இரவச்சம்

bookmark

துன்பியல்

 

 [அதாவது மானங் கெடுவதற் கேதுவாகிய இரப்பதை அஞ்ச வேண்டுமென அதன் இயல்பைத் தெரிவிப்பது; இரவுக்கு அச்சம் என விரியும்.]

 

301. நம்மாலே ஆவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்
     தம்மாலாம் ஆக்கம் இலரென்று - தம்மை
     மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
     தெருண்ட அறிவி னவர்.

     (இ-ள்.) இ நல்கூர்ந்தார் - இந்தத் தரித்திரர், நம்மாலே -, ஆவர் - (ஆக்கமுள்ளவ) ராவார்கள், எஞ்ஞான்றும் - எப்போதும், தம்மால் ஆம் - தங்களால் சம்பாதித்த, ஆக்கம் இலர் - பொருளில்லாதவர், என்று -, தம்மை - தங்களை, மருண்ட மனத்தார் பின் - (மேலானவராகமதித்து) மயங்கின மனமுள்ளவர் பின்னே, தெருண்ட அறிவினர் தாமும் - தெளிந்த அறிவை யுடையவர்களும், செல்பவோ - செல்வார்களோ, எ-று.

     நாம் கொடுத்துத்தான் தரித்திரர்க்குப் பணமுண்டே யன்றி அவர்களுடைய சொந்த முயற்சியால் ஒருகாசும் கிடையாது என்று தம்மிடத்திற் பெருமை பாராட்டுகிற அற்பரித்து இரக்கும் பொருட்டு விவேகிகள் செல்லார்கள் என்பதாம்.

     பிறர் நல்குதலை மேற்கொண்டு செல்பவர் நல்கூர்ந்தார்; நல்கு - முதனிலைத் தொழிற்பெயர். இல் என்பது ஒரு பொருளின் சம்பந்தத்தை மறுக்கும்போது செயப்படுபொருள் குன்றாததாகவும் பொருளையே மறுக்கும்போது செயப்படுபொருள் குன்றியதாகவு மிருக்குமாதலால் ஆக்கம் இலர் என்பதை ஆக்கத்தை இல்லாதவர் எனவும் ஆக்கமானது இல்லாதவர் எனவும் இருவகையிலும் உரைக்கலாம். இரண்டாம் பக்ஷத்தில் "உயர்திணை தொடர்ந்த" என்கிற சூத்திர விதியை அமைத்துக் கொள்க. தம்மை மருண்ட என்பதை வேற்றுமை மயக்கமாகக் கொண்டு தம்மிடத்தில் மருட்சி கொண்ட எனவுமுரைக்கலாம். கடவுள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு முகமாய்ச் சீவனம் கற்பித்திருத்தலால் நாம் கொடுக்கிறோமென்று நினைப்பது அறிவின்மை. தாமும் - உயர்வு சிறப்பும்மை. தாம் - அசை.

 

302. இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
     பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
     விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
     அழித்துப் பிறக்கும் பிறப்பு.

     (இ-ள்.) ஒருவன் -, இழி தக்க செய்து - தாழ்வதற்கேதுவான காரியங்களைச் செய்து, ஆர உணலின் - நிறையப் புசிப்பதினும், பழி தக்க - பழிக்கும்படியான காரியங்களை, செய்யான் - செய்யாதவனாகி, பசித்தல் - பசியோடிருத்தல், தவறோ - குற்றமோ, ஒருவன் அழிந்து பிறக்கும் பிறப்பு - ஒரு மனிதன் அழிந்து மறுபடி பிறக்கும்படியான பிறப்பு, விழித்து இமைக்கும் மாத்திரை அன்றோ - கண்ணைத் திறந்து இமைக்கோட்டுதலாகிய அளவை உடையதல்லவா, எ-று.

     இவ்வுடம்புபோனால் வேறுடம்பு கிடைப்பது அரிதென நினைக்க வேண்டாம். சீக்கிரத்தில் கிடைக்கும். ஆதலால் தாழ்வானவை செய்து பிழைப்பதினும் இறப்பது நலம் என்பது கருத்து.

     இழித்தக்க காரியங்களாவன - யாசிப்பதற்குச் செய்யு முயற்சிகள். இழி பழி என்பவை முதனிலைத் தொழிற்பெயர்கள். இழித்தற்குத் தக்க பழித்தற்குத் தக்க என விரித்துக் கொள்க. ஆர என்னும் வினையெச்சம் இங்கு உணலின் என்பதற்கு உரியா நின்றது, அழித்து - வலித்தல் விகாரம். பிறக்கும் பிறப்பு - பிறக்கிற தொழில்.

 

303. இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்
     செல்லாரும் அல்லர் சிறுநெறி - புல்லா
     அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லால்
     முகம்புகுதல் ஆற்றுமோ மேல்?

     (இ-ள்.) இல்லாமை - பொருளில்லாமையானது [வறுமை], கந்து ஆ - ஏதுவாக [அதுபற்றி என்கிறபடி], இரவு - இரப்பதை, துணிந்து - தெளிந்து, ஒருவர் - [எவராகிலும்] ஒருவர், சிறு நெறி - (யாசிப்பதாகிய) அற்பவழியில், செல்லாரும் அல்லர் - நடவாமலுமிரார்; புல்லா - தழுவிக் கொண்டு, அகம் புகுமின் - எமது வீட்டிற்கு வாருங்கள், உண்ணுமின் - சாப்பிடுங்கள், என்பவர் மாட்டு அல்லால் - என்கிறவரிடத்து அல்லாமல், மேல் - மேலானவர், முகம் - மற்றவரிடத்தில், புகுதல் - செல்வத்தை, ஆற்றுமோ - பொறுப்பார்களோ; [முகம்புகுதல் - முகங்காட்டுதலுமாம்], எ-று.

     வறுமையால் யாசிக்கும்படி நேரிட்டாலும் கண்டவிடத்துச் செல்லாமல் ஆதரிப்பவரிடமே செல்லுவர் மேலானவர்.

     இல்லாமை - எதிர்மறைத் தொழிற்பெயர்; இல் - பண்படி, பகுதி. ஆகாரம் - சாரியை, மை - விகுதி. இரவு - தொழிற்பெயர், உ - விகுதி. செல்லாரும் - இழிவு சிறப்பும்மை. மேல் - ஆகுபெயர்; சொல்லளவில் அஃறிணையாதலால் ஆற்றும் என்கிறவினை சேர்க்கப்பட்டது.

 

304. திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
     உருத்த மனத்தோடு உயர்வுள்ளின் அல்லால்
     அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்று
     எருத்திறைஞ்சி நில்ல தாம் மேல்.

     (இ-ள்.) திரு - லக்ஷ்மியானவள், தன்னை நீப்பினும் - தன்னைக் கைவிட்டாலும், தெய்வம் செறினும் - தெய்வமானது கோபித்தாலும், உருத்த - (சோர்வின்றி) எழுந்த, மனத்தோடு - மனதினால், உயர்வு உள்ளின் அல்லால் - தன் மேன்மையை நினைப்பதேயல்லாமல், அருத்தம் செறிக்கும் - பணத்தை வீணாச் சேர்த்துவைக்கிற, அறிவு இலார் பின் சென்று - விவேகமில்லாதவரிடத்திற் போய், எருத்து இறைஞ்சி - தலைகுனிந்து, நில்லாது - நிற்கமாட்டார், மேல் - மேலானவர், எ-று.

     பெரியோர் தமக்குத் தரித்திரமும் பல சங்கடங்களும் சேர்ந்தாலும் அதைரியப்படாமல் தமது மேன்மையை எண்ணி இரவாதிருப்பார்களே யல்லாமல் யாசகர்க்கு உபயோகப்படுத்தாமற் பணஞ் சேர்த்து வைக்கிற அவிவேகிகளிடத்திற் போய் தலைவணங்கி நிற்கமாட்டார் என்பதாம்.

     உருத்த - உரு - பகுதி, த் - இறந்த கால இடைநிலை, மற்றொன்று சந்தி, அ - பெயரெச்ச விகுதி. உள்ளின் என்பது வினையெச்சமாத் தோன்றினாலும் 'நீ வரவேண்டும்' முதலான விடத்திற் கொள்வது போல் தொழிற்பெயராக் கொள்க; வினையெச்சமாகவே கொண்டால் பொருள் பொருந்தாமை காண்க. பின் - ஏழனுருபு. எருத்து - ஆகுபெயர், பிடர்வணங்க என உரைக்கினும் பொருந்தும்.

 

305. கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
     இரவாது வாழ்வதாம் வாழ்க்கை; - இரவினை
     உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்னை கொல்
     கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.

     (இ-ள்.) கரவாத - (தனக்கு உள்ளதை) மறைக்காத, திண் அன்பின் - உறுதியான அன்பினாலே, கண் அன்னார்கண்ணும் - (தமக்குக்) கண்போன்றவரிடத்தும், இரவாது வாழ்வது - யாசிக்காம லிருந்து வாழ்வது, வாழ்க்கை ஆம் - நல்ல வாழ்வாகும். இரவினை - இரத்தலை, உள்ளுங்கால் - நினைத்தால், உள்ளம் உருகும் - மனம் உருகிப் போகின்றது; கொள்ளும் கால் - (ஒருவர் கைப்பொருளைக்) கொள்ளும் போது, கொள்வார் குறிப்பு - பெற்றுக் கொள்ளுகிறவருடைய மனம், என்கொலோ - எப்படிப்பட்டதா யிருக்குமோ, எ-று.

     மனமொத்தவரிடத்தும் இரப்பதாகாது, ஏனெனில் இரத்தலை நினைக்கும் போதே மன முருகுமானால் பொருளை ஒருவர் கொடுக்கப் பெற்றுக் கொள்ளும் போது எப்பாடுபடுமோ என்பதாம். என்ன எண்ணிப் பிறர்பொருளைக் கொள்ளுகிறார்களோ எனவும் கருத்துக் கூறலாம்.

     குறிப்பு - அதன் கருவிக்கு ஆகுபெயர். ஆல் - அசை. உள்ளுங்கால், கொள்ளுங்கால் - இரண்டும் பெயரெச்சத் தொடர், இரவினை - இரவு - தொழிற்பெயர், இன் - சாரியை, ஐ - உருபு.

 

306. இன்னா இயைக இனிய ஒழிகென்று
     தன்னையே தானிரப்பத் தீர்வதற்கு - என்னைகொல்
     காதல் கவற்றும் வனத்தினாற் கண்பாழ்பட்டு
     ஏதில் அவரை இரவு.

     (இ-ள்.) இன்னா - துன்பங்கள், இயைக - (நமக்கு) சேரட்டும், இனிய - இன்பங்கள், ஒழிக - நீங்கட்டும், என்று -, என்று -, தன்னையே - தன் மனதையே, தான் -, நிரப்ப - நிரம்பச் செய்வதனால் [திருப்திப் படுத்துவதனால்], தீர்வதற்கு - தீர்ந்து போம்படியான வறுமைக்காக, காதல் கவற்றும் - பணத்தாசை கவலைப் படுத்துகிற, மனத்தினால் -, கண்பாழ்பட்டு - அறிவு அழிந்து, ஏதிலவரை - சம்பந்த மில்லாதவர்களை, இரவு - இரப்பது, என்னகொல் - என்ன பிரயோசனம், எ-று.

     இன்பத்தைத் துன்பம் போலவும் துன்பத்தை இன்பம் போலவுமெண்ணி மனதிற் திருப்தியடைந்தால் தரித்திரத் துன்பம் நீங்குவதாயிருக்க அயலாரிடம் சென்று இரப்பதேன்; அது செய்யவேண்டாம் என்கிறபடி.

     இன்னா - இனிமையடியாகப் பிறந்த எதிர்மறைப் பலவின்பால் குறிப்பு வினையாலணையும் பெயர். "இனையவும் பண்பிற் கியல்பே" என்றதனால் பகுதி இகரமுங் கெட ஆகாரவிகுதி புணர்ந்தது; "ஆவேயெதிர்மறைக் கண்ணதாகும்". இனிய - அந்தப் பண்பில் உட்ன்பாட்டு வினையாலணையும் பெயர். இயைக, ஒழிக - பிரார்த்தனையின் கண் வந்த வியங்கோள். தான் இரப்ப எனப்பிரித்து தன் மனதைத் தான் வேண்டிக் கொள்வதனால் என்றுரைப்பாரு முண்டு. தீர்வதற்கு - வினையாலணையும் பெயர். கொல் - அசை. கண் - ஆகுபெயர். ஏதும் [யாதொரு தொடர்ச்சியும்] இல்லாதவர் ஏதிலவர், அகரம் - சாரியை.

 

307. என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்து
     என்றும் அவனே பிறக்கலான் - குன்றின்
     பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட!
     இரப்பாரை எள்ளா மகன்.

     (இ-ள்.) குன்றின் பரப்பு எல்லாம் - மலையினுடைய இடங்களிலெல்லாம்; பொன் ஒழுகும் - பொன்னானது ஓடும்படியான, பாய் - பாய்கின்ற, அருவி நாட - மலைவெள்ளத்தை யுடைத்தான நாட்டை யுடையவனே!, இ உலகத்து - இவ்வுலகத்தில், என்றும் - எக்காலத்திலும், புதியார் - புது மனிதர், பிறப்பினும் - பிறந்து கொண்டிருந்தாலும், என்றும் -, பிறக்கலான் - பிறவாதவன், அவனே -, (எவனென்றால்), இரப்பாரை - யாசிப்பாரை, எள்ளாமகன் - இகழாத மனிதன்.

     யாசகரை அவமதியாமல் ஆதரிப்பவனே புதிது புதிதாய் மனிதர் பிறந்து கொண்டிருக்கு மிவ்வுலகத்தில் பிறவாத நற்கதியடைவான் என்பதாம்.

     பொன்னின் தொழிலைத் தெரிவிக்கிற ஒழுகும் என்னும் பெயரெச்சம் அருவியாகிய இடப்பெயரோடு முடிந்தது. புதியார் - புதுமையில் மை கெட்டு உகரம் இகரமாய் நிற்க, ஆர் விகுதி புணர்ந்தது. உம் - இழிவு சிறப்பு. பிறக்கலான் - பிற - பகுதி, கு - சாரியை, அல் - எதிர்மறை விகுதி, ஆன் - ஆண்பால் விகுதி, எதிர்கால உடன்பாட்டெதிர்மறை வினைமுற்று, இப்பாட்டு இரத்தலிலுள்ள துன்பத்துக் கிரங்கிக் கொடுப்போரைப் புகழ்ந்தது. இச்சங்கதித் தொடர்ச்சியால் சொல்லப்பட்டது.

 

308. புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
     நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
     ஈயாய் எனக்கென்று இரப்பானேல் அந்நிலையே
     மாயானோ மாற்றி விடின்.

     (இ-ள்.) புறத்து - வெளியிலே [உடம்பில்], தன் இன்மை - தனது வறுமையானது, நலிய - வருத்த, அகத்து - மனதில், தன் நல்ஞானம் - தனது நல்ல விவேகத்தை, நீக்கி - தள்ளி, நிறீஇ - (அவிவேகத்தை) நிலைப்படுத்தி, ஒருவனை - ஒரு தனவானை, எனக்கு -, ஈயாய் என்று - (எதாகிலும்) கொடு என்று, இரப்பானேல் - யாசிப்பானாகில், மாற்றிவிடின் - (அந்தத் தனவான் இல்லையென்று) மறுத்துவிட்டால், அ நிலையே - அவ்விடத்திலேயே, மாயானோ - இறந்து போக மாட்டானா, எ-று.

     தரித்திரம் பற்றி உடம்பு வருந்துவதனால் விவேகங்கெட்டு ஒருவனிடம் போய் இரக்க அவன் இல்லையென்று சொன்னால் அந்த யாசகன் உடனே சாவான் என அவனுக்கு இரங்கிச் சொன்னபடி. அவன் அங்கேயே இறந்தால் நல்லதென வெறுத்துச் சொன்ன தெனவுமாம்.

     நலிய என்னுந் தன்வினை இங்கு பிறவினையாக் கொள்ளப்பட்டது. நிறீஇ - நிறுவ என்னும் வினைப்பகுதியில் ஈறுகெட்டு உகரம் இகரமாகி அளபெடுத்து வினையெச்சமாயிற்று. ஓ - இரக்கத்தின்கண் வந்தது.

 

309. ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
     வழிபடுதல் வல்லுதல் அல்லால் - பரிசழிந்து
     செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற்கு இன்னாதே
     பையத்தான் செல்லும் நெறி?

     (இ-ள்.) ஒருவர் -, ஒருவரை - மற்றொருவரை, சார்ந்து - சேர்ந்து, ஒழுகல் ஆற்றி - நடத்தலைச் செய்து, வழிபடுதல் - வணக்கமாயிருப்பது, வல்லுதல் அல்லால் - முறைமை யல்லாமல், பரிசு அழிந்து - யோக்கியதை கெட்டு, என்னானும் செய்யீரோ - ஏதாகிலு முதவி செய்யமாட்டார்களோ, என்னும் சொற்கு - என்று சொல்லுகிற சொல்லைக் காட்டிலும், தான் -, பைய - துன்பமுண்டாக, செல்லும் நெறி - செல்லத்தக்க வழியானது, இன்னாதே - இனிமையா யிராதா, எ-று.

     ஒருவன் ஒரு பணக்காரனைச் சேர்ந்து தக்கபடி நடந்து வணக்கத் தோடிருத்தல் உலகத்தின் முறையல்லாமல் அவனை யாசித்தல் கூடாது. அதனினும் தான் எங்கேயாகிலும் தான் எங்கேயாகிலும் வருத்தப் பட்டுப் போகலாம் என்றபடி.

     நெறி என்பதற்குத் தவஞ்செய்யப் போகும்வழி எனப் பொருள் கூறின் தவநெறியை இழித்துக் கூறியதாம். ஒருவனைச் சார்ந்து வணங்கியிருக்க அவனே ஏதாகிலும் உதவிசெய்தால் கொள்ளலாமல்லது வாய்திறந்து யாசித்தல் இழிவென்றபடி, இதுவும் அதமபக்ஷமாச் சொன்னது.

     ஆனும், ஏனும், ஆகிலும் இப்படிப்பட்ட சொற்கள் உம்மையோடு கூடி விகற்பப்பொருளில் வரும்; ஐயப்பொருளென்பது மிதுவே. சொற்கு - குவ்வுருபு எல்லைப்பொருளில் வந்தது. இன்னாதே - ஏகாரம் - வினா; எதிர்மறையாகி இனியதென்னும் பொருள் பயக்கும். பைய - துன்பப் பொருளதாகிய பை என்னும் வினைப்பகுதியிற் பிறந்த வினையெச்சம், அல்லது பசுமையின் விகாரமாகிய பை என்பதின் மேல் பிறந்த குறிப்பு வினையெச்சமுமாம்; எளிமையாக என்பது பொருள்.

 

310. பழமைகந் தாகப் பசைந்த வழியே
     கிழமைதான் யாதானும் செய்க; - கிழமை
     பொறாஅர் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்து
     அறாஅச் சுடுவதோர் தீ.

     (இ-ள்.) பழமை - ஆதிகால சிநேகத்தை, கந்து ஆக - ஆதாரமாக, பசைந்த வழியே - சிநேகித்த விடத்தில், தான் -, யாதானும் கிழமை - ஏதாகிலும் ஒரு தகுந்ததை, செய்க - செய்ய வேண்டும்; அவர் - கிழமை செய்யப் பெற்றவர், கிழமை பொறர் எனில் - அந்த வுரியதை ஏற்றுக் கொள்ளாமற் போனால், (அது) தன்நெஞ்சத்து - தன் மனதில், பொத்தி - பதிந்து, அறா சுடுவது - நீங்காமல் சுடும்படியான, ஓர் தீ - ஒரு அக்கினியாகும், எ-று.

     ஒருவர் பழமை பற்றி வந்தால் அவருக்குத் தக்கதே தாகிலும் செய்ய வேண்டும். அதை அவர் அதிருப்தியால் ஏற்றுக் கொள்ளாமற் போனால் செய்தவருக்கு எப்போதும் மன வருத்தமாயிருக்கும் என்றபடி.

     பொறுத்தல் - சுமத்தல் எனக்கொண்டு, ஏற்றுக் கொள்ளாமற் போனால் என உரைக்கப்பட்டது.

     பசை - பகுதி, ஒட்டுதல், பொறாஅர், அறாஅ - இரண்டிடத்தும் அளபெடை பாட்டினோசையை நிறைக்க வந்தவை.