ஈகை

bookmark

துறவியல்

 

[அதாவது தரித்திரத்தினால் வருந்தித் தம்மிடம் வருகிறவருக்குச் சோறு முதலியவை கொடுத்தலாம்.]

 

91. இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
     உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக்
     கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
     அடையாவாம் ஆண்டைக் கதவு.

     (இ-ள்.) இல்லாவிடத்தும் - (தமக்குச் செல்வம்) இல்லாமற் போன காலத்திலும், இயைந்த அளவினால் - தமக்கு இசைந்தமட்டிலே, உள்ள இடம் போல - செல்வமிருக்குங் காலத்திற் போல், பெரிது உவந்து - (அவர் வந்ததற்கு) மிகவும் சந்தோஷப்பட்டு, மெல்ல சாந்தமாக, கொடையோடு பட்ட - கொடுத்தலோடு சேர்ந்த, குணன் உடை மாந்தர்க்கு - குணமுள்ள மனிதருக்கு, ஆண்டை கதவு - அவ்வுலகத்துக் கதவுகள், அடையாஆம் - அடைக்கப்படாதன ஆகும், எ-று.

     செல்வ மில்லாத போதும் சந்தோஷப்பட்டுச் சாந்தமாய்க் கொடுக்குங் குணமுள்ளவர்களது வரவை எதிர்நோக்கி மேலுலகத்தார் தமது உலகத்துக் கதவைத் திறந்து வைத்திருப்பார்கள் என்றபடி.

     இங்கே இடம் என்பது காலத்தை. பெரியது - இந்தக் குறிப்பு முற்று இங்கே வினையெச்சமாகி உவத்தலுக்கு உரியாய் நின்றது; இதை வடநூலார், "க்ரியா விசேஷணம்" என்பர். கொடை - கொடு - பகுதி, ஐ - தொழிற்பெயர் விகுதி. குணன் = மகரத்துக்கு னகரம் போலி. உடை - ஈறுதொக்க குறிப்புப் பெயரெச்சம். ஆம் - அசை என்றும் கொள்ளத்தகும். ஆண்டை - ஆண்டு என்னும் சுட்டு குற்றியலுகரமாதலின் "ஐயீற்றுடைக்குற்றுகரமு முளவே" என்கிற [உயிர். சூ. 35] விதியால் ஐகாரச்சாரியை பெற்றது.

 

92. முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள
     பின்னரும் பீடழிக்கும் நோயுள; - கொன்னே
     பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்
     கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.

     (இ-ள்.) முன்னரே - பூர்வத்திலேயே, சாம் நாள் - சாகுங் காலமும், முனி தக்க மூப்பு - வெறுக்கத் தக்க கிழத்தனமும், உள - ஏற்பட்டிருக்கின்றன; பின்னரும் - பின்னும், பீடு அழிக்கும் - பெருமையைக் குலைக்கும்படியான, நோய் உள - வியாதிகளும் உண்டாயிருக்கின்றன; கைத்து உண்டாம் போழ்து - திரவியம் உண்டாயிருக்கிற காலத்தில், கொன்னே - வீணாய், பரவன்மின் - நாற்புறமும் ஓடாதேயுங்கள், பற்றன்மின் - பிடித்திராதேயுங்கள், பாத்து உண்மின் - (சோறு முதலியவற்றை யாசகர்க்கு) பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள், யாதும் கரவன்மின் - எதையும் ஒளியாதிருங்கள், எ-று.

     நாம் பிறக்கு முன்னமே சாநாள் மூப்பு நோய் இவை கடவுளால் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால் திரவியமிருக்கும் போது அதைக் கெட்டியாப் பிடித்து யாசகர்க்கு இல்லையென்று சொல்லாமல் பகுத்துக் கொடுத்து அனுபவியுங்கள் என்பது கருத்து.

     வைத்து உண்டாம் போழ்து என்பதை ஒவ்வொரு வாக்கியத்திலும் கூட்டிக் கொள்க. பின்னரும் என்பதற்கு இன்னமும் எனப்பொருள் கொள்க. முன் பின் என்பவை அர் சாரியை பெற்றன. சாம் நாள் - பெயரெச்சத் தொடர். முனிதக்க - முனிதற்குத்தக்க, முதனிலைத் தொழிற்பெயர், நான்காம் வேற்றுமைத்தொகை. உள - பலவின்பால் குறிப்பு முற்று. கொள் - இடைச்சொல். பரவன்மின் பற்றன்மின் முதலியவை எதிர்மறை யேவற்பன்மை வினைமுற்று. பாத்து - பா - பகுதி. கைத்து - கையிலுள்ளது. யாதும் கரவன்மின் என்றது எதையும் இல்லையென் றொளிக்க வேண்டாம் என்று முன் சொன்னதையே உறுதிப்படுத்தியது.

 

93. நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;
     கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;
     இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
     விடுக்கும் வினையுலந்தக் கால்.

     (இ-ள்.) கொடுத்து தான் துய்ப்பினும் - பிறருக்குக் கொடுத்துத் தான் அனுபவித்தாலும், ஈண்டும் கால் ஈண்டும் - சேருங்காலத்திற் சேரும்; விடுக்கும் வினை உலந்தக்கால் - (நம்மிடத்தில் பொருளைச்) சேர்த்த நல்வினை அழிந்தால், செல்வம் - செல்வமானது, மிடுக்கு உற்றுப் பற்றினும் - வலி பொருந்திப் பிடித்தாலும், நில்லாது - நிலையாது; (இதை அறியாதவர்) நடுக்கு உற்று தன் சேர்ந்தார் துன்பம் - (தரித்திரத்தால்) நடுக்கலை அடைந்து தன்னைச் சேர்ந்தவர்களுடைய துக்கத்தை, துடையார் - போக்க மாட்டார்கள், எ-று.

     செல்வமானது நல்வினை சேர்ந்த காலத்திற் சேர்ந்து அது அழியுங் காலத்தில் எவ்வளவு உறுதியாய்ப் பிடித்தாலும் நிற்காதாகையால் செல்வமிருக்கும் போதே வறுமையால் வருந்தித் தன்னிடம் வருபவருடைய சங்கடத்தைத் தீர்க்க வேண்டுமென்பது கருத்து.

     இது ஏற்புழி யெடுத்துடன் கூட்டுறு மடியதாகிய அடிமறிமாற்றுப் பொருள்கோள். [பொது. சூ. 68.] கொடுத்துத் தான் துய்ப்பினும் என்றதனால், கொடுத்தல் செல்வ நிலைமைக்குக் காரணமானாலும் அது மறுபிறப்புக்கே யன்றி இப்பிறப்புக்கு அன்று என்று காட்டியதாயிற்று. இப்பிறப்பில் செல்வம் சேர்வதும் நீங்குவதும் போன பிறப்பின் கருமவசம் என அறிக. நடுக்கு - முதனிலைத் தொழிற்பெயர். தற்சேர்ந்தார் - இதில் [மெய். 15வது சூத்திரவிதியால்] தன் என்பதின் னகரம் திரிந்தது. துய்ப்பினும் - உம்மை உயர்வு சிறப்பு. விடுக்கும் - கு - சாரியை.

 

94. இம்மி யரிசித் துணையானும் வைகலும்
     நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
     கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
     அடாஅ அடுப்பி னவர்.

     (இ-ள்.) இம்மி அரிசி துணை ஆனும் - இம்மியளவான அரிசியை யாயினும், நும்மில் இளையவ - உங்களுக்கு இசைந்தவற்றை, வைகலும் - தினந்தோறும், கொடுத்து உண்மின் - யாசகருக்குக் கொடுத்து உண்ணுங்கள்; குண்டு நீர் வையத்து - ஆழமான கடல் சூழ்ந்த பூமியில், அடா அடுப்பினவர் - சமைக்காத அடுப்பையுடையவர் (சோற்றுப் பிச்சைக்கு வருகின்றவர்), உம்மை - முற்பிறப்பில், கொடாதவர் என்பர் - (யாசகருக்குக்) கொடுக்காத லோபிகள் என்று சொல்வார்கள், எ-று.

     கிஞ்சித்தாலும், இயைந்ததைக் கொடுக்க வேண்டும், முற்பிறப்பில் கொடாதவரே இப்பிறப்பில் சோற்றுப் பிச்சைக்கு வருகிறவர்கள் என்பதாம்.

     அடா அடுப்பினவர் - துறவிகள், உம்மை கொடாதவர் - (இவர்) முற்பிறப்பில் கொடுத்து வையாதவர், என்பர் -, என உரைத்தல் நன்று. சன்னியாசிகள் அடுப்பு வைத்துச் சமைக்க லாகாதென்பது சாஸ்திரவிதி.

     இம்மி - ஒரு சிறிய அளவு, அது (960ல்) ஒரு பங்கு. ஏனும் என்பது போல ஆனும் என்பதும் இழிவு சிறப்போடு விகற்பத்தைக் காட்டுகிற ஓரிடைச் சொல். வைகலும் - முற்றும்மை. இயைவ - பலவின்பால் வினையாலணையும் பெயர். கொடா அதவர், அடாஅ - இசையளபெடை. அடாஅ அடுப்பினவர் என்பது வறுமைக்குக் குறிப்பு.

 

95. மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
     உறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால்
     ஈதல் இசையா தெனினும் இரவாமை
     ஈதல் இரட்டி யுறும்.

     (இ-ள்.) மறுமையும் இம்மையும் நோக்கி - மேலுலகப் பயனையும் இவ்வுலகப் பயனையும் பார்த்து, ஒருவற்கு -, உறும் ஆறு இயைவ - பொருந்தும் வழியில் இசைந்தவைகளை, கொடுத்தல் - கொடுக்கக் கடவன்; வறுமையால் - தரித்திரத்தினால், ஈதல் இசையாதெனினும் - கொடுத்தல் இசையாமற் போனாலும், இரவாமை - பிறரிடம் யாசியாமலிருப்பது, ஈதல் - கொடுப்பதினும், இரட்டி உறும் - இரட்டித்துப் பயன் தரும், எ-று.

     மறுமையில் சொர்க்கமும் இம்மையில் புகழும் வருவதைப் பார்த்து இயைந்தமட்டில் பிறருக்குக் கொடுக்க வேண்டும், அப்படிக் கொடுக்கக் கூடாமற் போனாலும் தான் பிறரை யாசியாமலிருப்பது மிகவும் நல்லதென்பதாம்.

     கொடுத்தல் - வியங்கோள்வினைமுற்று [வினை. சூ. 69], இரட்டி - வினையெச்சம். இரட்டுவது இரட்டி எனக் கர்த்தாப் பொருள்விகுதி பெற்ற பெயரெனக் கொண்டு இரட்டித்த பயனானது பொருந்தும் எனவு முரைக்கலாம்.

 

96. நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க
     படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;
     குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
     இடுகாட்டுள் ஏற்றைப் பனை.

     (இ-ள்.) நடு ஊருள் - ஊர் நடுவிலே, வேதிகை - திண்ணையானது, சுற்றுக்கோள் புக்க - சுற்றிக் கொள்ளுதலை யடைந்த, படுபனை அன்னர் - பயன்படும்படியான பனை மரத்தை யொத்தவர் (யாரெனில்) பலர் நச்ச வாழ்வார் - பலரும் விரும்பும்படி வாழ்கிறவர்கள்; குடி கொழுத்தக்கண்ணும் - குடித்தனம் வளப்பமாயிருக்கும் போதும், கொடுத்து உண்ணாமாக்கள் - யாசகர்க்குக் கொடுத்து அனுபவியாத மனிதர், இடுகாட்டுள் ஏற்றுப்பனை - சுடுகாட்டிலுள்ள ஆண்பனைக்கு ஒப்பாவார்கள், எ-று.

     ஊரினடுவிலே பழந்தரும் படியான பனைமர மொன்றிருந்து அதைச் சுற்றிலும் திண்ணையுமிருந்தால் வேண்டியவர் வந்து பழம் பறித்துக் கொண்டு அத்திண்ணைமேலுட்கார்ந்து புசிப்பார்களே அது போல் செல்வமுள்ளவர் சோறு கூறை முதலியவற்றைத் தாராளமாய்க் கொடுப்பவரா யிருந்தால் யாவரும் விரும்பி அவரிடம் வந்து இன்பமடைவா ராதலின் கொடுப்பவர் அப்படிப்பட்ட பனைக்கு ஒப்பிடப்பட்டார்; செல்வமல்கிக் குடிவாந்திருக்கையிலும் ஒன்றுங் கொடாமல் வாழ்கிறவர்கள் சுடுகாட்டிலுள்ள ஆண்பனை போல் வீணாயும் வெறுக்கும் படியாயு மிருப்பவராம் என்பது கருத்து.

     சுடுகாடு நினைத்த போது போகக்கூடாத அசுத்தமான விடம். மரமும் பழந்தராதாயின் மிகவு நிந்தனைக்குப் பாத்திரமென்றபடி,

     நடுவூர் - இலக்கணப்போலி, சுற்றுக் கோளுக்கு வேதிகை கர்த்தா. புக்க - இப்பெயரெச்சம் பனையொடு சேரும். வேதிகையைச் சுற்றுக் கோட்புக்க பனையெனவுங் கூட்டலாம். அப்போது நடுவில் திண்ணையும் சுற்றிலும் பனைமரங்களுமெனக் கருத்துக் கொளல் வேண்டும். படு - வினைத்தொகை. கொழுத்தக்கண் - வினையெச்சம், கண் - விகுதி. உம்மை - சிறப்பு. இடு - இதுவும் வினைத்தொகை. இடுகாடு - இறந்தவரை வைக்கிற காடென்பதாம். ஏறு - ஆண்.

 

97. பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம்
     செயற்பால செய்யா விடினும் - கயற்புலால்
     புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப!
     என்னை உலகுய்யு மாறு.

     (இ-ள்.) கயல் புலால் - மீன்களின் மாமிச நாற்றத்தை, புன்னை கடியும் - புன்னை மலர்கள் நீக்கப் பெற்ற, பொரு கடல் - அலைமோதுகின்ற கடலினது, தண் சேர்ப்ப - குளிர்ச்சியான கரையுள்ள அரசனே!, பெயல் பால் - பெய்யும்படியான காலத்தில், மழை பெய்யாக் கண்ணும் - மழை பெய்யாவிடினும். உலகம் - உலகமானது, செயல்பால - செய்யத்தக்க உதவிகளை, செய்யவிடினும் - செய்யாமல் விட்டாலும், உலகு உய்யும் ஆறு - உலகம் பிழைக்கும் வகை, என்னை - ஏதாம், எ-று.

     காலத்தில் மழை பெய்யாமலும் மேலானவர் அன்ன முதலியவற்றை உதவாமலும் இருந்தால் உலகம் அப்படி பிழைக்கும் என்றதாம்; ஆதலால் உள்ளவர் இல்லாதவர்க்குக் கொடுக்க வேண்டு மென்பது கருத்து.

     பெயல்பால் - பெயலுக்கு உரிய பால் என விரிக்க; பால் - காலப்பகுதி, உலகம் என்பது இங்கே உயர்ந்தவர்கள். செயல்பால - செய்தற்குத்தக்க தன்மையை உடையன; அகரம் - பலவின்பால் விகுதி, செய்யா - எதிர்மறை வினையெச்சம், மல் - விகுதி குறைந்தது; செய்யாவிடின் என்று ஒரு சொல்லாக் கொள்வதும் தகும். என்னை - எவன் என்கிற குறிப்புமுற்று இடைகுறைந்து ஐகாரச் சாரியை பெற்றது; அகரச் சாரியை பெற்று என்ன என்றும் வரும்.

 

98. ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையார்
     ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் - ஆற்றின்
     மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்      
     பொலிகடன் என்னும் பெயர்த்து.

     (இ-ள்.) மலி கடல் தண் சேர்ப்ப - வளப்பமிகுந்த க்டலின் குளிர்ச்சியான கரையையுடைய அரசனே!, ஏற்ற கை மாற்றாமை - யாசகன் ஏந்தின கையை மறுக்காமல், என்னானும் - எதையாகிலும், வரையாது - (இன்னான் இன்னானென்று) வரை ஏற்படுத்தாமல், ஆற்றாதார்க்கு - பிரதி செய்யமாட்டாத தரித்திரருக்கு, ஆற்றின் ஈவது - முறையால் கொடுப்பது, ஆண் கடன் ஆம் - ஆண் மக்களுடைய கடமையாம்; மாறு ஈவர்க்கு ஈதல் - எதிருபகாரஞ் செய்யவல்லவருக்குக் கொடுப்பது, பொலிகடன் என்னும் பெயர்த்து - விசேசமான கடன் என்கிற பெயரையுடையது, எ-று.

     யாசித்தால் இல்லையென்று மறுக்காமலும், இவன் உறவினன் இவன் சிநேகிதன் இவன் அப்படியல்லாதவன் என்று வரையறை செய்யாமலும் வறுமைப்பட்டவர்க்குத் தனக்கியைந்ததைக் கொடுக்க வேண்டும்; அதுதான் கொடையெனப் பெயர்பெறும். பதிலுபகாரஞ் செய்பவனுக்குக் கொடுப்பது கொடையாகாது; விசேஷமான கடனென்றே சொல்லப்படும். பிறரிடம் கடன் வாங்கினால் சக்தியில்லாத போது ஐயா எனக்கு நிர்வாகமில்லை அல்லது இவ்வளவு கொடுக்கிறேன் நீர் அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு சக்தியின்படி நடத்தலா மாதலால் பொலிகடன் என்றார்.

     மாற்றாமை - எதிர்மறை வினையெச்சம், மை - விகுதி, ஆண் - கொடுக்கும் ஆண்மையுள்ளவன். பெயர்த்து - குறிப்பு வினைமுற்று.

 

99. இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
     அறப்பயன் யார்மாட்டும் செய்க - முறைப்புதவின்
     ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
     பைய நிறைத்து விடும்.

     (இ-ள்.) இறப்ப சிறிது என்னாது - (நாம் கொடுப்பது) மிகவும் அற்பமானதென்று நினையாமலும், இல் என்னாது - இல்லை என்று சொல்லாமலும், என்றும் - எப்போதும், யார்மாட்டும் - எப்படிப்பட்டவர் விஷயத்திலும், அறம் பயன் செய்க - தருமமாகிய பிரயோஜனத்தைச் செய்யக்கடவன்; (அது) முறை - கிரமமாக, புதவின் - வாசல்களிலே, ஐயம் புகும் தவசி - பிச்சைக்குச் செல்கிற தவசியினது, கடிஞை போல - பிச்சைப் பாத்திரம் போல, பைய - மெல்ல, நிறைந்து விடும் - (அறப்பயனை) பூரணமாக்கும், எ-று.

     நாம் அற்பத்தைக் கொடுக்கலாமா என்று யோசியாமலும் இல்லையென்று சொல்லாமலும் இசைந்தமட்டில் கொடையாகிய அறத்தைச் செய்தால் அதனால் வீடுதோறுஞ் சென்று சிறிது சிறிதாய் இரக்க, சன்னியாசியின் பாத்திரம் நிறைந்து போவதுபோல அறப்பயனும் நிறைந்துபோம் என்பதாம்.

     இல் - ஈறுகெட்ட வினைமுற்று. பைய - வினையெச்சம், பை - பகுதி, மெதுவாதல், அ - விகுதி, நிறைந்துவிடும் - விடு - அசை, இக்காலத்தார் துணை வினையென்பர்.

 

100. கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
     இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
     அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
     கொடுத்தார் எனப்படுஞ் சொல்.

     (இ-ள்.) கடிப்பு இடு கண் முரசம் - வாத்தியம் அடிக்கும் கொம்பு இடப்பட்ட [அடிக்கப்பட்ட] இடத்தையுடைய பேரிகையோசையை, காதத்தோர் கேட்பர் - ஒரு காத தூரத்திலிருப்பவர் கேட்பார்கள்; இடித்து முழங்கியது - மேகம் இடித்துக் கர்ச்சித்ததை, ஓர் யோசனையோர் கேட்பர் - ஒரு யோசனை யளவிலுள்ளவர் கேட்பார்கள்; சான்றோர் கொடுத்தார் எனப்படும் சொல் - யோக்கியருக்குக் கொடுத்தார்கள் என்னுஞ் சொல், அடுக்கிய மூவுலகும் கேட்குமே - (ஒன்றின்மே லொன்றாய்) அடுக்கப்பட்டிருக்கிற மூன்று லோகங்களுக்கும் நிச்சயமாய்க் கேட்கும், எ-று.

     பேரியோசை காத தூரத்திலிருப்பவர்க்குச் செவிப்படும். மேகக் கர்ச்சனை அதினும் கிஞ்சித்து அதிகமாகிய யோசனை தூரத்திலிருப்பவர்க்குச் செவிப்படும். கொடுத்தார் என்கிற சொல்லோ எல்லாவுலகத்தார்க்கும் செவிப்படும் என்றால் யாவருக்கும் தெரிந்து கொண்டாடும்படி யிருக்கும் என்பது கருத்து.

     கண் என்பது வாத்தியங்களின் நடுவிடம். காதத்திற்கும் யோசனைக்கும் கிஞ்சித்துப் பேதமுண்டென்பது சிலருடைய கொள்கை. அடுக்கிய - செயப்படுபொருள் செய்தது போல் வந்தது. உலகம் பதினான்கா யிருக்க மூவுலகு என்றது என்னையெனின் மேல் கீழ் நடு என்கிற நோக்கத்தா லென்க. அல்லது, கிருதகம் அகிருதகம் கிருதகா கிருதகம் என மூவகைப் பட்ட வுலகமாம். கிருதகம் என்றால் செய்யப்பட்டது. பூமி பாதாள முதலானது; அகிருதகம் என்றால் செய்யப்படாதது, தபோலோக சத்தியலோகங்கள்; கிருதகா கிருதகம் என்றால் செய்யப்பட்டதும் செய்யப் படாததுமாயிருப்பது, சொர்க்கம் முதலியது. கேட்குமே - ஏகாரம் தேற்றம்.