கல்வி
துறவியல்
[அதாவது கற்க வேண்டிய நூல்களைக் கற்பது.]
131. குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
(இ-ள்.) குஞ்சி அழகும் - மயிர் முடியி னழகும், கொடுதானை கோடு அழகும் - வளையும்படியான ஆடையினது கரையழகும், மஞ்சள் அழகும் - பூச்சினது அழகும், அழகு அல்ல - அழகாக மாட்டா, நெஞ்சத்து - மனதில், நல்லம் யாம் என்னும் - யாம் நல்லவர்களா யிருக்கக் கடவோ மென்கிற, நடுவு நிலைமையால் - நடுவு நிலைமையைத் தருதலால், கல்வி அழகே - கல்வியினா லுண்டாகின்ற அழகே, அழகு - அழகாகும், எ-று.
மயிர்களைச் சீர்ப்படுத்தி முடிப்பதனாலும் ஓரங்களில் பட்டுக் கரைபோட்ட வஸ்திரங்களைத் தரிப்பதனாலும், நல்ல பரிமளத் திரவியங்களை மெய்யிற் பூசுவதனாலும் உண்டாகின்ற அழகு அழகாக மாட்டா, நாம் மறுமைக்கு அஞ்சிப் பக்ஷபாதமில்லாமல் நடக்க வேண்டுமென்கிற நடுவுநிலைமையைக் கல்வி யுண்டாக்குவதால் அதனால் வரும் அழகே விசேஷமென்பதாம்.
மஞ்சள் என்பது பூசத்தக்க வாசனைத் திரவியங்களுக்கெல்லாம் உப லக்ஷணமாகக் கொள்ளப்பட்டது. [நன். பொது. சூ. 7] கொடுமை என்பது இங்கே மடியுந்தன்மைக்குக் கொள்ளப் பட்டது. நல்லம் - தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று. அழகே - தில் ஏகாரம் - பிரிநிலை.
132. இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
(இ-ள்.) இம்மை பயக்கும் - இவ்வுலக சௌக்கியத்தைக் கொடுக்கும்; ஈய - (பிறருக்குக்) கொடுப்பதனால், குறைவு இன்று - குறையுந் தன்மையை யுடையதன்று; தம்மை - (கற்றவராகிய) தம்மை, விளக்கும் - விளங்கச் செய்யும் [அதாவது எங்கும் புகழ்பெறச் செய்யுமென்றபடி]; தாம் உளரா - தாம் உயிரோடிருக்க, கேடு இன்று - கெடுதலை யுடையதன்று; (ஆதலால்) எம்மை உலகத்தும் - எத்தன்மையான உலகத்திலும், கல்வி போல் - கல்வியைப் போல, மம்மர் அறுக்கும் மருந்து - மயக்கத்தை அறுக்கும்படியான மருந்தை, யாம் காணேம் - யாம் கண்டோமில்லை, எ-று.
இம்மையிற் சுகத்தையுண்டாக்கி, பிறருக்குக் கொடுக்கவும் குறைபடாமலிருந்து தமக்குப் புகழை யுண்டாக்கி, தாமிருக்கவும் அழிதலில்லாம லிருப்பதால் எல்லாப் பொருளிலும் கல்வியே மேலானதென்பது கருத்து.
இதனை மருந்தென்றது மயக்கத்தைத் தீர்த்தலும் சுகத்தை யுண்டாக்குதலுமாகிய காரணங்களா லென்க. மற்ற மருந்து சுகத்தைக் கொடுத்தாலும் பிறருக்குக் கொடுப்பதனால் குறையும், தாம் இருக்கும் போது கெடவும் கெடும், ஆதலால் இம்மருந்து எல்லா மருந்திலும் மேலென்றார்.
ஆல் - அசைகள், இம்மை - சுகத்திற்கு ஆகு பெயர். எம்மை - அம்மை இம்மை என்பதைப் போல் மை விகுதி. இடப்பொருளில் வந்தது.
133. களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
கடைநிலத்தோ ராயினும் சுற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப்படும்.
(இ-ள்.) களர் நிலத்துப் பிறந்த உப்பினை - உவர் நிலத்தில் உண்டான உப்பை, சான்றோர் - யோக்கியர்கள், விளை நிலத்து நெல்லின் - கழனியில் விளையும் நெல்லைக் கொள்வது போல, விழுமிது ஆ கொள்வர் - மேன்மையான பொருளாகக் கொள்வார்; (அதுபோல்) கடை நிலத்தோர் ஆயினும் - கீழ்ச்சாதியிற் பிறந்தவர்களானாலும், கற்று அறிந்தோரை - (நூல்களை) கற்று (அவற்றின் சாரத்தை) அரிந்தவர்களை, தலை நிலத்து - மேலான ஜாதியில், வைக்கப்படும் - வைக்க வேண்டும், எ-று.
பிறப்பைப் பற்றி உயர்வு தாழ்வு யோசியாமல் அவர்களிடத்துண்டான கல்விச் சிறப்பினால் அவரை உயர் பிறப்பாளராகக் கொண்டு அவர்களிடத்தில் கற்க முயல வேண்டு மென்பது கருத்து.
நெல்லின் - இன் உருபு ஒப்புப் பொருளில் வந்தது. விழுமிது - வினையாலணையும் பெயர், விழுமு - பகுதி, இன் - இடைநிலை, ஈறு தொக்கது, து - ஒன்றன் விகுதி, படும் - இது ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவான வியங்கோள் வினைமுற்று. அல்லது விதிப் பொருளையுடைய வினைமுற்று. இதை நன்னூல் உரையாசிரியர் தேற்றப் பொருளில் வந்த தொழிற்பெயரென்கிறார்.
134. வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற.
(இ-ள்.) வைப்புழி - வைத்த இடத்தில், கோள் படா - (பிறரால்) அபகரிக்கப்படமாட்டாது; வாய்த்து - (தமக்கு) கிடைத்து, ஈயில் - (பிறருக்கு) கொடுத்தால், கேடு இல்லை - அழிவதில்லை; மிக்க சிறப்பின் - மேலான (படைச்) சிறப்பையுடைய, அரசர் செறின் - அரசர் கோபிப்பாராயின், வவ்வார் - பிடுங்கிக் கொள்ள மாட்டார்கள்; (ஆதலால்) ஒருவன் -, மக்கட்கு - (தன்) பிள்ளைகளுக்கு, எச்சன் என - (தன் சம்பாத்தியத்தின்) மிஞ்சின ஆஸ்தியென்று, செய்வன - செய்யத்தக்கவை, விச்சை - கல்வியாம், பிற அல்ல - மற்றவைகள் அல்ல, எ-று. மற்று - அசை.
செல்வப் பொருள் திருடப்படும்; பிறருக்குக் கொடுத்தா வழிந்து போம்; சேனாபலமுள்ள அரசரும் கைக்கொள்வார்கள்; கல்விப் பொருளுக்கு இத்தன்மையான ஈனங்களில்லை யாதலால் செல்வப் பொருளிலும் கல்விப் பொருளே சிறந்ததென்பதாம்.
கோள் - கொள் என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முதனீட்சி விகாரம் பெற்றது, இரண்டாம் வேற்றுமைத் தொகை, சிறப்பின் - இன் - சாரியை. எச்சம் - எஞ்சியது எச்சம்; எஞ்சு - பகுதி, அம் - கர்த்தாப் பொருள் விகுதி, ஞகரம் சகரமானது வலித்தல். செய்வன - செய்வது போல் வந்த செயப்பாட்டு வினையாலணையும் பெயர். விச்சை - வித்யா என்னும் வட சொல்லின் விகாரம். பிற - பலவின் பாற் பெயர், வேற்றுமைப் படும்போது அற்றுச் சாரியை பெறும்.
135. கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.
(இ-ள்.) கல்வி கரை இல - கல்விகள் முடிவில்லாதன; கற்பவர் நாள் சில - கற்பவர்களுடைய வாழ்நாள்கள் சில; மெல்ல நினைக்கில் - பொறுத்து யோசித்தால், பிணி பல - கற்பவர்க்கு அநேகம் வியாதிகளுளவாம்; (ஆதலால்) நீர் ஒழிய பால் உண் குருகின் - நீரை நீக்கிப் பாலையே உண்ணுகின்ற அன்னப் பறவையைப் போல், தெரிந்து - (நூல் திறங்களை) அறிந்து, தெள்ளிதின் - விவேகத்தினால், ஆராய்ந்து -, அமைவுடைய - (தமக்குப்) பொருந்தினவைகளை, கற்ப - கற்பார்கள், எ-று, ஏ - அசை.
ஒருவன் முற்றும் கற்க வேண்டுமானால் கல்விகள் அபாரமாக யிருத்தலினாலும் ஆயுள் அற்பமானதா யிருப்பதாலும், பலவியாதிகள் ச்மபவிப்பதனாலும் அது இசையாது; ஆகவே நன்றாய் ஆராய்ந்து தமக்கு வேண்டியவைகளைப் புத்திசாலிகள் நன்றாய் ஆராய்ந்து தமக்கு வேண்டியவைகளைப் புத்திசாலிகள் கற்கின்றார்கள். எங்ஙனமெனில் நீரைப் பிரித்துப் பாலையுண்ணும் அன்னத்தைப் போல்.
நீரையும் பாலையும் கலந்து வைக்கில் நீரைப்பிரித்துப் பாலை யன்னம் உண்கிறதென்று கூறுகிறார்கள். கல்வி - கல் - பகுதி, வி - செயப்படுபொருள் விகுதி, கற்கத்தக்கவை யென்பது திரண்டபொருள். கல்வி கரையில என்பது முந்தி யெழுதியுள்ள இலக்கணத்திற் கண்டு கொள்க. மெல்ல - அவசரப்படாமல், மென்மை யடியாகப் பிறந்த குறிப்பு வினையெச்சம். தெள்ளிது - தொழிற்பெயராய்ப் பண்பை யுணர்த்துகின்றது. தெளி - பகுதி, இ - விகுதி, ளகரம் - விரித்தல், கற்ப - பலர்பால் வினைமுற்று.
136. தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்
அவன்துணையா ஆறுபோய் அற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல்.
(இ-ள்.) தோணி இயக்குவான் - மரக்கலத்தை நடத்துவோன், காணில் - ஆராய்ந்தால், தொல்லை வருணத்து - பழமையான சாதிகளில், கடைபட்டான் என்று - கடைசியான சூத்திர சாதியிற் சேர்ந்தவன் என்று, இகழார் - (பெரியோர்) நிந்திக்கமாட்டார்; காணாய் - நீ பார்; நூல் கற்ற - சாஸ்திரங்களைப் படித்து, மகன் துணையா - மனிதன் சகாயமாக விருக்க, நல்ல கொளல் - நல்ல நூற்பொருள்களைக் கற்றல், அவன் துணையா ஆறு போய் அற்று - அந்தத் தோணி இயக்குவான் துணையா நிற்ப ஆற்றைக் கடந்தது போலாகும், எ-று.
படவு ஓட்டுவோன் ஈனசாதிய னானாலும் இன்றியமையாது அவனைக் கொண்டே ஆற்றைக் கடப்பது போலக் கற்றவன் ஈனசாதிப் பிறப்பின னானாலும் அவசியமான போது அவனைக் கொண்டே கற்க வேண்டிய நூல்களைக் கற்க வேண்டுமென்பது கருத்து.
இயக்குவான் - பிறவினை வினையாலணையும் பெயர், இயக்கு - பிற வினைப்பகுதி, இயங்கு - தன் வினைப் பகுதி, தொல்லை - தொல் - பகுதி பண்படி, ஐ - விகுதி. தொல்லை வருணம் - பண்புத்தொகை. காணாய் அசையுமாம். போயற்று - போய் - செய்தெனெச்சத்திரிபு, அற்று - உவமையைக் காட்டும் குறிப்பு வினைமுற்று; இரண்டும் சேர்ந்து, போனால் எத்தன்மைத்தோ அத்தன்மைத்து என்னும் பொருளைத் தரும், இது முன்னோர் கொள்கை. செய்தெனெச்சத்தைத் தொழிற் பெயர் போலக் கொண்டு போனது போலாம் எனப் பொருள் கொள்ளுதல் இக்காலத்து வழக்கு. நல்ல - பலவின்பாற்பெயர், இரண்டாம் வேற்றுமைத் தொகை.
137. தவலருந் தொல்கேள்வித் தன்மை உடையார்
இகலிலர் எஃகுடையார் தம்முள் குழீஇ
நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்து
உம்பர் உறைவார் பதி.
(இ-ள்.) தவல் அரு - குற்றமில்லாத, தொல் கேள்வி தன்மை உடையார் - பழமையான நூற்கேள்விகளைக் கேட்குந் தன்மையை உடையவர்கள், எஃகு உடையார் தம்முள் - ஆயுதம்போற் கூர்மையான புத்தியை யுடையவர்களுக்குள்ளே, குழீஇ - கூடி, இகல் இலர் - மாறுபடுத லில்லாதவர்களாகி, நகலின் - மகிழ்வதைக் காட்டினும், இனிது ஆயின் - இன்ப முள்ளதாயின், அகல் வானத்தும்பர் - விசாலமாகிய வானத்தின் மேல், உறைவார் - வாசஞ்செய்கின்ற வேதர்களுடைய, பதி - ஸ்தானமாகிய சொர்க்கத்தை, காண்போம் - பார்ப்போம், எ-று.
நன்றாய்க் கற்றவர்களோடு கூடி நேசமாயிருந்து அனுபவிக்கும் மகிழ்ச்சியைக் காட்டிலும் சொர்க்கத்தி லுண்டாகிய அனுபவம் சிறந்ததல்ல என்பதாம்.
எஃகு ஆயுதம், இங்கு கூர்மை பற்றி புத்திக்கு ஆகுபெயராக கொள்ளப்பட்டது. தவலரு - அருமையாவது இன்மை. குழீஇ - குழு - பகுதி, இ - விகுதி, அளபெடை இன்னோசைக்குவந்தது, செய்தெனெச்சம். நகலின் - ஐந்தாம் வேற்றுமை, எல்லைப் பொருள், இதனை நீக்கப் பொருளென்பாரும் உளர்.
138. கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
நுனியின் கரும்புதின் றற்றே - நுனிநீக்கித்
தூரில்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரமி லாளர் தொடர்பு.
(இ-ள்.) கனை கடல் - ஒலிக்கின்ற கடலினது, தண் சேர்ப்ப - குளிர்ச்சியாகிய துறையை யுடையானே! கற்று அறிந்தார் கேண்மை - நூல்களைக் கற்று (அவற்றின்) சாரத்தை யறிந்தவரது சிநேகமானது, நுனியில் கரும்பு தின்றற்று - நுனியிலிருந்து கரும்பைத் தின்றது போலாம்; பண்பு இலா - குணமில்லாத, ஈரம் இலாளர் - சாரமற்றவர்களுடைய, தொடர்பு - சிநேகமானது, நுனி நீக்கி - நுனியைத் தள்ளி, தூரில் தின்றன்ன தகைத்து - வேரிலிருந்து தின்றதையொத்த தன்மையை யுடையது, எ-று. அரோ, ஏ - அசைகள்.
யோக்கியருடன் சிநேகிப்பது கரும்பை நுனியிலிருந்து தின்றது போல வர வர ருசியாயிருக்கும்; சற்குணமென்னும் சாரமில்லாதானுடைய சிநேகம் வேரிலிருந்து கரும்பைத் தின்பது போல வர வர ருசியில்லாமல் வெறுக்கத்தக்க தென்றபடி. ஆதலால் கற்றவரையே சேரவேண்டு மென்பதாயிற்று.
கனைகடல் - வினைத்தொகை நிலைத் தொடர், தின்றற்று - போயற்று என்பதைப் போற் கொள்க. நுனியில், தூரில் - ஐந்தாம் வேற்றுமை, எல்லைப் பொருளன. இலாளர் - இன்மையை யாள்பவர்.
139. கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.
(இ-ள்.) தொல் சிறப்பின் - பழமையான சிறப்பையுடைய, ஒள் நிறம் பாதிரி பூ சேர்தலால் - ஒண்மையான நிறத்தையுடைய பாதிரிப் பூவைச் சேர்ந்திருப்பதினாலே, புது ஓடு - புதிய பானையோடானது, தண்ணீர்க்கு - (தன்னில் தங்கிய) ஜலத்துக்கு, தான் பயந்த ஆங்கு - தான் (வாசனையைக்) கொடுத்தது போல, கல்லாரே ஆயினும் - (தாம்) கல்வி கற்காதவராயினும், கற்றாரை சேர்ந்து ஒழுகின் - கற்றோரைச் சேர்ந்து (அவர் போல) நடந்தால், நல் அறிவு - நல்ல விவேகமானது, நாளும் - தினந்தோறும், தலைப்படுவர் - உண்டாகப் பெறுவர், எ-று.
கல்லாதாருக்கும் கற்றாரோடு சேர்க்கையால் விவேகமுண்டாம், எங்ஙனமெனில் பானையோடானது பாதிரிப் பூவைச் சேர்ந்து தன்னிலுள்ள நீருக்கு வாசனையைத் தந்தது போல என்பதாம்.
அறிவு தலைப்படுவர் - "உயர்திணை தொடர்ந்த" என்பது விதி. புத்தோடு - புது ஓடு என்பதில் தகரம் இரட்டித்தது [நன். உயிரீறு. சூ. 33ன் உரையைக் காண்க].
140. அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது
உலகநூல் ஓதுவ தெல்லாம் - கலகல
கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணையறிவார் இல்.
(இ-ள்.) அலகு சால் - கணக்குமிகுந்த, கற்பின் - சாஸ்திரங்களுக்குள்ளே, அறிவு நூல் கல்லாது - ஞான சாஸ்திரங்களைக் கற்காமல் விட்டு, உலக நூல் ஓதுவது எல்லாம் - இவ்வுலகத்திற்குப் பயன் படும்படியான நூல்களைப் படிப்பதெல்லாம், கலகல கூஉந் துணை அல்லால் - கலகலவென்று சும்மாக் கூவுமளவை யுடையதே யல்லது, கொண்டு - (அவற்றைக்) கொண்டு, தடுமாற்றம் - (சம்சாரத்தில்) தடுமாறுவது, போந் துணை - நீங்குமளவாகிய மேன்மையை, அறிவார் இல் - அறிபவர்கள் இல்லை, எ-று.
பல நூல்களிருந்தாலும் ஞானநூலையே முக்கியமாய்க் கற்க வேண்டும்; அதனைக் கல்லாதுவிட்டு உலக இன்பத்துக்கு வேண்டிய நூலையே கற்பது யாதொரு பொருளு மில்லாமல் கலகலவென்று சும்மாக் கூவுவது போல் வீணே யல்லாமல் சம்சார பந்தத்தை நீக்கும் மேன்மையதல்ல என்பதாம். இதனால் ஞான நூலை முக்கியமாய்க் கற்க வேண்டுமென்பதாயிற்று.
சால் - வினைத்தொகை, அல்லது உரிச்சொல். கற்பு - கற்கப்படு நூலுக்கு ஆகுபெயர். அறிவு நூல் - இரண்டாம் வேற்றுமையுருபும் பயனு முடன்றொக்கதொகை. கல்லாது - எதிர்மறை வினையெச்சம். ஓதுவதெல்லாம் - ஒருமையிற் பன்மைமயக்கம். கலகல - அநுகரணம் பொருளில்லாமையைக் குறிக்கின்றது. கூஉம் - கூ - பகுதி, உம் - பெயரெச்ச விகுதி, அளபெடை இன்னிசை. கூஉந்துணை - பெயரெச்சத் தொடர்ப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இங்ஙனம் வருவதற்கு விதியில்லையாயினும் அநுபவத்தாற் கொள்ள வேண்டும். வினைத்தொகையாக் கொள்ளின் நகரம் மிகுவதற்கு வழி இல்லையாம். அல்லது துணையென்பதற்குத் துணையை யுடையதெனப் பொருள் கொள்ளலாம். போஒந் துணையும், இப்படியே.
