அவையறிதல்
பொதுவியல்
[அதாவது தன்னுடையதும் பிறருடையதுமான கல்வி வல்லமைகளை அறிந்து பேசவேண்டு மென்பதைச் சொல்லுகின்றது.]
311. மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டாங்கோர்
அஞ்ஞானம் தந்திட்டு அதுவாங்கு அறத்துழாய்க்
கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரறி வாளர்முன்
சொன்ஞானம் சோர விடல்.
(இ-ள்.) மெய் ஞானம் கோட்டி - மெய்யான நூலறிவினையுடைய சபையின்கண், உறழ் வழி விட்டு - சேருகிற முறைமையை நீக்கி, ஆங்கு - அவ்விடத்தே, ஓர் அஞ்ஞானம் தந்திட்டு - அறியாமைக்கு உரிய ஒரு பேச்சைச் சொல்லி, அது - அந்தப் பேச்சையே ஆங்கு - அவ்விடத்தில், அற துழாய் - மிகவும் பரப்பி, கை ஞானம் கொண்டு ஒழுகும் - கசந்த [அருவருத்த] ஞானத்தைக் கைக்கொண்டு நடக்கிற, கார் அறிவாளர்முன் - அயோக்கியமான அறிவுள்ளவரிடத்தில், சொல் ஞானம் - சொல்லத்தக்க ஞானத்தை, சோர விடல் - தளரவிட வேண்டும், எ-று.
விவேகிகள் சபையிற் சென்று தெரிந்து கொள்வதை விட்டு அங்கே மூடப்பேச்சைப் பேசி அதையே ஸ்தாபிக்கிற மூடர்களுக்கு நல்ல விவேகமொழிகளை உறுதிப்படுத்திச் சொல்லாமல் விடவேண்டுமென்பதாம்.
இது தன் மூடப்பேச்சையே ஸ்தாபிக்கிற தீப்புலவனைக் குறித்துச் சொல்லியது. துழாய் - வினையெச்சம், துழாவு - பகுதி, உகரம் கெட்டு யகர விகுதி புணர்ந்தது. கைஞ்ஞானம் - வினைத்தொகைத் தொடரானாலும் ஞகரம் விரித்தல் விகாரமாய் வந்தது. முன் - ஏழனுருபு, கோடற் பொருளில் வந்தது. இரண்டாம் ஆங்கு அசையுமாம்.
312. நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்கும்
தீப்புலவன் சேரார் செறிவுடையார்; - தீப்புலவன்
கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்
தோட்புடைக் கொள்ளா எழும்.
(இ-ள்.) நா பாடம் சொல்லி - வாய்க்கு வந்த பாடத்தைச் சொல்லி, நயம் உணர்வார் போல் - சாரம் அறிந்தவர்களைப் போலே, செறிக்கும் - (பிறரைச்) சேர்க்கிற, தீ புலவன் - அயோக்கியமான புலவனை, செறிவு உடையார் - அடக்கமுடைய நற்புலவர், சேரார் - சேரமாட்டார்கள்; தீ புலவன் -, கோட்டியுள் குன்ற - சபையில் இளைத்துப் போக, குடி - (நற்புலவன்) வமிசத்தை, பழிக்கும் - தூஷிப்பான், அல்லாக்கால் - அல்லாவிட்டால், தோள் - புஜங்களை, புடைக்கொள்ளா - தட்டிக் கொண்டு, எழும் - (சண்டைக்கு) எழுந்திருப்பான், எ-று.
தன் வாய்க்கு வந்த எதையோ சொல்லி உட்கருத்தறிந்தவன் போலே பாவித்துச் சனங்களைக் கூட்டுகிற டம்பக்காரனான புலவனிடத்து அடக்கமுடையோர் பேசலாகாது, ஏனெனில் அவன் தன் பேச்சுக்குத் தாழ்மை வந்தால் நியாயஞ் சொன்னவனை வமிசத்தோடு பழிப்பான் அல்லது சண்டைக்கு எழுவான் என்றபடி.
செறிக்கும் - பிறவினைப் பெயரெச்சம். தீப்புலவற் சேரார் - "இயல்பின் விகாரமும்" என்கிற விதியால் உயர்திணைப் பெயரின் ஈறுதிரிந்தது. குன்ற - நிகழ்காலம் புடை - முதனிலைத் தொழிற்பெயர். கொள்ளா - செய்யா என்னும் வாய்ப்பாட்டெச்சம்.
313. சொல்தாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
கற்றாற்றல் வன்மையும் தாம்தேறார்; - கற்ற
செலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார்
பலவுரைக்கும் மாந்தர் பலர்.
(இ-ள்.) சொற்று - பேசுவதில், ஆற்று - சக்தியை, கொண்டு - ஆதாரமாகக் கொண்டு, சுனைத்து - தினவினால், எழுதல் காமுறுவர் - (வந்து செய்ய) எழுந்திருப்பதை விரும்புகிறவர்களுமாய், கற்று ஆற்றல் - (பிறர்) கற்றிருக்கும் சாமர்த்தியத்தையும், வன்மையும் - (பிரசங்கித்தல் முதலியவற்றுள்) வல்லமையையும், தாம் தேறார் - தாம் அறிந்து தெளியாதவருமாய், கற்ற - (தாம்) கற்றவற்றை, செல - (பிறர் மனதில்) புகும்படி, உரைக்கும் ஆறு - சொல்லும் விதத்தை, அறியார் - அறியாதவர்களுமாய், தோற்பது அறியார் - தோற்கும்படி யானதையும் தெரிந்து கொள்ளாதவர்களுமாய், பல உரைக்கும் - பலவற்றை (வீணாச்) சொல்லுகிற, மாந்தர் - மனிதர், பலர் - அநேகர் (இருக்கிறார்கள்), எ-று.
தமக்கு மூச்சுவிடாமல் பேசும் வல்லமை யிருப்பதைப் பற்றி வாய்பதைத்தலால் பிறர் நன்றாய்க் கற்றுப் பேசுந் திறத்தையும் அறியாமல் தெரிந்ததைப் பிரருணரச் சொல்லவும் தெரியாமல் எதனாலே தாம் தோல்வி யடைவார்களோ அதுவுந் தெரியாமல் விணாய்ப் பல பேச்சுப் பேசுகிற மூடரிடமும் சேரலாகாது என்றபடி.
பலவுரைக்கு மாந்தர் பலர் என்பதை எழுவாயாவைத்து காமுறுவர் தேறார் அறியார் எனவு முடிக்கலாம்.
சொற்று - தொழிற்பெயர், று - விகுதி, ஆற்று - முதனிலைத் தொழிற்பெயர். சுனைத்து - து - விகுதி, தொழிற்பெயர்; சொறிதல் பொருள், அதன் காரணமாகிய தினவுக்கு வந்தது. தோற்பது - இதுவும் அப்படியே.
314. கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை
நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு நாட்டி விடும்.
(இ-ள்.) கற்றதும் இன்றி - கற்குந் தொழிலில்லாமல் [கற்காமல்], கணக்காயர் பாடத்தால் - பண்டிதராகிய உபாத்தியார் (பிறருக்குச் சொல்லிக் கொடுத்த) பாடத்தினால், ஓர் சூத்திரம் - ஒரு சூத்திரத்தை, பேதை - அறிவில்லாதவன், பெற்றது - பெற்றுக் கொண்டவனாகி, அதனை - அச் சூத்திரத்தை, நல்லாரிடை - நல்ல வித்துவான்கள் நடுவே, புக்கு - புகுந்து, நாணாது சொல்லி - வெட்கப்படாமல் சொல்லி, தன் புல் அறிவு - தன்னுடைய ஈனமான அறிவை, காட்டி விடும் - வெளிப்படுத்துவான், எ-று.
பேதையானவன் தான் உபாத்தியாயருக்கு வழிபட்டுக் கற்காமல் பள்ளியில் உபாத்தியாயர் பிறருக்குச் சொல்லுங்கால் தற்செயலாய்த் தெரிந்ததொரு சூத்திரத்தைக் கற்றோர் சபையில் நாணாமல் சொல்ல இவனை யாவரும் மூடனென்று இகழ்வார்களென்பதாம்.
இதற்குப் பள்ளியில் சொன்ன பாடத்தால் என்பபொருள் கூறிப் பள்ளியை இழிவாகக் காட்டுவாரு முண்டு. கற்றதூஉம் - அளபெடை இன்னிசைக்கு வந்தது. கணக்கை ஆய்ந்தவர் - கணக்காயர்; கணக்கு - எண்ணும் எழுத்துமாம். பெற்றது - முற்றெச்சம்; இழிவினால் பேதைக்குக் கூறப்பட்டது; "உவப்பினு முயர் வினுஞ் சிறப்பினுஞ் செறலினும் இழிப்பினும் பாறிணை யிழுக்கினு மியல்பே" ஆம், மற்று - இரண்டும் அசை, புக்கு - புகு என்னும் பகுதி ககரமிரட்டிக் காலங்காட்டி உகர விகுதி பெற்ற வினையெச்சம்.
315. வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோடு - ஒன்றி
உரைவித் தகம்எழுவார் காண்பவே, கையுள்
சுரைவித்துப் போலும்தம் பல்.
(இ-ள்.) வென்றி பொருட்டால் - பிறனை வெல்வதாகிய காரணத்தால், விலங்கு ஒத்து - மிருகங்களோடு சமானமாக, மெய் கொள்ளார் - உண்மைப் பொருள் கொள்ளாதவராகி, கன்றி கறுத்து - மிகக் கோபித்து, எழுந்து - (போருக்கு) ஆயத்தமாகி, காய்வாரோடு - ஆக்கிரகப் படுவாரோடு, ஒன்றி - சேர்ந்து, வித்தகம் உரை - கல்வியைச் சொல்வதற்கு, எழுவார் - எத்தனப் படுபவர்; சுரை வித்து போலும் - கரையின் விரை போன்ற, தம் பல் - தம்முடைய பற்களை, கையுள் - தமது கையிலே, காண்ப - காண்பார்கள், எ-று.
எதையாகிலும் சொல்லி எதிரியை ஜயிக்கப் பார்க்கிறவர்களுக்கு நற்கல்வியைச் சொல்லப் போனால் பல்லை உதிர்த்துக் கையிற் கொடுப்பார்கள். பல் உதிரும்படி அடிப்பார்கள் என்பதாம்.
உரை - முதனிலையே வினையெச்சப் பொருட்டாய் வந்தது. "வினைமுற்றே வினையெச்சமாகலும்" என்கிற சூத்திரத்தின் உரையைக் காண்க. வென்றிப் பொருட்டு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. கொள்ளார் - முற்றெச்சம். கன்றிக் கறுத்து - "ஒரு பொருட் பன்மொழி சிறப்பினின்வழா" என்பதனால் அமைந்தது. எ - அசை.
316. பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால், - கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
ஈன்றாட்கு இறப்பப் பரிந்து.
(இ-ள்.) பாடமே ஓதி - (ஒருபாட்டை) வாய்பாடமா மாத்திரஞ் சொல்லி, பயன் தெரிதல் - அதன் பொருளை அறிவதிலே, தேற்றாத - தேறாத [தெளிவில்லாத], மூடர் -, முனி தக்க - கோபிக்கும்படியான சொற்களை, சொல்லுங்கள் - சொல்லும்போது, கேடு அறு சீர் - கேடில்லாத மேன்மையையுடைய, சான்றோர் - பெரியோர், அவரை ஈன்றாட்கு - அந்த வைதவரைப் பெற்ற தாய்க்கு, இறப்ப பரிந்து - மிகவும் இரங்கி, சமழ்த்தனர் நிற்ப - வெட்கினவராகி நிற்பார்கள், எ-று.
பாடல்களின் பொருள் நுட்ப மறியாத மூடர் திட்டினால் பெரியோர் வெட்கி நிற்பார்கள், ஏனென்றால் இந்த மூடப்பிள்ளையைப் பெற்றவள் என்ன பயனடைவாளென்று என்பதாம். அன்றியும், நாம் இவனைச் சபிப்பதனால் இவன் கேடுற இவன் தாய் வருந்துவாளே என்று சும்மா நிற்கிறார்களெனவுமாம்.
பாடமே - ஏகாரம் - பிரிநிலை. முனிதக்க - முனிதலுக்குத் தக்க; முனி - முதனிலைத் தொழிற்பெயர். நிற்பவே - ஏ - அசை.
317. பெறுவது கொள்பவர் தோள்மேல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; - மற்றும்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள்.
(இ-ள்.) எல்லா நூல் - சாஸ்திரங்களெல்லாம், பெறுவது கொள்பவர் - பெறத்தக்க பொருளைக் கொள்கிற வேசிமாருடைய, தோள் போல் - புஜங்களைப் போல, நெறி பட்டு - (ஆசிரியன்) வழிப்பட்டு, கற்பவர்க்கு - கற்றுக் கொள்ளுகிறவர்களுக்கு, எளிய - சுலபத்தில் கிரகிக்கத் தக்கன ஆம்; அ முறி புரை மேனியர் - தளிரை ஒத்த மேனியை யுடைய அந்த வேசிமாருடைய, உள்ளம் போன்று - மனதை ஒத்து, மற்று யார்க்கும் - (அப்படி கல்லாத) எவர்களுக்கும், அறிதற்கு அரிய பொருள் - அறிய சுலபமாகாத பொருளுடையன ஆம்; எ-று.
கிரமப்படி கற்பவர்க்கு எந்த நூலும் சுலபமாம்; அப்படி கற்காதவர்களுக்கு எதுவும் கடினமாம் என்றபடி.
எளிய - எளிமைப் பண்படியாகப் பிறந்த பலவின்பாற் குறிப்பு வினைமுற்று. அரிய - அருமையடியாப் பிறந்த பெயரெச்சம்.
318. புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.
(இ-ள்.) புத்தகமே சால தொகுத்தும் - புத்தகங்களை மாத்திரம் மிகுதியாகச் சேர்த்தும், பொருள் தெரியார் - (அவற்றின்) பொருளை அறியாதவராகி, உய்த்து - கொண்டு வந்து, அகமெல்லாம் நிறைப்பினும் - வீடெல்லாம் நிறைத்தாலும், அவற்றை போற்றும் புலவரும் வேறே - அப்புத்தகங்களைப் பாதுகாக்கும் புலவரும் வேறா யிருப்பார்கள்; பொருள் தெரிந்து - அவற்றின் அர்த்தங்களை அறிந்து, தேற்றும் புலவரும் வேறு - (பிறரை) தேறச் செய்யும் வித்துவான்களும் வேறாயிருப்பார்கள், எ-று.
புத்தகங்களை மிகுதியாச் சேர்த்ததனாலே புத்தக பரிபாலகராவார்களே யன்றி வித்துவான்களாக மாட்டார்கள். அவற்றின் பொருளைத் தாமறிந்து பிறர்க்குப் போதித்துத் தெளியச் செய்பவரே வித்துவான்களாவார் என்பதாம்.
புத்தகமே - ஏகாரம் - பிரிநிலை. அவர்களைப் புலவர் என்றது பரிகாசம். தொகுத்தும் - உம் - உயர்வு சிறப்பு, இழிவு சிறப்பெனக் கொள்ளுவாரு முண்டு. வேறு - இடம் பால்களுக்குப் பொதுவான குறிப்பு முற்று. "வேறில்லை யுண்டைம் பான் மூவிடத்தன."
319. பொழிப்பகல நுட்பநூல் எச்சம்இந் நான்கின்
கொழித்தகலம் காட்டாதார் சொற்கள் - பழிப்பில்
நிரை ஆமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
உரையாமோ நூலிற்கு நன்கு?
(இ-ள்.) பழிப்பு இல் - குற்றமில்லாத, நிரை ஆ மா - கூட்டமாகிய காட்டுப்பசுக்களை, சேர்க்கும் - தம்மிடத்திலே சேரச் செய்கிற, நெடு குன்ற நாட - உன்னதமான மலைகளுள்ள நாட்டையுடைய அரசனே!, பொழிப்பு - (கருத்து விள்ளும்படி தொகுத்துச் சொல்லுகிற) பொழிப்புரையும், அகலம் - (பதப்பொருள் முதலியவற்றை நியாயங்காட்டி விரித்துச் சொல்லுகிற) அகலவுரையும், நூல் எச்சம் - (நூலில் சொல்லப் படாமற் குறைந்த விஷயங்களை எடுத்துச் சொல்லும்) - விசேஷவுரையும், நான்கின் - ஆகிய நான்கு வகையிலும், கொழித்து அகலம் காட்டாதார் சொற்கள் - நன்றாய் ஆராய்ந்து பொருள் விரிவைக் காட்ட மாட்டாதவர் செய்த நூல்கள், நூலிற்கு - நூல்களுக்கு, நன்கு உரை ஆமோ - நல்லதான உரையாகுமோ [ஆகாது], எ-று.
பல வகையிலும் பொருளை விரித்துக் காட்ட மாட்டாதவர்கள் உரை சிறப்பில்லை என்பதாம். மலைகள் தாமிருக்கும் செழிப்பினால் பசுக்களை வந்து சேரும்படி செய்கின்றன என மலைகளைச் சிறப்பித்தபடி.
நன்கு - பண்புப் பெயர், உரைக்கு விசேஷணம்.
320. இற்பிறப் பில்லார் எனைத்தநூல் கற்பினும்
சொற்பிறரைக் காக்கும் கருவியரோ? - இற்பிறந்த
நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்
புல்லறிவு தாமறிவ தில்.
(இ-ள்.) இல் பிறப்பு இல்லார் - நற்குடிப்பிறப்பு இல்லாதவர், எனைத்து நூல் கற்பினும் - எவ்வளவு சாஸ்திரங்களை வாசித்தாலும், பிறர் சொல்லை காக்கும் - (கல்லாத) பிறருடைய சொற்களை இகழாமல் காக்கும்படியான, கருவியரோ - (அடக்க முதலான) சாதனங்களை உடையவரோ, [அல்லர்], இல் பிறந்த நல் அறிவாளர் - நற்குடியிற் பிறந்த விவேகிகள், நவின்ற நூல் தேற்றாதார் - (பெரியோர்) செய்த நூல்களில் தெளியாதவருடைய, புல் அறிவு - ஈனமான அறிவை, தாம் அறிவது இல் - (உன்னிடத்து) தாம் அறிந்து கொள்வதுமில்லை. [உபேக்ஷையா யிருப்பார்கள் என்றபடி], எ-று.
குல சம்பிரதாயத்திற் பிறவாதவர்கள் எவ்வளவு கற்றும் பிறர் சொல்வதில் நேர்ந்த வழுக்களைத் தூற்றுவாரேயல்லது வெளிப்படுத்தாமல் விடார். குலப்பிறப் புள்ளவர்களோ குல சம்பிரதாயத்தால் அவ்வழுக்களைக் கவனிப்பது மில்லை; ஆன போது வெளியிட்டுத் தூற்றுவதேது என்றபடி.
எனைத்து - எனை என்பதோ ரிடைச்சொன்மேல் து - விகுதி வந்தது; ஐ - சாரியை எனவுமாம். பிறரை என்பதிலுள்ள ஐ - சாரியை எனவுமாம். பிறரை என்பதிலுள்ள ஐ யுருபைப் பிரித்துச் சொல் என்பதோடு கூட்டிக் கொள்ள வேண்டும். தேற்றாதார் - இது பிறவினையாதலின் தம்மை என ஓர் செயப்படுபொருளை வருவித்து உரைத்துக் கொள்க. இல் - இல்லை யென்பதில் ஐ விகுதி குன்றியது. இல்லை என்பது செயப்படுபொருள் குன்றியதும் குன்றாததுமா யிருப்பதனால் அறிவதில் என்றதை எழுவாய்த் தொடராகவேனும், இரண்டாம் வேற்றுமைத் தொகையாகவேனும் கொள்க. இதனால் கல்வி மாத்திரமல்ல இற்பிறப்பு முடையவர் கோட்டியிற் சென்றதால் தான் இகழ்ச்சி நேராது என்று அறிவுறுத்தியதாம். முந்தி ஆறு பாட்டால் அயோக்கிய சபையின் திறத்தைக் கற்றாலல்லது கல்வித்திற முண்டாகாதென்று முந்திச் சொன்னதின் தொடர்ச்சியாற் காட்டி அயோக்கிய சபையையும் யோக்கிய சபையையும் விவரித்தார் என அதிகாரத்துக்கு இசையக் கூட்டிக் கொள்க.
