தீவினை அச்சம்
துறவியல்
[அதாவது தீவினை செய்வதற்கு அஞ்சி நடக்க வேண்டு மென்பதைப் பற்றிச் சொல்லியது. பொருள்களின் மெய்ம்மையை யுணர்தலினாலே தீமை பயக்குமவை இன்னின்னவை யென்று தெரியும், ஆனதைப்பற்றி மெய்ம்மையின் பின்னர் இது வைக்கப்பட்டது.]
121. துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
புல்லறி வாளர் வயிறு.
(இ-ள்.) சுடுகாடு - சுடுகாடுகள், துக்கத்துள் - துக்கத்தைத் தரும் பாபகாரியங்களில், தூங்கி - சுகித்திருந்து, துறவின்கண் - (அவற்றைத்) துறக்கும் வழியில், சேர்கலா - சேரமாட்டாத, மக்கள் - மனிதர்களுடைய, பிணத்த - உயிர்போன உடல்களையுடையனவாம்; புலன் கெட்ட - அறியுந்திறங் கெட்ட, புல் அறிவு ஆளர் - அற்ப அறிவை யுடையவர்களது, வயிறு - வயிறுகள், தொக்க - சேர்ந்த, விலங்கிற்கும் - மிருகங்களுக்கும், புள்ளிற்கும் - பட்சிகளுக்கும், காடே - இடுகாடேயாம், எ-று.
மனிதப் பிணங்களை யிடுகிற சுடுகாட்டைப் போல புத்தியில்லாதவர்களுடைய வயிறுகள் மிருகங்களையும் பட்சிகளையும் கொன்றிடும்படியான சுடுகாடு என்று நிந்தித்ததனால் விவேகமுள்ளவன் மிருகபட்சிகளைக் கொன்று தின்பது தீவினைகளுள் தலையானது என்பது கருத்தாம்.
"துக்கத்துட்டூங்கித் துறவின் கட்சேர்கலா மக்கள்" என்றதனால் உடம்பைப் போற்றுதலே யன்றி உயிர்க் குறுதியானவற்றைச் செய்யாதவர்கள் என்பதாம். சேர்கலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், சேர் - பகுதி, கல் - ஆற்றலைக் காட்டும் விகுதி, ஆ - எதிர்மறை விகுதி. பிணத்த - பலவின் படர்க்கைக் குறிப்பு வினைமுற்று. காடே - ஏ - தேற்றம். புன்மையான அறிவை யாள்பவர் புல்லறிவாளர்; புல்லறிவு - உண்ணுதல் உறங்குதல் முதலிய சாதாரண அறிவு.
122. இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்
கரும்பார் கழனியுள் சேர்வர் - சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.
(இ-ள்.) சுரும்பு ஆர்க்கும் - வண்டுகள் சப்திக்கின்ற, காட்டுள் ஆய் வாழும் - காட்டினிடத்து இருந்து வசிக்கின்ற, சிவலும் - கவுதாரியையும், குறும்பூழும் - காடையையும், கூட்டுள் ஆய் - கூடுகளில் இருக்கும்படி, கொண்டு வைப்பார் - பிடித்து வந்து அடைத்து வைப்பவர்கள், இரும்பு ஆர்க்கும் - இருப்பு விலங்குகள் சப்திக்கின்ற, காலர் ஆய் - கால்களை யுடையவர்களாய், ஏதிலார்க்கு - பகைவர்களுக்கு, ஆளாய் - (அடிமை) ஆள்களாய், சுரும் பார் - வட்டை நிலத்திலும், [அல்லது, கரும்பு ஆர் - கரும்புகள் விளைந்த,] கழனியுள் - கழனியிலும் [கருப்பந் தோட்டங்களில் என்றபடி], சேர்வர் - (வேலை செய்யும்படி) சேர்வார்கள், எ-று.
காடை கவுதாரி முதலியவற்றைப் பிடித்துக் கூட்டிலடைத்து வைப்பவர்கள் மறுமையில் பகைவர்க்கு அடிமைகளாய் காலில் விலங்கு பூண்டு கழனிகளில் வேலை செய்விக்கப் படுவார்களென்பதாம்.
கரும் பார் - கருமையான பார், இங்கே கருமையாவது வலிமை, அதாவது வட்டையாயிருத்தல், பயனில்லாத நிலம். கரும்பாருள்ளும் கழனியுள்ளும் என முதல் பட்சத்தில் உம்மைத் தொகையாகவும், கரும் பார்ந்த கழனியுள் என இரண்டாவது பட்சத்தில் வினைத்தொகை யாகவுங் கொள்க. வைப்பார் - வினையாலணையும் பெயர்.
123. அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால்
அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்.
(இ-ள்.) அக்கால் - அந்தக் காலத்தில் [முற்சன்மத்தில்], அலவனை - நண்டை, காதலித்து - விரும்பி, கால் முரித்து - காலையொடித்து, தின்ற - (அதனைத்) தின்ற, பழவினை - (அதனாலுண்டாகிய) கருமம், வந்து அடைந்தக் கால் - (பயன் பெறும்படி) வந்து சேர்ந்த போது, அங்கை - உள்ளங்கையானது, அக்கு போல் - சங்குமணியைப் போல, ஒழிய - நீங்க, விரல் அழுகி - விரல்கள் அழுகிப் போய், துக்கம் - துக்கத்தைத் தருகின்ற, தொழு நோய் - பலவகைக் குட்ட நோய்கள், எழுப - உண்டாகப் பெறுவார் (பாவிகள்), எ-று.
தண்டை முரித்துத் தின்றவர்க்குக் குட்ட நோ யுண்டாமாதலால் அதுவும் தீவினை யென்பதாம்.
"அகமுனர்ச்செவிகை வரினிடை யனகெடும்" என்பதனால் அகங்கை அங்கை யென்றாயிற்று [மெய். சூ. 19]; பாவிகள் நோயெழுப என்பது "உயர்திணை தொடர்ந்த பொருண்முதலாறும்" என்கிற [பொது. சூ. 26] விதியால் பொருந்தியது. சங்கு சுட்ட சுண்ணாம்பு என்பது போல தின்ற என்பது பழவினை யென்னுங் காரியப் பெயரோடு முடிந்தது.
124. நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் - பரப்பக்
கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக்
கடுவினைய ராகியார்ச் சார்ந்து.
(இ-ள்.) நெய் போல்வதும் - நெய்யைப் போல இதமாகிய பொருளும், நெருப்பு அழல் - நெருப்பினது உக்கிரத்தை, சேர்ந்தக்கால் - சேர்ந்தால், எரிப்ப சுட்டு - (உடலை) யெரிக்கும்படி காய்ந்து, எவ்வம் நோய் - துன்பப்படுத்தும் படியான நோயை, ஆக்கும் - உண்டாக்கும்; (அதுபோல) கோடாரும் - (நல்லொழுக்கத்திற்) கோணி நடவாதவரும், சுடு வினையார் ஆகியார் - கடுமையான தீவினை செய்பவர்களை, சார்ந்து - சேர்ந்து, கோடி - (தம் ஒழுக்கத்தில்) கோணி, பரப்ப - மிகவும், கொடு வினையா ஆகுவர் - கொடுமையான வினைகளைச் செய்பவராவார்கள், எ-று.
நெய் உடம்பிற்பட இதமானதா யிருந்தாலும் காய்ந்து விடின் உடம்பைச் சுட்டு நோயுண்டாக்குவது போல, யோக்கியரும் தீவினை செய்பவரோடு சேர்ந்தால் தீவினையே அதிகமாகச் செய்பவராவார்கள்.
போல்வதூஉம் - இசை நிறை கோடார் - கோடு - பகுதி, ஆ - எதிர்மறை விகுதி புணர்ந்து கெட்டது, ஆர் - விகுதி; வினைப்பகுதி இடைநிலையின்றி ஆர் விகுதியோடு சேர்ந்தால் எதிர்மறையைக் காட்டுமென்றே சொல்லலாம். உடன்பாட்டில் கோடினார், கோடுகின்றார், கோடுவார் என்று வரும். ஆகியார்ச்சார்ந்து - இரண்டாம் வேற்றுமைத் தொகையாகலின் உயர்திணைப் பெயர் முன் வலி மிகுந்தது. "இயல்பின் விகாரமும் விகாரத்தியல்பும்" என்பது விதி.
125. பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நத்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு.
(இ-ள்.) பெரியவர் கேண்மை - பெரியோர்களுடைய சிநேகமானது, பிறை போல - இளஞ் சந்திரனைப் போல, வரிசை ஆ - கிரமக் கிரமமாக, நாளும் நந்தும் - தினந்தோறும் வளரும்; சிறியார் தொடர்பு - சிற்றறிவுடையாரது சிநேகம், வான் ஊர் - ஆகாயத்தில் தவழ்கின்ற, மதியம் போல் - பூர்ண சந்திரனைப் போல, வைகலும் - தினந்தோறும், வரிசையால் - கிரமமாக, தானே தேயும் - தானே குறைந்துவிடும், எ-று.
அயோக்கியரோடு உறவாடுவதை விட்டு யோக்கியரோடு உறவாட வேண்டு மென்பதாயிற்று.
நாளும், வைகலும் - இரண்டிடத்திலும் உம் - முற்றும்மைகள், பெரியவர் சிறியவர் என்பவற்றிற்கு அரிது என்பதற்கு எழுதியுள்ளதுபோலக் கொள்க.
126. சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து.
(இ-ள்.) சான்றோர் என மதித்து - சற்குணம் நிறைந்தவர்களென்று நினைத்து, மன் சார்ந்தாய் - (சிலரை) மிகவும் நேசித்தாய்; சார்ந்தாய்க்கு - (அப்படி) நேசித்த உனக்கு, சார்ந்தார்கண் - (நீ) சேர்ந்தவரிடத்து, சான்றாண்மை - (அந்த) சற்குண நிறைவு, இல் ஆயின் - இல்லையானால், சார்ந்தோய் - (அவர்களை) அடுத்தவனே! கேள் - (அதற்கு நான் சொல்லும் உவமையை) கேள்; (அது) ஒருவன் - ஒருவன், அகத்து சாந்து உண்டு என்று- உள்ளே வாசனை வஸ்து இருக்கிறதென்று நினைத்து, செப்பு திறந்து - பரணியைத் திறந்து, அகத்து - உள்ளே, பாம்பு கண்டது உடைத்து - பாம்பைப் பார்த்த உவமானத்தையுடையது, எ-று.
நீ சிலரை ஆராயாமல் மஹாகுணவான்களென்று நினைத்து நட்புக் கொண்டு பின்பு அவர்களிடத்து அந்த நட்புக்குணம் இல்லையென் றுனக்குத் தெரிந்தால் சாந்துச் செப்பு என்று ஒரு பரணியை நீ திறந்து அச்சாந்தில்லாமல் பாம்பிருக்கக் கண்டது போல் உன் குற்றத்தால் வந்ததென நினைத்துக் கொள். இதனால் ஒருவரை நன்காராய்ந்து நேசிக்க வேண்டும். அப்படி நேசியாமற் போனால் அதனால் செப்புக்குள்ளிருந்த பாம்பினால் தீமை வருவது போலத் தீமை யுண்டாகும். ஆகையாலதற்க கஞ்ச வேண்டு மென்பதாயிற்று.
சான்றோர் - சால் - பகுதி, (=நிறைவு), ஆர் - விகுதி, றகரம் - இடைநிலை, லகரம் னகரமானது சந்தியும் விகாரமும், விகுதி ஆகாரம் ஓகாரமானது [பொது. நன். சூ. 2, விதியால்] மன் - உரிச்சொல். சார்ந்தாய்க்கு - முன்னிலை வினையாலணையும் பெயர். சார்ந்தோய் - விளி; ஈற்று னகரம் யகரமானது விளியுருபு. கண்டது - வினையாலணையும் பெயர், இங்கே காணப்பட்ட உபமானத்தை யுணர்த்திற்று.
127. யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் - சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு.
(இ-ள்.) சாரல் - மலைச்சாரல்களிலே, கனமணி நின்று இமைக்கும் - காந்திமிகுந்த இரத்தினங்கள் இருந்து பிரகாசிக்கின்ற, நாட - நாட்டை யுடைய அரசனே! கேள் - கேட்கக் கடவாய்; ஒருவர்தம் உள்ளத்தை - ஒருவருடைய மனத்தை, தேரும் துணைமை யுடையவர் ஒருவர் - ஆராய்ந்தறியும் வல்லமை யுடையவராகிய ஒருவர், யார் - எவர் இருக்கிறார்கள்? [ஒருவருமில்லை]; (ஏனெனில்) மக்கள் மனம் வேறு - மனிதர்கள் இதயமானது வேறு தன்மையையுடையது; செய்கையும் வேறு - (அவர்கள்) செய்யுங் காரியமும் வேறாயிருக்கின்றது, எ-று.
உலகத்தில் மனிதர் மனத்தில் நினைத்தபடி செய்யாமல் மேலுக்கு வஞ்சனையாய் வேறுவிதம் நடத்துகிறார்களாகையால், செய்கையினாலே உள்ளத்தை யின்னபடி யென்று அறியக் கூடாது; ஆகவே செய்கையைக் கொண்டே நல்லவரென்று எண்ண வேண்டாம்; அப்படித் தேராத போது அவர் கூட்டுறவுக்கு அஞ்ச வேண்டும் என்பதாயிற்று.
துணைமை - மை - பண்புப்பெயர் விகுதி. வேறு - ஐம்பான் மூவிடங்கட்கும் பொதுவான குறிப்பு வினைமுற்று. சாரல் - தொழிற்பெயர், இடப்பெயர்க்கு ஆகுபெயர்.
128. உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலராய்க்
கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை - தெள்ளிப்
புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
மனத்துக்கண் மாசாய் விடும்.
(இ-ள்.) புனல் அருவிநீர், தெள்ளி - தெளிந்து, செதும்பு - சேற்றை, நின்று அலைக்கும் - (தான்) இருந்து போகும்படி செய்கிற, பூ குன்ற நாட - அழகிய மலையுள்ள நாட்டை யுடையவனே! உள்ளத்தான் நள்ளாது - மனத்தினால் விரும்பாமல், உறுது தொழிலர் ஆய் - உறுதியான தொழிலைச் செய்பவராய், கள்ளத்தால் நட்டார் - வஞ்சனையால் சிநேகித்தவர்களுடைய, சுழி கேண்மை - மிகுதியான சிநேகம், மனத்துக் கண் - மனதில், மாசு ஆய்விடும் - குற்றமுள்ளதாய் நிற்கும், எ-று.
மனமொப்பி நேசியாமல் இவர் உண்மையாக நேசித்தவரென்று நம்பத்தக்க உறுதியான செய்கைகளைச் செய்து கபடமாக நேசிப்பவர்களுடைய சிநேகம் மனதிற் குற்றமாயிருக்கும், அதாவது பின்னிட்டுத் தீமையை விளைக்கு மென்பதாம். இதனால் அதற்கு அஞ்சவேண்டு மென்பதாயிற்று.
தள்ளாது - நள் - பகுதி, ஆ - எதிர்மறை விகுதி; து - வினையெச்ச விகுதி. நட்டார் - நள் - பகுதி, ட - இடைநிலை, ளகரம் டகரமானது சந்தி, ஆர் - விகுதி; வினையாலணையும் பெயர், கழி - உரிச்சொல். கேண்மை - கேள் (=உறவினன், க்ஷேமத்தை விசாரிப்பவனானதால்) பகுதி, மை - பண்புப் பெயர் விகுதி. தெள்ளிப்புனற் செதும்பு நின்றலைக்கும் - அருவிநீர் சேற்றைப் போக்கித் தெளிவாய் நிற்கின்ற தென்பதாம். தெள்ளி - வினையெச்சம், தெள்ளு - பகுதி. அலைக்கும் - (அலையச் செய்கிற), பிறவினைப் பெயரெச்சம்.
129. ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஆக்கம்
இருமையும் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு.
(இ-ள்.) ஓக்கிய - (தான் பிறன்மேல்) வீசிய ஒள் வாள் - பிரகாசமான கத்தி, தன் ஒன்னார் கை பட்டக்கால் - தன் சத்துருவின் கையிற் சேர்ந்தால், ஊக்கம் அழிப்பது மெய் ஆகும் - (தன்) தைரியத்தைப் போக்கடிப்பது உண்மையாகும்; ஆக்கம் - (தான் மூடருக்குச் செய்த) உபகாரம், இருமையும் சென்று சுடுதலால் - (இம்மை மறுமை என்கிற) ஈரிடத்திலும் தொடர்ந்து வருத்துவதால், கல்லார்கண் தீர்வு - படிப்பில்லாத அயோக்கியரிடத்தினின்றும் நீங்கி யிருப்பது, நல்ல கருமமே - நல்ல காரியந்தான், எ-று.
தான் ஒருவனைக் கொல்லுதற்கு மேலெடுத்த வாள் தவறிக் கொல்ல நினைக்கப்பட்டவன் கையிற் சேர்ந்தால், கத்தியைத் தூக்கினவனுக்குத் தைரியம் அழிந்து போகின்றது; ஆதலால் அவ்வாளாயுதத்துக்கு அஞ்சிப் பகைவரிடத்தினின்றும் நீங்க வேண்டும். அப்படியே தான் அயோக்கியனுக்கு ஓர் உபகாரம் செய்தால் அவன் அதைக் கொண்டு பல அக்கிரமங்கள் செய்வானாதலால் உபகாரம் செய்தவனுக்கு இம்மையில் நன்மையும் கீர்த்தியும் கெடுவது மன்றி மறுமையில் நரகத்துக்கு மேதுவாகும். ஆகவே வாளா யுதத்துக்கு அஞ்சுவதைக் காட்டிலும் அயோக்கியனுக்கு உபகாரம் செய்வதில் மிகவும் அஞ்ச வேண்டுமென்பது கருத்து.
அழிப்பதூஉம் - உலகத்தில் பல காரியங்களைப் போல இதுவும் மெய்யாயிருக்குமெனப் பொருளைத் தருதலால் எதிரது போற்றிய எச்சவும்மை; இன்னிசையளபெடை. ஓக்கிய - பிறவினைப் பெயரெச்சம், ஓக்கு - பிறவினைப் பகுதி, ஓங்கு - தன்வினைப் பகுதி; மெல்லொற்று வல்லொற்றானது பிறவினைக் குறி, இன் - இடைநிலை ஈறு தொக்கது, அ - பெயரெச்ச விகுதி, யகரம் - உடம்படுமெய். ஆக்கம் - பொருட்பெயர்; அம் - செயப்படுபொருள் விகுதி; இங்கு பொருளெனக் கொள்ளினும் குற்றமில்லை. கல்லார்கண் - ஏழாம் வேற்றுமை, கண் - இங்கு நீக்கப் பொருளில் வந்தது. கல்லாதார் - கல்லாமை என்பது அயோக்கியதை வரையிற் கொள்ளப்பட்டது.
130. மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே! - எனைத்தும்
சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு.
(இ-ள்.) நெஞ்சே - மனமே!, (நீ) மனை பாசம் கைவிடாய் - மனையாளிடத்துள்ள ஆசையை விடமாட்டாய்; மக்கட்கு என்று - மக்களுக்கு (பொருள் முதலியன சேர்த்து வைக்க வேண்டும்) என்று, ஏங்கி - ஏக்கமுற்று, எனைத்து ஊழி - எவ்வளவு காலம், வாழ்தியோ - வாழ்வாயோ?, சிறுவரையே ஆயினும் - அற்பகாலமானாலும், எனைத்தும் - எவ்வளவாவது, செய்த நன்று அல்லால் - செய்த நற்காரியமே யல்லாமல், உயிர்க்கு - ஆத்துமாவுக்கு, உறு பயனோ - அடியும்படியான நற்பயனோ, இல்லை - (வேறு) இல்லை, எ-று.
மனமே! மனையாளிடத்தும் மக்களிடத்தும் ஆசாபாசம் நீங்காமல் அவர்களுக்கே வேண்டுங் காரியங்களைச் செய்ய வேண்டுமென்று பெரிய ஏக்கங்கொண்டு எத்தனை காலம் நிற்கப் போகிறாய்? இவ் வேகத்தோடேயே மாள்வாயல்லது வேறொரு நற்பயனைப் பெற்றாயில்லை; நீ இருக்கும் சொற்ப காலத்திலாகிலும் தான தரும முதலிய நற்காரியங்கள் செய்தால் அதுதான் ஆத்துமாவுக்கு நற்பயனாகும். இதனால் உயிருக்கு உறுதி செய்யாமல் வீண் காலம் கழிப்பதற்கு அஞ்ச வேண்டுமென்பது கருத்து.
மனை - மனையாளுக்கு ஆகுபெயர். எனைத்து - என் என்பதன் மேல் அளவைக் காட்டுகிற ஐ விகுதிபெற்ற எனை என்பது பகுதி, து - விகுதி. முந்தி யெழுதியது போல் எ என்னும் வினாவின் மேல் னகரச் சாரியை வந்ததென்றும் கொள்ளலாம். வாழ்தி - இ - முன்னிலை விகுதி, த் - எழுத்துப்பேறு, தி - விகுதியென்பது நேர்; இங்கே எதிர் காலத்துக்கு வந்தது. வாழ்தியோ - ஓ - வினாப்பொருளில் வந்தது. இகழ்ச்சியைக் குறிக்கின்றது. உறுபயனோ - இதில் ஓகாரம் முந்திச் சொன்ன பொருளினின்றும் வேறாந்தன்மையைக் குறிக்கின்றது.
அறத்துப்பால் முற்றிற்று.
