பெரியாரைப் பிழையாமை
துறவியல்
[அதாவது பெரியோர் திறத்தில் பிழை செய்யாமையாம்.]
161. பொறுப்பர்என்றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி அணிமலை நாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது.
(இ-ள்.) ஆர்க்கும் அருவி அணி மலை நல் நாட - ஒலிக்கின்ற அருவிகளை அணிந்த மலைகள் சூழ்ந்த நல்ல நாட்டையுடையவனே!, பொறுப்பர் என்று எண்ணி - (நாம் செய்யுங் குற்றங்களைப்) பொறுத்துக் கொள்வார் என்று நினைத்து, புரை தீர்ந்தார், மாட்டும் - குற்றமில்லாதவரிடத்தும், [பெரியோரிடத்தும் என்றபடி], வெறுப்பன. வெறுக்கும் படியான காரியங்களை, செய்யாமை வேண்டும் - செய்யாதிருத்தல் அவசியமானது; வெறுத்த பின் - (அவர்கள்) கோபித்த பின்பு, பேர்க்குதல் - (அக்கோபத்தின் பயனை) மாற்றுதல், யார்க்கும் அரிது - எப்படிப்பட்டவர்க்கும் கூடாதது, எ-று.
இழிந்தாரிடத்துப் பிழை செய்வதனால் யாதொரு கேடுமில்லையென்று நினைப்பது போல் பெரியாரிடத்துப் பிழை செய்வதினாலும் அவர்கள் பொறுமையுள்ளா ரானது பற்றி யாதொரு கேடும் வாராதென் றெண்ணிக் கொண்டு அபசாரப் பட வேண்டாம். அவர் பொறுமையுள்ளவராயினும் "சிறியோர் பெரும்பிழை செய்தனராயின், பெரியோ ரப்பிழை பொறுத்தலுமரிதே" என்கிறபடி பிழையின் கொடுமையால் அவர்களுடைய மனங் கலங்கிய போது அதனால் வருந் தீங்கை நிவர்த்தி செய்ய யாராலு மாகாதென்பது கருத்து "குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி, கண்மேயுங் காத்த லரிது."
தீர்ந்தார் மாட்டும் - உம்மை எச்சப்பொருட்டாய் வந்தது; மாடு - ஏழனுருபு. செய்ய வேண்டும் என்பது போற் செய்யாமை வேண்டும் என்பதிலும் வேண்டும் என்பது தேற்றப் பொருட்டாய் வந்த தொழிற்பெயர்; இதனை ஒருவகை வியங்கோளாகக் கொள்ளவுந் தகும். யார்க்கும் - குவ்வுருபு கர்த்தாப் பொருளில் வந்தது.
162. பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்.
(இ-ள்.) நல்ல நயம் இல் அறிவினவர் - மேன்மையான பயன் இல்லாத புத்தியுள்ளவர், [மூடர்], பொன் கொடுத்தும் - (விசேஷமாக) பொருளைக் கொடுத்தாலும், புணர்தற்கு அரியாரை - சேரக்கூடாத பெரியோர்களை, கொன்னே - சும்மா, தலைக்கூட பெற்றிருந்தும் - சேரத்தக்க நிலையை அடைந்திருந்தாலும், அன்னோ - ஐயோ, பயன் இல் பொழுது ஆ - வீண் காலமாக, கழிப்பாரே - கழிப்பார்களே, எ-று.
அருமையான பெரியோர் வலியத் தம்மிடம் வந்த போது அவர்களைக் கொண்டு நன்மை பெறாமற் காலங்கழிப்பதும் பெரியாரைப் பிழைத்தலாம் என்பது கருத்து.
கொன்னேமுதலான விடத்து ஏ - அசை. தலைக்கூட என்பது வினையெச்சமாகத் தோன்றினாலும் பொருணோக்கத்தில் தொழிற்பெயராய்ச் செயப்படுபொருளா அமையுமென அறிக. அன்னோ - இரக்க இடைச்சொல். உம்மைகள் - சிறப்பு.
163. அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார்.
(இ-ள்.) அவமதிப்பும் - தாழ்வாக நினைப்பதும், ஆன்ற மதிப்பும் மேலாக நினைப்பதும், இரண்டும் - ஆகிய இரண்டும், மிகைமக்களால் - பெரியோர்களால், மதிக்கல் பால - மதிக்கத் தக்கவை; நயம் உணரா - குணமறியாத, கை அறியா - நல்லொழுக்கமறியாத, மாக்கள் - மனிதர்கள், இழிப்பும் - தாழ்த்துவதையும், எடுத்து ஏத்தும் - தூக்கிப் புகழ்வதையும், வடித்த நூலார் - ஆராய்ந்த நூலையறிந்த பெரியோர், வையார் - (ஒருபொருளாக) வைக்க மாட்டார், எ-று.
"நாயின் மேலேறி வையாளி விட்டாலென்ன வீழ்ந்தாலென்ன" என்கிற பழமொழிப்படி அற்பர் புகழ்ந்தாலும் பழித்தாலுமொன்று மிலலை யென்பதாம்.
அகன்ற என்பது ஆன்ற எனத் திரிந்த தென்பர்; ஆன்றல் - மாட்சிமை எனத் தனியே கொள்வது முண்டு. "உம்மையென்றெனவோ டிந்நான்கெண்ணு மஃதின்றியுமியலும்" என்றமையால் இங்கு உம்மை தொகைபெற்றது [நன். இடை. சூ. 9]. மிகை - மிகுதல் [மேன்மை] அதனையுடைய மக்கள், என உருபும் பயனுந் தொக்கத் தொடர். மக்கள், மாக்கள் - இவை இரண்டுக்கும் ஒருமையில்லை. ஏத்து - முதனிலைத் தொழிற் பெயர். நயமுணரா, கையறியா - பெயரெச்சங்கள் அடுக்கி மாக்களென்னுமொரு முடிபு கொண்டன. [நன். பொது. சூ. 4].
164. விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.
(இ-ள்.) விரி நிறம் நாகம் - மிகுந்த காந்தியுள்ள பாம்பு, விடர் உளதேனும் - மலைப்பிளப்பில் இருப்பதானாலும், உருமின் கடுசினம் - இடியின் மிகுந்த உக்கிரமானது, சேண் நின்றும் - வானத்தில் இருக்கவும், உட்கும் - பயப்படும்; பெருமை உடையார் -, செறின் - கோபித்தால், (பிழை செய்தவர்) அருமை உடைய அரண் சேர்ந்தும் - (பிறர்) புகுதற்குக் கூடாத கோட்டையைச் சேர்ந்திருந்தாலும், உய்யார் - பிழையார், எ-று.
இது எடுத்துக்காட்டுவமையணி. நிற்க என்பது நின்று எனத் திரிந்தது. [நன். வினை. சூ. 27.] சாரியை விகற்பமாதலின் உருமின் என்பதில் அத்துச்சாரியை வரவில்லை. விரிநிறம் என்பது அதின் பளபளப்பினால் அதின் சத்தியைக் குறிப்பித்தது. பாம்பு இடியோசைக்கு அஞ்சி இறக்குமென்பர்.
165. எம்மை அறிந்தலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று; - தம்மை
அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்.
(இ-ள்.) எம்மை அறிந்திலிர் - எங்களை அறியமாட்டீர்கள், எம் போல்வார் இல் - எம்மை ஒத்தவர்கள் இல்லை, என்று - தம்மை தாம் கொள்வது - தங்களைத் தாங்களே மதித்துக் கொள்வது, கோள் அன்று - குணம் ஆகாது; அறன் அறியும் சான்றோர் - தருமத்தை அறிந்த பெரியோர்கள், தம்மை - அரியர் ஆ நோக்கி - அருமையானவராக நினைத்து, பெரியர் ஆ கொள்வது - பெரியவர்கள் என்று ஏற்றுக் கொள்வது, கோள் - குணமாம், எ-று.
பெரியார் - ஆக என்பது ஈறு தொக்கது. அறிந்திலிர் - முன்னிலைப்பன்மை யெதிர்மறை வினைமுற்று, அறி - பகுதி, இல் - எதிர்மறைப்பண்படி, ஈண்டு விகுதி; த் - இடைநிலை, தகரம் இரட்டித்து மெலிந்தது; எல்லாம் ஒரு பகுதியானது, இர் - முன்னிலைப் பன்மை விகுதி. இல் - விகுதி குன்றிய குறிப்புமுற்று.
166. நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழல் போல
விளியும் சிறியவர் கேண்மை; - விளிவின்றி
அல்கு நிழல்போல் அகன்றகன்று ஓடுமே
தொல்புக ழாளர் தொடர்பு.
(இ-ள்.) நளி கடல் தண் சேர்ப்ப - விசாலமான கடலின் குளிர்ச்சியான கரையை யுடையவனே!, சிறியவர் கேண்மை - அற்பருடைய சிநேகமானது, நாள் நிழல் போல - முற்பகலின் நிழலைப் போலே, விளியும் - குறைந்துபோம்; தொல் புகழ் ஆளர் தொடர்பு - பழைமையான கீர்த்தியுள்ளவர்களுடைய சிநேகம், அல்கு நிழல் போல் - பிற்பகலின் நிழலைப் போல், அகன்று அகன்று ஓடும் - மிகவும் வளர்ந்து செல்லும், எ-று, ஏ - அசை.
தொல்புகழாளர் - பெரியோர்; புகழுக்குத் தொன்மையாவது முன்னோர்களது நிலைமையாயிருத்தல்; அல்லது தொன்மை புகழாளர்க்குமாம். விளிவு - குறைவுக்குக் கொள்ளப் பட்டது. அகன்றகன்று - மிகுதியென்னும் பொருணிலையால் வந்த அடுக்கு. [நன். பொது. சூ. 44.]
167. மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கண் சென்றார்க்கு ஒருங்கு.
(இ-ள்.) மன்னா திருவும் - அரசருடைய செல்வத்தையும், மகளிர் எழில் நலமும் - பெண்களுடைய அழகின் நன்மையையும், துன்னியார் - நெருங்கினவர், துய்ப்பர் - அனுபவிப்பார்கள்; தகல் வேண்டா - யோக்கியதை வேண்டுவதில்லை; (எதுபோலெனில்) துன்னி - நெருங்கி, குழை கொண்டு - தளிர்களையுடைத்தாய், தாழ்ந்த - கவிந்திருக்கிற, குளிர் மரம் எல்லாம் - குளிர்ச்சியான மரங்களெல்லாம், தங்கண் சென்றார்க்கு - தங்களிடத்தில் வந்தவர்களுக்கு, ஒருங்கு - ஒருமிக்க, உழை - இடம் ஆம் (அதுபோல்), எ-று.
மகளிர் என்பதை இங்கு வேசியர்க்குக் கொள்ளல் தகுதி; தாழ்ந்தோ ருயர்ந்தோர் என்று தாரதம்மியமின்றி வந்தவர்களை யெல்லாந் தம்மிடஞ் சேர்க்கின்ற அறிவில்லாத மரங்கள் போலவும் வேசிமார் போலவும் அரசர் பெரியாரைச் சிறியாரோடு ஒருமிக்கச் சேர்த்தலும் பெரியாரைப் பிழைத்தல் என்பது கருத்து.
துன்னியார் - துன் - பகுதி, ஆர் - விகுதி, இன் - இடைநிலை ஈறு குறைந்தது, யகரம் - உடம்படுமெய், னகரம் இரட்டியது. தகல் - (தகு + அல்) தொழிற்பெயர் ஒருங்கு - பகுதியே வினையெச்சமானது [நன். வினை. சூ. 32ன் உரையைப் பார்க்க].
168. தெரியத் தெரியும் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; - பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மட்டும்
கலவாமை கோடி யுறும்.
(இ-ள்.) தெரிய தெரியும் - விளங்க அறியும்படியான, தெரிவு இலார் கண்ணும் - அறிவு இல்லாதவரிடத்திலும், பிரிய - பிரியும் போது, பெரும்படர் நோய் - பெரியதுக்கமாகிய வியாதியை, செய்யும் - (சிநேகமானது) உண்டாக்கும்; (ஆதலால்) பெரிய -, உலவா - வற்றாத, இரு கழி சேர்ப்ப - பெருமையான கழிக்கரை யுடையவனே!, யார் மாட்டும் - எவரிடத்திலும், கலவாமை - சிநேகியாமையானது, கோடி உறும் - (சிநேகத்தினும்) கோடி பங்கு நன்மையாகும், எ-று.
புத்தியீனரிடத்தில் சிநேகித்துப் பிரிந்தாலும் துக்கமுண்டாகுமானால் நல்ல விவேகிகளைச் சிநேகித்துப் பிரிதலில் எவ்வளவு துக்க முண்டாகலாம்? ஆகையால் யாரையும் சிநேகியாமையே நலமென்றபடி. இதனால் பெரியாரைச் சேர்தலி லிருக்கு நன்மையைக் காட்டி அப்படிப்பட்டவ ரிடத்துப் பிழைத்தல் நல்லதன்றெனக் குறிப்பித்ததாம்.
கண்ணும் - உம்மை - இழிவு சிறப்பு. யார்மாட்டும் - முற்றும்மை. பிரிய - நிகழ்கால வினையெச்சம்.
169. கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும்; - ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்.
(இ-ள்.) கல்லாது போகிய நாளும் - நூல்களைக் கற்காமற் கழிந்த காலமும், பெரியவர்கண் செல்லாது - பெரியவரிடத்திற் போகாமல், வைகிய வைகலும் - சென்ற காலமும், ஒல்வ - இசைந்தவைகளை, கொடாது ஒழிந்த பகலும் - (தக்கவர்க்கு) கொடாமற்போன காலமும், உரைப்பின் - சொல்லப்புகுந்தால், பண்பு உடையார்கண் - சற்குணமுள்ளவரிடத்தில், படா ஆம் - சேராதவைகளாம், எ-று.
இதிலும் பெரியோரிடத்திற் சேரு நன்மையைக் காட்டி அவரிடம் பிழையாமை நன்றெனக் குறிப்பிக்கப்பட்டது.
போகிய - போ - பகுதி, கு - சாரியை, இன் - இடைநிலை, ஈறு போனது, அ - பெயரெச்ச விகுதி. ஒல்வ - வினையாலணையும் பெயர், ஒல் - பகுதி, வ் - இடைநிலை, அ - பலவின்பால் விகுதி. படா - எதிர்மறை வினையாலணையும் பெயர். காலங்களுக்கு விசேஷணமாதலால் ஆமென்கிற அதன் வினையால் முடிந்தது [பொது. சூ. 41]. எதிர்மறை முற்றாகக் கொண்டு, ஆம் - அசை, என்னவுமாம். கொடாஅ, படாஅ, - அளபெடைகள் செய்யுளோசைக்காக வந்தன.
170. பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம் - தெரியுங்கால்
செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப எனின்.
(இ-ள்.) பெரியார் பெருமை - பெரியோர்க்குப் பெருமையாவது, சிறு தகைமை - எளிமையைக் காட்டும் பணிவேயாம்; ஒன்றிற்கு உரியார் - ஒரு பெரிய கல்வி முதலியவற்றிற்குச் சுதந்திர முள்ளவர்களுக்கு, உரிமை - அவ்வுரிமையாலாகி பெருமையாவது, அடக்கம் - (தானே எடுத்துக்காட்டாமல்) அடங்கியிருத்தல்; தெரியுங்கால் - ஆராய்ந்து பார்த்தால், தன் சேர்ந்தார் அல்லல் - தன்னைச் சேர்ந்தவர்களுடைய துன்பத்தை, களைப எனின் - நீக்குவார்களேயானால், செல்வமுடையாரும் செல்வரே - பொருளுள்ளவர்களும் உள்ளவர்களேயாவர், எ-று.
பெரியோர்க்குப் பணிவும், கற்றோர்க்கு அடக்கமும், செல்வர்க்கு ஈகையும் தக்ககுணங்கள் என்பது கருத்து. இதிலும் முற்பாடல்களிற் காட்டிய வழியே கருத்து அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வதிகாரமும் முன்னதிகாரத்தைப் போல மேன் மக்களியல்பைத் தெரிவித்த தென்பது தகுதி.
தகைமை - தகு - பகுதி, ஐ - விகுதி, மை - விகுதிமேல் விகுதி, ஐ - சாரியை என்னவுமாம்; சிறுமையாகிய தகை என விரியும். தற்சேர்ந்தார் என்பது காரணத்தால் வந்த ஒரு பெயராதலால் தன் என்னுமொருமை பிழையன்று. களைப - பலர்பால் முற்று.
