இளமை நிலையாமை
துறவியல்
[அதாவது இளமைப் பருவம் சதமல்லவென்று சொல்லுவது.]
11. நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்தீருப் பார்.
(இ-ள்.) நல்லறிவாளர் - நல்ல விவேகமுள்ளவர், நரை வரும் என்று எண்ணி - மூப்பு (நிச்சயமாக) வரத்தக்கது என்று நினைத்து, குழவியிடத்தே துறந்தார் - இளம் பருவத்திலேயே இல்வாழ்க்கையை விட்டார்கள்; புரை தீரா - குற்றம் நீங்காத, மன்னா இளமை - நிலையில்லாத இளமைப் பிராயம், மகிழ்ந்தாரே - (இருக்கிறதென்று) சந்தோஷப்பட்டவர்களே, கோல் ஊன்றி - கோலை ஊன்றிக் கொண்டு, இன்னாங்கு எழுந்திருப்பார் - வருத்தமாக எழுந்திருப்பார்கள், எ-று.
காரியாகாரியங்களைப் பகுத்தறிந்தவர்கள் இளமையுள்ள போது மகிழாமல் அக்காலத்துக்கு உரிய சுகங்களைக் கைவிட்டிருப்பார்; இளமையிலே மகிழ்ந்தவரோ அது நீங்கி மூப்பு வந்த போது சுகத்தையனுபவிக்கச் சக்தியில்லாமையால் வருத்தப்படுவார்கள் என்பது கருத்து.
நரை என்பது மூப்புக்குக் காரிய ஆகுபெயர். குழவியிடத்தே - இடம் - ஏழனுருபு தாமே யெழுந்திருக்க மாட்டாமல் கோலையூன்றியும் எழுந்திருக்க வருந்துவார் என்பது சுகானுபவசக்தி இல்லாமைக்குக் குறிப்பு மன்னா - மன் என்னும் இடைச்சொல்லடியாகப் பிறந்த எதிர்மறைப் பெயரெச்சம், ஈறுதொக்கது. இன்னா ஆங்கு என்பது ஈறு தொகுத்தலாய் இன்னாங்கு என்றாயிற்று.
12. நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன, - உட்காணாய்;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி.
(இ-ள்.) நட்பு நார் அற்றன - சினேகங்களாகிய பந்தனைகள் அற்றுப் போயின நல்லாரு அஃகினார் - பெண்டுகளும் அன்பு குறைந்தார்கள். அற்பு தளையும் அவிழ்ந்தன - அன்பாகிய பந்தமும் அவிழ்ந்து போயின; உள் காணாய் - மனதிலே யோசித்துப் பார்; வாழ்தலின் - உயிரோடிருப்பதிலே, ஊதியம் என் உண்டாம் - பயன் என்ன உண்டு, ஆழ் கலத்து அன்ன கலி வந்தது - கடலில் முழுகுகின்ற கப்பலிடத்து உண்டாகும் ஓசை போன்ற (உறவினர் அழுங் குரல்) வந்தது, எ-று. உறவினர்களும் மனைவிகளும் இனி இவனால் உபயோகமில்லையென்று அன்பில்லாமல் இருக்கவும், தனக்கும் யாரிடத்தும் அன்பு நீங்கியிருக்கவும், மூப்பு வந்து நலிய உயிரோடிருப்பதிற் பயனென்ன? அதுதான் சதமோ, சாவுங்கிட்டிற்றே; இவற்றால் இளமை நிலைமை யல்லவென்று நீ யோசித்து இளமை மகிழாதே என்பது கருத்து.
நட்பு - நட்பினனுக்கு ஆகுபெயர். என் - எவனென்னும் குறிப்பு முற்று இடைகுறைந்தது. ஆம் - அசை, உண்டாம் என ஒரு சொல்லாகவுங் கொள்ளலாம். வந்தது - நிச்சயம் பற்றி இறந்த காலமா வந்த வழுவமைதி கலத்தன்ன - கலத்தது அன்ன, ஈறு தொகுத்தல், ஏ - அசை.
13. சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே
ஏம நெறிபடரும் ஆறு.
(இ-ள்.) சொல் தளர்ந்து - பேச்சு ஓசை குன்றி, கோல் ஊன்றி - தடியைப் பிடித்துக் கொண்டு, சோர்ந்த நடையினராய் - தள்ளாடிப் போன நடையுடையவராய், பல் கழன்று - பற்கள் நீங்கிப் போய், பண்டம் பழிகாறும் - (தேகமாகிய) பண்டம் பழிப்பை யடையுமளவும், இல் செறிந்து - இல்வாழ்க்கையில் நெருங்கியிருந்து, காம நெறி படரும் - ஆசை வழியிலே செல்லுகின்ற, கண்ணினார்க்கு - அறிவுடையவருக்கு, ஏமம் நெறி படரும் ஆறு - சுகமாகிய வழியில் செல்லும் வகை, இல்லை -, எ-று. ஏ - அசை.
மூப்பினால் சுகானுபவத்திற்கு உரிய அங்கங்களெல்லாம் பழுதுபடச் சாமளவும் உலக இன்பத்தையே நாடினவர்கள் மோட்ச இன்பத்துக்குரிய வழியில் செல்லார்கள் என்பது கருத்து.
சொல் தளர்ந்து, பல் கழன்று, - இவை சினை வினையாதலால் முதல் வினையோடு முடிந்தன [வினை. சூ. 26].
14. தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா
மம்மர்கொள் மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக் கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.
(இ-ள்.) தாழா - குனிந்து, தளரா - தளர்ச்சியடைந்து, தலைநடுக்கா - தலை நடுக்கலெடுத்து, தண்டு ஊன்றா - தடியை ஊன்றிக் கொண்டு, வீழா இறக்கும் - வீழ்ந்து செல்லுகின்ற, இவள் மாட்டும் - இவளிடத்தும், தாழ் இல்லா - உறுதி இல்லாத, மம்மர் கொள் - மோகத்தைக் கொண்ட, மாந்தர்க்கு - மனிதருக்கு, தன் கை கோல் - அவள் கையிலிருக்கும் ஊன்று கோலானது, அம்மனை கோல் ஆகிய ஞான்று - அவள் தாய்க்கு ஊன்றுகோலா யிருந்த நாளில், அணங்கு ஆகும் - வருத்த முண்டாயிருக்கும் [மிக்க ஆசை உண்டாயிருக்கு மென்றபடி] எ-று.
மூப்பினால் முதுகு வளைந்து தலை நடுக்கத்தோடு தள்ளாடிச் செல்லும் இந்தக் கிழவியினிடத்திலும் அவள் பருவமடைந்திருந்த காலத்தில் காமுகர்க்கு ஆசையாய் வருத்தமுண்டாயிருக்கும், ஆகவே இப்போது வெறுக்கத்தக்க நிலையுள்ள இவள் முன் ஆசைப்படத்தக்கவளா யிருந்தாள் என்பது கருத்து.
இதனால் இளமை நிலையல்ல என்றதாயிற்று. தாழா முதலியவை செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள், தலை நடுக்கா என்பது சினைவினையாதலின் முதல்வினையோடு முடிந்தது. இவள்மாட்டும் - உம்மை இழிவு சிறப்பு. கோல்மேல் வைத்து அம்மானை ஆடுகிற வழக்கமும் உண்டு ஆதலால், இவள் இப்பொழுது ஊன்றிக் கொண்டு போகும் கோல் அம்மானை ஆடும் கோலாகிய காலத்து என்றால் இளமைப் பருவத்து எனவும் கருத்துக் கொள்ளலாம்.
15. எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள்; - தனக்குத்தாய்
ஆகியவளும் அதுவானாள் தாய்த்தாய்க்கொண்டு
ஏகும் அளித்திவ் வுலகு.
(இ-ள்.) எனக்கு தாய் ஆகியாள் - எனக்குத் தாயாயிருந்தவள், என்னை ஈங்கு இட்டு - என்னை இவ்வுலகத்தில் விட்டுவிட்டு, தனக்கு தாய் நாடி - தனக்கொரு தாயைத் தேடி, சென்றாள் - போனாள்; தனக்கு தாய் ஆகியவளும் - அவளுக்குத் தாயாயிருந்தவளும், அது ஆனால் - அப்படியானால், இ உலகு - இந்த உலகம், தாய் தாய் கொண்டு - ஒரு தாய் மற்றொரு தாயைத் தேடிக் கொண்டு, ஏகும் அளித்து - செல்லும் படியான ஏழமையை உடையது, எ-று.
தாய் நாடிச் சென்றாள் என்றால் இறந்து இன்னொருத்தி வயிற்றிற் பிறக்கிறாள் என்பதாம். மக்களைப் பெற்று இளமையிலேயே இறக்கிறாள் என்பதனால் இளமை சதமல்ல என்பது கருத்து.
ஆகியாள் - ஆகு - பகுதி, இன் - இடைநிலை, ஈறு கெட்டது, ஆள் - விகுதி, ய் - உடம்படுமெய், சந்தி. ஆகியவள் - இதில் ஈறுகெட்ட இடைநிலைமேல் அகரச் சாரியையும் அள் விகுதியும் வந்தன. தாய்த் தாய்க் கொண்டு என்பதில் முதலது எழுவாயாதலினால் தகரம் விரித்தல் விகாரம், இரண்டாவதில் "இயல்பின் விகாரமும்" என்கிற விதியால் ககரம் மிக்கது, 'தாய் தாய்க் கொண்டு' என்கிற பாடம் நன்று. 'தாயைத் தாவிக் கொண்டு' எனவும் உரைக்கலாம். அதில் தாய் - வினையெச்சமாம், யகரம் - வினையெச்சவிகுதி, ஏ - அசை.
16. வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல்.
(இ-ள்.) வெறி அயர் - வெறியாட்டம் ஆடுகிற, வெம் களத்து - உக்கிரமான இடத்தில், வேல் மகன் பாணி - பூசாரியினது கையில், முறி ஆர் நறு கண்ணி - தளிர்கள் நிறைந்த வாசனையுள்ள பூமாலை, முன்னர் தயங்க - எதிரில் விளங்க, மறி - ஆடு, குளகு உண்ட அன்ன - உணவை உண்டதற்குச் சமானமான, மன்னா மகிழ்ச்சி - நிலையில்லாத சந்தோஷம், அறிவுடையாளர்கண் இல் - விவேகமுள்ளவர்களிடத்து இல்லை, எ-று.
உடனே தன்னை வெட்டுகிறதற்குக் கத்தி பிடித்திருக்கிற பூசாரி கையில் தொங்குகிற மாலையிலுள்ள தளிரைத் தின்று அவ்வாடு சந்தோஷப்படுகிறதற்குச் சமானமாயிருக்கின்றது. இன்றைக் கிருந்து நாளை அழியும்படியான இளமையைக் கண்டு மகிழ்தல் என்பது கருத்து.
பல ஜெந்துக்களைப் பலியிடுமிடமாதலால் வெங்களமென்றது. வேல் என்பது ஆயுதப் பொதுப் பெயராகையால் இங்கே கத்திக்குக் கொள்க. ஆர் - வினைத்தொகை. நறுங்கண்ணி - பண்புத்தொகை. தயங்க - நிகழ்கால வினையெச்சம். உண்ட அன்ன என்பது ஈறு தொகுத்தலால் உண்டன்ன என்று ஆயிற்று. உண்டு என்பதை உண்டால் என்பதின் திருபாகக் கொண்டும் உரைக்கலாம் [வினை சூ. 25] இல் - விகுதி கெட்ட குறிப்பு முற்று முடையாளர் - உடைமையை ஆள்பவர் என்பது பொருள், ஒரு சொற்றன்மைப்பட்டது.
17. பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து.
(இ-ள்.) இளமை - இளமைப் பருவமானது, பனி படு சோலை - குளிர்ச்சி பொருந்திய சோலையினிடத்து, பயன் மரம் எல்லாம் - பயனைத்தரும் மரங்களெல்லாம், கனி உதிர்ந்து வீழ்ந்தால் அற்று - பழங்கள் உதிர்ந்து போய் வீழ்ந்தாற் போலும்; இவளை - இப்பெண்ணை, வேல் கண்ணள் என்று - வேலைப் போன்ற கண்களையுடையவளென்று, நனி பெரிதும் - மிக விசேஷமாக, வெஃகன்மின் - ஆசைப்படாதிருங்கள்; மற்று - இன்னும் யாதெனில், இவளும் - இத்தன்மையான இப்பெண்ணும், குனிந்து - வளைந்து, கோல் கண்ணள் ஆகும் - கோலாகிய கண்ணை உடையவள் ஆவாள், எ-று.
ஒரு சோலையிலே யாவரும் விரும்பும்படி கனிகளோடும் கூடியிருந்த மரம் அக்கனிக ளுதிர்ந்துவிட்டால் விரும்பத்தகாதாவது போல், இளமை அழிந்த பின் அவ்வுடம்பு விரும்பத் தகாததாம்; ஆதலினால் பெண்கள் மேல் ஆசை வைக்க வேண்டாம் என்பதாம்.
மூப்பில் பார்வை குறைந்து போவதினால் கோலைத்தட்டி வழி கண்டு கொண்டு செல்வாள் என மூப்பிற்குக் குறியாகக் கோல்கண்ணள் என்றார்.
படு - வினைத்தொகை, படுதல் = பொருந்துதல். பயன்மரம் - இரண்டனுருபும் பயனும் தொக்கதொடர். மரம் - பால்பகா அஃறிணைப் பெயர், இங்கு பன்மை. கனி உதிர்ந்து - சினைவினை முதலைக் கொண்டது. வீழ்ந்து என்பது வீழ்ந்தால் என்பதின் திரிபு. அற்று - அன் என்னும் உவமையிடைச் சொல்லடியாகப் பிறந்த குறிப்புமுற்று; அன் என்பதில் னகரம் சாரியை. நனி பெரிதும் - ஒரு பொருட்பன்மொழி. வெஃகன்மின் - எதிர்மறை ஏவற்பன்மை முற்று. மற்று - வினைமாற்றில் வந்த அசை. இவளும் - உம்மை - உயர்வு சிறப்பு.
18. பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
இருசிகையும் உண்டீரோ என்று - வரிசையால்
உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
எண்ணார் அறிவுடை யார்.
(இ-ள்.) பருவம் எனைத்து உள - வயது எவ்வளவு உண்டு? பல்லின் பால் ஏனை - பல்லின் தன்மை எவ்வளவு? இரு சிகையும் உண்டீரோ என்று - இரண்டு முனைகளிலும் மென்று தின்றீரோ என்று, வரிசையால் - முறையால், உள் நாட்டம் கொள்ளப்படுதலால் - உள்ளத்தில் ஆராய்தலைச் செய்யப்படுவதனால், யாக்கை கோள் - தேகத்தின் வலிமையை, [இளமையில் தேகக்கட்டை என்றபடி] அறிவுடையார் எண்ணார் - விவேகிகள் (சதமென்று) சிந்திக்கமாட்டார், எ-று.
இப்போது வயதென்ன? பல் தளர்ந்திருக்கிறதோ? பல், தளராமல் இருக்கிறதோ? வாயின் இருபுறங்களிலும் மென்று தின்னும்படி இருக்கிறதா? என்று, இப்படி காலந்தோறும் மாறுதலை விசாரிக்கக் கூடியதாய் இருப்பதினால், இளமையில் உடம்பிலுள்ள வலிமையைச் சதமென்று நினைப்பது புத்தியீனம் என்பது கருத்து.
எனைத்து - என் என்னும் வினாவிடைச் சொல்லின் மேல் ஐகாரச் சாரியையும், து - விகுதியும் வந்த குறிப்புவினையாலணையும் பெயர். உளது என்பது ஈறுதொகுத்தலாய் உள என்று ஆயிற்று. ஏனை - இதுவும் எனைத்து என்பதின் விகாரமெனலாம், அல்லது ஏ என்னும் வினாவிடைச் சொல்லடியாக வந்த குறிப்புமுற்றாம்; னகர ஐகாரங்கள் சாரியை, து - விகுதி குன்றியது.
19. மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்
முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.
(இ-ள்.) நல் வினை - தரும காரியத்தை, மற்று அறிவாம் - பின்னே அறிந்து செய்வோம். (இப்போது) யாம் இளையம் என்னாது - யாம் இளையவரா யிருக்கின்றோம் என்று நினையாமல், கைத்து உண்டாம் போழ்தே - பொருள் இருக்கும் பொழுதே, கரவாது அறம் செய்மின் - மறைக்காமல் தருமத்தைச் செய்யுங்கள்; தீ வளியால் - கடுங்காற்றினால், முற்றி இருந்த - முதிர்ந்த, கனி ஒழிய - பழங்கள் நீங்கி நிற்க [விழாமலிருக்க], நல் காய் - நல்ல காய்கள், உதிர்தலும் உண்டு, எ-று.
பெருங்காற்றடிக்கையில் பழங்கள் உதிராமலிருக்க, காய் உதிர்வது போல் வயது சென்றவர் பிழைத்திருக்க வாலிபர் இறத்தலும் உண்டாதலால், நாம் இப்பொழுது போகங்களை அனுபவித்துக் கொண்டு வயது முதிர்ந்த பின் தரும காரியங்களைச் செய்து கொள்வோம் என்று நினையாமல் பொருள் கிடைத்த போதே தருமம் செய்ய வேண்டும் என்பது கருத்து.
மற்று - வினைமாற்றில் வந்தது, இளையம் - குறிப்பு முற்று, கைத்து - கையிலிருக்கத்தக்கது என்னுங் காரணத்தால் பொருளுக்குப் பெயராயிற்று. உதிர்தலும் - எதிர்மறை உம்மை.
20. ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று.
(இ-ள்.) ஆள் பார்த்து உழலும் - (ஆயுள் முடிந்த) ஆளைத் தேடிக் கொண்டு திரிகிற, அருள் இல் கூற்று - கிருபை யில்லாத எமன், உண்மையால் - இருப்பதனால், தோள் கோப்பு - (பிரயாணத்துக்கு வேண்டுவதாய்) தோளில் சேர்க்கத்தக்க மூட்டையை [தருமத்தை], காலத்தால் கொண்டு - நேர்ந்த காலத்தில் கைக்கொண்டு, உய்மின் - பிழையுங்கள்; பீள் பிதுக்கி - (வயிற்றில் இருக்கும்) கருவை வெளிப்படச் செய்து, தாய் அலற - தாயானவள் கூவி அழ, பிள்ளையை கோடலால் - பிள்ளையைக் கொண்டு போவதினால், அதன் கள்ளம் - அக்கூற்றினுடைய வஞ்சனையை, கடைப்பிடித்தல் நன்று - அறிந்து சேர்தல் நல்லதாம், எ-று.
எமன் கிருபையில்லாமல் சிறியவனோ பெரியவனோ ஆயுசு முடிந்தவனிடம் செல்லுகின்றான்; அன்றியும் தாய் வருந்திச் சுமந்த கருவை அகாலத்தில் வெளிப்படுத்தித் தாய் அழும்படி அந்தக் குழந்தையைக் கொண்டு போகின்றான்; ஆதலால், எமன் எந்தக் காலத்தில் வந்து பிடிப்பானோ என்று நினைத்து இளமையை நிலையுள்ளதென்று நம்பாமல் நேர்ந்த போதே அறஞ் செய்ய வேண்டும் என்பது கருத்து.
"இயல்பின்விகாரமும் விகாரத்தியல்பும்" என்கிற உருபு புணரியல் (16வது) சூத்திரத்தினால் ஆள் என்னும் உயர்திணைப் பெயரின் ஈறு திரிந்தது. அருளில் கூற்று - மெய்யீற்றுப் புணரியல் (30வது) சூத்திர விதியால் இல் என்பது ஈறு இயல்பாய் முடிந்தது. தோளில் கோக்கத்தக்கது தோட்கோப்பு = மூட்டை; அது இங்கே தருமத்திற்கு உவமை ஆகுபெயர். காலத்தால் - ஆல் உருபு இடப்பொருளில் வந்தது; "யாதனுருபிற் கூறிற்றாயினும்" [பெயரியல். சூ. 60] பிதுக்கல் - பிறைனை; பிதுக்கல் - தன்வினை; மெல்லெழுத்து வல்லெழுத்தானது பிறவினைக்குறி. மற்று - அசை.
