காட்ட, அங்கிருந்த வஞ்சகர் புளிப்பான விளாங்காய் வேண்டுமென்கிறார் என்று பாவித்து அப்பொன்னைத் தாம் அபகரித்துக் கொண்டு போனாற் போல் சேர்த்து வைத்த பொருள் தம்மவருக்கும் உதவாமற்போம் என்பது கருத்து. இக்காலத்தில் அப்படி நடந்ததுமுண்டு.
தமக்கு - நான்கனுருபு கர்த்தாப் பொருளில் வந்தது. தோள்கோப்பு - தோளில் கோக்கத்தக்க மூட்டை. தொழிற் பெயர் செயப்படுபொருளுக்கு ஆயிற்று. இறுகி இறுகி என்பது இறுகிறுகி என ஈறுதொகுத்தலாயிற்று. மிகுதிப் பொருளைக் காட்ட வந்த அடுக்கு 'பொரிவிளங்காய்' என்று பாடங் கூறுவது முண்டு.
329. வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனைத்தாரே யாகி; - மறுமையை
ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார்.
(இ-ள்.) வெறுமை இடத்தும் - பணமில்லாத போதும், விழு பிணி போழ்தும் - விசேஷமான வியாதி வந்த காலத்திலும், சிறு அறிவினார் - அற்பபுத்தி யுடையார், மறுமை மனத்தாரே ஆகி - மறுமைக்குரியதைச் செய்யும் மனதுள்ளவரே யாகி, ஆற்றிய காலத்து - செய்யக் கூடிய காலத்தில், மறுமையை - மறுமைக்கு உரிய தருமத்தை, ஐந்தை அனைத்தானும் - சிறு கடுகின் அளவாகிலும், சிந்தியார் - நினைக்க மாட்டார், எ-று.
புத்தியீனர் தாம் தரித்திரப்படும் போதும் வியாதியனுபவிக்கும் போதுமே தருமசிந்தை யுடையரல்லது பொருள் கைகூடி செய்யத்தகுந்த காலத்தில் அச்சிந்தை யில்லாதவர் என்பதாம்.
விழுப்பிணி - பண்புத்தொகை. பிணிப்போழ்து - ஆறாம் வேற்றுமைத் தொகையாம். மறுமை மனத்தர் - மறுமையினிடத்து மனதை யுடையவர். ஏலும் என்பது போல் ஆனும் என்பதும் வினையெச்சக்குறி; ஆயினும் என்பதின் இடைக் குறையுமாம். மூன்றனுருபெனக் கொண்டு சிந்தனைக் கருவிக்குக் கூட்டினு மமையும்.
330. என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை - அன்னோ
அளவிறந்த காதல்தம் ஆருயிர் அன்னார்க்
கொளஇழைக்கும் கூற்றமும் கண்டு.
(இ-ள்.) அளவு இறந்த காதல் - அதிக ஆசைக்குப் பாத்திரமான, தம் ஆர் உயிர் அன்னார் - தம்முடைய அருமையான உயிர் போன்றவரை, கொள இழைக்கும் - கொண்டு போக முயற்சி செய்கிற, கூற்றம் கண்டும் - எமனைப் பார்த்தும், அன்னோ - ஐயோ, (புல்லறிவாளர்) இவ்வுடம்பு பெற்றும் - இந்த மனிதவுடலைப் பெற்றும், அறம் நினையார் - தருமசிந்தை யில்லாதவராகி, தம் வாழ்நாளை - தமது ஆயுளை, கொன்னே கழிப்பர் - வீணாகக் கழிக்கிறார்கள், என்னே - இது என்ன?, எ-று.
தருமங்களைச் செய்வதற்கு ஏற்ற மனுஷ்ய தேகத்தை அடைந்தும் தருமஞ் செய்யாமை என்ன காரணமோ தெரியாது. தம் உறவினருக்கு வைத்த பொருளைச் செலவழிக்கக் கூடாதன்றோ எனின் அப்படிப்பட்டவர்களை எமன் தம் கண்ணுக்கு எதிரேயே கொண்டு போக முயல்கின்றானே என்பது கருத்து. நாம் யாருக்காகப் பொருளைச் சேர்த்து வைக்கிறோமோ அவர்களும் அதை அனுபவிப்பது சதமன்று என்கிறபடி.
என்னே - ஏ - இரக்கத்தில் வந்தது. மற்று - அசை. ஆருயிர் - அரு என்னும் பண்படி முதல் நீண்டது.
இவ்வதிகாரத்துக்குப் பாடல்களை ஒருவாறு பொருத்தினாலும் இவ்வதிகாரமே பொருட்பாலுக்கு இயைந்ததன்று அறத்துப்பாலி லிருக்கத்தக்கது பின்னதுமப்படியே.
