நட்பாராய்தல்
நட்பியல்
[அதாவது சிநேகிக்கத்தக்க குணமிருப்பதைத் தெரிந்து கொள்வது.]
211. கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ்ஞான்றும்
குருத்திற் கரும்புதின் றற்றே; - குருத்திற்கு
எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்
மதுரம் இலாளர் தொடர்பு.
(இ-ள்.) கருத்து உணர்ந்து - (நூல்களின்) உட்பொருளை அறிந்து, கற்று அறிந்தார் கேண்மை - படித்தெடுத்தவரோடு கொண்ட சிநேகம், எஞ்ஞான்றும் - எப்போதும், குருத்தின் கரும்பு தின்றது அற்று - குருத்திலிருந்து கரும்பைத் தின்றாற் போலும்; என்றும் - எக்காலத்தும், மதுரம் இலாளர் தொடர்பு - (கல்வியறிவாகிய) இனிப்பில்லாதவரோடு கொண்ட சிநேகம், குருத்திற்கு -, எதிர் செல - எதிரே செல்லும்படியாக, [அடியிலிருந்து என்கிறபடி], தின்று அன்னதகைத்து - தின்றாற் போலிருக்கிற குணமுள்ளது, எ-று அரோ - அசை.
கரும்பைக் குருத்திலிருந்து தின்றால் வரவர இனிமை யதிகமாவதுபோலே கற்றோர் கேண்மையு நாளுக்குநாளினிப்பாகும்; அதற்கு எதிர்செலத்தின்றால் வர வர இனிமை குறைவது போல் கல்லாதார் நட்பு நாளுக்குநாள் உருசி குறைந்து வெறுக்கப்படும் என்பதாம். இக்கருத்தே கல்வியில் எட்டாம் பாட்டிலும் சொல்லப்பட்டது.
அற்றே என்பதில் ஏகாரம் தேற்றத்தில் வந்ததென்னலாம். உணர்ந்து என்னும் எச்சம் சற்று என்பதைக் கொண்டது. அறிந்தார் என்பதற்கு காரியா காரியங்களை அறிந்தவர்கள் என்பது பொருள். இதுதான் படித்தெடுத்தவர் என்று கூறப்பட்டது. உட்பொருள் தெரிய நூல்களைக் கற்று நன்மை தீமைகளைப் பகுத்தெடுக்குந் தன்மையுள்ளவர்கள் என்பது திரண்ட கருத்து.
212. இற்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர்
நற்புடை கொண்டமை யல்லது - பொற்கேழ்
புனலொழுகப் புள்ளரியும் பூங்குன்ற நாட!
மனமறியப் பட்டதொன் றன்று.
(இ-ள்.) பொன் கேழ் - பொன்னிறமுள்ள, புனல் ஒழுக - அருவி நீர் பெருக, புள் இரியும் - பறவைகள் ஓடுகின்ற, பூ குன்ற நாட - அழகான மலை சூழ்ந்த நாடுடையவனே!, இல் பிறப்பு எண்ணி - (அவருடைய) நற்குடிப்பிறப்பை எண்ணி, இடை திரியார் - நடுவில் மாறார்கள், என்பது ஓர் நல்புடை - எண்று சொல்லப்பட்ட ஒரு நல்ல பக்ஷத்தை, கொண்டமை அல்லது - (சிநேகிப்பதற்கு ஏதுவாகக்) கொண்டதேயல்லாமல், மனம் அறியப்பட்டது ஒன்று அன்று - அவருடைய மனநிலை யறியப்பட்டதென்கிற ஒருபக்ஷம் அல்ல, எ-று.
முற்பாட்டில் கூறியபடி சிநேகிப்பதற்கு கல்வி யறிவு காரணமானது போல் நற்குலப்பிறப்பும் காரணமாதலால் நற்குடிப் பிறந்தவர் மாறமாட்டாரென்ற உறுதியினால் சிநேகிக்கலாம்; மனம் அறிவது அசாத்தியம் என்கிறபடி. பொன் மிகுதி பற்றி அந்நிறமுள்ள நீர் ஓடி வரக்கண்டு இது யாதோ என அஞ்சிப் பறவைகள் ஓடுகின்றன என மலையைச் சிறப்பித்தது. [உயிர் புணர் சூ. 50ம்] விதியால் பூங்குன்ற என மெலிமிகுந்தது. கொண்டமை - தொழிற்பெயர்.
213. யானை யானையவர் நண்பொரிஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.
(இ-ள்.) யானை அனையவர் நண்பு - யானை போன்றவர்களுடைய நேசத்தை, ஒரீஇ - விட்டு, நாய் அனையார் கேண்மை - நாய் போன்றவர்களுடைய சிநேகத்தை, கெழீஇ கொளல் வேண்டும் - சேர்த்துக் கொள்வது ஆவசியகம்; (ஏனெனில்) யானை -, அறிந்து அறிந்தும் - பலதரம் அறிந்திருந்தும், பாகனையே கொல்லும் - (தனக்கு உணவு கொடுத்துக் காக்கிற) பாகனையே கொல்கின்றது; எறிந்த வேல் - (தன்னையுடையவன்) பிரயோகித்த ஆயுதமானது, மெய்யது ஆ - தன் உடலில் பொத்ததாயிருக்கவும், நாய் -, வால் குழைக்கும் - வாலையாட்டும், எ-று.
பாகனையே - இங்கு ஏகாரம் சிறப்புப் பொருளில் வந்ததாக் கொளல் வேண்டும். மெய்யது - குறிப்பு வினையாலணையும் பெயர், சினையடி யாப்பிறந்த பெயர் என்பது நேர்.
214. பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; - பலநாளும்
நீத்தார் எனக்கை விடலுண்டோ , தம்நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு.
(இ-ள்.) பல நாளும் - எந்நாளும், பக்கத்தார் ஆயினும் - அருகிலிருப்பவரானாலும், நெஞ்சில் - மனதில், சில நாளும் - சொற்ப தினங்களாகிலும், ஒட்டாரோடு - பொருந்தாதவர்களோடு, ஒட்டார் - சேரமாட்டார்கள். (புத்திசாலிகள்), தம் நெஞ்சத்து - தமது மனசிலே, யாத்தாரோடு - சேர்க்கப்பட்டவர்களோடு, [பொருந்தினவர்களோடு என்றபடி], யாத்த தொடர்பு - சேர்த்த சிநேகத்தை, பல நாளும் நீத்தார் என - பலகாலமும் (தம்மை) விட்டிருப்பவரென்று, கை விடல் உண்டோ - விட்டுவிடுவது இருக்குமா [இல்லை], எ-று.
மனம் பொருந்தாதவர் எத்தனை காலம் கிட்ட விருந்தாலும் அவரை யோக்கியர் நேசிக்கமாட்டார். மனம் பொருந்தினவர் எவ்வளவுகாலம் விட்டிருந்தாலும் அவர் சிநேகத்தைக் கைவிடமாட்டார்கள் என்பது கருத்து.
நீத்தார் - நீ - பகுதி, ஆர் - விகுதி, தகரங்கள் சந்தியும் இடைநிலையும். யாத்தார் - யா - பகுதி, மற்றவை முன் போல்.
215. கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாகும் நட்பாரும் இல்.
(இ-ள்.) கோட்டு பூ போல - கொம்பிலிருக்கிற பூவைப் போலே, மலர்ந்து - (முன்னே) முகமலர்ந்து, பின் கூம்பாது - பின்பு குவியாமல், வேட்டதே வேட்டது - விரும்பினதே விரும்பினதா யிருப்பது, நட்பு ஆட்சி ஆம் - சிநேக பரிபாலனஞ் செய்வதாம்; தோட்ட - தோண்டப்பட்ட, கயம் பூபோல் - குளத்திலிருக்கும் பூவைப் போலே, முன் மலர்ந்து பின் கூம்பு வாரை - முதலில் முகமலர்ச்சியைக் காட்டிப் பின்பு முகம் சுருங்கிப் போகின்றவர்களை, நயப்பாரும் நட்பாரும் இல் - விரும்புகின்றவர்களும் சிநேகிக்கின்றவர்களும் இல்லை, எ-று.
ஒருவரைக் கண்டவுடனே முகமலர்ச்சியோடு விரும்பியது மாறாமலிருந்தால் அதுதான் சிநேக குணம், அப்படியின்றி முன் சந்தோஷங்காட்டிப் பின் வெறுப்படைவது சிநேக குணமல்ல என்பது கருத்து.
வேட்டது - வேள் - பகுதி, ட் - இடைநிலை, அ - சாரியை, து - விகுதி, ள் ட் ஆனது சந்தி, தொழிற்பெயர்; விருப்பம் என்கிறபடி தோட்ட - தொடு என்னு முதனிலை முதனீண்டு டகரமிரட்டிக் காலங் காட்டியது; பெயரெச்சம்.
216. கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்; - தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.
(இ-ள்.) கடை ஆயார் - கீழ்த்தரமானவர்கள், நட்பில் - சிநேகத்தில், கமுகு அனையர் - பாக்குமரத்தை ஒத்தவர், இடை ஆயார் - மற்ற நடுத்தரமானவர், தெங்கின் அனையர் - தென்னை மரத்தை யொத்தவர்; தலை ஆயார் - முதற்றரமானவர்கள்; எண் அரு பெண்ணை போன்று - எண்ணுதற்கு அருமையான பனைமரத்தை ஒத்து (இருப்பவர்); தொன்மை உடையார் தொடர்பு - பழமை யுடையவருடைய சிநேகம், இட்ட ஞான்று - செய்த காலத்தில், இட்டதே - செய்ததே, [பின்பு ஒரு காலும் உபசரணையை வேண்டுவதன்று என்கிறபடி], எ-று.
இப்படிச் சொன்னதனால் ஒரு நாள் உபசரணை தவிர்த்தாலும் பாக்குமரம் பயன் கெடுவதுபோல் கீழோர் சிநேகம் கெடுமெனவும், இடையிடையே உபசரணை யில்லாமற் போனால் தெங்கு பழுது படுவதுபோல் மத்திமர் சிநேகம் பழுதாமெனவும் குறிப்பிக்கப்பட்டது. தலையாயாராகிய தொன்மையுடையார் தொடர்பு எனக் கூட்டியுமுரைக்கலாமாயினும் "எடுப்பழிவுளது" என்னுங் குற்றம் வரும் என அறிக. வேறு வகை யுரைப்பாரு முளர், அதுவுங் குற்றத்திற்கே யிடமாம். இருப்பவர் என ஒரு சொல் வருவிக்கப்பட்டது. பழமையாவது ஒரு கால் செய்த நட்பைப் பாராட்டுந் தன்மை இட்டநாளிட்டதே யன்றிப் பின் யாதோ ருபசரணையை வேண்டாதென்னுஞ் சிறப்பு நோக்கித்தான் எண்ணரும் பெண்ணை என்னப்பட்டது.
217. கழுநீருள் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்; - விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய்.
(இ-ள்.) கழு நீருள் கார் அடகு ஏனும் - அரிசி கழுவிய நீர்ல் சமைத்த கறுத்த இலைக்கறியானாலும், ஒருவன் -, விழுமிது ஆ - சிறப்பாக [பிரியமாக], கொள்ளின் - ஏற்றுக் கொண்டால், அமிழ்து ஆம் - அமிருதம் போலாம்; விழுமிய - சிறந்த, குய் - தாளிப்புள்ள, துவை - கறிகள், ஆர் - நிறைந்த, வெண் சோறே ஆயினும் - வெண்மையான நல்லரிசிச் சோறே யானாலும், மேவாதார் - நேசியாதவருடைய, கைத்து - பொருளாகிய உணவை, உண்டல் - புசித்தல், காஞ்சிரங்காய் - எட்டிக்காயைத் தின்பது போலாம், எ-று.
உணவிலுள்ள வுருசியும், சிநேக குணம் பற்றியே சிறக்கும் என்பது கருத்து.
விழுமிது - விழுமு - பகுதி, இன் - இடைநிலை, ஈறு தொக்கது, து - விகுதி.
218. நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.
(இ-ள்.) நாய் கால் சிறு விரல் போல் - நாயின் கால்களிலுள்ள சிறிய விரல்களைப் போலே, நன்கு அணியர் ஆயினும் - மிகவும் நெருக்கமுள்ளவரா யிருந்தாலும், ஈ கால் துணையும் - ஈயின் காலளவாகிலும், உதவாதார் நட்பு - உதவி செய்யாதவர்களுடைய சிநேகம், என் ஆம் - என்ன பயனாம்; செய் விளைக்கும் - கழனியை விளையும்படி செய்கின்ற, வாய்க்கால் அனையார் தொடர்பு - நீர்க்காலை யொத்தவர்களுடைய சிநேகத்தை, சேய்த்து ஆனும் - தூரத்திலிருப்பதானாலும், சென்று கொளல் வேண்டும் - போய்க் கொண்டு வர வேண்டும், எ-று.
சேய்த்து - குறிப்பு முற்று, சேய் - பண்படி, பகுதி.
219. தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்
விளியா அருநோயின் நன்றால் - அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்லா
புகழ்தலின் வைதலே நன்று.
(இ-ள்.) தெளிவு இலார் நட்பின் - விவேக மில்லாதவருடைய நேசத்தைக் காட்டிலும், பகை நன்று - அவருடைய விரோதம் நல்லது; விளியா - தீராத, அரு நோயின் - அருமையான வியாதியைக் காட்டிலும், சாதல் நன்று - செத்துப் போவது நல்லது; அளிய - (மனம்) வெந்து போம்படி, இகழ்தலின் - நிந்திப்பதைக் காட்டிலும், கோறல் - கொல்லுதல், இனிது - நல்லது; இல்ல புகழ்தலின் - இல்லாத குணங்களைச் சொல்லிப் புகழ்வதைப் பார்க்கிலும், வைதலே - திட்டுவதே, நன்று - நல்லது, எ-று. மற்று - அசை.
மூடனுடைய சிநேகத்தினால் ஏதாகிலும் துன்பம் அனுபவிக்க வேண்டி வரும்; பகையினால் ஒன்று மில்லையாம்; ஆந்தனால் தெளிவிலார் நட்பின் பகை நன்று என்றார். கோறல் - கொல் - பகுதி, தல் - விகுதி, பகுதி முதனீட்சி விகாரம்.
220. மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொரீஇப் பொருள்தக்கார்க் கோடலே வேண்டும்
பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇப் பின்னைப் பிரிவு.
(இ-ள்.) பலரோடு - அநேகரோடு, மரீஇ - சேர்ந்து, பல் நாள் - அநேகநாள், முயங்கி - கலந்து, பொரீஇ - (மனநிலையில்) ஒப்பாகி, பொருள் தக்கார் - பிரயோஜனமாகத் தக்கவர்களை, கோடலே வேண்டும் - கொள்வதே ஆவசியகம்; பரீஇ - கடித்து, உயிர் செகுக்கும் - உயிரை நாசப்படுத்துகின்ற, பாம்பொடும் - பாம்போடு கூடவும், மரீஇ - சேர்ந்து, பின்னை பிரிவு - பின்பு பிரிந்து போவது, இன்னா - பிரியமாகமாட்டாது, எ-று.
பலரோடும் பழகிப் பார்த்து உபயோகமானவர்களைச் சிநேகித்துக் கொள்ள வேண்டும். கெட்ட குணமுள்ள பாம்போடாயினும் நேசித்துப் பிரிவது துக்கமா யிருக்குமானால் மேலானவர்களைப் பிரிவது மகா துக்கமல்லவா என்கிறபடி.
பொரீஇ - பொருவு - பகுதி, மற்றவை செய்யு ணிலையில் வந்த விகாரம். மற்ற வினையெச்சங்களு மிப்படியே. இன்னா - இன்னாது என்பதில் ஈறு தொகுத்தல்.
