நட்பிற் பிழை பொறுத்தல்

bookmark

நட்பியல்

 

 [அதாவது சிநேகித்தவர் தமக்குச் செய்யுங் குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுதல்.]

 

221. நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
     அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
     நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
     புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

     (இ-ள்.) நல்லார் என - நல்லவர்களென்று; தாம் நனி விரும்பி கொண்டாரை - தாங்களே மிகவும் இச்சித்துச் சிநேகங் கொண்டவர்களை, அல்லார் எனினும் - நல்லவரல்லாதவரா யிருந்தாலும், அடக்கி கொளல் வேண்டும் - அக்குற்றங்களைத் (தம்மனதில்) அடக்கி நட்பாகவே கொள்ள வேண்டும்; நெல்லுக்கு உமி உண்டு -, நீர்க்கு நுரை உண்டு -, பூவிற்கும் - புஷ்பத்திற்கும், புல் இதழ் உண்டு - (ஈனமான) புற இதழ் இருக்கின்றது, எ-று.

     யாரும் விரும்பிக் கொள்ளத்தக்க நெல் நீர் பூ இவைகளிலும் உபயோகமற்ற தாழ்மையான பொருள்க ளிருக்கின்றமையால் சில குணங்களைக் கொண்டு நாம் சிநேகித்தவரிடத்தில் உள்ள குற்றங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றபடி, "குற்றம் பார்க்கிற் சுற்றமில்லை". அவர்களுக்கு ரகசியத்தில் புத்தி சொல்லி அடங்கச் செய்து கொள்ள வேண்டுமெனவு முரைக்கலாம்.

 

222. செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார்
     மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
     வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
     தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.

     (இ-ள்.) செறுத்தோறு உடைப்பினும் - (தாங்கள்) கட்டுந்தோறும் உடைத்துக் கொண்டு போனாலும், நீர் நசை வாழ்நர் - ஜலத்தை விரும்பி வாழ்கின்றவர்கள், செம்புனலோடு - நல்ல நீரோடு, ஊடார் - பிணங்காதவராய், மறுத்தும் சிறை செய்வர் - மறுபடியும் கட்டிக் கொள்வார்கள்; (அப்படியே) வெறுப்ப வெறுப்ப செயினும் - வெறுக்கும்படியான காரியங்களை அடிக்கடி செய்தாலும், தாம் வேண்டி - தாங்கள் விரும்பி, தொடர்பு கொண்டார் - சிநேகங் கொண்டவர்கள், பொறுப்பர் - பொறுத்துக் கொள்ளுவார்கள், எ-று.

     வெறுப்ப என்பது பலவின்பால் வினையாலணையும் பெயர்; அடுக்கு பலமுறை செய்தலாகிய பொருணிலையால் வந்தது. அதனை வினையெச்சமா வைத்து துன்பங்களை எனச் செயப்படுபொருள் வருவித்து உரைப்பதும் அமையும். அந்தப் பக்ஷத்தில் அடுக்கு மிகுதிப் பொருளில் வந்ததாம்.

 

223. இறப்பவே தீய செயினும் தம் நட்டார்
     பொறுத்தல் தகுவதொன்று அன்றோ - நிறக்கோங்கு
     உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட!
     ஒருவர் பொறைஇருவர் நட்பு.

     (இ-ள்.) தன் நாட்டார் - தன்னுடைய சிநேகிதர், இறப்ப தீய செயினும் - மிகவுந் தீங்குகளைச் செய்தாலும், பொறுத்தல் - பொறுத்துக் கொள்ளுதல், தகுவது ஒன்று அன்றோ - தகுதியான ஒரு காரியமல்லவா; நிறம் கோங்கு - நல்ல நிறமுள்ள கோங்கம் பூவிலே, உருவம் வண்டு ஆர்க்கும் - அழகுள்ள வண்டுகள் சப்திக்கப் பெற்ற, உயர்வரை நாட - உயர்வான மலைகளுள்ள நல்ல நாட்டை யுடையவனே!, ஒருவர் பொறை - ஒருவர் பொறுப்பது, இருவர் நட்பு - இருவருடைய சிநேகம் ஆகின்றது, எ-று. ஏ - அசை.

     பொறை - தொழிற்பெயர், பொறு - பகுதி, ஐ - விகுதி.

 

224. மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம்
     கடுவிசை நாவாய் கரையலைக்கும் சேர்ப்ப!
     விடுதற்கு அரியார் இயல்பிலரேல் நெஞ்சம்
     சுடுதற்கு மூட்டிய தீ.

     (இ-ள்.) மடி திரை தந்திட்ட - மடிந்து வீழ்கின்ற அலைகள் கொடுத்த, வான் முத்தம் - பிரகாசமான கிரணங்களையுடைய முத்துக்களை, கடு விசை நாவாய் - மிகுந்த வேகமுள்ள கப்பல்கள், கரை அலைக்கும் சேர்ப்ப - கரைகளிலே அலையச் செய்கின்ற கடற்கரை யரசனே!, விடுதற்கு அரியார் - (சிநேகம்) விடக்கூடாதவர்கள், இயல்பு இலரேல் - சற்குணம் இல்லாதவரானால், (அவர்) நெஞ்சம் சுடுதற்கு - மனதைச் சுடுவதற்கு, மூட்டிய தீ - மூட்டப்பட்ட நெருப்புப் போலாவர், எ-று.

     அலைகளிலே இருந்த முத்துக்கள் கப்பலின் விசையால் கரையில் தள்ளப்பட்டு அலைந்து கொண்டிருக்கும்படியான நாடு என்று சிறப்புக் கூறியது. நேசித்தவரை விடக்கூடாதென்று முன் சொன்னோம் ஆனாலும் அவர்கள் சற்குணமிலராயின் மனதிற்கு மிகத் துயரமாயிருக்கும். எனவே சிநேகித்தவர் தவறின்றி நடக்க வேண்டும் என்றதாயிற்று. தந்திட்ட - இதில் இடு - துணைவினை.

 

225. இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
     பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; - பொன்னொடு
     நல்லிற் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம்
     இல்லத்தில் ஆக்குத லால்.

     (இ-ள்.) பொன்னொடு நல் இல் சிதைத்த - பொன்னோடு கூட நல்ல வீட்டைக் கட்டழித்த, தீ - நெருப்பை, நாள்தோறும் - ஒவ்வொரு நாளும், நாடி - விரும்பி, தம் இல்லத்தில் - தமது மாளிகையில், ஆக்குதலால் - (யாவரும்) உண்டாக்குவதனால், இன்னா செயினும் - துன்பங்களைச் செய்தாலும், விடற்பாலர் அல்லாரை - விடக்கூடாதவர்களை, பொன்னாக போற்றிக் கொளல் வேண்டும் - பொன்போல் நினைத்து மேலாகக் கொள்ள வேண்டும், எ-று.

     வீட்டையும் பொன்னையும் அழித்ததென்று கைவிடாமல் நெருப்பைச் சனங்கள் தினம் வீடுகளில் உண்டாக்காமற் போனால் எந்தச் சுகமும் வாய்க்காது, அதுபோல் துன்பஞ் செய்தாலும் உதவியான சிநேகிதரை கைவிடக் கூடாதென்பது கருத்து.

     விடலாகிய பான்மையுடையவர் விடற்பாலர்; பான்மை - இயல்பு. முற்பாட்டிற் கூறியபடி. நெஞ்சஞ் சுடுதற்கு மூட்டிய தீயானாலும் பொறுத்தல் கடமை என்றார்.

 

226. இன்னா செயினும் விடுதற்கு அரியாரைத்
     துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர்
     விண்குத்து நீள்வரை வெற்ப! களைபவோ
     கண்குத்திற்று என்றுதம் கை.

     (இ-ள்.) துன் அரு சீர் - சேருதற்கரிய சிறப்புள்ள, விண்குத்து - வானத்தைக் குத்துகின்ற, நீள் வரை - நீண்ட மூங்கிலை யுடைத்தான, வெற்ப - மலைக்கு உரியவனே!, இன்னா செயினும் - துன்பங்களைச் செய்தாலும், விடுதற்கு அரியாரை - விடக்கூடாதவர்களை, துன்னா - சேராமல், துறத்தல் - விட்டுவிடல், தகுவதோ - தகுந்ததோ [அன்று], கண் குத்திற்று என்று - கண்ணைக் குத்தினது என்று, தம் கை - தமது கையை, களைபவோ - நீக்கிப் போடுவார்களோ (உலகத்தார்), எ-று.

     "னலமுன்றனவும்" என்கிற [மெய். புணரியல். 34வது சூத்திரத்தினால்] த ற ஆகி "குறில் செறியாலள" என்கிற [மெய். புணரியல். சூ. 26னால்] கெட்டு, துறத்தறகுவதோ என்றாயிற்று.

 

227. இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்
     கலந்து பழிகாணார் சான்றோர்; - கலந்தபின்
     தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார்
     தாமும் அவரின் கடை.

     (இ-ள்.) இலங்கு நீர் தண் சேர்ப்ப - விளங்குகின்ற ஜலத்தினால் குளிர்ச்சியான கடற்கரை யுடையவனே!, இன்னா செயினும் -, சான்றோர் - பெரியோர், கலந்து - சிநேகித்து, பழி காணார் - குற்றத்தைப் பார்க்க மாட்டார்; கலந்த பின் - நேசித்த பின்பு, தீமை எடுத்து உரைக்கும் - (சிநேகிக்கப்பட்ட வருடைய) குற்றங்களை எடுத்துச் சொல்லுகின்ற, திண் அறிவு இல்லாதார் தாமும் - திடமான அறிவில்லாதவர்களும், அவரில் கடை - தீமை செய்யு நேசரைக் காட்டிலுந் தாழ்மையானவர், எ-று. தாம் - அசை.

     பழி - முதனிலைத் தொழிற்பெயர், பழிக்கப்படுவதற்கு ஆகுபெயர்; செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயரென்றுஞ் சொல்லலாம்.

 

228. ஏதிலார் செய்தது இறப்பவே தீதெனினும்
     நோதக்கது என்னுண்டாம் நோக்குங்கால்! - காதல்
     கழுமியார் செய்த கறங்கருவி நாட!
     விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.

     (இ-ள்.) கறங்கு அருவி நாட - ஒலிக்கின்ற மலையருவிகளுள்ள நாட்டுக் குடையவனே!, ஏதிலார் செய்தது - அயலார் செய்தது - அயலார் செய்தது, இறப்பவே தீது எனினும் - மிகவுங் கொடிய தானாலும், நோக்குங்கால் - (விதியை) யோசித்தால், நோதக்கது - வெறுக்கத்தக்கது, என் உண்டாம் - என்ன உண்டு, காதல் கழுமியார் - அன்பு மிகுந்தவர், செய்த - செய்த (தீமை), நெஞ்சத்துள் நின்று - மனதில் நின்றால் [சிந்தித்தால்], விழுமிது ஆம் - சிறந்த தாய்விடும், எ-று.

     அயலார் செய்ததே யோசிக்குங்கால் வெறுக்கத் தகாததானால் அன்பர் செய்தது பிரியமாகும் என்பது கருத்து.

     செய்தது என்பது ஈறு குறைந்தது; அல்லது விழுமிது என்பது சிறந்த பொருளுக்கு ஒரு பெயராகக் கொள்ளத்தக்கது. நோதற்குத் தக்கது நோதக்கது; நோ - முதனிலைத் தொழிற் பெயர், நான்கனுருபு தொக்கு; தக்கதோடு ஒரு மொழித் தன்மைப் பட்டதெனக் கொள்க. கழுமியார் - கழுமு - பகுதி, இன் - ஈறு குறைந்தது, ஆர் - விகுதி.

 

229. தமரென்று தாம்கொள்ளப் பட்டவர் தம்மைத்
     தமரன்மை தாமறிந்தார் ஆயின், - அவரைத்
     தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை
     தம்முள் அடக்கிக் கொளல்.

     (இ-ள்.) தமர் என்று - தம் உறவினர் என்று, தாம் கொள்ளப்பட்டவர் - தாமே உறவு கொள்ளப் பட்டவர், தம்மை - தம்மிடத்தில், தமர் அன்மை - தம்முறவிற்கு ஏலாமை செய்ததை, தாம் அறிந்தார் ஆயின் - தாம் அறிந்து கொண்டாரானால், அவரை - அப்படிச் செய்தவரை, தமரினும் நன்கு மதித்து - தம்மவரினு மேலாகக் கொண்டு, தமர் அன்மை - (அவரிடம் காணப்பட்ட) தமரன்மையை, தம்முள் - தம்மனதில், அடக்கி கொளல் - அடக்கிக் கொள்க, எ-று.

     தமரன்மை அதன் காரியத்திற்கு ஆயிற்று. தம்மை - வேற்றுமை மயக்கம் அடக்கிக் கொளல் - வியங்கோள் வினைமுற்று, [வினை. சூ. 19 உரையைக் காண்க].

 

230. குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
     நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான்
     மறைகாவா விட்டவன் செல்வழிச் செல்க
     அறைகடல்சூழ் வையம் நக.

     (இ-ள்.) ஒருவனை நட்டபின் - ஒருவனை நேசித்த பிறகு, குற்றமும் - (அவனிடம்) குற்றத்தையும், ஏனை குணமும் - மற்ற குணத்தையும், நாடி திரிவேனேல் - ஆராய்ந்து கொண்டு திரிவேனேயானால், நட்டான் - நேசித்தவனுடைய, மறை - ரகசியத்தை, காவா விட்டவன் - காக்காமல் வெளிவிட்ட பாவி, செல் உழி - போம் கதியில், அறை கடல் சூழ் வையம் நக - ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த பூமி (இகழ்ந்து) சிரிக்கும்படி, செல்க - போகக்கடவேன், எ-று.

     எவ்வித ரகசியத்தை வெளியிடுவதினாலே நேசித்தவனுக்குத் துன்பமுண்டாகுமோ அவ்வித ரகசியத்தை வெளியிட்ட பாவி போகத்தக்க நரகந்தான் சிநேகித்தபின் அவனுடைய குண தோஷங்களைச் சொல்லிக் கொண்டு திரிகிறவனுக்கும் என்றபடி.

     மறை - செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர்; மறைக்கப்படுவது. நக - செயவெனெச்சம், நகு - பகுதி, அ - விகுதி, குற்றுகர விதி பெற்றது. செல்வுழி - இங்கே வகரம் தோன்றியதற்கு விதி, [உயிர் புணர். 13ம் சூத்திர வுரையிற்] காண்க.