மானம்

bookmark

துன்பியல்

 

    [அதாவது ஒருவர்க்குள்ள கவுரவம்; எப்படிப்பட்ட சங்கடத்திலும் அதனை விடாமற் காக்குந் தன்மை.]

 

291. திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
     பெருமிதம் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக்
     கானத் தலைப்பட்ட தீப்போல் கனலுமே,
     மான முடையார் மனம்.

     (இ-ள்.) திரு மதுகை ஆக - செல்வம் பலமா யிருப்பதனால், திறன் இலார் செய்யும் - யோக்கியதை யில்லாதவர்கள் செய்கின்ற, பெரு மிதம் - மிகுதியை [அவமதிப்பை], கண்டக்கடைத்து - கண்ட போது, எரி மண்டி - நெருப்புப்பற்றி, கானம் தலைப்பட்ட தீ போல் - காட்டிலுண்டான அக்கினிச் சுவாலைபோல், மானம் உடையார் மனம் - மானமுள்ளவர்களுடைய இதயமானது, கனலும் - சொலிக்கும், எ-று.

     செல்வச் செருக்கினால் அயோக்கியர் எல்லை கடந்து நடக்கையில் மானிகளுக்கு மனவருத்தமுண்டா மென்றபடி.

     பெருமிதம் - மிதத்துக்கு விஞ்சியது. கண்டக்கடைத்து - ஒரு வகை வினையெச்சம், அதனோடிருக்கும் உம்மையை அசையெனக் கொள்ள வேண்டும்.

 

292. என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
     தம்பாடு உரைப்பரோ தம்முடையார்; - தம்பாடு
     உரையாமை முன்னுணரும் ஒண்மை உடையார்க்கு
     உரையாரோ தாமுற்ற நோய்.

     (இ-ள்.) தம் உடையார் - தம்மை யுடையவர்கள் [தம்மானத்தைக் காக்குமவர்], என்பு ஆய் உகினும் - எலும்பாய்ப்போ யுதிர்ந்தாலும், இயல்பு இலார் பின் சென்று - சற்குண மில்லாதவர்களுடைய பின்னே போய், தம் பாடு உரைப்பரோ - தமது வருத்தத்தைச் சொல்வார்களோ, தம் பாடு - தமது சங்கடத்தை, உரையாமை - சொல்லாமலே, முன் உணரும் - முன்னிட்டு அறிந்து கொள்ளத்தக்க, ஒண்மை உடையார்க்கு - யோக்கியதை யுள்ளவர்களுக்கு, தாம் உற்ற நோய் - தாம் அடைந்திருக்கிற துன்பத்தை, உரையாரோ - சொல்லாம லிருப்பார்களோ, எ-று.

     மானிகள் எவ்வளவு ஈன ஸ்திதியிலும் தம் வருத்தத்தை அயோக்கியருக்குச் சொல்லார்கள். ஏனெனில் அவமானமேயன்றிப் பயனின்மையால், யோக்கியரோடே சொல்வார்கள் உபயோக முண்மையால் என்கிறபடி.

     உரையாமை - எதிர்மறை வினையெச்சம், மை - விகுதி.

 

293. யாமாயின் எம்மில்லம் காட்டுதும் தாமாயின்
     காணவே கற்பழியும் என்பார்போல் - நாணிப்
     புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
     மறந்திடுக செல்வர் தொடர்பு.

     (இ-ள்.) யாம் ஆயின் எம் இல்லம் காட்டுதும் - நாமானால் எமது மனையாளைக் காட்டுவோம். தாம் ஆயின் - அவரானால், காணவே கற்பு அழியும் - பார்க்கவே கற்பு அழிந்துபோம், என்பார் போல் - என்று நினைக்கிறவர்களைப் போலே, நாணி - வெட்கி, புறங்கடை வைத்து - வாசலின் புறத்திலே வைத்து, சோறும் ஈவர் - சோறும் போடுவார்கள்; (அதனால்) செல்வர் தொடர்பு - தனவான்களுடைய கூட்டுறவை, மறந்திடுக - மறந்துபோகக் கடவீர், எ-று.

     செல்வர் நம்மிடம் வந்தால் நாம் கூசாமல் நம் இல்லாள் இதோ என்று காட்டுவோம். பார்த்தால் கற்பழியுமென்று நினைத்தோ நம்மை உள்ளே வரவொட்டாமல் வாசலுக்குப் புறத்திலேயே வைத்துச் சோறிடுகிறார். இப்படி அவமதிப்புச் செய்கிறதினால் அவர் சிநேகத்தை மறக்க வேண்டும் என்பது கருத்து.

     இல்லம் என்பதற்கு வீடு எனப் பொருள் கொண்டு உரைக்கலாம். இங்கு போல் என்பது உவமப் பொருளில் வந்ததன்று, சம்பாவனை பொருளில் வந்தது; சம்பாவனையாவது இப்படியிருக்கலாம் என்று ஊகித்தல்; ஆகவே இது "தற்குறிப்பேற்றவணி" ஆம். சோறும் என்கிற உம்மை உயர்வு சிறப்பில் வந்தது. சோறிடுவது உள்ளேயே தகும். அதனையு மிவர் புறத்திலிடுகிறார்கள் என்றபடி.

 

294. இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது
     உம்மையும் நல்ல பயத்தால்; - செம்மையின்
     நானம் கமழும் கதுப்பினாய்! நன்றேகாண்
     மான முடையார் மதிப்பு.

     (இ-ள்.) செம்மையின் நானம் கமழும் - நன்றாக கஸ்தூரி பரிமளிக்கின்ற, கதுப்பினாய் - கூந்தலுடையவனே!, இம்மையும் நன்று ஆம் - இப்பிறப்பிலும் நல்லதாம்; இயல் நெறியும் கை விடாது - கூடிய நல்வழியையும் விட்டு நீங்காது, உம்மையும் - மறுபிறப்பிலும், நல்ல பயத்தலால் - நல்லவற்றைச் செய்வதனால், மானம் உடையார் மதிப்பு - மானிகனிடத்துள்ள மதிப்பானது, நன்றே - நல்லதே, எ-று. காண் - அசையுமாம்.

     மதிப்பாவது மேன்மையாக நினைத்தல். கதுப்பு - கவுளுமாம்; அங்கும் கஸ்தூரி பூசுவதுண்டு.

 

295. பாவமும் ஏனைப் பழியும் படவருவ
     சாயினும் சான்றவர் செய்கலார்; - சாதல்
     ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
     அருநவை ஆற்றுதல் இன்று.

     (இ-ள்.) பாவமும் -, ஏனை பழியும் - மற்றப்பழிப்பும், பட வருவ - உண்டாகும்படி வருகின்ற காரியங்களை, சாயினும் - சாம்படி நேரிட்டாலும், சான்றவர் - பெரியோர், செய்கலார் - செய்யமாட்டார்கள்; (ஏனெனில்) சாதல் - சாவு, ஒரு நாள் ஒரு பொழுதை துன்பம் - ஒருநாளில் சொற்பகால மனுபவிக்கத்தக்க துன்பமாயிருக்கின்றது; அவை போல் - அந்த இழிசெய்கைகளைப் போலே, அருநவை ஆற்றுதல் இன்று - (ஆத்துமாவுள்ளவும்) மிகுந்த குற்றங்களைச் செய்வதன்று, எ-று.

     பழி - பழிக்கப்படுவது, பொழுதை - ஐ - சாரியை [உயிர். புணர். சூ.35.]


296. மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
     செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
     நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
     செல்வரைச் சென்றிரவா தார்.

     (இ-ள்.) மல்லல் மா ஞாலத்து - வளப்பமுடைய பெரிய பூமியில், வாழ்பவருள் எல்லாம் - வாழ்கின்றவர்களுக்குள்ளே யெல்லாம், செல்வர் எனினும் - தனவான்களானாலும், கொடாதவர் -, நல்கூர்ந்தார் - தரித்திரரே; நல்கூர்ந்தக்கண்ணும் - தரித்திரப்பட்டிருந்தாலும், செல்வரை சென்று இரவாதார் - தனவான்களிடம் போய் யாசிக்காதவர், பெருமுத்தரையரே - இப்பேர் கொண்ட கனவானோ டொத்தவரே [பெருஞ்செல்வர் என்றபடி], எ-று.

     இப்பாட்டு முந்திய இரண்டதிகாரத்துட் சேர்க்கத்தக்கதாயினும் வறுமையிலும் பிறரிடம் போயிரவாமல் மானத்தைக் காத்தல் நலமென இங்கு சேர்க்கப்பட்டது. நல்கூர்ந்தக்கண் - வினையெச்சம்.

 

297. கடையெல்லாம் காய்பசி அஞ்சுமற் றேனை
     இடையெலாம் இன்னாமை அஞ்சும் - புடை பரந்த
     விற்புருவ வேல்நெடுங் கண்ணாய்! தலை யெல்லாம்
     சொற்பழி அஞ்சி விடும்.

     (இ-ள்.) புடை பரந்த - பக்கம் விசாலப்பட்ட, வில் - வில் போன்ற, புருவம் - புருவத்தையும், வேல் நெடு கண்ணாய் - வேல்போல் நீண்ட கண்களையு முடையவளே!, கடை எல்லாம் - கடைத் திறமானவர்களெல்லாம், காய் பசி அஞ்சும் - காய்கின்ற பசிக்குப் பயப்படுவார்கள், ஏனை - அவரொழிந்த, இடை எல்லாம் - நடுத்தரமானவர்களெல்லாம், இன்னாமை அஞ்சும் - துன்பத்திற்குப் பயப்படுவார்கள்; தலை எல்லாம் - மேலானவர்களெல்லாம், சொல் பழி அஞ்சிவிடும் - உலகத்தாருடைய சொல்லால் வரும் பழிப்புக்கு அஞ்சுவார்கள், எ-று. மற்று - அசை.

     பழிப்பினால் மானக்குறைவு வருமென்று அஞ்சுவார்கள் என்பது கருத்து.

     கடை இடை தலை என அஃறிணையாக எடுத்ததனால் அஞ்சும் என்பதோடு முடிந்தன. கடை முதலியன இங்கே பன்மை.

 

298. நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
     செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் - கொல்லன்
     உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ,
     தலையாய சான்றோர் மனம்.

     (இ-ள்.) நல்லர் - நல்லவர்கள், (இவர்) பெரிது அளியர் - மிகவும் கிருபை செய்யத்தக்கவர்கள், நல்கூர்ந்தார் - வறுமையுள்ளவர்கள், என்று -, எள்ளி - அவமதித்து, செல்வர் சிறு நோக்கு நோக்குங்கால் - அற்பப் பார்வையாகப் பார்க்கும் போது, தலை ஆய சான்றோர் மனம் - தலைமையான பெரியவர்களுடைய மனமானது, கொல்லன் உலை ஊதும் தீயே போல் - கருமான் உலைக்கடத்தில் ஊதியெழுப்புகிற நெருப்பைப் போலே, உள் கனலும் - உள்ளே சொலிக்கும், எ-று. கொல், ஓ இரண்டும் அசை.

     சிறுநோக்காவது அலக்ஷியமாப் பார்த்தல். நல்லர் அளியர் என்பவை இரக்கத்தாற் சொல்லுஞ் சொற்களன்று இகழ்ச்சியாற் சொல்லுஞ் சொற்களென்றறிக. தீயே - இதில் ஏ - அசை.

 

299. நச்சியார்க்கு ஈயாமை நாணன்று நாள்நாளும்
     அச்சத்தால் நாணுதல் நாண்அன்றாம்; - எச்சத்தின்
     மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
     சொல்லாது இருப்பது நாண்.

     (இ-ள்.) நச்சியார்க்கு - விரும்பி வந்தவர்களுக்கு, ஈயாமை - கொடாமலிருப்பது, நாண் அன்று - வெட்கமன்று; நாள் நாளும் - தினந்தோறும், அச்சத்தால் - (போர் முதலியவற்றிற் செல்ல) பயத்தினால், நாணுதல் - வெட்கப்படுதல், நாண் அன்று -; எச்சத்தின் - (தம்மிலும்) குறைபாடுடைய, மெல்லியர் ஆகி - அற்பராய் இருந்து, ஆயார் - ஆராய்ச்சி யில்லாதவர், தம்மேல் - தம் விஷயத்தில், செய்தது - செய்த எளிமையை, சொல்லாது இருப்பது - (பிறர்க்கு) சொல்லாம லிருக்குமுறுதியே, நாண் - நாணம் ஆகும், எ-று.

     புத்தியீனர் தம்மிடத்துச் செய்த அவமதிப்பைப் பிறர் அறியாதிருக்கும்படி காத்தலே மானத்திற்குரிய நாணம் என்பது கருத்து.

     ஆயார் - பகைவருமாம். நச்சியார் - நச்சு - பகுதி, ஈறு குறைந்த இன் - இடைநிலை, ஆர் - விகுதி, யகரம் உடம்படுமெய், நச்சினார் எனவும் வரும். எச்சம் - குலம் கல்வி முதலியவற்றிலுள்ளது.

 

300. கடமா தொலைச்சிய கானுறை வேற்கை
     இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் - இடமுடைய
     வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
     மானம் அழுங்க வரின்.

     (இ-ள்.) கடமா - காட்டுப்பசுவை, தொலைச்சிய - கொன்ற, கான் உறை வேங்கை - காட்டில் இருக்கின்ற புலியானது, இடம் வீழ்ந்தது - இடப்பக்கம் வீழ்ந்த அந்தப் பசுவை, உண்ணாது இறக்கும் - தின்னாமலிருந்து சாகும், இடம் உடைய - விசாலமான இடமுள்ளதாகிய, வானகம் கை உறினும் - சொர்க்கம் கைக்குவந்தாலும், விழுமியோர் - பெரியோர் [மானமுள்ளவர்], மானம் அழுங்க வரின் - மானம் கெட்டுப் போக நேரிட்டால், வேண்டார் - (அந்தச் சுவர்க்கத்தையும்) விரும்பமாட்டார், எ-று.

     மானத்தாழ்வு வருவதாயிருந்தால் எப்படிப்பட்டதையும் விரும்பமாட்டார் மானிகள் என்றதாம்.

     தொலைச்சிய - தொலைச்சு - பகுதி எனக் கொள்ள வேண்டும்.