பழவினை

bookmark

துறவியல்

 

[அஃதாவது முற்பிறப்பிற் செய்த பாவபுண்ணியங்களைப் பற்றிச் சொல்லிய அதிகாரம். பழவினை - பண்புத்தொகை, பழமையான வினையென விரியும்.]

 

101. பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
     வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
     பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
     கிழவனை நாடிக் கொளற்கு.

     (இ-ள்.) பல் ஆவுள் - பல பசுக்களில், உய்த்து விடினும் - செலுத்திவிட்டாலும், சூழ கன்று - இளமையான கன்று, தாய் நாடிக் கோடலை - (தன்) தாயைத் தேடி யடைதலில், வல்லது ஆம் - சாமர்த்திய முள்ளதாகும்; (அதுபோல) தொல்லை பழவினையும் - முற்பிறப்பிற் செய்த கருமமும், தான் செய்த - தன்னைச் செய்த, கிழவனை - உரியவனை, நாடி கொளற்கு - தேடி அடைதலில், அன்ன தகைத்து - அப்படிப்பட்ட தன்மையை [சாமர்த்தியத்தை] யடையுதாம், எ-று.

     பல பசுக்களி னடுவேவிட்ட கன்று தன் தாயைத் தேடிக் கண்டு எப்படியடைகின்றதோ அப்படி யொருவன் செய்த பாவபுண்ணிய கருமம் பிற்பிறப்பில் அவனிடத்து வந்து சேருமென்பதாம். இதனால் அக்கருமங்கள் அந்தந்தப் பிறப்பிலேயே யொழியுமென்று நினையாமல் பிற்பிறப்பில் தொடர்ந்து பயனை யநுபவிக்கச் செய்யுமாதலால், தீவினை யொழித்து நல்வினை செய்ய வேண்டுமெனச் சொல்லியதாயிற்று.

     பல் ஆ - பண்புத்தொகை. விடினும் - உம் - சிறப்பும்மை. குழக்கன்று - பண்புத்தொகை, குழவாகிய கன்று என விரியும். வல்லது - குறிப்பு வினைமுற்று, வல் - பகுதி, அ - சாரியை, து - ஒன்றன்விகுதி, லகரம் இரட்டியது சந்தி. ஆம் - அசை; ஆகும் எனப்பொருள் கொள்ளின், வல்லது - பண்படியாப்பிறந்த பெயர்; குறிப்புமுற்றாலடைந்த பெயரென்னவுமாம். கோடலை - ஐ யுருபு இடப்பொருளில் வந்தது. வேற்றுமை மயக்கம். தொல்லைப் பழமை - ஒரு பொருட் பன்மொழி, அல்லது பழவினை என்பதைத் தொடர்ந்து வரும் கருமத்துக்கு ஒரு பெயராக் கொண்டு தொல்லையென்பதை அதற்கு அடையாக் கொள்வது நேர். தொல்லை - துன்பம், அதனைச் செய்யும் பழவினையெனவு முரைக்கலாம், ஆயினும் அது நல்வினைக் கேலாமை காண்க. அன்ன - குறிப்புப் பெயரெச்சம், அன் - பகுதி, அல்லதுஅ - பகுதி, னகரம் - சாரியை. தகைத்து - குறிப்புமுற்று, தகை - பகுதி, (=குணம்), து - விகுதி; தகையென்பது தகு என்னும் வினைப்பகுதிமேல் ஐ என்னும் தொழிற்பெயர் விகுதி வந்ததாம்; ஆயினும் பொருளினால் அது பண்பு. ஏகாரம் - தேற்றம். தற்செய்த - தான் என்பது பொதுப் பெயராயினும் [மெய். சூ. 15ம் விதியால்] னகரந் திரிந்தது; [உருபு. சூ. 8ம் விதியால்] முதல் குறுகியது. கிழவன் - பண்படியாகப் பிறந்த பெயர்; கிழமை - பகுதி, அன் - விகுதி. கொளற்கு - வேற்றுமை மயக்கம்.

 

102. உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
     ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி
     ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு
     நின்றுவீழ்ந் தக்க துடைத்து.

     (இ-ள்.) உருவும் - அழகும், இளமையும் - வாலிபமும், ஒள் பொருளும் - மேன்மையான செல்வமும், உட்கும் - (பலர்) அஞ்சத்தக்க மதிப்பும், ஒருவழி நில்லாமை - ஒருவழிப்பட்டு நிலைபெற்றிராமையை, கண்டும் - பார்த்தும், ஒருவழி - ஒரு பிறப்பிலும், ஒன்றேயும் இல்லாதான் - யாதொரு நற்செய்கையும் இல்லாதவனுடைய, வாழ்க்கை - வாழுதலானது, உடம்பு இட்டு நின்று - உடலைப் பெற்று நின்று, வீழ்ந்தக்கது - வீழுந்தன்மையை, உடைத்து - உடையது, எ-று.

     உருவமுதலாகிய பொருள்கள் ஓரிடத்தில் நிலையாயிராமலழிந்து போவது பிரத்தியக்ஷமா யிருக்கையால், அவற்றின் காரணமாகிய நல்வினையை ஒருபிறப்பிலும் செய்யாதவனுடைய வாழ்வானது பிறந்தான் இறந்தானென்னு மாத்திரையே யன்றி வேறு பயனில்லாதது என்பது கருத்து. இதனால் ஒரு பிறப்பிலாகிலும் நல்வினை செய்தால் அது பிற்பிறப்புகளில் தொடர்ச்சியாய் நன்மைகளை யுண்டாக்குமென்பதாம்.

     உட்கு - கருவிப் பொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர்; உட்குதல் - அஞ்சுதல், உம்மைகள் - எண்ணுப்பொருளன. கண்டும் - உம்மை உயர்வு சிறப்பு. ஒன்றேயும் - உம்மை இழிவு சிறப்பு அல்லது விகற்பப் பொருள். வீழ்ம் - வீழும் என்பதில் உகரம் தொகுத்தல் விகாரம். தக்கது - குணத்தை யுணர்த்திய தொழிற்பெயர். ஏ - அசை.

 

103. வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;
     அளந்தன போகம் அவரவர் ஆற்றான்
     விளங்காய் திரட்டினார் இல்லை களங் கனியைக்
     காரெனச் செய்தாரும் இல்.

     (இ-ள்.) வளம்பட வேண்டாதார் - (செல்வ முதலியவற்றால்) வளப்பத்தையடைய விரும்பாதவர்கள், யார் யாரும் - எப்படிப்பட்டவர்களும், இல்லை - (உலகத்தில்) இல்லை; போகம் - சுகானுபவங்கள், அவர் அவர் ஆற்றான் - அவரவர்களுடைய புண்ணியவசத்தினாலே, அளந்தன - அளக்கப்பட்டிருக்கின்றன; விளங்காய் திரட்டினார் - விளங்காயைத் திரண்டவுருவாகச் செய்தவர்கள், இல்லை - யாருமில்லை; களம் கனியை - களாப்பழத்தை, கார் என செய்தாரும் - கறுப்பாகச் செய்தவர்களும், இல் - இல்லை, எ-று.

     உலகத்தில் செல்வமுதலிய வளப்பத்தை யாவருமே விரும்புகிறார்கள்; ஆயினும் அவரவர் செய்த புண்ணியங்களுக்கேற்றபடி அப்போகம் கிடைக்குமே யல்லது அதிகமாயும் குறைவாயும் கிடைக்க மாட்டாது; எங்ஙனமெனில், விளங்காய் ஒருவரால் திரட்டப்படாமல் இயற்கையால் திரண்டிருப்பது போலவும் களங்கனி கறுப்பாக்கப்படாமல் தானே கறுப்பாய் இருப்பது போலவும் எனவறிக. விளங்காய் முதலியன தந்தம் இயற்கையா லமைந்திருப்பது போல அவரவர் சுகமும் அவரவர் புண்ணியமும் இயற்கையால் அமைந்த தென்பதாம். இதனால் பிற்பிறப்பில் விசேஷமாக வளம்பட்டவர் முற்பிறப்பில் மிகுதியான புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பது கருத்து.

     யாரும் என்பதில் உம்மை முற்றுப் பொருளது. அளந்தன - செயப்பாட்டுவினை, செய்வினை போல் வந்தது, [பொது. சூ. 49] இல் - எதிர்மறைக்குறிப்பின் பகுதி முற்றுப் பொருளைத் தந்தது. இல்லைக் களங்கனி என்னுமிடத்தில் ஓசை பற்றி வல்லொற்று மிகுந்தது.

 

104. உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
     பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி
     வறப்பின் தருவாரும் இல்லை அதனைச்
     சிறப்பின் தணிப்பாரும் இல்.

     (இ-ள்.) உறல் பால் - வந்து கூடும்படியான தீவினைகளை, நீக்கல் - தடுத்தல், உறுவர்க்கும் - முனிவர்களுக்கும், ஆகா - இசையாது; பெறல் பால் அனையவும் - பெறும்படியான தன்மையையுடைய நல்வினைகளும், அன்ன ஆம் - அத்தன்மையனவாம்; மாரி - மழையானது, வறப்பின் - வறண்டால், அதனை தருவாரும் இல்லை - அதைக் கொடுப்பாருமில்லை; சிறப்பின் - (அது) அதிகப்பட்டால், தணிப்பாரும் இல் - (அதனை) அடக்கவல்லவர்களுமில்லை, எ-று.

     மழை வறண்ட காலத்தில் அதனைக் கொடுப்பதற்கும் அது அதிகப்பட்டால் அதனைத் தணிப்பதற்கும் எப்படி ஒருத்தருக்குஞ் சக்தி யில்லையோ அப்படியே ஒருவனுக்குத் தீவினைப்பயன் நேரிட்டபோதும் நல் வினைப்பயன் நேரிட்ட போதும் அவைகளைத் தடுக்க யாராலுமாகாது; அவரவர் அனுபவித்தே தீர வேண்டும் என்பதாம்.

     உறற்பால - உறல் - வந்து சேர்தல், பால் - தன்மை, அதாவது சேரும்படியான தன்மைப்; அ - பலவின்பால் விகுதி, இது உடைமைப் பொருளைக் காட்டும்; தத்திகம். உறுவர் - சாமர்த்தியம் மிகுந்தவர். ஆகா - ஆகாது என்பதில் ஈறு தொக்கது; அல்லது நீக்கலென்பதைப் பன்மையாக் கொள்க. பெறற்பாலனைய - பெறுதலாகிய பான்மையையுடைய அப்படிப்பட்டவை எனப் பொருள் விரித்துக் கொள்க. அன்ன - குறிப்பு வினைமுற்று, அல்லது வினையாலணையும் பெயர். இவ்வாறு வருவதை வட நூலார் 'விதேயவிசேஷண' மென்பர். வறப்பின் - செயினென்னும் வாய்பாட் டெதிர்கால வினையெச்சம், பகரம் - இடைநிலை, இன் - விகுதி; அல்லது வறப்பு என்பதைத் தொழிற்பெயராகக் கொண்டு ஏழனுருபு புணர்ந்த தெனினும் பொருந்தும். சிறப்பின் என்பதை வறப்பின் என்பதைப் போற் கொள்க.

 

105. தினைத்துணைய ராகித்தந் தேசுள் அடக்கிப்
     பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;
     நினைப்பக் கிடந்தது எவனுண்டாம் மேலை
     வினைப்பயன் அல்லால் பிற.

     (இ-ள்.) பனை துணையார் - பனையளவாக விருந்தவர் [உயர்ந்தவர் என்றபடி], தினை துணையர் ஆகி - தினையளவினராகி, தம் தேக உள் அடக்கி - தமது சாமர்த்தியத்தை உள்ளே அடங்கச் செய்து, வைகலும் - தினந்தோறும், பாடு அழிந்து - பெருமை கெட்டு, வாழ்வார் - இருப்பார்; நினைப்ப - யோசித்தால், மேலை வினை பயன் அல்லால் - முற்பிறப்பிற் செய்த வினையின் பயனேயல்லாமல், பிற கிடந்தது - வேறாக இருப்பதாகிய, எவன் உண்டு ஆம் - எது உண்டாகும், எ-று.

     உயர்ந்த நிலையிலிருந்த ஒருவன் மிகவும் தாழ்ந்த நிலையில் வந்து தன் சாமர்த்தியமும் பெருமையும் கெட்டிருப்பது எதனாலென்று யோசித்தால், அவன் பூர்வஜனனத்திற் செய்த தீவினையினாலே யல்லாமல் வேறு காரணத்தாலல்ல என்பது கருத்து.

     பனை தினை என்னும் உபமானங்களைப் பிரமாணத்திற்குக் கொள்ளாமல் மேன்மைக்கும் தாழ்மைக்கும் கொள்க. தினைத் துணையர் - தினையின் தளவையுடையவர் என விரித்துக் கொள்க. வைகலும் - உம்மை - முற்றுப்பொருளது. நினைப்ப - எதிர்காலவினையெச்சம். எவன் - வினாவினைக் குறிப்பு வினையாலணையும் பெயர்; எ - பகுதி, அ - சாரியை, னகரம் - விகுதி; இது சாரியையின்றி என் எனவும், அதன்மேல் ஐகாரச் சாரியை பெற்று என்னை எனவும், அகரச் சாரியை பெற்று என்ன எனவும் வரும், எவன் என்பதைப் பகாப்பதமாகக் கொள்ளின் என் என்பது இடைக்குறையாம்.

 

106. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
     கல்லாதார் வாழ்வதும் அறிதிரேல் - கல்லாதார்
     சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
     கோதென்று கொள்ளாதாம் கூற்று.

     (இ-ள்.) பல் ஆன்ற கேள்வி - மேன்மைப்பட்ட கேள்விகளினது, பயன் உணர்வார் - பயனை அறிந்தவர்கள், வீயவும் - அழியவும், கல்லாதார் - படியாத மூடர்கள், வாழ்வது - நெடுங்காலம் சீவித்திருப்பதை, அறிதிர் - அறிந்திருக்கிறீர்கள்; கல்லாதார் - படியாதவர்கள், சேதனம் என்னும் - அறிவென்னப்பட்ட, அச்சேறு - அந்தச் சாரத்தை, அகத்து இன்மையால் - உள்ளத்திலே உடையரா யில்லாமையால், (அவரை) கூற்று - யமன், கோது என்று - திப்பியென்று நினைத்து, கொள்ளாது - கொள்ளமாட்டான், எ-று.

     நூல்களின் சாரத்தையறிந்த யோக்கியர்கள் சீக்கிரத்தில் மாண்டுவரப் படியாத மூடர்கள் நெடுங்காலம் வாழ்ந்திருப்பது உங்களுக்குப் பிரத்தியட்சமாக இருக்கின்றதே, அது ஏனெனில் கற்றவரிடத்தில் சேதனம் என்னும் சாரம் இருத்தல் பற்றி அவரை யமன் தீவிரத்தில் கொள்ளுகின்றான், மற்றவரை அச்சாரம் இல்லாமையால் கொள்ளுவதில்லை என கவிசாதுரியத்தாற் றற்குறிப்பேற்றமாய்க் கூறினார். இப்படி விபரீதமாவதும் முன் வினைப்பயன் என்பது கருத்து.

     அகன்ற என்பது ஆன்ற வென ஆயிற்று என்பர். வீய - செயவென் வாய்பாட்டு வினையெச்சம், வீ - பகுதி, அ - விகுதி, யகரம் - உடம்படுமெய். அறிதிர் - முன்னிலைப்பன்மை இறந்த கால வினைமுற்று; அறி - பகுதி, த் - இடைநிலை, இர் - விகுதி. கூற்று - சொல்லளவில் அஃறிணையாயினும் பொருள் அளவில் உயர்திணை. இங்ஙனமே அரசு அமைச்சு முதலியவும் கொள்க. ஏல் ஆம் - அசைகள்.

 

107. இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண
     நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ
     அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப
     முன்னை வினையாய் விடும்.

     (இ-ள்.) அடம்பம் பூ - அடம்பக் கொடியின் பூக்களை, அன்னம் கிழிக்கும் - அன்னங்கள் (கோதிக்) கிழிக்கின்ற, அலை கடல் - அலைகளையுடைய கடலினது, தண் சேர்ப்ப - குளிர்ச்சியாகிய, கரையையுடைய பாண்டியனே!, (சிலர்) இடும்பை கூர் நெஞ்சத்தார் - துன்பம் மிகுந்த மனமுடையவர்களாகி, எல்லாரும் காண - யாவருங் காணும்படி, நெடும் கடை நின்று - பெரிய வாயில்களிலே நின்று [பலவீட்டு வாயில்களிற்சென்று என்றபடி], உழல்வது எல்லாம் - (பிச்சைக்காக) வருந்தும் செயல்களெல்லாம், முன்னை வினை ஆய் விடும் - முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனாகி நிற்கும், எ-று.

     சிலர் வறுமையால் மிகவும் மனநொந்து பிச்சைக்காக வீடுதோறுஞ் சென்று வருந்தி நிற்பது முன்னை வினையின் பயன் என்றபடி. இதனால் இப்பிறப்பி லனுபவிக்கும் நன்மை துன்மைகளுக்குப் பழவினையே காரணமென்றதாயிற்று.

     இடும்பைகூர் நெஞ்சத்தார் என்பதை காண்போருக்கு அடையாகக் கொண்டு, இரப்போர்படும் அல்லலுக்கு ஐயோவென்று இரக்க முற்றனரெனப் பொருள் கூறுவது அமையும். இடும்பைகூர் - எழுவாய்த் தொடர், கூர்நெஞ்சம் - வினைத்தொகை நிலைத்தொடர். நெடுமை - பன்மை. நெடுங்கடை - பல்லாயிலென்றாயிற்று. உழல்வது - சாதியொருமை. உழல்வதெல்லாம் - பலவகைப்பட்ட வுழலுதல், ஆய்விடு - ஒரே பகுதி.

 

108. அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
     பழியோடும் பட்டவை செய்தல் - வளியோடி
     நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!
     செய்த வினையான் வரும்.

     (இ-ள்.) வளி ஓடி - காற்று வீசி, நெய்தல் - நெய்த னிலங்களிலே, நறவு உயிர்க்கும் - தேனைச் சிந்துகின்ற, நீள் கடல் தண் சேர்ப்ப - நீண்ட கடலினது குளிர்ச்சியான துறையை யுடைய பாண்டியனே, அறியாரும் அல்லர் - (ஒருவர்) அறியாதவர்களு மல்லராகி, அறிவது - வேண்டியதை, அறிந்தும் - தெரிந்திருந்தும், பழியோடுபட்டவை - நிந்தனையோடு கூடிய காரியங்களை, செய்தல் - செய்வது, செய்த வினையான் - (முற்பிறப்பிற்) செய்த தீவினையால், வரும் - உண்டாகும், எ-று.

     இப்பிறப்பில் பாவ காரியங்களைச் செய்வதும் முற்பிறப்பின் தீவினைப்பயனாம் என்றபடி, பாவகாரியம் செய்வது அறியாமையால் நேர்ந்தாலும் ஒருவகை கூடலாம்; அறிந்தும் செய்வது அவ்வினையின் வசத்தினாலேயே யென்பது கருத்து.

     அறியாரும், அறிந்தும் - உம்மை - சிறப்பு. பழியோடு - பழிக்கப்படுவது பழி, செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர். உயிர்க்கும் என்னும் பெயரெச்சம் சேர்ப்ப என்னும் இடப்பெயரைக் கொண்டது. நீள்கடல் - வினைத் தொகையாதலால் ஈறு இயல்பாயிற்று [நன். மெய். சூ.24.].

 

109. ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும எத்துணையும்
     வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;
     வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
     தீண்டா விடுதல் அரிது.

     (இ-ள்.) நீர் ஈண்டு வையத்துள் - சமுத்திரம் சூழ்ந்த பூமியுள், எல்லாரும் - எவர்களும், எத்துணையும் - எவ்வளவாயினும், தீய வேண்டார் - தீயவைகளை விரும்பமாட்டார்; நல்லவை - நன்மைகளே, விழை பயன் - அவர்கள் விரும்பும் பயனாகும்; வேண்டினும் - விரும்பினாலும், வேண்டாவிடினும் - விரும்பாதிருந்தாலும், உறல் பால - வரத்தக்கவை, தீண்டா விடுதல் அரிது - (ஒருவரை) சேராமற் போவது இல்லை, எ-று.

     உலகத்திலே எவரும் தீமையை வேண்டார்; நன்மையையே வேண்டுவார்கள்; ஆயினும் வரவேண்டியது வந்து சேருமே யன்றி இவர்கள் விருப்பத்திற்கும் விரும்பாமைக்கும் ஏற்க நில்லா என்பதாம். ஒருவனுக்குச் சம்பவிக்கும் நன்மை துன்மைகள் பழவினையினாலேயே என்பது கருத்து.

     இங்ஙனங் கூறியது முற்பாட்டுகளின் கருத்தை உறுதிப் படுத்தற்கென்க. மன் - அசை; மன் என்பதற்குப் பெரும்பான்மை யெனப் பொருள் கொண்டு, தற்கொலை முதலிய தீமைகளையும் விரும்புகிறார்களெனவும் பொருள் கொள்ளலாம்.

     தீய - தீமையடியாகப் பிறந்த பலவின் பெயர். தீண்டா - ஈறு தொக்க எதிர்மறைவினையெச்சம். அரிது - இங்கே இல்லையென்னும் பொருளைத் தந்தது, அருமையடியாகப் பிறந்த குறிப்பு வினைமுற்று. ஈறு போதலும் இடை உகரம் இஆதலும் ஆகிய விகாரங்கள் இங்கே வந்தன; [நன். பத. சூ. 9].

 

110. சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
     உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
     சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
     இறுகாலத் தென்னை பரிவு.

     (இ-ள்.) சிறு காலை - அற்பகாலத்தில் [கருப்பட்ட காலத்தில் என்றபடி], பட்ட - உண்டாகிய, பொறியும் - எழுத்துகளும் [அதாவது கடவுளமைத்த விதிகளும்], சிறுகா - குறைய மாட்டா; பெருகா - வளரமாட்டா; முறை பிறழ்ந்து வாரா - கிரமம் தப்பி வரமாட்டா; உறு காலத்து - துன்பம் வந்த காலத்திலே, ஊற்று ஆகா - ஊன்றுகோலாகமாட்டா; ஆம் இடத்தே ஆகும் - வரவேண்டிய காலத்திலேயே வந்து சேரும்; அதனால் - அப்படியிருப்பதால், இறு காலத்து - மரண காலத்தில், பரிவு என்னை - துன்பப்படுவது ஏன், எ-று.

     கருவுற்றபோதே ஒருவனுக்கு நடக்க வேண்டியது இன்னின்னவெனச் சங்கற்பித்தவை குறைந்தும் வளர்ந்தும் பிறழ்ந்தும் ஆவன வில்லை; வந்த காலத்து ஸ்திரமாயிராமல் ஆகுங்காலத்திலேயே ஆகும்; ஆதலால் நேரும் துன்பங்களைக் குறித்துத் துக்கிப்பது வீண் என்பது கருத்து.

     பொறி - பொறிக்கப்பட்டவை; பொறித்தல் - எழுதுதல், சிறுகா, பெருகா, வாரா, ஆகா - இவை எதிர்மறைப் பன்மை வினைமுற்று. இவைகளை ஈறுதொக்க வினையெச்சமாகக் கொண்டு ஆகும் என்பதனோடு முடிக்கலாம். சிறுகாலை - சிறுமையாகிய காலம், அதாவது உருவம் கருப்பட்டகாலம். இறுகாலத்து என்பது மற்ற துன்பங்கள் வரும் காலத்துக்கும் உபலக்ஷணம்.