அறிவுடைமை
இன்பவியல்
[அதாவது காரியா காரியங்களைத் தெரிந்து கொள்ளும் படியான புத்தியுள்ளவனாதல்.]
241. பகைவர் பணிவிடம் நோக்கித் தகஉடையார்
தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
இளம்பிறை ஆயக்கால் திங்களைச் சேராது
அணங்கருந் துப்பின் அரா.
(இ-ள்.) பகைவர் பணிவு இடம் நோக்கி - சத்துருக்கள் தளர்ந்திருக்குமிடம் பார்த்து, தகவு உடையார் - தகுதியுள்ளோர், தாமேயும் நாணி - தாங்களே வெட்கப்பட்டு, தலை செல்லார் - (வெல்வதற்கு) அவ்விடம் போகமாட்டார். காணாய் - பார்; (வெல்வதற்கு) அவ்விடம் போகமாட்டார். காணாய் - பார்; அணங்கு அரும் துப்பின் - வருந்துதலில்லாத சாமர்த்தியமுள்ள, அரா - பாம்பு [இராகு], திங்களை - சந்திரனை, இளம் பிறை ஆயக்கால் - இளம்பிறை யாயிருந்தால், சேராது - (அதனை வருத்தும்படி) போகாது, எ-று.
பகைவனானாலும் அவன் இளைத்திருக்குங் காலத்திலே அவனை வெல்ல நினையாமல் இரங்குவது விவேகம் என்பது கருத்து.
அணங்கரும் என்பதில் அருமை இன்மைக்குக் கொள்ளப்பட்டது.
242. நளிகடல் தண்சேர்ப்ப! நல்கூர்ந்த மக்கட்கு
அணிகலம் ஆவது அடக்கம் - பணிவில்சீர்
மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
கோத்திரம் கூறப் படும்.
(இ-ள்.) நளி கடல் தண் சேர்ப்ப - அகலமான கடலின் குளிர்ச்சியான கரைக்கரசனே!, நல்கூர்ந்த மக்கட்கு - தரித்திரப்பட்ட மனிதருக்கு, அணிகலமாவது - ஆபரணமாவது, அடக்கம் - அடங்கியிருத்தல்; பணிவு இல் சீர் - அடக்கமில்லாத சிறப்பையுடைய, மாத்திரை இன்றி - அளவில்லாமல், [அளவைக் கடந்து], நடக்குமேல் - நடப்பானாயின், வாழும் ஊர் - (அவன்) வாழ்கின்ற ஊரில், கோத்திரம் - (அவன்) குலம், கூறப்படும் - (இழித்து) சொல்லப்படும், எ-று.
தரித்திரனா யிருப்பவன் வீண் பிரசங்கங்களுக்குப் போகாமல் அடங்கியிருப்பது புத்தி; இல்லாமற் போனால் அவனைப் பற்றி அவன் குலமும் இகழப்படு மென்பது கருத்து.
243. எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகாது
எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்.
(இ-ள்.) எந்நிலத்து வித்து இடினும் - எந்த நிலத்திலே விதைத்தாலும், காஞ்சிரம் காழ் - எட்டி விதை, தெங்கு ஆகா - தென்னமர மாகமாட்டா; தென் நாட்டவரும் - தென் தேசத்தாரும், சுவர்க்கம் புகுதலால் - சொர்க்கலோகம் சேர்வதனாலே, தன்னால்தான் - தன்னாலேயே, மறுமை ஆகும் - மறுபிறப்பின் கதியுண்டாகும்; வடதிசை பலரும் - வடதிசையிலுள்ள அநேகரும், சால கொன் ஆளர் - மிகவும் (மறுமைக்கு உதவியின்றி) வீண் காலங் கழிப்பவர், எ-று.
வித்தினியற்கையேயன்றி மரத்திற்கு நிலத்தினியற்கை யில்லாதது போல மறுமைப்பயனடைய அவரவர் செய்கையே காரணமாவதன்றித் திசையினா லொன்றுமில்லை யென்பதாம். வடநாட்டார்க்கே யன்றித் தென்னாட்டாருக்கு நற்கதியில்லையென யாரோ அக்காலத்திற் சொன்னதைக் குறித்து இப்பாட்டு பாடப்பட்டது போலும்.
தான் என்பது ஏகாரத்தைப் போலே பிரிநிலையில் வந்தது; தன் + ஆற்றான் எனப் பிரிந்து தான் நடக்கும் வழியால் என்று பொருள் கொள்வதும் பொருந்தும். கொன் - பயனின்மை, அதை யாள்பவர் கொன்னாளர்.
244. வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதும் திரியாதாம்; ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது.
(இ-ள்.) வேம்பின் இலையுள் கனியினும் - வேப்பிலை மேலே பழுத்தாலும், வாழை - வாழைப் பழமானது, தன் தீம் சுவை யாதும் - தன்னுடைய மதுரமான உருசி சிறிதும், திரியாது - மாறாது; ஆங்கே - அப்படியே, இனம் தீது எனினும் - சேர்ந்த கூட்டம் தீயதானாலும், இயல்பு உடையார் கேண்மை - நல்ல சுபாவமுடையவர்களுடைய நட்பு (திரியாது), மனம் தீது ஆம் பக்கம் - (அவருக்கு) மனது தீமையாகும் பக்ஷம், அரிது - இல்லை, எ-று.
சுபாவத்தில் யோக்கியருக்கு அயோக்கிய சகவாசம் செய்ய வேண்டி வந்த போதும், மனதில் கொடுமையின்றி அன்பு பாராட்டுவது விவேகத்தின் பயனென்றபடி.
வாழையின் பயனிலையாகிய திரியாது என்பதில் சுவை என்னும் எழுவாய் பகுதிப் பொருளில் முடிந்தது [பொது. சூ. 26ன்] உரையைக் காண்க.
245. கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும்
உப்புண்டு உவரி பிறத்தலால் தத்தம்
இனத்தனையர் அல்லர் எறிகடல்தண் சேர்ப்ப!
மனத்தனையர் மக்கள்என் பார்.
(இ-ள்.) கடல் சார்ந்தும் - சமுத்திரத்தை யடுத்தும், இன் நீர் - இனிப்பான நீரானது, பிறக்கும் - உண்டாகும், மலை சார்ந்தும் - மலையை அடுத்தும், உப்பு ஈண்டு உவரி - உப்பு நிறைந்த உவர்நீர், பிறத்தலால் - உண்டாவதனால், எறி கடல் தண் சேர்ப்ப - அலைமோதா நின்ற சமுத்திரத்தின் குளிர்ச்சியான கரையுடையவனே!, மக்கள் என்பார் - மனிதரென்று சொல்லப்படுகிறவர், தத்தம் இனத்து அனையர் அல்லர் - தங்கள் தங்களுடைய இனத்தை ஒத்தவரல்லர்; (மற்றென்னெனின்), மனத்து அனையர் - தம் தம் மனத்தை ஒத்தவர், எ-று.
உவர்க்கடலருகே நன்னீரும், நல்லருவி பாயு மலையருகே யுவர் நீரும் பிறப்பதனால் அவரவ ரியற்கையே பிரதானமன்றிச் செயற்கை பிரதான மன்றென முற்பாட்டிற் கூறியதே இங்குங்கூறி உறுதிப்படுத்தப்பட்டது. நல்லினஞ்சேர்தலிலே தீயாரைச் சேர்வதனாற் றீமையும் நல்லாரைச் சேர்வதனா னன்மையும் உண்டாமெனக் கூறிற்று. ஈண்டு எப்போதுந் தன்னியல்பு மாறாதிருப்பது விவேகமெனச் சொல்லிற்று; ஆதலின் அவ்வதிகாரத்தோடு இதற்கு மாறுபாடில்லை யென உணர்க.
246. பரா அரைப் புன்னை படுகடல் தண்சேர்ப்ப!
ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ? நல்ல
மரூஉச்செய்து யார்மாட்டும் தங்கு மனத்தார்
விராஅஅய்ச் செய்யாமை நன்று.
(இ-ள்.) பரு அரை புன்னை - பருத்த அரையையுடைய புன்னை மரங்கள், படு - சேர்ந்திருக்கின்ற, கடல் தண் சேர்ப்ப - குளிர்ச்சியான கடற்கரையையுடைய அரசனே, தங்கும் மனத்தார் - நிலைநிற்கிற மனமுடையவர்கள், நல்ல மரூஉ - நன்மைகள் சேர்ந்திருக்கின்ற, செய்தியார் மாட்டும் - செய்கையையுடைய யாரிடத்திலும், ஓராலும் ஒட்டலும் - நீங்குவதும் சேர்வதும், செய்பவோ - செய்வார்களோ, (இப்படிச் செய்வதினும்) விராய் செய்யாமை - கலந்து சிநேகஞ் செய்யாமை, நன்று -, எ-று.
யோக்கியரோடு சில காலஞ் சேர்ந்திருப்பதும் சிலகாலம் நீங்கியிருப்பதும் விவேகச் செய்கையன்று; அதினும் அவர்களைச் சேராமலிருப்பதே நலமென்றபடி.
மரங்களுக்கு அடியிலிருந்து கிளை பிரியுமளவுமுள்ள கட்டையை அரையென்பார்கள். பரு அரை - பராரை என்பதும், ஒருவல் - ஒரால் என்பதும் மரூஉ வழக்கென அறிக. மருவு என்பது மரூஉ எனவும், விரவி என்பது விராய் எனவும் செய்யுணோர்க்கத்தால் விகாரப்பட்டன; அல்லது விரவு என்னுமுதனிலை விரா என்றாகி, யகர விகுதிபெற்ற தென்னவுமாம்.
247. உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரிற் புணருமாம் இன்பம் - புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.
(இ-ள்.) உணர - (நம்முடைய குணங்களை) அறிந்து கொள்ள, உணரும் - அறிந்திருக்கின்ற, உணர்வு உடையாரை - விவேகமுள்ளவர்களை, புணர - சேர, இன்பம் புணரும் - சந்தோஷமுண்டாகும்; தெரிய - அறிந்துகொள்ள, தெரியும் தெரிவு இலாதாரை - தெளிவான புத்தியில்லாதவர்களை, புணரின் - சேர்ந்தால், பிரிய - (அவரை) விட்டு நீங்க, நோய் பிரியும் - துன்பம் நீங்கும், எ-று. ஆம் - இரண்டும் அசை.
நம்முடைய சிநேக குணங்களை அறிந்து கொள்ளும்படியான விவேகிகளைச் சிநேகிப்பதில் இன்பமும் அத்தன்மையில்லாதவரைச் சிநேகிப்பதில் துன்பமும் உண்டாமென்பது கருத்து.
தெரியும் என்பதை தெரிவோடு கூட்டுக.
248. நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.
(இ-ள்.) நல் நிலைக்கண் தன்னை நிறுப்பானும் - நல்ல நிலையிலே தன்னை வைப்பவனும், தன்னை -, நிலை கலக்கி - (நல்ல) நிலையினின்றுங் கலங்கச் செய்து, கீழ் இடுவானும் - தாழ்ந்த நிலையிலே சேர்க்கிறவனும், நிலையினும் - (இருக்கின்ற) நிலையைக் காட்டிலும், மேல் மேல் உயர்ந்து நிறுப்பானும் - மிகவுமேலான நிலையிலே தன்னை உயர்த்தி வைப்பவனும், தன்னை -, தலை ஆக செய்வானும் - முக்கியமானவனா யாக்குகின்றவனும், தான் - அவனே ஆவான், எ-று.
ஒருவனுக்கு உயர்வு தாழ்வு முதலியவை அவனுடைய அறிவினாலேயே உண்டாகுமென்பது கருத்து.
நிறுப்பான் முதலிய நான்கும் - எழுவாய், தான் - பயனிலை.
249. கரும வரிசையால் கல்லாதார் பின்னும்
பெருமை யுடையாரும் சேறல் - அருமரபின்
ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப!
பேதைமை யன்றுஅது அறிவு.
(இ-ள்.) அரு மரபின் - அருமையான கிரமத்தையுடைய, ஓதம் - அலைகள், அரற்றும் - சப்திக்கின்ற, ஒலி கடல் தண் சேர்ப்ப -, கரும வரிசையால் - காரியத்தின் முறைமையால், கல்லாதார் பின்னும் - மூடர்பின்னே, பெருமை உடையாரும் - (கல்வியறிவாகிய) பெருமை யுடையவர்களும், சேறல் - செல்லுதல், பேதைமை அன்று - புத்தியில்லாமை அன்று, அது அறிவு - அது விவேகமேயாம், எ-று.
நாலாவது ஐந்தாவது பாடல்களில் கூறியபடி யோக்கியருக்கு அயோக்கியரோடு சேர்வதே புத்திக்குறைவல்லவோ என்றால் அல்ல, காரியவசத்தால் சேர்வது புத்திதான் என்றார்.
அலைகளுக்கு அருமையான கிரமமாவது மற்றொன்றுக்கு இல்லாமல் ஒரேவிதமா யோங்கி யெழுந்து மடியுந்தன்மை எனக்கொள்க.
250. கருமமும் உட்படாப் போகமும் துவ்வாத்
தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே
முட்டின்றி மூன்றும் முடியுமேல்அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம்.
(இ-ள்.) கருமமும் உள் படா - (அறம் பொருள்களைச் சேர்ந்த) காரியங்களுக்கும் உட்பட்டு [அவற்றைச் செய்தென்றபடி], போகமும் துவ்வா - போகத்தையும் அனுபவித்து, தருமமும் - (கொடையாகிய) தருமத்தையும், தக்கார்க்கே செய்யா - தகுந்தவர்களுக்கே செய்து (நிற்கும்படி), ஒரு நிலையே - ஒரு பிறப்பிலேயே, மூன்றும் - இம்மூன்று காரியங்களும், முட்டு இன்றி - தடையில்லாமல், முடியுமேல் - (ஒருவனுக்கு) நிறைவேறுமானால், அஃது - அந்நிலையானது, பட்டினம் பெற்ற கலம் - (தானிருக்குங்) கடற்கரையூரைச் சேர்ந்த கப்பல், என்ப - என்று சொல்வர் (பெரியோர்), எ-று.
ஒரு கப்பல் பல தேசஞ் சென்று வியாபார முடித்துத் தன்னிலை சேர்ந்தது போலே ஒருவன் பல ஜன்மங்களெடுத்துக் கடைசியில் ஒரு ஜன்மத்தில் அறம் பொருள் தேடி போக மனுபவித்துச் சற்பாத்திரத்தில் தானஞ் செய்து கடைத்தேறுதலால் அந்தச் சனனம் பயன்பட்டுத் தேறினது என்கிறது கருத்து.
உள்படா முதலிய செய்யாவென்னும் வாய்பாட் டெச்சங்கள் நிற்கும்படி என்கிற வருவித்த வினையோடு முடிந்தன.
