நல்லினம் சேர்தல்
துறவியல்
[அதாவது நல்ல கூட்டத்தைச் சேர்தல்; நற்குண முடையவர்களது சமூகத்தை நேசிப்பது என்பதாம்.]
171. அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த
நற்சார்வு சாரக்கெடுமே வெயில்முறுகப்
புற்பனிப் பற்றுவிட் டாங்கு.
(இ-ள்.) அறியா பருவத்து - புத்தியில்லாத வயதில், அடங்காரோடு - அடக்கமில்லாதவரோடு [அயோக்கியரோடு], ஒன்றி - சேர்ந்து, நெறியல்ல - வழியல்லாதவைகளை [பாவ காரியங்களை], செய்து ஒழுகியவும் - செய்து நடந்த அக்கிரமங்களும், நெறி அறிந்த - சன்மார்க்கத்தை அறிந்த, நல் சார்வு - நல்ல இடத்தை [பெரியோரை], சார - சேர்தலாலே, வெயின் முறுக - வெய்யில் விர்த்தியாக, புல் - புல்லை, பனி பற்று - பனி பிடித்திருப்பது, விட்டாங்கு - விடுவது போல, கெடும் - நாசமாகும், எ-று.
நெறியாவது சாஸ்திர ஏற்பாடு ஒழுகியவ்வும் என்பதில் லகர வொற்று விரித்தல் செய்தொழுகிய நெறியல்லவும் எனக் கூட்டவுமாம். உம்மை - இழிவு சிறப்பு, சார - காரணப் பொருட்டாய் வந்த செயவெனெச்சம், விட்டாங்கு - விட்டால் என்பது விட்டு எனத் திரிந்து ஆங்கு என்னு முவமை இடைச் சொல்லோடு சேர்ந்தது. விட்டது என்பது ஈறுகுறைந்து சேர்ந்தது என்னவுமாம்.
172. அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.
(இ-ள்.) எஞ்ஞான்றும் - எப்போதும், அறம் நெறி - தருமத்தின் வழிகளை, அறிமின் - அறியுங்கள்; கூற்றம் அஞ்சுமின் - யமனை அஞ்சுங்கள்; பிறர் - அன்னியர்களுடைய, சுடு சொல் - கடூரமான சொற்களை, பொறுமின் - பொறுத்துக் கொள்ளுங்கள்; வஞ்சம் போற்றுமின் - வஞ்சனையை (உங்களிடஞ்சேராதபடி) பாதுகாவுங்கள்; வினை தீயார் கேண்மை - தீவினை செய்பவருடைய சிநேகத்தை, வெறுமின் - விரும்பாதுவிடுங்கள்; பெரியார் வாய் சொல் - பெரியோர்களுடைய வாயிலுண்டாகுஞ் சொற்களை, பெறுமின் - பெற்றுக் கொள்ளுங்கள், எ-று.
"வினைமுற்றே வினையெச்சமாகலும்" என்ற விதியால் அறிமின் முதலிய ஏவற்பன்மை முற்றுக்களை வினையெச்சமாகக் கொண்டு பெறுமின் என்பதோடு முடித்து உரைப்பாருமுளர். வினைதீயர் - வினையில் தீமையுள்ளார். கூற்றம் அஞ்சுமின் என அச்சத்தின் ஏதுவை இரண்டாம் வேற்றுமையாக் கூறல் செய்யுள் வழக்கு.
173. அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க்கு உறலால் - தொடங்கிப்
பிறப்பின்னாது என்றுணரும் பேரறிவி னாரை
உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.
(இ-ள்.) அடைந்தார் பிரிவும் - சேர்ந்தவர்களைப் பிரிவதும், அரும்பிணியும் - அருமையான வியாதியும், கேடும் - மரணமும், உடம்பு கொண்டார்க்கு - தேகத்தைப் பெற்றிருக்கிறவர்களுக்கு, உடங்கு - ஒருமிக்க, உறலால் - வருவதனால், தொடங்கி - ஆதிகாலந் தொட்டு (வருகின்ற), பிறப்பு - இன்னாது என்று - தீயது என்று, உணரும் - அறிந்திருக்கிற, பேர் அறிவினாரை - மிக்க விவேகமுள்ளவர்களை, என் நெஞ்சு - என் மனமானது, உற புணர்க - உறுதியாகச் சேரக்கடவது, எ-று.
பிறப்பில் துன்பங்களைக் கண்டு அதை வெறுத்திருக்கின்ற ஞானிகளைச் சேர்தல் நன்மைக்கு ஏதுவாம் என்பது கருத்து.
உடங்கு என்பது ஒருங்கு என்பது போல் வினைப்பகுதி வினையெச்சப் பொருட்டாய் வந்தது; "வினைமுற்றே" என்கிற சூத்திரத்தின் உரையைக் காண்க. இவ் வினையெச்சங்கள் பொருணோக்கால் வினையுரியாகின்றன. "இயல்பின்" என்கிற [நன். உருபு. சூ. 16] விதியால் அடைந்தார்ப்பிரிவு என வலி மிகுந்தது.
174. இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும்
பிறப்பினை யாரும் முனியார் - பிறப்பினுள்
பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும்
நண்பாற்றி நட்கப் பெறின்.
(இ-ள்.) நினையுங்கால் - யோசிக்குமளவில், இறப்ப இன்னாது எனினும் - மிகவும் தீயது ஆனாலும், பிறப்பினுள் - சம்சாரத்தில், பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு - நற்குணந்தரித்த மனமுடைய பெரியவர்களோடு, எஞ்ஞான்றும் - எக்காலமும், நண்பு ஆற்றி - சிநேக குணம் பாராட்டி, நடகப் பெறின் - சிநேகிக்கப் பெற்றால், பிறப்பினை - பிறப்பை, யாரும் முனியார் - எவர்களும் வெறுக்க மாட்டார்கள், எ-று.
பல தீமைகட்கு இடமாகிய இப்பிறப்பில் நல்லோரை நேசித்திருப்பதே குணமென்றபடி.
பிறப்பு - சம்சாரத்துக்கு ஆகுபெயர்; சம்சாரமாவது பிறந்து இறக்கும்படியான இயல்பு; தேக சம்பந்தமுமாம். நண்பு - நள் - பகுதி, பு - விகுதி, ளகரம் டகரமாகி மெலிந்தது.
175. ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; - ஓரும்
குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.
(இ-ள்.) ஊர் அங்கணம் நீர் - ஊரிலுள்ள சலதாரை நீரானது, உரவு நீர் - சிறப்புப் பொருந்திய நீரை, சேர்ந்தக்கால் - சேர்ந்தால், பேரும் பிறிது ஆகி - வேறுபேரும் உண்டாகி, தீர்த்தம் ஆம் - பரிசுத்தமான ஜலமாம்; (அப்படியே) ஓரும் - அறியத்தக்க, குலம் மாட்சி இல்லாரும் - குலப்பெருமை இல்லாதவர்களும், நலம் மாட்சி - குணப்பெருமையுள்ள, நல்லாரை சார்ந்து - நல்லவர்களைச் சேர்ந்து, குன்று போல் நிற்பர் - மலைபோல் (பெருமை யுடையவராய்) இருப்பார்கள், எ-று.
உரவு - வலி, இங்கே சிறப்புக்காயிற்று. "பேரும் பெரிதாகி" எனப் பாடங்கொண்டு, சிறப்பான ஓர் பேரையடைந்து எனப் பொருள் கொள்வது தகுதி. நலம் - குணத்துக்கு ஆகுபெயர். ஆகி, சார்ந்து என்பவை செயவெனெச் சத்திரிபுகள், செய்தெனெச்சமே காரணப் பொருட்டாய்வரின் பிறவினைக் கருத்தாவைக் கொண்டு முடிவது அனுபவத்திலிருக்கின்றது.
176. ஒண்கதிர் வான்மதியம் சேர்தலால் ஓங்கிய
அங்கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம்
குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்
குன்றன்னார் கேண்மை கொளின்.
(இ-ள்.) ஒள் கதிர் - அழகான கிரணங்களுள்ள, வாள் மதியம் - பிரகாசமான சந்திரனை, சேர்தலால் -, ஓங்கிய - உயர்ந்த, அம் கண் விசும்பின் - அழகான இடமுள்ள வானத்திலுள்ள, முயலும் - முசலும், தொழப்படும் - கும்பிடப்படுகின்றது; (அதுபோல்) குன்றிய சீர்மையர் ஆயினும் - குறைந்த சிறப்புள்ளவர்களானாலும், குன்று அன்னார் கேண்மை - மலைபோன்ற மேன்மையுள்ளவர்களுடைய சிநேகத்தை, கொளின் - பெற்றுக் கொண்டால், சீர் பெறுவர் - மேன்மை அடைவர், எ-று.
ஒண்கதிர் - ஒள் கதிர் என்பதில் ளகரம், முன் டகரமாகிப் பின்பு ணகரமாக மெலிந்ததெனக் கொள்க.
177. பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது
நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்; - தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல
பெரியார் பெருமையைச் சார்ந்து.
(இ-ள்.) பாலோடு அளாய நீர் - பாலிற் கலந்த ஜலம், பால் ஆகும் அல்லது - பாலாக எண்ணப்படுமே யல்லாமல், நிறம் தெரிந்து - நிறத்தின் வேற்றுமை அறியப்பட்டு, நீர் ஆய் தோன்றாது - ஜலம் ஆகக் காணப்படாது; தேரின் - ஆராய்ந்து பார்த்தால், நல்ல - , பெரியார் - பெரியவர்களுடைய, பெருமையைச் சார்ந்து - பெருந்தன்மையைச் சார்தலால், சிறியார் சிறுமையும் - அற்பருடைய அற்பத்தனமும், தோன்றாது -, எ-று. ஆம் இரண்டும் - அசை.
அளாவிய என்பது அளாய என மருவியது; அளாவு என்னு முதனிலையில் ஈற்றுயிர்மெய் குறைந்து இறந்த காலங்காட்டும் யகர இடைநிலையும் அகர விகுதியும் சேர்ந்து உண்டானதென்றும் சொல்வார்கள்.
178. கொல்லை இரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு;
மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்
செல்லாவாம் செற்றார்சினம்.
(இ-ள்.) கொல்லை - கொல்லையைச் சேர்ந்த, இரு புனத்து - பெரிய வயலிலே, குற்றி அடைந்த புல் - மரக்கட்டையை பற்றி நிற்கிற புல்லானது, உழவர் - உழுகின்றவர்களுடைய, உழுபடைக்கு - கலப்பைக்கு, ஒல்கா ஆகும் - அசையாதவைகளா யிருக்கும்; (அப்படியே) மெல்லியவரே ஆயினும் - பலஹீனர்களா யிருந்தாலும், நல் சார்வு சார்ந்தார் மேல் - நல்ல ஆசிரயத்தைப் பற்றினவர்களிடத்தில், செற்றார் சினம் - பகைவருடைய வலி, செல்லா ஆம் - செல்ல மாட்டாதவைகளாய் விடும்.
கொல்லையாவது பலவயல்கள் சேர்ந்ததொரு நிலம் எனக்கொள்க. குற்றி பெயர்க்கப்படாமையால் புல்லும் பெயர்க்கப்படாதென்பது கருத்து.
ஒல்கா - எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்று; ஒல்கு - பகுதி, ஆ - விகுதி, மறைபொருளையும் காட்டும். "ஆவேயெதிர் மறைக் கண்ணதாகும்" என்பது விதி. உழுபடை - வினைத்தொகை நிலைத் தொடராய்க் கலப்பைக்குக் காரணப்பெயர்; குவ்வுருபு கருவிப் பொருளில் வந்தது.
[இதுவரையிலும் நல்லினஞ் சேர்தலினாலாகும் பயன்களைக் காட்டி மற்றிரண்டு பாட்டால் தீயினஞ் சேர்வதனாலாகுங் கேட்டை விளக்குகின்றார்.]
179. நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம்
குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; - கலநலத்தைத்
தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
தீயினம் சேரக் கெடும்.
(இ-ள்.) நெல் - நெல்லானது, நிலம் நலத்தால் - நிலத்தினது வளப்பத்தால், நந்திய போல் - வளர்வது போலே, தத்தம் குலம் நலத்தால் - தாங்கள் தாங்கள் சேர்ந்திருக்கிற கூட்டங்களின் யோக்கியதையால், சான்றோர் ஆகுவர் - (மனிதர்) மேலான வராவர்; கலம் நலத்தை - கப்பலின் பெருமையை, தீ வளி - சுழல்காற்று, சென்று - போய், சிதைத்து ஆங்கு - கெடுத்தாற் (கெடுவது) போல, சான்றாண்மை - (ஒருவருடைய) மேன்மையானது, தீ இனம் சேர - துர்க்குணமுள்ள கூட்டத்தைச் சேர்வதனால், கெடும் - கெட்டுப்போம், எ-று.
நந்திய - ஈறு குறைந்த தொழிற்பெயராக் கொள்க; பெயரெச்சமாக் கொள்ளின் கருதிய துள்ளிட்டது என்கிற குற்றம் வரும். சிதைத்து என்பது சிதைத்தால் என்பதின் திரிபு. ஆங்கு - உவமையிடைச் சொல். தந்தம் [தம்தம்] என்பது வலித்தலால் தத்தம் என்றாயிற்று.
180. மனத்தால் மறுவில ரேனும்தாம் சேர்ந்த
இனத்தால் இகழப் படுவர் - புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனந் தீப்பட்டக் கால்.
(இ-ள்.) மனத்தான் - மனநிலைமையினால், மறு இலர் எனும் - குற்றம் இல்லாதவர்களானாலும், தாம் சேர்ந்த இனத்தால் - தாங்கள் கூடின தீய கூட்டத்தால், இகழப்படுவார் - நிந்திக்கப்படுவார்கள். (மனிதர்); எறி புனம் - வெட்டியகாடு, தீ பட்டக்கால் - நெருப்புப் பற்றினால், புனத்து - அக்காட்டிலுள்ள, வெறி கமழ் - வாசனை வீசுகின்ற, சந்தனமும் வேங்கையும் - சந்தனமரமும் வேங்கைமரமும், வேம் - வெந்து போம், எ-று. ஏ - அசை.
இயற்கையிற் குற்றமிலராயினும் சேர்க்கைக் குற்றத்தால் கெடுவர் என்பது கருத்து.
மனத்தான் - மனத்தில் எனவு முரைக்கலாம், வேற்றுமை மயக்கம். [பெயர். சூ. 60].
