மெய்ம்மை
துறவியல்
[அதாவது உண்மை என்றால் அந்தந்தப் பொருள்களி ளியற்கையான தன்மை.]
111. இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து.
(இ-ள்.) இசையா ஒரு பொருள் - தமக்குக் கைகூடாத ஒரு பொருளை, இல் என்றல் - (ஆதுலர்க்கு) இல்லையென்று சொல்லுதல், யார்க்கும் வசை அன்று - எப்படிப்பட்டவர்களுக்கும் குற்றமாகாது; வையத்து இயற்கை - (இது) உலகத்தின் சுபாவமாகும்; நிரை தொடீஇ - வரிசையான வளையலணிந்தவளே!, நசை அழுங்க - ஆசை கெடும்படி, நின்று ஓடி - நெடுங்காலம் கழித்து, பொய்த்தல் - பொய் சொல்லுதல், செய் நன்றி - (ஒருவன் செய்த) உபகாரத்தை, கொன்றாரில் - மறந்தவர்களைக் காட்டிலும், குற்றம் உடைத்து - குற்றமுடையதாகும், எ-று.
இசையாத பொருளை யில்லையென்று சொல்லுதல் குற்றமன்று, ஒருவனுக்குக் கொடுப்பதாக நெடுங்காலம் ஆசைகாட்டிக் கடைசியில் இல்லையென்பது நன்றி மறப்பதினுன் குற்றமாம்.
"எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்று கூறியதனால் செய்ந்நன்றி கொன்றாரில் என்றார். இதனால் அயோக்கியனுடைய தன்மை சொல்லப்பட்டது.
அன்று - எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று. நிரைதொடீஇ - பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த - அன்மொழித்தொகை, அளபெடை விளியுருபு. செய்ந்நன்றி - [நன். உயி. புண. சூ. 8] விதியால் நகரம் மிகுந்தது.
112. தக்காரும் தக்கவர் அல்லாரும் தந்நீர்மை
எக்காலுங் குன்றல் இலராவர்! - அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு.
(இ-ள்.) தக்காரும் - யோக்கியரும், தக்கவர் அல்லாரும் - யோக்கியரல்லாதவர்களும் [அயோக்கியர்களும்], எக்காலும் - எப்போதும், தம் நீர்மை - தம்முடைய குணமானது, குன்றல் இலராவர் - குறைதல் இல்லாதவராவர்; அக்காரம் - வெல்லமானது, யாவர் தின்னினும் - யார் தின்றாலும், கையாது - கசக்கமாட்டாது; வேம்பு - வேப்பங்காய், தேவரே தின்னினும் - தேவர் தின்றாலும், கைக்கும் - கசப்பைத் தரும், எ-று.
யோக்கியர் மெய்சொல்லும் குணத்திலும் அயோக்கியர்கள் பொய்சொல்லுங் குணத்திலும் குறையார்கள். ஒருவேளை விதிவசத்தால் யோக்கியர் பொய்சொன்னாலும் அயோக்கியர் மெய்சொன்னாலும் அவரவருக்குத் தங்களுக்குரிய குணத்திலேயே பிர்யமிருக்கும்; இதை அக்காரமும் வேம்புமாகிய உபமானங்களால் அறிந்து கொள்க.
தக்கார் - தகு என்னும் பகுதியடியாகப் பிறந்த வினையாலணையும் பெயர்; இதில் ககரம் மிகுந்து தன்மையைக் காட்டியதே யன்றிக் காலம் காட்டவில்லை. குன்றல் இலராவார் - குன்றுதல் இலர் என்றும், குன்றுதலை இலர் என்றும் இரு வகையினும் கூறலாம்; இல்லையென்னும் குறிப்பு வினை செயப்படுபொருள் குன்றியதும் குன்றாததுமாய் வருதலினாலென வறிக. எழுவாயாக் கொண்டபக்ஷத்தில் "உயர்திணை தொடர்ந்த பொருண்முதலாறும் அதனொடு சார்த்தி னத்தினை முடிபின" என்னும் [பொது. சூ. 29] விதியா லமைத்துக் கொள்க. ஏ, ஆம் - அசை.
113. காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனின் பலராவர் - ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
தொடர்புடையேம் என்பார் சிலர்.
(இ-ள்.) ஈரம் குன்ற நாட - குளிர்ச்சியான மலைகளுள்ள நாட்டை யுடையவனே!, கால் ஆடு போழ்தில் - (ஒருவனுக்கு) செல்வாக்கு உண்டான காலத்தில், வானத்துமேல் ஆடு - ஆகாயத்தில் சஞ்சரிக்கின்ற, மீனில் - நக்ஷத்திரங்களைக் காட்டிலும், கழி கிளைஞர் - கழிக்கத்தக்க சுற்றத்தார்கள், பலர் ஆவர் - அநேகராயிருப்பார்கள்; ஏலா இடர் - தகாத துன்பங்களில், ஒருவர் உற்றக்கால் - ஒருவர் பொருந்தினால், தொடர்பு உடையேம் - சம்பந்தமுடையரா யிருக்கிறோம், என்பார் - என்று சொல்லுகிறவர்கள், சிலர் - சிலரேயாவார், எ-று.
செலவமுள்ள காலத்திலே பொய்யான உறவு பாராட்டி நடிப்பவர் பலர்; துன்பமுற்ற காலத்திலே மெய்யாகச் சம்பந்தமுடையவரென்று வந்து உதவுவோர் சிலராம். இஃது உலக இயற்கை.
காலாடு - கால் - பாதம், ஆடுதல் - நினைத்த விடம் போதல், இது இலக்கணையால் செல்வம் பெற்றதற்கு வந்தது. கழி - உரிச்சொல், கிளைஞர் - முறைப்பெயர், கிளையாய் நிற்பவர்கள்; யகரத்துக்கு ஞகரம் போலி.
114. வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்
நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
அடுவது போலும் துயர்.
(இ-ள்.) வடு இலா வையத்து - குற்றமற்ற உலகத்தில், மன்னிய மூன்றில் - நிலைபெற்றிருக்கின்ற (அறம் பொருள் இன்பம் என்னும்) மூன்றிலும், நடுவணது - நடுவிலிருக்கின்ற பொருளை, எய்த - (ஒருவன்) அடைந்ததனால், இருதலையும் - முதலிலுள்ள அறத்தையும் கடையிலுள்ள இன்பத்தையும், எய்தும் - அடைவான்; நடுவணது - பொருளை, எய்தாதான் - அடையாதவன், உலை பெய்து அடுவது போலும் - (கொல்லன்) உலையிலிட்டு காய்ச்சுவது போன்ற, துயர் எய்தும் - துன்பத்தை அடைவான், எ-று.
பொருளைப் பெற்றால் அறம் இன்பம் இரண்டையும் பெறலாம்; அதைப் பெறாவிடி னிவற்றைப் பெறுதலில்லை யென்றதனால், பொருளில்லாவிடில் பொய், குறளை, வஞ்ச முதலியவற்றைச் செய்ய வேண்டி வருதலால் அறமுதலியவற்றை அடைவது கூடாது.
உலைப்பெய்து அடுவது போலுந் துயர் - ஒரு செந்துவை உலையிலிட்டு அட்டால் அதற்கு உலைநீர் காயக்காயத் துன்பம் அதிகரிப்பது போல், பொருள் எய்தாதானுக்கும் பொய் வஞ்சனை முதலியவை மிகுதலால், நாளுக்குநாள் துன்பம் அதிகரிக்கு மென்பது கருத்து.
நடுவணது - நடு - பகுதி, அண் - இடத்தைக் காட்டும் விகுதி, நடுவண் என்பதன் மேல் அ - சாரியையும், து - விகுதியும் வந்து நடுவணது என்றாயிற்று. எய்தும் - செய்யுமெனமுற்று ஆண்பாலுக்கு வந்தது; [நன். வினை. சூ. 29].
115. நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
கல்லாரே யாயினும் செல்வர் வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.
(இ-ள்.) நல் ஆவின் கன்று ஆயின் - நல்ல பசுவின் கன்றானால், நாகும் - இளம் பெட்டைக் கன்றும், விலை பெறூஉம் - (நல்ல) விலையை யடையும்; கல்லாரே ஆயினும் - படியாதவர்களா யிருந்தாலும், செல்வர் வாய் சொல் - செல்வர் வாக்கிலிருந்து வரும் சொற்கள், செல்லும் - ஏற்றுக் கொள்ளப்படும்; புல் ஈர போழ்தின் - அற்ப ஈரமுள்ள காலத்தில், உழவே போல் - உழுதலைப் போல, மீது ஆடி - மேலே மாத்திரம் தோன்றி, நல்கூர்ந்தார் சொல் - தரித்திரன் வாய்ச் சொற்கள், செல்லா - ஏற்றுக் கொள்ளப்படமாட்டா, எ-று.
நல்ல பசுவின் பெண் கன்று விசேஷமான பால் கொடுக்குமென்பதனால் கன்றாயிருந்தாலும் அதிக விலைகொடுத்து வாங்குவார்கள். அதுபோல் செல்வர் மூடர்களாயிருந்தாலும் அவர்கள் வாய்ச்சொல்லினால் பயனுண் டென்பதைப் பற்றி அதனை யேற்றுக் கொள்வார்கள். புல்லீரத்தி லுழுதால் கொழு மேலே நிற்குமேயன்றி உள்ளே செல்லாதது போலத் தரித்திரனுடைய சொற்கள் மேலுக்குத் தலையசைத்துக் கேட்கப் பட்டாலும் பயனின்மையால் அங்கீகரிக்கப்ப்ட மாட்டா என்பது கருத்து.
பெறூஉம் - இன்னோசைக்கு வந்த அளபெடை நாகும், ஆயினும், - இவற்றுள் உம்மை இழிவு சிறப்பு.
116. இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார் - தடங்கண்ணாய்
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்திடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய்.
(இ-ள்.) இடம் பட - அதிகமாக், மெய் ஞானம் - மெய்யான நூல்களை, என்றும் கற்பினும் - எக்காலமும் கற்றாலும், அடங்காதார் - அடக்கமில்லாதவர்கள், என்றும் அடங்கார் - எப்போதும் அடங்காமலே யிருப்பர்; தடம் கண்ணாய் - விசாலமான கண்களை யுடையவளே! பேய்ச்சுரையின் காய் - பேய்ச் சுரைக்காய்கள், உப்போடு நெய் பால் தயிர் காயம் பெய்து - உப்பும் நெய்யும் பாலும் தயிரும் காயமும் போட்டு, அடினும் - சமைத்தாலும், கைப்பு அறா - கசப்பு நீங்காதனவாம், எ-று.
ஞான நூல்களை யெவ்வளவு கற்றாலும் அதனால் அடங்காதாருக்கு நன்மையுள்ள குணம் வருவதில்லை, பேய்ச் சுரைக்காய்க்கு எவ்வளவு சம்பாரங்கள் சேர்ந்தாலும் அதன் கைப்பு நீங்காதது போலென்றபடி.
இடம்பட - இடமானதுண்டாக, அதாவது புத்தி விசாலமாக, நன்றாக என்றபடி சுரைக்காய் கைப்பறா என்பதை "உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும்" என்ற விதியினா லமைத்துக் கொள்க. உப்பொடு - ஒடு - எண்ணிடைச் சொல்; இதனை நெய் முதலியவற்றோடுங் கூட்டிக் கொள்க. [நன். இடை. சூ. 10]
117. தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க
என்னை அவரோடு பட்டது - புன்னை
விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப!
உறற்பால யார்க்கும் உறும்.
(இ-ள்.) புன்னை - புன்னை மரங்களினது, விறல் - வெற்றி பெற்ற, பூகமழ் - புஷ்பங்கள் பரிமளிக்கின்ற, கானல் - சோலையையுடைய, வீங்கு - ஓங்குகின்ற, நீர் - கடலினது, சேர்ப்ப - கரையையுடையவனே!, தம்மை இகழ்வாரை - தம்மை நிந்திப்பவர்களை, அவரின் முன் - அவர் நிந்திப்பதற்கு முன்னமே, தாம் இகழ்க - தாம் நிந்திக்கக்கடவர்; அவரோடு பட்டது - அவரோடு தமக்குண்டாகியது, என்னை - என்ன?, உறல் பால - வரவேண்டியவை, யார்க்கும் உறும் - எவர்க்கும் வந்தே தீரும், எ-று.
தம்மை நிந்திப்பவர்களைத் தாட்சணியமில்லாமல் முந்தி நிந்திப்பதே பலம், அதனால் நன்மையோ தீமையோ வரவேண்டியது வந்தே தீரும். இது புத்திசாலிக்கு ஏற்கையான காரியம், இதனால் நிந்திக்க எத்தனப்படுபவனுடைய நிந்தை குறைப்படும் என்பது கருத்து.
அவரின் - ஐந்தாம் வேற்றுமை, எல்லைப் பொருள், முன் என்னுங் காலத்திற்கு எல்லையானது பற்றி யென்றறிக. விறலாவது துற்கந்தத்தை நீக்கும் சாமர்த்தியம்.
118. ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம்; - பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு.
(இ-ள்.) ஆ வேறு உருவின ஆயினும் - பசுக்கள் வெவ்வேறுருக்களை யடையனவா யிருந்தாலும், ஆ பயந்த பால் - அப்பசுக்கள் கொடுத்த பால்கள், வேறு உருவின அல்ல ஆம் - வேறுபட்ட உருவமுள்ளவை யாகமாட்டா; அறம் - தருமம், பால் போல் ஒருதன்மைத்து ஆகும் - பாலைப்போல ஒரே குணத்தை யுடையதாகும்; நெறி - (அத்தருமத்தைத் தரும்) மார்க்கங்கள், ஆ போல் - பசுக்களைப் போல், ஈங்கு - இவ்வுலகத்தில், உருவு பல் கொளல் - பல உருவுகளைக் கொண்டிருத்தலை (உடையனவாயிருக்கும்), எ-று.
தானம் தவம் விரதம் அவரவர்க்கு இஷ்டமான தெய்வத்தைத் தொழல் முதலிய தர்மகாரண மார்க்கங்கள் பலவாக இருந்தாலும் அவைகளா லுண்டாகும் நற்கதிக்கு ஏதுவான தருமம் ஒன்றே யாம். அஃது, பசுக்கள் வெவ்வே றுருவங்களுள்ளனவாயினும் அவைகளாலுண்டான பால் ஒரு தன்மையா யிருப்பது போலென்றபடி. இப்படியிருப்ப தவற்றி னுண்மை யென்பது கருத்து.
ஆ - பால்பகா வஃறிணைப் பெயர். உருவின - உரு - பகுதி, இன் - சாரியை, அ - பலவின்பால் விகுதி. தன்மைத்து - குறிப்பு வினையாலணையும் பெயர். கொளல் - தொழிற்பெயர்.
119. யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்? - யாஅர்
இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர்
கடைபோக செல்வம்உய்த்தார்?
(இ-ள்.) தேருங்கால் - ஆராயுமிடத்து, யார் - எவர், உலகத்து - பூமியில், ஓர் சொல் இல்லார் - ஒரு (நிந்தைச்) சொல்லை உடையராயிராதவர்கள்?, யார் - எவர், உபாயத்தின் - ஒரு ஏதுவினாலே, வாழாதார் - வாழாதிருப்பவர்கள்?, யார் - எவர், இடை ஆக - (வாழ்நாளின்) மத்தியில், இன்னாதது - துன்பத்தை, எய்தாதார் - அடையாதவர்கள்?, யார் - எவர், கடை போக (வாழ்நாள்) கடைசிவரையிலும், செல்வம் உய்த்தார் - சம்பத்தைப் பொருந்தினவர்கள்? [ஒருவருமிலர்], எ-று.
இவ்வுலகத்தில் எல்லாரும் நிந்தைப் படுபவர்களும், ஒரு ஏதுவினால் வாழ்பவர்களும், நடுவில் துன்பமுடையவர்களும், கடைசி வரையிலு மில்லாமல் சில காலம் வரைக்குமே செல்வ முடையவர்களுமா யிருக்கிறார்கள். இவையெல்லாம் உலகத்தின் உண்மையென்பது கருத்து.
யா அர் - அசை நிறைக்கவந்த அளபெடை உபாயத்தின் - இன் - ஏதுப் பொருளில் வந்த ஐந்தனுருபு. உபாயங்களாவன; உழவு, வாணிபம், சேவகம், பிச்சை முதலியனவாம்.
120. தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று
யாங்கணும் தேரின் பிறிதில்லை; - ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே
கூற்றம் கொண்டுஓடும் பொழுது.
(இ-ள்.) தேரில் - (நன்றாய்) யோசித்தால், தம்மொடு செல்வது - (இறந்து போகும்போது) தம்மோடு கூட வருவது, தாம் செய்வினை அல்லால் - அவரவர் செய்த நல்வினை தீவினைகளே யல்லாமல், யாங்கணும் - எவ்வுலகத்தினும், பிறிது இல்லை - வேறு இல்லை; கூற்றம் - யமன், கொண்டு ஓடும் பொழுது - கொண்டு போகும் போது, ஆங்கு - அப்படி, தாம் போற்றி - தாம் பாதுகாத்து, புனைந்த - (ஆடையாபரணாதிகளால்) அலங்கரித்த, உடம்பும் - சரீரமும், பயம் இன்று - பிரயோசனமில்லை; எ-று.
தான் போற்றிப் புனைந்த வுடம்பும் சாம்போது பயனில்லாமற் போக, பொருண் முதலியவை கூட வரா; தான் செய்த வினையொன்றே தன்னைப் பின்பற்றும் என்பது கருத்து.
இதுவும் பொருள்களி னுண்மை. யாங்கண் - யா - வினா விடைச்சொல், கண் - இடப்பெயர், பண்புத்தொகை, ஙகரம் - தோன்றல் விகாரம். கூற்றம் - அம் - சாரியை.
