மேன் மக்கள்
துறவியல்
[இஃது மேலாகிய மனிதருடைய இயல்பு கூறியதாம்.]
151. அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றம்சான்றோர் அஃதாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமாசு உறின்.
(இ-ள்.) அம் கண் விசும்பின் - அழகான இடமுள்ள வானத்தில், அகல் நிலா பாரிக்கும் - விரிவான நிலாவை நிரப்புகின்ற, திங்களும் சான்றோரும் - சந்திரனும் பெரியோர்களும், ஒப்பர் மன் - பெரும்பாலும் சமானமாவார்கள்; திங்கள் மறு ஆற்றும் - சந்திரன் களங்கத்தைப் பொறுக்கும், சான்றோர் அஃது ஆற்றார் - பெரியோர் அதனைப் பொறார்; ஒரு மாசு உறின் - ஒரு குற்றம் நேர்ந்தால், தெருமந்து தேய்வர் - வருந்தி மெலிந்து போவர், எ-று.
நிலா என்பதைக் கீர்த்திக்கு ஆகுபெயராக்கி "அங்கண் விசும்பினகனிலாப் பாரிக்கும்" என்பதைச் சான்றோருக்குங் கூட்டிக் கொள்க. சந்திரன் தேய்ந்தாலு மறுபடி வளர்கின்றான்; சான்றோரோ தேய்ந்தே போவார் என்பதும் சிறப்பு. இப்படிப்பட்ட சிறப்புகளைப் பற்றித் தான் மன் என்றது, [நன். இடை. சூ. 13; பொது. சூ. 27] விதியால் திங்கள் என்கிற அஃறிணையும் சான்றோர் என்கிற உயர்திணையும் ஒப்பர் என்று ஒரு முடிபு ஏற்றது; திங்களைத் தேவனென்று குறித்தால் இது வழாநிலையேயாம்.
152. இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ
அரிமாப் பிழைபெய்த கோல்?
(இ-ள்.) இசையும் எனினும் - கூடுமானாலும், இசையாது எனினும் - கூடாதானாலும், சான்றோர் - பெரியோர், வசை தீர எண்ணுவர் - பழிப்பு நீங்கும்படியே (காரியத்தை) சிந்திப்பர்; விசையின் - வேகத்தினால், நரி மா உளம் கிழித்த - நரியென்னு மிருகத்தினது மார்பைப் பிளந்த, அம்பினில் - அம்பைக் காட்டிலும், அரிமா - சிங்கமானது, பிழைப்பு எய்த - தப்பிப் போம்படி (பிரயோகித்த), கோல் - அம்பானது, தீதோ - பொல்லாதோ, (தாழ்ந்ததோ என்கிறபடி,) எ-று.
செய்யக்கூடினாலும் கூடாமற் போனாலும் பழிப்பில்லாத காரியத்தைப் பெரியோர் நினைப்பார்களேயன்றி இழிவான காரியத்தை நினையார்கள்; ஏனென்றால், சிங்கத்தின் மேல் அம்பை எய்து அது தவறிப் போனாலும் பெருமையுண்டு, நரிமேல் எய்து அதன் மார்பைப் பிளந்தாலும் பெருமையில்லை. ஆகையால் மேலான காரியமே யோசிப்பார்கள் என்பது கருத்து.
பிழைப்பு என்னும் வினையெச்சம் ஈறு குறைந்தது. அம்பினில் - ஐந்தனுருபு எல்லைப் பொருளில் வந்ததெனக் கொள்க.
153. நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர்
குரம்பெழுந்து குற்றம்கொண்டு ஏறார் - உரங்கவறா
உள்ளமெனும் நாரினால் கட்டி உளவரையால்
செய்வர் செயற்பா லவை.
(இ-ள்.) நரம்பு எழுந்து - நரம்புகள் மேலே தோன்றும்படி (மெலிந்து), நல்கூர்ந்தார் ஆயினும் - தரித்திரரானாலும், சான்றோர் - மேலோர், குரம்பு எழுந்து - எல்லைகடந்து, குற்றம் கொண்டு - (யாசிப்பதாகிய) குற்றத்தைக் கைக்கொண்டு, எறார் - (ஒருவரிடம்) போகார், உரம் கவறு ஆ - அறிவைக் கவறாக வைத்து, உள்ளம் எனும் நாரினால் - முயற்சியென்கிற நாரினாலே, கட்டி - (மனதைக்) கட்டி, உளவரையால் - (பொருளானது) தமக்கு இருக்கின்ற அளவினால், செயற்பாலவை - செய்யத்தக்க காரியங்களை, செய்வர் - செய்வார்கள், எ-று.
மனதை விவேகத்தினாலும் முயற்சியாலும் உறுதிப் படுத்திக் கொண்டு இரக்காமல் தமக்குள்ளளவு பிறர்க்கு இட்டு நன்மையே செய்து வருவர் பெரியோர் என்பது கருத்து.
கவறு என்பது பிளப்புள்ள பனமட்டை எழுந்தென்பது சினைவினையாதலால் நல்கூர்ந்தார் என்னு முதல்வினை கொண்டது [நன். வினை. சூ. 26]. குரம்பினின்றும் எழுந்தெனக் கொள்வதனால் எல்லை கடந் தென்றாயிற்று.
154. செல்வுழிக் கண்ணொருநாள் காணினும் சான்றவர்
தொல்வழிக் கேண்மையில் தோன்றப் புரிந்தியாப்பர்;
நல்வரை நாட! சில நாள் அடிப்படில்
கல்வரையும் உண்டாம் நெறி.
(இ-ள்.) நல் வரை நாட - நல்ல மலைகளுள்ள நாட்டை யுடையவனே!, சான்றவர் - பெரியோர், செல்வுழிக்கண் - தாம்போகும் வழியில், ஒரு நாள் காணினும் - (ஒருவரை) ஒருநாள் கண்டாலும், தொல்வழி கேண்மையின் - பழைய முறையில் வந்த சிநேகிதனைப் போல் [அல்லது உறவினனைப் போல] (கொண்டு), தோன்ற - விளங்கும்படி, புரிந்து - (உபசாரங்களைச்) செய்து, யாப்பர் - (தம்மவராக) பிணித்துக் கொள்வர்; சில நாள் அடிப்படின் - சில காலம் காலடிப் பட்டால், கல் வரையும் - கல்மிகுந்த மலையிலும், நெறி உண்டாம் - வழி உண்டாகும், எ-று.
கல்லிலும் காலடிப்பட்டால் வழியுண்டாவது போல கடினசித்தருக்கும் பழகினால் சிநேக முண்டாகு மல்லவோ, அப்படியிருக்க மெழுகுபோன்ற சித்தமுள்ளவர் கண்டவுடனே சிநேகிப்பாரென்பது இயல்புதான் என்றபடி.
155. புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து.
(இ-ள்.) பொருள் இல் - பொருளின் அறிவு இல்லாத, வறுகோட்டி - பயனற்ற சபையைச் சேர்ந்த, கல்லா ஒருவன் - (நூல்களைக்) கற்காத ஒருவன், புல்லா எழுத்தின் - (இலக்கணத்தோடு) பொருந்தாத சொற்களால்; உரைப்பவும் - சொல்லுமவைகளையும், நல்லார் - பெரியோர், கண் ஓடி - தாக்ஷிணியப் பட்டு, வருந்தியும் - வருத்தமடைந்தும், அவன் - அந்த மூடன், பல்லாருள் - பலபேருக்கு முன்பு, நாணல் - வெட்கப்படுவதற்கு, பரிந்து - இரங்கி, கேட்பர் - (காதினாற்) கேட்பர், எ-று.
பெரியோர் மூடர் பேசும் பேச்சுகளையும் கேட்பார்கள், ஏனென்றால் தாங்கள் உபேக்ஷை செய்தால் அவர்கள் பலரில் அவமானப்படுவார்களே என்கிற இரக்கத்தால் தங்கள் மனதுக்கு வருத்தமாயிருந்தாலும் கேட்பர் என்பது கருத்து.
எழுத்து சொல்லுக்கும், பொருள் அதன் அறிவுக்கும் ஆகுபெயர். மற்று, எ - அசைகள் ஏ - தேற்றத்தில் வந்ததெனவுமாம்.
156. கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;
வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து.
(இ-ள்.) கரும்பினை - கரும்பை, கடித்து -, கண் தகர நூறி - கணுக்கள் உடையும்படி நெரித்து, இடித்து - (ஆலையில்) துவைத்து, நீர் கொள்ளினும் - சாற்றைக் கொண்டாலும், இன் சுவைத்தே ஆகும் - (அது) இனிய ருசியுள்ளதே ஆம்; குடி பிறந்தார் - நற்குலத்திற் பிறந்தவர், வடு பட வைது இறந்தக் கண்ணும் - (தம்மைப் பிறர்) குற்றந் தாக்கும்படி திட்டிப் போனாலும், தம் வாயில் - தமது வாயினால், சிதைந்து - (தம்மை வைதவர்) கெடும்படி, கூறார் - வசைகளைச் சொல்லமாட்டார், எ-று.
இறந்தக்கண் - ஒருவகை வினையெச்சம்; இற - பகுதி, கண் - விகுதி, தகரம் எழுத்துப்பேறா யிரட்டி மெலிந்தது; நகர தகரங்கள் எழுத்துப்பேறு எனல் நேர் சிதைந்து - சிதைய என்பதின் திரிபு; நிலை திரிந்து எனவும் பொருள் கொள்ளலாம்.
157. கள்ளார், கள் உண்ணார் கடிவ கடிந்தொரீஇ
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் - தள்ளியும்
வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்
சாயின் பரிவ திலர்.
(இ-ள்.) வடு அறு காட்சியார் - குற்றமற்ற அறிவுள்ளவர்கள், கள்ளார் - திருடார்; கள் உண்ணார் - கள்ளைக் குடியார்; கடிவ கடிந்து ஒரீஇ - தள்ளத்தக்கவைகளைத் தள்ளி நீங்கி, பிறரை - அன்னியரை, எள்ளி இகழ்ந்து உரையார் - அவமதித்து நிந்தித்துப் பேசமாட்டார்; தள்ளியும் - தவறியாகிலும், வாயில் பொய் கூறார் - வாயினால் பொய்யைச் சொல்லார்; சாயில் - (வறுமையுற்றுத்) தளர்ந்தாலும், பரிவது இலர் - விசனப்படுந் தன்மை இல்லாதவராவர், எ-று.
கடிந்து ஒரீஇ என்பதையும் எள்ளி இகழ்ந்து என்பதையும் [நன். பொது. சூ. 47] விதியால் ஒருபொருட் பன்மொழியாக அமைத்துக் கொளல் வேண்டும். ஒரீஇ - ஒருவு என்னு முதனிலை இகர விகுதி புணர்ந்து கெட்டு ஈற்றுயிர் மெய்யும் போய் உகரம் இகரமாகி அளபெடுத்ததெனக் கொள்க. இது சொல்லிசை யளபெடை.
158. பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து
ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு.
(இ-ள்.) பிறர் மறையின்கண் - அன்னியருடைய ரகசியச் சொல்லில், செவிடு - ஆய் - செவிடனாய், திறன் அறிந்து - நற்காரியங்களின் தன்மையை யறிந்து, ஏதிலார் இல் கண் - பிறருடைய இல்லாளிடத்து, குருடன் ஆய் - கண்ணில்லாதவனாய், தீய - அயோக்கியமான, புறங்கூற்றின் - (காணாவிடத்துத்) தூஷிப்பதில், மூகை ஆய் - ஊமையாய், நிற்பானேல் - (ஒருவன்) இருப்பானானால், அவற்கு - அப்படிப் பட்டவனுக்கு, யாதும் அறம் கூற வேண்டா - வேறெந்தத் தருமமும் சொல்ல வேண்டுவ தில்லை, எ-று.
புறங்கூற்றின் என்பதற்கு தான் ஒருவனைத் தூஷிப்பதில் எனவும் ஒருவன் தன்னைத் தூஷிப்பதில் எனவும் கருத்துக் கொள்ளலாம். பின்னதாயின் தன்னைத் தூஷிக்குமிடத்து ஒன்றும் பேசாதவனாய் என்பதாம். ஏதிலார் - ஏதில் - அயலாயிருத்தல், அதனை யுடையார் ஏதிலார், வேண்டா என்பது வேண்டும் என்பதின் எதிர்மறை ஆதலின் ஒருவகை வியங்கோள் என்றாகிலும் உறுதிப்பாட்டைக் காட்டும் தொழிற்பெயர் என்றாகிலுங் கொள்க.
159. பன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
என்னானும் வேண்டுப என்றிகழ்ப - என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
காண்தொறும் செய்வர் சிறப்பு.
(இ-ள்.) பண்பு இலார் - சற்குணமில்லாதவர், தம்முழை - தம்மிடத்து, பல் நாளும் சென்றக்கால் - (ஒருவர்) பலதினங்கள் வந்து கொண்டிருந்தால், என்னானும் வேண்டுப என்று - எதையாகிலும் விரும்புவார்களென்று, இகழ்ப - (அவரை) இகழ்வார்கள்; விழுமியோர் - பெரியோர், என்னானும் வேண்டினும் - (தம்மிடம் வருபவர்) எதையாகிலும் அபேக்ஷித்தாலும், நன்று என்று - நல்லதென்று சொல்லி, காண்தொறும் - காணும்போதெல்லாம், சிறப்பு செய்வர் - (அவருக்குச்) சிறப்பானவைகளைச் செய்வார்கள், எ-று.
கீழ்மக்கள் பலநாளாய்த் தம்மிடம் வந்து கொண்டிருக்கிறவர்களையும் இவர் எதாவது நம்மிடத்திற் பெற விரும்புவா ரென்று வரவொட்டாமற் றள்ளி விடுவார்கள்; மேன்மக்களோ தம்மிடம் வருபவர் எதை அபேக்ஷித்தாலும் அதைக் கொடுக்க வுடன்பட்டுக் கண்ட போதெல்லாம் அவர்களுக்கு நன்மையே செய்து வருவார்கள் என்பது கருத்து.
என் - இடைகுறைந்த எவனென்னுங் குறிப்பு முற்றாலாகிய பெயர். காண்தொறும் - வினைத்தொகைநிலைத் தொடர். தொறு என்பது இடைச்சொல்லாயினும் பெயர்ப்பொருளைத் தருதலால் பெயரெச்சத்திரிபாகிய வினைத்தொகை அதனோடு சேர்ந்தது.
160. உடையார் இவரென்று ஒருதலையாப் பற்றிக்
கடையாயார் பின்சென்று வாழ்வர்; - உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
குலந்தலைப் பட்ட இடத்து.
(இ-ள்.) உடையார் இவர் என்று - பொருள் உடையவர் இவர் என்று நினைத்து, ஒரு தலையா பற்றி - உறுதியாப் பற்றிக் கொண்டு, கடை ஆயார் பின் சென்று வாழ்வர் - கீழ் மக்களுடைய பின்னே போய்ப் பிழைப்பர் சிலர்; நல்ல குலம் - நற்குலத்தாரை, தலைப்பட்ட இடத்து - சேர்ந்த விடத்தில் [சேர்ந்தால் என்கிறபடி], உடைய பிலம், (வேண்டும் பொருளை) உடைத்தாயிருக்கிற குகையை, தலைப்பட்டது போலாதே - சேர்ந்ததுபோலிராதா [இருக்கும் என்றபடி] எ-று.
திரவியவான்களென்று நினைத்து அயோக்கியரையும் பின்பற்றி வாழ்கிறார்கள் உலகத்திற் சிலர்; அப்படிப் பட்டவர்க்கு யோக்கியரைச் சேர்தல் திரவியம் நிறைந்த குகையகப்பட்டது போலே சந்தோஷமா யிருக்குமல்லவோ என்பது கருத்து.
தலைப்பட்டவிடத்து என்பதும் ஒருவகை வினையெச்சமெனக் கொள்ளலாம். குலம் - ஆகுபெயர்.
