பெருமை
துறவியல்
[அதாவது, எவ்வழியு மனக்கலக்கமின்றித் தாம் செய்ய வேண்டியவைகளைக் கூடியவளவு செய்யுமுறுதிப் பாட்டானாய வுயர்வு.]
181. ஈதல் இசையாது இளமைசேண் நீங்குதலால்
காத லவரும் கருத்தல்லர்; - காதலித்து
ஆதுநாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொருள்.
(இ-ள்.) ஈதல் இசையாது - (பொருள் இன்மையால்) பிறர்க்கு ஒன்றைக் கொடுப்பது அமையாது; இளமை - யௌவனம், சேண் நீங்குதலால் - தூரமாக நீங்கிப் போதலால், காதலவரும் - (தம்மிடத்து முன்) ஆசை கொண்டிருந்த பெண்டிரும், கருத்து அல்லர் - (இப்போது) மனப்பற்றுடையவர்கள் அல்லர்; (ஆதலால்) காதலித்து - (இல்வாழ்க்கையில்) ஆசை வைத்து, நாம் ஆதும் என்னும் - நாம் வாழ்வோம் என்கிற, அவாவினை கைவிட்டு - ஆசையை விட்டு, போவதே பொருள் - துறந்து போவதே நல்ல காரியமாகும், எ-று. போலும் - அசை;
ஒருவர்க்கு ஒன்று கொடுத்து உபகாரஞ் செய்யக் கூடாமலும் போகங்களை அனுபவிக்கக் கூடாமலும் போன பின்னும் இல்வாழ்க்கையில் ஆசை வைத்துத் தடுமாறுதலை விட்டு ஆத்துமானுபவ சுகத்தைப் பெற மனந் துணிவது பெருமை என்பது கருத்து.
ஆதும் - தன்மைப்பன்மை யெதிர்கால வினைமுற்று; ஆ - பகுதி, தும் - விகுதி, விகுதியே காலங்காட்டும். [வினை. சூ. 13ம், பத. சூ. 18ம் காண்க.]
182. இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைத்தேம் என்றெண்ணிப்
பொச்சாந்து ஒழுகுவார் பேதையார்; - அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
என்றும் பரிவ திலர்.
(இ-ள்.) இல் சார்வின் - இல்வாழ்க்கையைச் சார்ந்ததனால், ஏமாந்தேம் - களிப்படைந்தோம், ஈங்கு - இந்த இல் வாழ்க்கையில், அமைந்தேம் - (எல்லாம்) நிறைந்தவர் ஆனோம், என்று எண்ணி -, பொச்சாந்து - (பின்வருவதை) மறந்து, ஒழுகுவர் - நடப்பார்கள், பேதையார் - புத்தியீனர்; அச்சார்வு - (இல்வாழ்க்கையாகிய) அந்த ஆதரவுகள், நின்றன போன்று - நிலையானவைகள் போலிருந்து, நிலையா - நிலைநிற்க மாட்டா, என உணர்ந்தார் - என்றறிந்தவர், என்றும் - எப்போதும், பரிவது இலர் - விசனப்படமாட்டார், எ-று.
பல இடையூறுகளால் இல்வாழ்க்கை நிலைகுலைந்து வருந்தும்படி நேரிடுவதுதான் பின்வருவது; இது இத்தன்மையதென முன்பே உணர்ந்து அதிற் பற்றற்று நிற்குநிலை சுகத்திற்கு ஏதுவாதலால் பெருமை என்பது கருத்து.
ஏமாந்தேம் - ஏமா - பகுதி. பொச்சாந்து - பொச்சா - பகுதி. மனைவி மக்கள் மாளிகை விளைநிலம் முதலியவைதாம் அச்சார்வு என்னப்பட்டன.
183. மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
சிறுமைப் படாதேநீர் வாழ்மின் - அறிஞராய்
நின்றுழி நின்றே நிறம்வேறாம் காரணம்
இன்றிப் பலவும் உள.
(இ-ள்.) மயல் இன்றி - மயக்கமில்லாமல், மறுமைக்கு வித்து - மறுமைச் சுகத்திற்குக் காரணமாயுள்ள நற்காரியத்தை, செய்து -, சிறுமைபடாதே - துன்பத்தை யடையாமல், நீர் - நீங்கள், அறிஞர் ஆய் - விவேகமுள்ளவர்களாய், வாழ்மின் - வாழுங்கள்; நின்றுழி நின்றே - இருந்த இடத்தில் இருந்தே, நிறம் - பருவம் [அல்லது குணம்], வேறு ஆம் - மாறிப்போம்; காரணம் இன்றி - காரணமில்லாமலே, பலவும் உள - இன்னும் பலவேறுபாடுகளும் உண்டாம்; [அல்லது குணம் மாறும் படியான காரணமில்லாமலே பலமாறுதல்களும் உண்டாம் என உரைத்துக் கொள்க], எ-று.
நாம் இருக்கிறபடி இருக்கையிலேயே நமக்குத் தெரியாமலே நம்முடைய பருவமுதலானவை மாறிப் போகின்றன. ஆதலால் மறுமைக்குரியவற்றை மயக்கமுறாமுன்னமே செய்து, விவேகிகள் என்று சொல்லும்படி வாழ்ந்து கொண்டு, பருவமுதலிய மாறிப் போன காலத்தில் மனக்குறையின்றி யிருப்பது பெருமை என்பதாம்.
நிறம் ஒளியாதலால் பருவத்துக்கு ஆகுபெயராக் கொள்ளப்பட்டது. காரணமில்லாமல் என்பதற்கு நம்மால் அறியப்பட்ட காரணங்களில்லாமல் என்பது கருத்து. அறிஞராய் நின்றுழி நின்று எனக்கூட்டி "நாம் இன்னதைச் செய்ய வேண்டும் இன்னதைத் தவிர வேண்டும் என்றிருக்கையிலேயே எல்லாம் மாறுகின்றன" எனவும் கருத்துக் கொள்ளலாம். நின்ற உழி என்பது நின்றுழி என விகாரப்பட்டது, உழி - இடம்.
இம் மூன்று பாட்டினாலும் இல்வாழ்க்கைச் சிதைவினால் மனங்கலங்காது நிற்றலாகிய பெருமை கூறப்பட்டது. இனிச் செய்கடன்களைப் பற்றிய வுயர்வு கூறப்பட்டது.
184. உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; - கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல மற்றையார்
ஆஅயம் கண்ணும் அரிது.
(இ-ள்.) உறைப்பு அரு காலத்தும் - மழை பெய்தல் அருமையாகிய காலத்திலும், ஊற்று நீர் கேணி - ஊற்றினால் நீரையுடைய குளம், இறைத்து உணினும் - இறைத்துக் குடித்தாலும், ஊர் ஆற்றும் - ஊரைக் காப்பாற்றும், என்பர் -, கொடை கடன் - கொடுத்தலாகிய கடமை, சாயக்கண்ணும் - தளர்ந்த போதும், பெரியார் போல் - பெரியோர்களைப் போல, மற்றையார் - சிறியவர், ஆயக்கண்ணும் - (செல்வம்) பெருகி வருங்காலத்திலும், அரிது - (பிறர்க்கு உபகரித்தல்) இல்லையாம், எ-று.
ஒரு குளம் மழையில்லாத போதும் ஊற்று நீரால் பலரைக் காப்பாற்றுவது போல் பெருமையுடையோர் கொடுக்கும் வளம் தங்களுக்கில்லாத போதும் யாதோ ஒருவகையால் பிறர்க்கு உதவி செய்வர், சிறியாரோ செல்வ மிகுதியிலும் அப்படிச் செய்யார் என்பது கருத்து.
அருங்காலத்து என்பதில் ஙகரம் இனமிகல். கொடைக் கடனும் என்பதில் உம்மை அசையெனக் கொள்வதே தகுதி. ஆயக்கண், காயக் கண் - வினையெச்சங்கள்; அளபெடைகள் பாட்டினோசையும் இன்னோசையு நிறைக்க வந்தன.
185. உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற் பாலவை.
(இ-ள்.) உறு புனல் தந்து - (செழித்த காலத்தில்) மிகுந்த நீரைக் கொடுத்து, உலகு ஊட்டி - உலகத்தாரை உண்ணச் செய்து, அறும் இடத்தும் - (நீர்) அற்ற காலத்தினும், கல் ஊற்றுழி தோண்டின ஊற்றிலே, ஊறும் - (நீர்) ஊறப்பெற்ற, ஆறே போல் - நதியைப் போல், செல்வம் பலர்க்கு ஆற்றி - (உள்ள போது) தஞ்செல்வத்தைப் பலபெயர்க்குங் கொடுத்து, கெட்டு உலந்தக்கண்ணும் - (அச்செல்வம்) கெட்டழிந்த போதும், சிலர்க்கு ஆற்றி - சிலர்க்காயினுங் கொடுத்து, செயல் பாலவை - செய்யும்படியானவைகளை, செய்வர் - (பெரியோர்) செய்வார்கள், எ-று.
கல் - வினைத்தொகை. செயல்பாலவை - செயலுக்குத்தக்க பான்மையுடையவை; பான்மை - குணம் அல்லது இயல்பு.
186. பெருவரை நாட! பெரியேர்கண் தீமை
கருநரைமேல் சூடேபோல் தோன்றும்; - கருநரையைக்
கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும்.
(இ-ள்.) பெருவரை நாட - பெரியமலைகளுள்ள நாட்டின் அரசனே!, பெரியார்கண் - பெரியவர்களிடத்தில், தீமை - குற்றமானது, கரு நரைமேல் - சிறந்த வெள்ளை ரிஷபத்தின் மேல், சூடே போல் - சூடிய சூடு போலே, தோன்றும் - விளங்கிக் காணும், கரு நரையை கொன்றன்ன - சிறந்த வெள்ளை ரிஷபத்தைக் கொன்றாற் போன்ற, இன்னா செயினும் - தீச்செயல்களைச் செய்தாலும், சிறியார் மேல் - சிறியோரிடத்து, ஒன்றானும் - ஒரு குற்றமாயினும், தோன்றா கெடும் - விளங்கிக் காணாமல் அழிந்து விடும், எ-று.
பெரியோர் ஒரு குற்றஞ் செய்தால் அது நன்றாய் விளங்கித் தோன்றும். சிறியோர் எத்தனை செய்தாலும் ஒன்றாவது விளங்கித் தோன்றாததுமன்றிச் செய்ததாகவே காணப்படாமற் போம் என்றதனால் பெருமையுடையோர் சிறிதுங் குற்றஞ் செய்யாது தம்மைக் காக்க வேண்டும் என்பது கருத்து.
ரிஷபங்களில் வெள்ளை ரிஷபம் மிகச் சிறந்ததென்பர், ஆகையாலதைக் கொல்வது அதிக பாவமான செய்கை. தோன்றா கெடும் என்னுமிடத்து ஒற்றுமிகுவதே தகுதி. ஒன்றானும் - ஆன், ஏன் என்பவை ஐயம் அல்லது விகற்பத்தைக் காட்டு மிடைச் சொல், உம் - இழிவு சிறப்பு.
187. இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்,
பயைந்த துணையும் பரிவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும்.
(இ-ள்.) சிறுமை இசைந்த - அற்பத்தன்மை பொருந்திய, இயல்பு இலாதார்கண் - குணமில்லாதவர்களிடத்தில், பசைந்த துணையும் - சிநேகித்த அளவும், பரிவு ஆம் - துன்பமே ஆம்; அசைந்த - தளர்ந்த [நல்வழியிற் சேராத], நகையேயும் - பரிகாசத்தையும், வேண்டாத - விரும்பாத, நல் அறிவினார்கண் - நல்ல விவேகிகளிடத்து, பகையேயும் - விரோதமும், பாடு பெறும் - பெருமையை அடையும், எ-று.
அயோக்கியரிடத்தில் நேசங் கொள்ளக் கொள்ளத் துன்பமே வரும், ஆதலால் அதனினும் யோக்கியரிடத்துப் பகை நல்லது; ஏனெனில் இப்பகை யாதொரு துன்பமுஞ் செய்யாதென்பது கருத்து.
நகை - பரிகாசத்துக்கு ஆகுபெயர். பரிகாசத்திலுந்தகாததைக் கொள்ளாமை பெரியோ ரியல்பாதலின் அங்ஙன முரைக்கப்பட்டது. அசைந்த - தகாதவைகளை, நகையேயும் - மகிழ்ச்சியிலும், என உரைப்பாருமுண்டு.
188. மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்து
ஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை; - எல்லாம்
சலவருள் சாலச் சலமே; நலவருள்
நன்மை வரம்பாய் விடல்.
(இ-ள்.) மெல் இயல் - மென்மையான குணமுள்ள, நல்லாருள் - பெண்டிர்களிடத்தில், மென்மை - மெதுவாந்தன்மைக்கும், ஒன்னாருள் - சத்துருக்களிடத்து, அது இறந்து - அதை விட்டு, கூற்று உட்கும் - யமன் பயப்படும்படியான, உட்கு உடைமை - பயப்படுத்துந் தன்மைக்கும், எல்லாம் - எல்லாவிடத்திலும், சலவருள் - வஞ்சகம் பேசுவோரிடத்து, சால - மிகவும், சலமே - வஞ்சம் பேசுவதற்கும், நலவருள் - நற்குண முடையவரிடத்து, நன்மை - நலமா நடப்பதற்கும், வரம்பு ஆய்விடல் - எல்லையாயிருக்க வேண்டும், எ-று.
அயோக்கியரிடத்து அயோக்கியமாயும் யோக்கியரிடத்து யோக்கியமாயு நடப்பது பெருமை என்பது கருத்து.
வேண்டுக என்றும் செலுத்துக என்றும் வினை வருவித்துத் தனித் தனி வாக்கியமா முடிப்பாருமுளர். வரம்பாய் - எல்லையாநின்று, விடல் - செலுத்த வேண்டும் எனவு முரைக்கலாம். சலம் உடையோர்சலவர், நலம் உடையோர் நலவர். 'மெல்லிய நல்லாருண் மேன்மை எனவும் பாடம். விடல் - வியங்கோள் வினைமுற்று. [நன். வினை. சூ. 19ன் உரையைக் காண்க].
189. கடுக்கி ஒருவன் கடுங்குறளைப் பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தர்;
விளக்கினுள் ஒண்சுடரே போன்று.
(இ-ள்.) ஒருவன் -, கடுக்கி - (முகத்தைக்) கடுமையாக்கி, கடுங் குறளை பேசி - மிகுந்த கொடுஞ் சொற்களைப் பேசி, மயக்கி விடினும் - மயங்கச் செய்தாலும், மனப்பிரிப்பு ஒன்று இன்றி - மனம் வேறுபடுதல் கிஞ்சித்து மில்லாமல், விளக்கினுள் - தீபத்தில், ஒள் சுடரே போன்று - பிரகாசமான சுவாலையை ஒத்து, துளக்கம் இலாதவர் - அசைவு இல்லாதவர், தூய மனத்தார் - சுத்தமான மனமுள்ளவர், எ-று.
ஒன்று என்பது இங்கே அற்பம் என்பதைக் காட்டுகின்றது.
190. முன்துற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து
பின்துற்றுத் துற்றவர் சான்றவர்; - அத்துற்று
முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
துக்கத்துள் நீக்கி விடும்.
(இ-ள்.) முன் துத்தும் - முந்தி உண்ணும்படியான, துத்தினை - உணவை, நாளும் - தினந்தோறும், அறம் செய்து - (பிறர்க்குக் கொடுத்தலாகிய) தருமமாச் செய்துவிட்டு, பின் துத்து - பின் உண்ணும்படியான (உணவை), துத்துவர் சான்றவர் - புசிப்பர் பெரியோர் அ துத்து - அப்படிச் செய்யு முணவு. முக்குற்றம் நீக்கி - காமம் வெகுளி மயக்கம் என்கிற மூன்று குற்றங்களையும் போக்கி, முடியும் அளவும் - (அவர்) முடியுங் காலம் வரையும், துக்கத்துள் நீக்கிவிடும் - துக்கத்தினின்றும் (அவர்களை) பிரித்துவிடும், எ-று.
முதலில் உண்ணும்படி கொண்ட சோற்றைப் பரதேசிகட்குக் கொடுத்துப் பிற்பட நின்றதை உண்டு வாழுமவர்க்குச் சாமளவும் துக்கமில்லா திருக்கும்படியான நிலையைத் தரும்; புண்ணிய முண்டா மென்பதாம்.
துத்தும் - து - பகுதி, உம் - பெயரெச்ச விகுதி, து - சாரியை, தகரமும் உகரக்கேடும் சந்தி. துத்து - வினையாலணையும் பெயர், உண்ணத்தக்கதென்பது பொருள், து - பகுதி, து - ஒன்றன்பால் விகுதி, இடைநிலையின்றி வந்தது. துக்கத்துள் - எ-ம் வேற்றுமையுருபு 5ம் வேற்றுமையில் வந்தது.
