கூடா நட்பு

bookmark

நட்பியல்

 

  [அதாவது பொருந்தாத சிநேகம் இப்படிப்பட்டதெனத் தெரிந்து கொள்ளுதல்.]

 

231. செறிப்பில் பழங்கூரை சேறணை யாக
     இறைத்துநீர் ஏற்றும் கிடப்பர், - கறைக்குன்றம்
     பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட!
     தங்கருமம் முற்றும் துணை.

     (இ-ள்.) கறைக் குன்றம் - கறுப்பான மலைகளிலே, பொங்கு அருவி - மிகுந்த அருவிகள், தாழும் - இழியாநின்ற, புனல் - நீரோடு கூடிய, வரை - மலைகளுள்ள, நல் நாட - நல்லதேசத்தரசனே!, செறிப்பு இல் - கட்டு இல்லாத, பழங்கூரை - பழைய கூரை வீட்டிலே, சேறு அணை ஆக - சேற்றினால் அணை உண்டாக்கி, நீர் இறைத்தும் - (அதில் வீழ்ந்த) நீரைப் புறத்தில் இறைத்தும், (நீர்) ஏற்றும் - (மேல் விழு) நீரை உள்ளே விழவொட்டாமல் ஏற்றும், தம் கருமம் - தமது காரியம், முற்றும் துணை - நிறைவேறுமளவும், கிடப்பர் - இருப்பார்கள் (அதற்குடையவர்கள்), எ-று.

     பழுதுபட்ட கூரை வீட்டிலுள்ளவர் மழை பெய்கையில் அதற்குப் பழுது வராமல் காத்து நிற்பது போல் நட்டாருடைய காரியத்தை முற்றுமளவுங் காப்பவர் சிநேகிக்கத் தக்கவரேயன்றி அதற்கிசையாதவர் அல்லர் என்பது கருத்து. அல்லது மழை வருமுன்னமே பழுதுபட்ட வீட்டைச் செம்மை செய்து கொள்ளாமல் வந்த போது வருந்துகின்றவரைப் போன்ற மூடர் நேசிக்கத்தகாதவர் என்னவுமாம்.

     ஆக என்பதற்கு ஆகச் செய்து என்று பொருள் கொள்ளப்பட்டது.

 

232. சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
     மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி
     வறத்தக்கால் போலுமே வாலருவி நாட!
     சிறந்தக்கால் சீரிலார் நட்பு.

     (இ-ள்.) சீரியார் கேண்மை - சிறந்தவர்களுடைய சிநேகம், சிறந்த சிறப்பிற்று ஆய் - மேம்பட்ட சிறப்புள்ளதாய், மாரி போல் - மழை போலே, மாண்ட - மாட்சிமைப்பட்ட, பயத்தது ஆம் - பிரயோசனமுள்ளதாகும்; வால் அருவி நாட - வெண்மையான அருவியுள்ள நாடுடையவனே! சீர் இலார் நட்பு - சற்குணமில்லாதவருடைய சிநேகம், சிறந்தக்கால் - மிகுந்தால், மாரி - மழை, வறந்தக்கால் போலும் - இல்லாமற் போனால் (இருக்கு நிலைமை) போல அப்பிரயோசனமாம், எ-று.

     சிறப்பிற்று - சிறப்பு - பகுதி, இன் - சாரியை, று - விகுதி, ன் ற் ஆனது சந்தி; குறிப்பு முற்று, அல்லது குறிப்பு முற்றாலணையும் பெயர். மாண்ட - மாண் - பகுதி.

 

233. நுண்ணுணர்வி னாரோடு கூடி நுகர்வுடைமை
     விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் - நுண்ணூல்
     உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
     புணர்தல் நிரயத்துள் ஒன்று.

     (இ-ள்.) நுண் உணர்வினாரொடு கூடி - நுட்பமான அறிவுடையவர்களோடு சேர்ந்து, நுகர்வு உடைமை - புசிப்பதைக் கொண்டிருத்தல், விண் உலகே ஒக்கும் விழைவிற்று - தேவலோகத்தையே ஒத்திருக்கும்படியான மேன்மையுள்ளது ஆம்; நுண் நூல் உணர்வு - நுட்பமான சாஸ்திரஞானம், இலர் ஆகிய - இல்லாதவர்களாகிய, ஊதியம் இல்லார் - பயனற்றவர்களை, புணர்தல் - சேர்தல், நிரயத்துள் ஒன்று - நரகங்களுள் ஒன்றாம், எ-று. ஆல் - அசை.

     உணர்விற்கு நுட்பமாவது உள்ளுறையைக் கிரகித்தல், நூலுக்கு நுட்பம் பொறிக்கும் மனதிற்கும் சாதாரணமா யெட்டாதவைகளை அறிவிப்பது விண்ணுலகே - ஏகாரம் - பிரிநிலை.

 

234. பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
     ஒருபொழுதும் சொல்லாதே நந்தும் - அருகெல்லாம்
     சந்தன நீள்சோலைச் சாரல் மலைநாட!
     பந்தமி லாளர் தொடர்பு.

     (இ-ள்.) அருகு எல்லாம் - பக்கங்களிலெல்லாம், சந்தனம் நீள்சோலை - சந்தன மரங்களுடைய பெரிய தோப்புக்களோடு கூடிய, சாரல் மலை நாட - சாரல்களையுடைய மலைகளுள்ள நாட்டரசனே!, பந்தம் இலாளர் தொடர்பு - மனப்பற்றில்லாதவருடைய சிநேகம், வை தீ போல் - வைக்கோலிற் பற்றிய நெருப்பைப் போலே, பெருகுவது போல தோன்றி - வளர்வது போலே காணப்பட்டு, ஒரு பொழுதும் -, செல்லாதே - (காரியத்தில்) உபயோகப்படாமல், நந்தும் - கெடும், எ-று.

 

235. செய்யாத செய்தும்நாம் என்றலும் செய்தவனைச்
     செய்யாது தாழ்த்துக் கொண்டு ஓட்டலும் - மெய்யாக
     இன்புறூஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே
     துன்புறூஉம் பெற்றி தரும்.

     (இ-ள்.) செய்யாத - செய்யக்கூடாதவைகளை, நாம் -, செய்தும் என்றாலும் - செய்வோம் என்று சொல்வதும், செய்வதனை - செய்ய வேண்டியதை, செய்யாது - செய்யாமல், தாழ்த்துக் கொண்டு ஓட்டலும் - நீடிக்கச் செய்து வைப்பதும், மெய்யாக - சத்தியமாகவே, இன்பு உறும் பெற்றி - (ஐம்புலன்களின்) இன்பமுறுந் தன்மையை, இகழ்ந்தார்க்கும் - நீக்கினவர்களாகிய துறவிகளுக்கும், அந்நிலையே - அப்போதே, துன்பு உறும் பெற்றி - துன்பத்தை அடையும் படியான தன்மையை, தரும் - கொடுக்கும், எ-று.

     செய்யக் கூடாதவைகளைச் செய்வோமென்று வீண் முயற்சி செய்வதும், செய்யத் தக்கவைகளைச் செய்யாமல் சாவகாசப் படுத்திப் போடுவதும் துறந்தவர்களுக்கும் துன்பமுண்டாக்கும் என்றபடி.

     செய்தும் - தனித்தன்மைப் பன்மை வினைமுற்று, தும் - விகுதியே எதிர்காலங் காட்டும்.

 

236. ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
     விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா
     பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்
     கருமங்கள் வேறு படும்.

     (இ-ள்.) ஒரு நீர் பிறந்ந்து - ஒரே ஜலத்திலே உண்டாகி, ஒருங்கு - ஒரே விதமாக, நீண்டக்கடைத்தும் - வளர்ந்தாலும், விரி நீர் குவளையை - விஸ்தரித்த நற்குணமுள்ள நீலோற்பலத்தை, ஆம்பல் - ஆம்பற் பூ, ஒக்க அல்லா - ஒக்கமாட்டா; பெரு நீரார் கேண்மை கொளினும் - மிகுந்த சற்குணமுள்ளவருடைய சிநேகத்தைப் பெற்றாலும், நீர் அல்லார் - குணவான்களாகதவருடைய, கருமங்கள் - காரியங்கள், வேறுபடும் - வேறாய்ப்போம், எ-று.

     குணவான்களோடு கூடியிருக்கிறாரென்று குணமில்லாதவரைத் தக்க காரியங்களில் நட்புக் கொள்ளலாகா தென்பது கருத்து.

     ஒருங்கு - முதனிலை வினையெச்சப் பொருட்டாய் வந்தது, நீண்டக்கடைத்தும் - இதுவும் ஒருவகை வினையெச்சம்; கடை - விகுதி, து - சாரியை.

 

237. முற்றல் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
     நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
     குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
     ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.

     (இ-ள்.) முற்று அல் சிறு மந்தி - முதிராத சிறிய குரங்கு, முன்பட்ட தந்தையை - எதிரே நேர்ந்த தன் தந்தையாகிய பெருங்குரங்கை, நெற்று கண்டன்ன விரலால் - பயற்ற நெற்றைக் கண்டாற் போன்ற கைவிரல்களால், ஞெமிர்த்திட்டு - மடங்கச் செய்த, குற்றி பறிக்கும் - குத்தி (அதின் கையிலுள்ளவற்றை) பறித்துக் கொண்டு போகின்ற, மலை நாட - மலையுள்ள நாட்டரசனே!, ஒற்றுமை கொள்ளாதார் நட்பு - தன்னோடு ஒன்றுபடமாட்டாதவருடைய சிநேகம், இன்னாது - இன்பமாயிராது, எ-று. ஏ - அசை.

     சிறுகுரங்குகள் பெருங்குரங்குகளை யடித்துப் பறிக்கும் படியான பலத்தோடு வளரா நின்ற மலையெனச் சிறப்பித்தது. தான் வருவதற்கு முன்னமே வந்து அங்குள்ள குற்றியைப் பெயர்த்தெடுக்கமாட்டாத கிழக்குரங்கை விரலால் தள்ளித்தான் அக்குற்றியைப் பெயர்த்து எடுக்கும்படியான, சிறு குரங்குள்ள மலையெனவும் பொருள் கொள்ளலாம். முற்று - வினைமுதற்பொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர். கண்டு என்பதற்கு கட்டியாயிருப்பது பொருளானதைக் கொண்டு நெற்றாகிய கண்டை ஒத்த எனவு முரைக்கலாம்.

 

238. முட்டுற்ற போழ்தின் முடுகியென் ஆருயிரை
     நட்டான் ஒருவன்கை நீட்டேனேல் - நட்டான்
     கடிமனை கட்டழித்தான் செல்வழிச் செல்க
     நெடுமொழி வையம் நக.

     (இ-ள்.) முட்டு உற்ற போழ்தின் - (என்னுடைய நண்பன்) சங்கடத்தை அடைந்தபோது, முடுகி - துரிதப்பட்டு, என் ஆர் உயிரை - என்னுடைய அருமையான பிராணனை, நட்டான் ஒருவன் கை நீட்டேனேல் - சிநேகிதனாகிய ஒருவன் கையிற் கொடாமற் போவேனேயானால், நட்டான் - சிநேகிதனுடைய, கடிமனை - காவலுள்ள அல்லது கலியாணஞ் செய்த மனையாளை, கட்டு அழித்தான் - கற்பழித்தபாவி, செல்வுழி - போமிடத்தில், நெடு மொழி வையம் - மிகுந்த பேர்பெற்ற பூமியிலுள்ளோர், நக - சிரிக்கும்படி, செல்க - (நான்) போகக் கடவேன், எ-று.

     நண்பனுக்குச் சங்கடநேர்ந்தபோது தன் உயிரைக் கொடுத்தாகிலுங் காப்பாற்றாதவன் நட்டான் மனையாளைக் கற்பழித்தவன் செல்லு நரகத்திற் செல்வான் என்றபடி.

     முட்டு - முதனிலைத் தொழிற்பெயர். அரு உயிர் - நிலைமொழி முதனீண்டு குற்றுகரவிதி பெற்றது; "ஆதிநீடல்" என்பதும், "முற்றுமற்றோரோவழி" என்பதும் விதிகள். கடி என்பது பல குணந் தழுவிய ஓருரிச்சொல் [உரி. சூ. 16].

 

239. ஆன்படு நெய்பெய் கலனுள் அது களைந்து
     வேம்படு நெய்பெய் தனைத்தரோ - தேம்படு
     நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
     புல்லறிவி னாரொடு நட்பு.

     (இ-ள்.) தேம்படு நல் வரை நாட - தேன் கூடுகள் சேர்ந்த நல்ல மலைநாடனே!, நயம் உணர்வார் - சிநேகமறியும்படியானவர்களுடைய, நண்பு -, ஒரீஇ - நீக்கி, புல் அறிவினாரொடு நட்பு - அற்பஞான முடையவர்களோடு கொண்ட சிநேகம், ஆண் படு நெய் பெய் கலனுள் - பசுவினிடமுண்டாகு நெய்யை ஊற்றியிருந்த மாத்திரத்தில், அது களைந்து - அந்நெய்யை எடுத்துவிட்டு, வேம்பு அடு நெய் பெய்தது அனைத்து - வேம்பைச் சேர்ந்த நெய்யை யூற்றினாற் போலாகும், எ-று அரோ - அசை.

     [மெய். புணரியல். சூ. 11ன் விதியினால்] தேன்படு தேம்படு ஆயிற்று.

 

240. உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை யின்மை
     பருகற்கு அமைந்தபால் நீரளாய் அற்றே
     தெரிவுடையார் தீயினத்தார் ஆகுதல் நாகம்
     விரிபெடையோடு ஆடிவிட் டற்று.

     (இ-ள்.) உருவிற்கு அமைந்தான்கண் - அழகுக்கு ஏற்றவனிடத்து, ஊர் ஆண்மை இன்மை - ஒப்புரவில்லாமையானது, பருகற்கு அமைந்த பால் - குடிப்பதற்கு ஏற்ற பாலானது, நீர் அளாயற்றே - நீர் கலந்தாற் போலாம்; தெரிவு உடையார் - விவேக முடையவர்கள், தீ இனத்தார் ஆகுதல் - தீமையான இனத்தைச் சேர்ந்தவராயிருப்பது, நாகம் - சர்ப்பமானது, விரி பெடையோடு - பெட்டை விரியன் பாம்பொடு, ஆடி விட்டற்று - புணர்ந்து நீங்கினது போலாம், எ-று.

     நாகம் விரி பெடையோடு புணர்ந்தால் சாகுமென்பார்கள். ஒப்புரவாவது உபகாரஞ் செய்யுங்குணம், சிநேகிப்பதற்கு ரூபமும் ஒரு காரணமாயிருக்க அவனிடத்தில் உபகாரகுணமில்லாமையால் ருசி கெடுதலினால் பால் நீரளாயற்றே யென்றார். அளாய் - வினையெச்சம், யகரமெய் - விகுதி.