இன்மை

bookmark

துன்பியல்

 

 [அஃதாவது பண மில்லாமை.]

 

281. அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
     பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடெய்தும்
     ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
     செத்த பிணத்திற் கடை.

     (இ-ள்.) அத்து இட்ட கூறை - காவி தோய்த்த வஸ்திரத்தை, அரை சுற்றி வாழினும் - அரையிலுடுத்து வாழ்ந்தாலும், பத்து எட்டு உடைமை - பத்தாயினு மெட்டாயினு முள்ளவனாயிருத்தல், பலர் உள்ளும் பாடு எய்தும் - பல ஜனங்களுக்குள்ளே பெருமை பெறும்; ஒத்த குடி பிறந்தக்கண்ணும் - உலகத்துக்குச் சம்மதியான வமிசத்திற் பிறந்தாலும், ஒன்று இல்லாதார் - ஒரு பொருளில்லாதவர்கள், செத்த பிணத்தின் - உயிர்போன உடலைப் பார்க்கிலும், கடை - கீழ் (ஆவர்,) எ-று.

     அத்து - தையலுமாம். பத்தெட்டு என்பதில் ஐயவும்மை தொக்கது.

 

282. நீரினும் நுண்ணிது நெய்யென்பர், நெய்யினும்
     யாரும் அறிவர் புகைநுட்பம்; - தேரின்
     நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
     புகற்கரிய பூழை நுழைத்து.

     (இ-ள்.) நெய் - நெய்யானது, நீரினும் நுண்ணிது என்பர் - தண்ணீரைக் காட்டிலும் சூக்ஷமம் என்று சொல்லுவர், நெய்யினும் புகை நுட்பம் - நெய்யைக் காட்டிலும் புகை நுட்பமாயிருப்பதை, யாரும் அறிவர்-; தேரின் - ஆலோசித்தறிந்தால், இரப்பு இடும்பையாளன் - யாசகத்தாலாகிய துன்பமுள்ளவன், புகையும் புகற்கு அரிய பூழை - புகையும் பிரவேசிப்பதற்குக் கூடாத துவாரத்தில், நுழைந்து புகும் - நுழைந்து போவான், எ-று. ஏ - அசை.

     யாசகன் கண்டவிடத்திலு நுழைந்து பிச்சையெடுப்பதனால் இகழப்படுவான் என்பது கருத்து.

     புகையும் புகுதற்கரிய பூழை நுழைந்து புகும் எனக் கவி அதிசயோத்தியாக் கூறியது. நெய் என்பது எண்ணெய் முதலிய நீர்த்த பொருள்களுக்கெல்லாம் பொதுப்பெயர்.

 

283. கல்லோங்கு உயர்வரைமேல் காந்தள் மலராக்கால்
     செல்லாவாம் செம்பொறி வண்டினம்; - கொல்லைக்
     கலாஅற் கிளிகடியும் கானக நாட!
     இலாஅஅர்க் கில்லை தமர்.

     (இ-ள்.) கொல்லை - கொல்லைகளில், கல்லால் - கல்கொண்டு, கிளி கடியும் - கிளிகளை ஓட்டுகின்ற, கானக நாட - காடு சிறந்த நாட்டரசனே!, கல் ஓங்கு உயர் வரை மேல் - கற்கள் வளர்ந்திருக்கின்ற உயரமான மலையில், காந்தள் மலராக்கால் - காந்தள் பூக்காமற் போனால், செம் பொறி வண்டு இனம் - சிவந்த புள்ளிகளையுடைய வண்டுக் கூட்டங்கள், செல்லா - அங்கே போகமாட்டா; (அப்படியே) இல்லார்க்கு - (பொருள்) இல்லாதவர்களுக்கு, தமர் இல்லை - உறவினர் இல்லை, எ-று.

     காந்தள் பூக்காத போது வண்டுகள் மலையண்டை போகாதது போல் தரித்திரனிடத்துக்கு உறவினர் வாரார்கள் என்பது கருத்து. ஆம் - அசை.

 

284. உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
     தொண்டரா யிரவர் தொகுபவே; - வண்டாய்த்
     திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
     ஒருவரும் இவ்வுலகத் தில்.

     (இ-ள்.) உண்டாய போழ்தின் - (பொருள்) உண்டாயிருக்குங் காலத்தில், உடைந்துழி - (தேகம்) அழிந்த விடத்தில், காகம் போல் - காக்கைகளைப் போலே, ஆயிரவர் - ஆயிரம் பேர்கள், தொண்டு - அடிமையாக, தொகுப - சேருவார்கள்; வண்டு ஆய் - வண்டுகள் போலாய், திரிதரும் காலத்து - திரியுங்காலத்தில், தீது இலிரோ என்பார் ஒருவரும் - நீர் துன்பமில்லா திருக்கிறீரா என்று க்ஷேமம் வினாவுமொருவரும், இவ்வுலகத்துஇல் - இவ்வுலகத்தி லில்லை, எ-று.

     வண்டாய் - வண்டு ஊணுக்காக ஓரிடமில்லாமல் பலவிடந் தேடித் திரிவது போல எனக் கொள்க. இலிர் - முன்னிலைப் பன்மைக் குறிப்பு முற்று.

 

285. பிறந்த குலம்மாயும் பேராண்மை மாயும்
     சிறந்ததம் கல்வியும் மாயும் - கறங்கருவி
     கன்மேற் கழூஉம் கணமலை நன்னாட!
     இன்மை தழுவப்பட் டார்க்கு.

     (இ-ள்.) கறங்கு அருவி - ஒலியாநின்ற அருவிகள், கல் மேல் கழூஉம் - கற்களின் மேல் விழுந்து சுத்திசெய்கின்ற, கணம் மலை நல்நாட - கூட்டமான மலைகளுள்ல நல்ல நாடுடையவனே!, இன்மை தழுவப்பட்டார்க்கு - வறுமையால் கட்டிக் கொள்ளப் பட்டவர்களுக்கு, பிறந்த குலம் மாயும் - (அவர்) பிறந்த நல்லவமிசமும் கெடும்; பேர் ஆண்மை - கீர்த்தியுடைமை [அல்லது பெரியவல்லமை], மாயும் -; சிறந்த - மேன்மைப்பட்ட, தம் கல்வியும் - தம்முடைய கல்வித்திறனும், மாயும்-; எ-று.

     தரித்திரருக்கு குலமுதலிய மேன்மைகளும் சிறக்கா என்பது கருத்து.

 

286. உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
     உள்ளூர் இருந்தும்ஒன்று ஆற்றாதான்; - உள்ளூர்
     இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
     விருந்தினன் ஆதலே நன்று.

     (இ-ள்.) உள் கூர் பசியால் - வயிற்றினுள்ளே நிறைந்த பசியினாலே, உழை - தன்னிடத்தில், நசைஇ சென்றார்கட்கு - விரும்பி வந்தவர்களுக்கு, உள் ஊர் இருந்தும் - ஊர்க்குளிருந்தும், ஒன்று ஆற்றாதான் - ஓருதவியுஞ் செய்ய மாட்டாதவன், உள் ஊர் இருந்து - உள்ளூரிலிருந்து, உயிர் கொன்னே கழியாது - உயிரை வீணாய்க்கழியாமல், தான் போய் - தான் (பிறதேசம்) போய், விருந்தினன் ஆதலே நன்று - (ஒருவர்க்கு) விருந்தாளி யாவதே நல்லது, எ-று.

     தன்னிடம் பசித்துவந்தவர்களுக்கு உதவி செய்யமாட்டாத தரித்திரன் ஓரூருக்குள்ளே குடித்தனஞ் செய்வதைக் காட்டிலும் எங்கேயாகிலும் போய்ப் பிச்சை எடுப்பது நல்லதென்கிறபடி.

     ஊருள் எனற்பாலது உள்ளூர் என்றானது போலிவழக்கு.


287. நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததம்
     கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; - கூர்மையின்
     முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும்
     அல்லல் அடையப்பட் டார்.

     (இ-ள்.) கூர்மையின் - கூர்மையினாலே, முல்லை அலைக்கும் எயிற்றாய் - முல்லையரும்புகளை வருத்துகின்ற பற்களை யுடைய பெண்ணே!, நிரப்பு என்னும் அல்லல் அடையப் பட்டார் - வறுமை யென்கிற துன்பத்தால் சேரப்பட்டவர்கள்; நீர்மையே அன்றி - சற்குணங்களுமல்லாமல், நிரம்ப எழுந்த - பூர்ணமா யோங்கி நிற்கிற, தம் கூர்மையும் - தம்முடைய புத்திக் கூர்மையையும், எல்லாம் - மற்றுமுள்ள எல்லாவற்றையும், ஒருங்கு இழப்பர் - ஒரு சேர இழப்பார்கள், எ-று.

     தரித்திரருடைய சற்குண முதலியவை விளங்கா என்பதாம்.

     முல்லையரும்புகளினு மேலான அழகுண்மையால் அவற்றைக் கீழ்ப்படுத்தின பற்களையுடையவளே என்றது. கூர்மை என்பது மற்றுமுள்ள வெண்மை முதலான குணங்களுக்கும் உபலக்ஷணம். உப லக்ஷணமாவது தன்னினத்தையுந் தழுவல் [பொது. சூ. 7] காண்க.

 

288. இட்டாற்றுப் பட்டொன்று இரந்தவர்க்கு ஆற்றாது
     முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்
     நெட்டாற்றுச் சென்று நிரைமனையில் கைந்நீட்டும்
     கெட்டாற்று வாழ்க்கையே நன்று.

     (இ-ள்.) இட்டு ஆறு - தாழ்மையான வழியில், [தரித்திரத்தில் என்கிறபடி], பட்டு - விழுந்து, ஒன்று இரந்தவர்க்கு - ஏதாகிலுமொரு பொருளை யாசித்தவர்களுக்கு, ஆற்றாது - உதவாமல், முட்டு ஆறுபட்டு - முட்டுப்பாடான வழியிலே பட்டு, [சங்கடப்பட்டு என்றபடி], முயன்று - (கொடுப்பதற்கு) முயற்சிசெய்து, வாழ்தலின் - வாழ்வதைக் காட்டிலும், நெடு ஆறு சென்று - தூரதேசத்திற் போய், நிரைமனையில் - வரிசையாயுள்ள வீடுகளில், கை நீட்டும் - கை நீட்டி யாசிக்கிற, கெடு ஆறு வாழ்க்கையே - கெட்ட வழியில் வாழ்வதே, நன்று - நலமாம், எ-று.

     இதில் அமைந்தது ஆறாம்பாட்டின் கருத்தேயானாலும் ஒருவர் பாடியதாகாமையின் கூறியது கூறலாகாதென வுணர்க. இட்டு - அற்பம், ஆதலின் இட்டாறு - வறுமையெனக் கொள்ளப்பட்டது. ஆறு என்பது வேற்றுமை தொகையாகவும் [உயி. புண. 33ம்] சூத்திரத்தினால் றகர மிரட்டி நின்றது. வருந்தி முயல்வதேயன்றிக் காரியம் கைகூடவில்லையென்பது "நிறைமனை" எனவும் பாடங்கொண்டு, நிறை - பொருள் நிறைந்த, வீடு - வீட்டில் சென்று, என்றும் பொருள் கொள்ளலாம்.

 

289. கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
     அடகு பறித்துக்கொண் டட்டுக் - குடைகலனா
     உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
     துப்புரவு சென்றுலந்தக் கால்.

     (இ-ள்.) துப்புரவு சென்று உலந்தக்கால் - அனுபவிக்கப்படும் பொருள்கள் போய் நாசமானால், கடகம் செறிந்த தம் கைகளால் - (முன்பு) கடகம் சேர்ந்திருந்த தங்கைகளாலே, வாங்கி - (பக்கத்துள்ள தூறுகளைத்) தள்ளி, அடகு பறித்துக் கொண்டு - கீரைகளைப் பறித்துக் கொண்டு போய், அட்டு - சமைத்து, குடை - (நுங்கெடுத்த பனங்காய் முதலான) உள்ளே துளையுள்ள பொருள்களை, கலன் ஆ - பாத்திரமாக (வைத்துக் கொண்டு), உப்பு இலி வெந்தை - உப்பில்லாத அந்த வெந்த கீரையை, தின்று - புசித்து, உள் அற்று - மனவூக்கங்கெட்டு, வாழ்வ - வாழ்வார்கள் (மனிதர்), எ-று.

     செல்வம் மாறினால் இலைக்கறி பறித்துண்ணும்படி நேரிடும் வறுமை மனதிற்கு மிகத் துன்பந்தரும் என்பது கருத்து.
     இப்பாட்டைச் செல்வ நிலையாமையிற் சேர்த்தலுந் தகும். குடை - குடையப்படுவது குடை எனச் செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர். வெந்தை - வெந்தது, ஐ - விகுதி, வினை முதற்பொருளில் வந்தது.

 

290. ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
     பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் - நீர்த்தருவி
     தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட!
     வாழாதார்க் கில்லை தமர்.

     (இ-ள்.) ஆர்த்த பொறிய - நிறைந்த புள்ளிகளையுடைய, அணிகிளர் - அழகு விளங்காநின்ற, வண்டு இனம் - வண்டின் கூட்டம், பூந்து ஒலி கொம்பின் மேல் - புட்பித்து நீங்கின கிளையின் மேலே, செல்லா - போகமாட்டா; நீர்த்து அருவி - நல்லதன்மையுள்ள அருவிகள், தாழா - குறையாத, உயர் சிறப்பின் - மேலான சிறப்பையுடைய, தண் குன்றம் நல் நாட - குளிர்ச்சியான மலைகளுள்ள நல்ல நாட்டரசனே!, வாழாதார்க்கு - பொருள்பெற்று வாழாதவர்களுக்கு, தமர் இல்லை - உறவினரில்லை, எ-று.

     இப்பாட்டில் மூன்றாம் பாட்டின் கருத்தேயானாலும் முன்கூறிய நியாயத்தாற் குற்றமன்று. நீர்த்து - குறிப்புமுற்று, பெயரெச்சமாயிற்று. பொறிய - குறிப்புப் பெயரெச்சமாம்.