குடிப்பிறப்பு

bookmark

துறவியல்

 

[இஃது நல்ல குலத்திற் பிறப்பதன் மேன்மையைக் கூறியது. நற்குடியிற் பிறந்தார்க்கே பெரும்பாலும் கல்வி கேள்விப் பயன்கள் அமையுமாதலால், இது கல்வியின் பின் வைக்கப்பட்டது.]

 

141. உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
     குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்
     இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
     கொடிப்புல் கறிக்குமோ மற்று.

     (இ-ள்.) உடுக்கை உலறி - உடுக்கும் வஸ்திரமும் கெட்டு, உடம்பு அழிந்த கண்ணும் - தேகம் மெலிந்து நாசப்பட்ட போதும், குடி பிறப்பு ஆளர் - நற்குடியிற் பிறந்தவர்கள், தம் கொள்கையில் குன்றார் - தமக்குரிய ஒழுக்கங்களில் குறைய மாட்டார்; இடுக்கண் தலை வந்தக் கண்ணும் - (பசி தாகங்களால்) துன்பம் நேர்ந்த போதும், அரிமா - சிங்கம், கொடி புல் - கொடியாயிருக்கும் புல்லை, கறிக்குமோ - தின்னாது, எ-று. பற்று - அசை.

     எவ்வளவு பசி வருத்த முண்டானாலும் சிங்கம் புல்லைத் தின்னாதது போல் நற்குடியிற் பிறந்தவர் எத்தனை வறுமை யுண்டானாலும் தமக்குரிய நல்லொழுக்கங்களில் குறைய மாட்டார்க ளென்பதாம்.

     உடுக்கை யுலறி என்பது வறுமையின் மிகுதியைக் காட்டுகின்றது. தம் கொள்கையாவன; மெய்கூறல், பரோபகாரம் செய்தல், அன்புடைமை, ஆசாரத்திலொழியாமை முதலியன, தலைவருதல் - தன்னிடத்தில் வர என்பது பொருள். அரிமா - அரி - சிங்கம், மா மிருகம், இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. கொடிப்புல் - மாடு முதலியவையும் வந்து தின்னுதலால் கொடிப்புல் என்று கூறினார். உலறி - உலறு - பகுதி, இ - விகுதி. அழிந்தக்கண், வந்தக்கண் - செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சம். உம் - இழிவு சிறப்பு. கறிக்குமோ என்பதனால் உட்கொள்ளாவிடினும் கறிப்பதுமில்லை யென்றபடி, ஓ - எதிர்மறை.

 

142. சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
     வான்தோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது - வான்தோயும்
     மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்
     எய்தியக் கண்ணும் பிறர்க்கு.

     (இ-ள்.) வான் தோயும் - வானம் அளாவிய, மை தவழ் வெற்ப - மேகங்கள் தவழ்கின்ற மலையையுடைய அரசனே!, சான்றாண்மை - சற்குணநிறைவும், சாயல் - தேஜஸும், [அல்லது மேன்மையும்,] ஒழுக்கம் - நல்லொழுக்கமும், இவை மூன்றும் - ஆகிய இம்மூன்றும், வான் தோய் - கீர்த்தியால் சுவர்க்கத்திற் சேர்ந்திருக்கிற, குடிப்பிறந்தார்க்கு அல்லது - உயர்குலத்திற் பிறந்தவர்களுக் கல்லாமல், பெரு செல்வம் - பெரிய செல்வமானது, எய்தியக் கண்ணும் - வந்தடைந்த போதிலும், பிறர்க்கு - நல்ல குடியிற் பிறவாதவர்களுக்கு, படர் - உண்டாகாவாம், எ-று.

     சான்றாண்மை முதலிய நற்குணங்கள் உயர்குலத்தார்க்கே இயல்பா யமைவனவேயன்றி இழிகுலத்தார்க்கு அமையாவென உயர்குலச் சிறப்புக் கூறப்பட்டது.

     படாஅ - எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்று; அளபெடை அசையை நிறைக்க வந்தது.

 

143. இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை
     விடுப்ப ஒழிதலோடு இன்ன - குடிப்பிறந்தார்
     குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோடு
     ஒன்றா உணரற்பாற் றன்று.

     (இ-ள்.) இருக்கை எழலும் - (பெரியோரைக் கண்டால்) தம் இருப்பிடத்தை விட்டெழுந்திருப்பதும், எதிர் செலவும் - எதிர்கொண்டு செல்லுதலும், ஏனை - இன்னமும், விடுப்ப - (அவர்கள்) விடை கொடுக்க, ஒழிதலோடு - ஒழிதலுடனே பிரிதலும், இன்ன - இப்படிப்பட்டவைகளை, குடிப்பிறந்தார் - நல்ல குடியிற் பிறந்தவர்கள், குன்றா ஒழுக்கமாக் கொண்டார் - குறையாத நல்ல நடக்கைகளாக ஏற்றுக் கொண்டார்கள், (ஆதலால் அவர்களை) கயவரோடு - மூடர்களோடு, ஒன்றா - சேர்த்து, உணரல் பாற்று - அன்று - மதிப்பது பான்மையை யுடையதல்ல, எ-று.

     பெரியோர் தம்மிடம் வந்தால் தாம் இருந்தவிடத்தை விட்டெழுந்திருந்து எதிர்சென்று உபசரித்து அவர்கள் விடை கொடுத்த பின் திரும்பி வருதல் முதலாகிய காரியங்களை இன்றியமையா ஒழுக்கங்களாகக் குடிப்பிறந்தார் கொண்டிருப்பதனால் அங்ஙனம் கொள்ளாத மூடர்களோடு அவர்களைச் சேர்த்துப் பார்ப்பது நன்றன்று என்பதாம்.

     எழல் - எழு - பகுதி, அல் - விகுதி; "முற்றுமற்றொரோவழி" என்றதனால் உகரம் கெட்டது. செலவு - செல் - பகுதி, அ - சாரியை, உ - விகுதி. ஒழிதலோடு - ஓடு - எண்ணிடைச் சொல். இன்ன - சுட்டு அடியாகப் பிறந்த பலவின்பாற் பெயர். இ (அல்லது) இன் - பகுதி, அ - விகுதி. கயவர் - கயமை என்னும் பண்படியாகப் பிறந்த பெயர்.

     ஒன்றா - செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம்; ஒன்ற என்பது பொருள். உணரற்பாற்று - உணரலாகிய பான்மையை யுடையது; உணரல் + பால் + று எனப் பிரித்துக் கொள்க.

 

144. நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை
     பல்லவர் தூற்றும் பழியாகும் - எல்லாம்
     உணரும் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ
     புணரும் ஒருவர்க் கெனின்?

     (இ-ள்.) நல்லவை செய்யின் - நல்ல காரியங்களைச் செய்தால், இயல்பு ஆகும் - செய்ய வேண்டிய முறைமை யென்னலாகும்; தீயவை - தீயகாரியங்களைச் (செய்தால்), பல்லவர் தூற்றும் - பலரும் பரவச்செய்கிற, பழி ஆகும் - நிந்தையாகும், ஒருவர்க்கு புணரும் எனின் - (நற்குடிப்பிறப்பு) ஒருவர்க்குச் சேர்ந்தால், எல்லாம் உணரும் - எல்லாவற்றையு முணர்ந்த, குடி பிறப்பின் ஊதியம் - குடிப்பிறப்பினுடைய பயன், என் - என்ன? எ-று. ஓ - அசை.

     உலகத்தில் ஒருவர் நல்லொழுக்கமாக நடந்தால் அதனை உலகத்தார் விசேஷமாகக் கொள்ளாது நடக்க வேண்டிய இயல்பு தானென்று சாமானியமாகக் கொள்ளுகின்றார்கள்; தீயொழுக்கம் ஒழுகினாலோ தூஷிக்கின்றார்கள். ஆகவே நற்குடிப் பிறப்பினர்க்கு நல்லொழுக்கத்தால் யாதொரு பிரயோஜனமு மில்லை. பிறர் விசேஷமாகக் கொண்டாடாமை பற்றி நற்குடிப் பிறந்தார் தமக்கியல்பான நல்லொழுக்கத்தினின்றுந் தவறார் என்பது கருத்து.

     எல்லாமுணரும் என்றதனால் சகலகலா ஞானங்களை யுணர்வதற்கு நற்குடிப் பிறப்பு எளிதாயிருக்கின்ற தென்பதாம். எல்லாம் உணரும் என்பதற்கு எல்லாமறிந்திருக்கிற எனவும் பொருள் கொள்ளலாம் அப்போது பிரசித்தமான நற்குடிப் பிறப்பு என்றதாயிற்று. பல்லவர் - பல் - பகுதி, அ - சாரியை, அர் - பலர்பால் விகுதி, வகரம் உடம்படுமெய் 'பல்' தனிக்குறில் முன்னொற் றாதலால் லகரம் இரட்டிற்று.

 

145. கல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம்
     சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம்; - எல்லாம்
     இரப்பார்க்கொன் றீயாமை அச்சம்; மரத்தாரிம்
     மாணாக் குடிப்பிறந்தார்.

     (இ-ள்.) கல்லாமை அச்சம் - (தாம்) கல்லாமைக்கு அஞ்சுதலும், கயவர் தொழில் அச்சம் - மூடர்களுடைய தொழிலுக்கு அஞ்சுதலும், சொல்லாமை உள்ளும் - (பொய் குறளை முதலியவற்றைச்) சொல்லாமலிருப்பதிலும், ஓர் சோர்வு - (எந்த விடத்தில் தவறிப் போனோமோ வென்கிற) தளர்ச்சிக்கு, அச்சம் - அஞ்சுதலும், இரப்பார்க்கு - யாசகர்களுக்கு, ஒன்று ஈயாமை - (அவர் விரும்பிய) ஒரு பொருளைத் தாராமைக்கு, அச்சம் - அஞ்சுதலும், எல்லாம் - (இப்பேர்ப்பட்ட) பல அச்சங்களும் (நற்குடிபிறந்தார்க்கு உண்டாகின்றனவாம்); (அங்ஙனம் யாதொரு அச்சமுமில்லாத) இ மாணா குடி பிறந்தார் - இப்படிப்பட்ட - மரத்தன்மையை யுடையோர், (அதாவது மரத்தினாற் செய்த பிரதிமைகளைப் போன்றவர்கள்), எ-று.

     நல்ல குடியிற் பிறந்தார்க்கு கல்லாமை முதலிய பலவற்றிலும் அச்சம் உண்டாகின்றது. ஆதலால் நற்குடிப் பிறப்பென்ன வென்று புகழாப் புகழ்ச்சியாக் கூறியதனால் அது மேன்மையதென்பது கருத்து.

     கல்லாமை முதலியவற்றிற்கு அஞ்சாத கீழ் குடிப்பிறந்தோர் மனிதர்களாக இருந்தும் பயனின்மையால் மரத்தார் என்றார். கல்லாமை - நான்காம் வேற்றுமைத்தொகை. மாணா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், மாண் - பகுதி, ஆ - எதிர்மறையைக் காட்டும் விகுதி.

 

146. இனநன்மை இன்சொல்ஒன்று ஈதல்மற் றேனை
     மனநன்மை என்றிவை யெல்லாம் - கனமணி
     முத்தோடு இமைக்கும் முழங்குவரித் தண்சேர்ப்ப!
     இற்பிறந்தார் கண்ணே யுள.

     (இ-ள்.) கனமணி - காந்திமிகுந்த இரத்தினங்கள், முத்தோடு - முத்துக்களோடு சேர்ந்து, இமைக்கும் - பிரகாசிக்கின்ற, முழங்கு உவரி - சத்திக்கின்ற சமுத்திரத்தினுடைய, தண் சேர்ப்ப - குளிர்ச்சியான கரையையுடைய அரசனே!, இனம் நன்மை - சேர்க்கின்றவர்களுடைய நன்மையும், இன்சொல் - இனிமையான சொல்லும், ஒன்று ஈதல் - (யாசித்தவர்க்கு ஏதேனும்) ஒரு பொருளைத் தருதலும், ஏனை - மற்றும், மனம் நன்மை - மனம் சுத்தமாயிருத்தலும், என்று இவை எல்லாம் - ஆகிய இவைகளெல்லாம், இல் பிறந்தார் கண்ணே உள - நற்குடியிற் பிறந்தவர்களிடத்திலேயே யுண்டு, எ-று.

     குற்றமில்லாத நல்லினத்தைச் சேர்ந்திருத்தலும், யாவரிடத்தும் தக்கபடி இனிமையாகப் பேசுதலும், கேட்பவர்களுக்கு இல்லை யென்னாது கொடுத்தலும், மனதில் பஞ்ச முதலியவில்லாமல் தயாதாக்ஷிணியங்க ளுள்ளவரா யிருத்தலும், இப்படிப்பட்ட நற்குணங்களெல்லாம் குடிப்பிறந்தா ரிடத்தேயுண்டு.

     இன்சொல் - பண்புத்தொகை, என்று - எண்ணிடைச் சொல்; இது இனநன்மை முதலியவற்றோடும் கூடும், [இடை. சூ. 10.] முத்தோடு - உடனிகழ்ச்சியில் வந்த மூன்றாம் வேற்றுமை, முழங்கு உவரி - வினைத்தொகை உவர்த்தலையுடையது உவரி. உள - பலவின்பாற் குறிப்பு வினைமுற்று.

 

147. செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
     பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்;
     எவ்வம் உழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
     செய்வர் செயற்பா லவை.

     (இ-ள்.) செய்கை அழிந்து - வேலைப்பாடுகள் கெட்டு, சிதல் மண்டிற்று ஆயினும் - கறையான்கள் நெருங்கிப் பிடித்திருந்தாலும், பேர் இல் - பெரிய வீடானது, பெய்யா ஒரு சிறை - (மழை) பெய்யாத ஒரு பக்கத்தை, உடைத்து ஆகும் - உடையதாயிருக்கும்; (அதுபோல்) எவ்வம் உழந்தக்கடைத்தும் - துன்பத்துள் மிகுதியாக அலைச்சற் பட்டிருந்தாலும், குடிப்பிறந்தார் - நல்லகுடியிற் பிறந்தவர்கள், செயற்பாலவை - செய்யத்தக்க காரியங்களை, செய்வர் - செய்வார்கள், எ-று.

     ஒரு பெரிய வீடு கட்டடங்க ளழிந்து செற்பிடித்திருந்தாலும் மழை பெய்தற்கு உள்ளாகாத ஒரு பக்கம் அந்த வீட்டில் இருக்கவே இருக்கும். குடிப்பிறந்தார் வறுமை முதலியவற்றால் வருத்தப்பட்டாலும், செய்யத்தக்க காரியங்களைச் செய்வார்களேயன்றி செய்யத்தகாத காரியங்களைச் செய்யார் என்பதாம்.

     அழிந்து என்னும் வினையெச்சமும், மண்டிற்று என்னும் ஒன்றன் பால் முற்றும், மாடு கோடு கூரிய தென்பது போல் இல் என்பதைக் கொண்டன. உழந்தக் கடைத்து - கடைத்து - செயினென் வாய்பாட்டு வினையெச்ச விகுதி வலி மிகுந்திருப்பதனால் இது பெயரெச்சத் தொடராகாது.

 

148. ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
     அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் - திங்கள்போல்
     செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
     ஒல்கார் குடிப்பிறந் தார்.

     (இ-ள்.) ஒரு புடை - ஒரு பக்கத்தை, பாம்பு கொளினும் - பாம்பு பிடித்துக் கொண்டாலும், ஒரு புடை - ஒரு பக்கத்தால், அம் கண் மாஞாலம் - அழகிய இடமுள்ள பெரிய பூமியை, விளக்குறூஉம் - விளக்குகின்ற, திங்கள் போல் - சந்திரனைப் போல, செல்லாமை - (தங்கள் காரியங்கள்) ஈடேறாமை, செவ்வன் நேர் நிற்பினும் - நன்றாக நேரே இருந்தாலும், குடிப் பிறந்தார் -, ஒப்புரவிற்கு - உபகாரச் செய்கைக்கு, ஒல்கார் - பின் வாங்க மாட்டார்கள், எ-று.

     கிரஹணகாலத்தில் ஒரு பக்கத்தை இராகு கேதுக்களென்கிற பாம்பு பிடித்துக் கொண்டாலும் மற்றொரு பக்கத்தினால் சந்திரன் உலகத்தை விளக்குவது போல, குடிப்பிறந்தார் தாங்கள் எடுத்த காரியங்கள் நிறைவேறாமற் போன போதிலும் கூடிய மட்டில் உபகாரம் செய்வார்களென்பது கருத்து.

     விளக்குறூஉம் - உறு - துணைவினை அல்லது அசை, இன்னிசை யளபெடை ஒல்கார் - ஒல்கு - பகுதி.

 

149. செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன
     செல்லிடத்தும் செய்யார் சிறியவர் - புல்வாய்
     பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல்
     பொருமுரண் ஆற்றுதல் இன்று.

     (இ-ள்.) செல்லா இடத்தும் - (தங்களுக்குக்) கூடாத போதும், குடிப்பிறந்தார் -, செய்வன - செய்யுங் காரியங்களை, செல் இடத்தும் - கூடிய விடத்தும், செய்யார் சிறியவர் - இழிகுலத்திற் பிறந்தவர்கள் செய்ய மாட்டார்கள், புல்வாய் - மானானது, பருமம் - பருத்திருத்தலை, பொறுப்பினும் - சுமந்திருந்தாலும், பாய் - ஓடுகின்ற, பரிமாபோல் - குதிரையைப் போல், பொரு முரண் - போர் செய்யவல்ல பலத்தை, ஆற்றுதல் இன்று - பொறுப்பதில்லை, எ-று.

     தமக்குக் கூடாதவிடத்தும் குடிப்பிறந்தார் செய்யும் காரியங்களைத் தமக்குக் கூடிய இடத்திலும் அற்பர் செய்ய மாட்டார்கள். எப்படியெனில் மான் பருத்திருந்த போதிலும் குதிரையைப் போலப் போரிட வல்லதல்லாதது போல்.

     செய்வன - வினையாலணையும் பெயர்; செய் - வ் - அன் - அ - பகுதி, இடைநிலை, சாரியை, விகுதி; இங்கு இடைநிலை காலங்காட்டாது தன்மையைக் காட்டும். ஒருவகை மான் குதிரையைப் போல் பருத்திருக்கின்றது.

 

150. எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
     அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றுவார்;
     அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால்
     தெற்றெனத் தெண்ணீர் படும்.

     (இ-ள்.) எற்று ஒன்றும் இல்லா இடத்தும் - யாதொரு பொருளும் இல்லாத போதும், குடிப்பிறந்தார் -, அற்று - (தம்மைக் காப்பார்) இல்லாமல், தன் சேர்ந்தார்க்கு - தம்மைச் சேர்ந்தவர்களுக்கு, அசைவு இடத்து - சங்கடமான காலத்தில், ஊற்று ஆவர் - ஊன்று கோலாயிருப்பர்; அற்றக்கடைத்தும் - நீர் வறண்ட போதும், அகல்யாறு - விசாலமான நதியானது, அகழ்ந்தக்கால் - தோண்டினால், தெற்றென - தெளிவாக, தண் நீர் படும் - குளிர்ந்த நீரை உடைத்தாயிருக்கும், எ-று.

     கோடைக்காலத்தில் ஆற்றைத் தோண்டினால் நீர் சுரப்பது போல ஒன்றுமில்லாத வறுமைக் காலத்திலும் குடிப் பிறந்தார் தம்மையடைந்தவர்களுக்கு எப்படியாயினும் ஆதரவு செய்வர்.

     எற்று - என் - பகுதி, று - விகுதி, னகரம் றகரமானது வலித்தல் ஊன்று என்னும் பகுதியில் னகரம் வலிந்தது; தொழிலாகுபெயர். தெற்றென - சீக்கிரத்தி லெனப் பொருள் கொள்ளின் "தெண்ணீர்படும்" எனப் பாடங்கொண்டு, தெள் - தெளிந்த எனப் பொருள் கொள்க. தண்ணீர் படும் என்பதை ஒரு சொல்போ லெடுத்துக் கொள்ள வேண்டும்.