செல்வ நிலையாமை
துறவியல்
[அதாவது செல்வம் நிலையல்ல வென்பதைக் குறித்துச் சொல்லியது. செல்வநிலையாமை - செல்வத்தின் நிலையாமையைத் தெரிவிக்கிற அதிகாரம். அதிகாரம் - தலைமை; செல்வநிலையாமையைத் தலைமையா வைத்துச் சொல்லிய பாடல் என்பது திரண்ட பொருள். மற்றவைகளு மிப்படியே.]
1. அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று.
(இ-ள்.) அறுசுவை உண்டு - (தித்திப்பு முதலிய) ஆறு உருசிகளையுமுடைய போசனத்தை, இல்லாள் அமர்ந்து ஊட்ட - பெண் சாதி அன்பு கொண்டு உண்பிக்க, மறு சிகை நீக்கி - மற்றொரு கவளத்தைத் தள்ளி, உண்டாரும் - உண்ட செல்வர்களும், வறிஞர் ஆய் - தரித்திரராகி, ஓர் இடத்து சென்று இரப்போர்களாகில், செல்வம் ஒன்று - செல்வமென்கிற ஒரு பொருள், உண்டு ஆக - நிலையாயிருக்கிறதாக, வைக்கல் பாற்று அன்று - வைக்கும்படியான தன்மையுடையது அல்ல, எ-று.
பரிசாரகர் பலரிருக்கையிலும் இல்லாளே அன்பு கூர்ந்து பல இன்சொற்களோடு வேண்டி உண்பிக்கையில் ஒருவகையுண்டியில் ஒரு கவளமேயன்றி மற்றொன்றை நீக்கிப் புசித்த மிக்க செல்வமுடையவர்க்கும் வேறோரிடத்திற் போய் கூழையிரக்கும்படி நேரிடுமானால் செல்வமென்பது நிலையான பொருளென்று நினைக்கத் தக்கதல்ல என்பது கருத்து.
அறுசுவை - இரண்டனுருபும் பயனு முடன் தொக்க தொகை; அறுசுவை - பண்புத்தொகை. உண்டி - உண் - பகுதி, இ - செயப்படுபொருள் விகுதி, ட் - எழுத்துப் பேறு. இல் = இல்லறம், அதற்கு உரியவள் இல்லாள். ஊட்ட - பிறவினை வினையெச்சம்; உண் - பகுதி, டு - பிறவினை விகுதி, முதல் நீட்சி - விகாரம்; ஆக ஊட்டு - பிறவினைப் பகுதி. சிகை = குடுமி, பிசைந்த அன்னத்தில் எடுக்குங்கவளம் அதுபோல் தோன்றுதலால் ஆகுபெயராய்க் கவளத்தை யுணர்த்திற்று. வறிஞர் - ஞகரம் பெயர்ப்பகுபத இடைநிலை. "இலக்கியங் கண்டதற்கு" [நன். பதவி. சூ.14]. உண்டு - குறிப்புமுற்று. வைக்கல் - தொழிற்பெயர்; வைக்கலாகிப் பால் = வைக்கற்பால், இரு பெயரொட்டுப் பண்புத் தொகை; பால் - தன்மை, அதனையுடையது வைக்கற்பாற்று; று - ஒற்றன்பால் விகுதி, குறிப்புமுற்று; இது அன்று என்பதோடு சேர்ந்து ஒரு தன்மைப்பட்டு எதிர்மறை வினைமுற்றாயிற்று.
2. துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
(இ-ள்.) செல்வம் - அகடு உற - நடுவுநிலைமை பொருந்த, யார் மாட்டும் - யாரிடத்திலும், நில்லாது - நிற்காமல், சகடக்கால் போல - பண்டியின் சக்கரம்போல, வரும் - (கீழ்மேலாகவும் மேல் கீழாகவும்) மாறி வரும்; (ஆதலால்) துகள் தீர் பெருஞ் செல்வம் - குற்றமற்ற பெரிய செல்வமானது, தோன்றியக்கால் - உண்டானால், தொட்டு - (அது) தொடங்கி, பகடு நடந்த கூழ் - எருமைக்கடாக்கள் உழைத்ததனாலுண்டாகிய சோற்றை, பல்லாரோடு உண்க - (ஏழைகள்) பலரோடு (கூடி) உண்ணக்கடவர்கள், (செல்வம் தோன்றியவர்கள்), எ-று.
செல்வம் சகடக்கால்போல் தாழ்ந்து முயர்ந்தும் நிலையின்றி வருவதாதலால் அச்செல்வ முண்டான காலந்தொட்டுப் பலருக்கு மிட்டுத் தாமு முண்பது நலம் என்பது கருத்து.
தோன்றியக்கால் - எதிர்காலவினையெச்சம்; தொட்டு என்பதோடு அது என்பதை வருவித்துக் கூட்டுக. பகடு நடந்த கூழ் என்பது கடாவின் உழைப்பினாலுண்டான சோற்றில் ஒருவருக்கு மாத்திரஞ் சுதந்திரம் வேண்டாமென ஓரெளிமையைக் காட்டுதற்கு, நடந்த என்னும் பெயரெச்சம் காரியப் பெயரைக் கொண்டது. "அறுபொருட் பெயரும் எஞ்சநிற்பது பெயரெச்சம்" என்பதில் உம்மையை எச்சப் பொருளதாவைத்து, பிறபெயரும் என்று உரைத்திருப்பதைக் காண்க. நில்லாது - முற்றெச்சம்; எதிர்மறை வினையெச்சமுமாம். துகள் தீர் என்பதில் தீர் வினைத்தொகை யாதலின் பகரம் இரட்டியாது நின்றதென உணர்க.
3. யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.
(இ-ள்.) யானை எருத்தம் பொலிய - யானையின் பிடரானது விளங்கும்படி, குடை நிழல் கீழ் - குடையினது நிழலிலே, சேனை தலைவராய் சென்றோரும் - சேனைகளுக்கு அதிபதியாகிச் சென்ற அரசர்களும், ஏனை வினை உலப்ப - மற்றவினை [தீவினை] கெடுப்பதனால், வேறு ஆகி - (முன்னிருந்த நிலையினின்றும்) வேறுபட்டு, தாம் கொண்ட மனையாளை - தாங்கள் கலியாணஞ் செய்து கொண்ட மனைவியை, மாற்றார் கொள - பகைவர் கொண்டு போக, வீழ்வர் - கெடுவார்கள், எ-று.
சேனைகள் சூழ்ந்து வர யானை மேல் செல்லும் பெருஞ் செல்வமுடைய அரசர்களும் அந்த நல்வினை போய்த் தீவினை வரும்போது தம் மனையாளுந் தமக்கு உதவாதபடி பிறர் கொண்டு போக வறுமையும் சங்கடமும் அடைவர் ஆதலால், செல்வஞ் சதமன்றென நோக்கி அது கிடைத்த போது தரும சிந்தையோடிருக்க வேண்டும் என்பது கருத்து.
எருத்தத்தில் பொலிய என உரைக்கவுங் கூடும். பொலிய என்னும் வினையெச்சம் சென்றோர் என்பதற்கு உரியா நின்றது. கீழ் - ஏழனுருபு. உம்மை - உயர்வு சிறப்பு. செல்வம் நல்வினைப் பயனாதலின் ஏனை என்பது தீவினைக்காயிற்று. உலப்ப - இதுவேறாகி என்பதற்குங் காரணப் பொருட்டாய் வந்த செயவெனெச்சம். கொள - இது வீழ்வர் என்பதற்குக் காரணம்.
4. நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.
(இ-ள்.) வாழ் நாள் - ஆயுள், சென்றன சென்றன - நிச்சயமாய் விரைவில் போகாநின்றன; கூற்று - எமன், செறுத்து - கோபித்து, உடன் வந்தது வந்தது - கூடவே நிச்சயமாய் வரக் காத்திருக்கிறது; (ஆதலால்) நின்றன நின்றன - இருக்கின்றன இருக்கின்றன என்று நினைக்கப்பட்ட பொருள்கள், நில்லா என உணர்ந்து - அப்படி நிற்க மாட்டா [அழியும்] என்று அறிந்து, ஒன்றின ஒன்றின - உங்களுக்குச் செய்யக் கூடியவையாகப் பொருந்தின தருமங்களை, செயின் - செய்யப் புகுந்தால், வல்லே செய்க - துரிதமாய்ச் செய்யக் கடவீர்கள், எ-று.
கூடிய நற்காரியங்களைச் செய்ய வேண்டின் சீக்கிரஞ் செய்ய வேண்டும், ஆகட்டும் பின் செய்வோ மென்றால் நாம் ஸ்திரமென்று நினைக்கிற பொருள்கள் அழிந்து போகின்றன. அன்றியும் நமக்கும் நாளேற ஆயுள் குறுக எமன் கொண்டு போகக் காத்திருக்கிறான், பின்பு நாம் ஒன்றுஞ் செய்ய முடியாது என்பது கருத்து.
சென்றன சென்றன என்னும் அடுக்கு விரைவைக் காட்டுகின்றது. நிச்சயம் பற்றி நிகழ்காலத்தில் இறந்தகாலம் வந்தது. வந்தது வந்தது என்பதும் அப்படியே; ["விரைவினுமிகவினும்" பொது. சூ.33] நின்றன நின்றன என்பதில் முதலது முற்றெச்சம், இரண்டாவது வினையாலணையும் பெயர், இங்கும் முன்போல் காலவழுவமைதி; அங்ஙனம் நினைக்கப் பட்டன என்று பிரகரணத்தால் கொள்ளப்பட்டது. ஒன்றின ஒன்றின என்னும் அடுக்கு அப்போது அப்போது எனக் கால பேதத்தைக் குறித்து வந்தது. வல்லே - இடைச்சொல். கூற்று - சொல்லளவில் அஃறிணையாய் உயர்திணைப் பொருளை யுணர்த்துகின்றது.
5. என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
கொடுத்தாறு செல்லும் சுரம்.
(இ-ள்.) என் ஆனும் ஒன்று - ஏதாகிலும் ஒரு பொருள், தம்மை உற பெற்றக்கால் - தமது கையிற் சேரப் பெற்றால், பின் ஆவது என்று - (இதனைக் கொடுப்பது) பிற்காலத்திலாகட்டுமென்று, பிடித்து இரா - பிடித்து வைத்திராமல், முன்னே கொடுத்தார் - முந்தியே கொடுத்தவர்கள், கோடு இல் தீ கூற்றம் - கோணுதலில்லாத தீய எமன், தொடுத்து செல்லும் - கயிற்றாற் கட்டிப் போகின்ற, சுரம் ஆறு - பாலைநில வழியினின்றும், உயப் போவர் - தப்பிப் போவார்கள், எ-று.
பிறர்க்குக் கொடுக்கத்தக்கதாகக் கையிலோர் பொருள் கிடைத்த போதே அதனைக் கொடுப்பவர் எமன் கொண்டு போகுங் கொடிய வழியினின்று தப்பி நல்ல நல்ல நெறியிற் செல்வர், அதாவது சுவர்க்க நெறியிற் செல்வர் என்பது கருத்து.
சுரம் - காய்ச்சலான என்னவுமாம். தொடுத்த ஆறு என்பது தொடுத்தாறு என்று ஈறு தொகுத்தலாய் கொண்டு கட்டிய படியே எனவு முரைக்கலாம்.
தான் கொண்ட கொள்கையைச் சிறிதும் பிசகாமல் நிறைவேற்றுதலால் "கோடு இல் தீங்குற்றம்" என்றது. பாலை நிலமாவது சிறிதும் நீர் நிழல்களில்லாத வெட்டவெளி. சுரம் என்பது 'ஜ்வரம்' என்கிற ஆரியத்தின் திரிபு. என் என்பது இடை குறைந்த எவன் என்னுங் குறிப்பு முற்றினாலணையும் பெயர். ஆனும் என்பது விகற்பப் பொருளில் வந்ததோ ரிடைச் சொல். ஆவது என்பது இங்கு வியங்கோளாக் கொள்ளத்தக்கது. எதிர்கால முற்றாக் கொள்ளினும் கொள்ளலாம். பொருள் சிறிது சுற்றாம்.
6. இழைத்தநாள் எல்லை இகவா; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; - ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின் நாளைத்
தழீஇம்தழீஇம் தண்ணம் படும்.
(இ-ள்.) இழைத்த நாள் - (ஆயுளாக) ஏற்படுத்திய நாட்கள், எல்லை இகவா - தமது எல்லையைக் கடக்கமாட்டா; கூற்றம் ஒரீஇ - எமனை விட்டு பிழைத்து - தப்பி, குதித்து உய்ந்தார் - குதித்து ஓடிப்போனவர்கள், ஈங்கு இல்லை - இவ்வுலகத்திலில்லை; ஆற்ற - நிரம்ப, பெரும் பொருள் வைத்தீர் - மிகுந்த திரவியத்தைச் (சேர்த்து) வைத்திருப்பவர்களே! வழங்குமின் - கொடுங்கள், நாளை - நாளைக்கே [சீக்கிரத்தில்], தண்ணம் - பிணப்பறையானது, தழீஇம் தழீஇம் - தழீந்தழீ மென்னு மோசையாக, படும் - அடிக்கப்படும், எ-று.
ஒருவனுக்கு நிர்ணயித்த ஆயுசு ஒரு நிமிஷமும் மேலோடா தாகையால் எமனுக்குத் தப்பிப் பிழைத்தவரில்லை. நீரும் இறந்து போவதற்கு முன்பே பரோபகாரமாகப் பொருளைக் கொடுங்கள் என்பது கருத்து.
தண்ணம் படுமென்றது சாவுக்குக் குறிப்பு. ஆற்ற - வினையுரியா வந்த வினையெச்சம். வைத்தீர் - முன்னிலை வினையாலணையும் பெயர். நாளை என்பது காலவிரைவைக் காட்டியது. வழங்குமின் - மின் - ஏவற்பன்மை விகுதி.
7. தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்; - ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்
பிறந்தும் பிறவாதார் இல்.
(இ-ள்.) கூற்று - இயமன், தோற்றம் சால் ஞாயிறு - பிரகாச மிகுந்த சூரியனை, நாழிஆ - படியாகக் கொண்டு, வைகலும் - தினந்தோறும், நும் நாள் அளந்து உண்ணும் - உமது ஆயுளை அளவிட்டுத் தின்கிறது; (ஆதலின்) ஆற்ற அறம் செய்து - மிகுதியாகத் தருமத்தைச் செய்து, அருளுடையீர் ஆகுமின் - கிருபையுள்ளவர் ஆகுங்கள், (அப்படியாகாமற் போனால்) யாரும் - எப்படிப்பட்டவரும், பிறந்தும் - மனிதராய்ப் பிறந்தும், பிறவாதாரில் - பிறவாதார் போலவே (ஆவர்), எ-று.
ஜனங்களே! ஆயுள் சீக்கிரத்திற் கழிந்து போகின்றது; அப்படி கழியா முன்னமே பரோபகார முதலிய தருமங்களைச் செய்து உயிர்க்கு உயிராகிய கிருபை உள்ளவரென்று பலருஞ் சொல்லும்படி ஆகுங்கள்; அப்படி ஆகாமற் போனால் தருமங்களைச் செய்யக் கூடிய மனிததேக மெடுத்தும் உபயோகமில்லை என்பது கருத்து.
சூரியன் உதயமாவதனாலே நாளுண்டாகி அழிவதால் சூரியனை அளவுக் கருவியாகவும், அது அழிய ஆயுசு குறைந்து போவதனால் கூற்ற முண்ணுமென்றும் ரூபித்தார். 'அறஞ்செய் தருளுடையீராகுமின்' என்பதை விகுதி பிரித்தல் என்கிற நியாயத்தினால் 'அருளுடையீராகி அறஞ் செய்மின்' என்று மாற்றிப் பொருளுரைத்தல் நேர். பிறவாதாரில் - ஐந்தனுருபு, ஒப்புப் பொருளில் வந்தது. சால் ஞாயிறு - உரியடியாகப் பிறந்த வினையின் தொகை, உரித்தொடரென்பதே நேர். வைகலும் - உம்மை முற்றுப் பொருளில் வந்தது.
8. செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.
(இ-ள்.) செல்வர் யாம் என்று - நாம் செல்வமுடையவராயிருக்கிறோமென்று நினைத்து, தாம் செல் உழி - தாம் போகுமிடங்களில், எண்ணாத - (பிறரை) மதியாத, புல் அறிவாளர் - அற்பபுத்தியுள்ளவர்களுடைய, பெருஞ் செல்வம் - பெரிய சம்பத்தும், எல்லில் - இரவில், கருங் கொண்மூ வாய் திறந்த மின்னுபோல் - கருமையாகிய மேகம் வாய் திறப்பதனாலுண்டாகிய மின்னலைப் போல, தோன்றி - காணப்பட்டு, மருங்கு அற இருந்தவிடம் தெரியாமல், கெட்டுவிடும் - அழிந்துபோம், எ-று.
செல்வச் செருக்கினால் பிறரை மதியாத அற்பருடைய செல்வம் மின்னல் தோன்றி அழிவது போல் விரைவில் அழிந்து போம் என்பது கருத்து.
ஜனங்களுடைய தோற்றத்திற்கு வாய் திறந்து விடுவது போல் காணப்படுதலால் 'கருங்கொண்மூ வாய் திறந்த' என்றார்.
செல்வர்யாம் என்றது ஓரிடம் பிறவிடந் தழுவிய வழுவமைதி [பொது. சூ. 29] செல்வுழி - செல் உழி என்பதில் "எகர வினாமுச் சுட்டின் முன்னர்" என்னுஞ் சூத்திரத்தில் 'நெறி' என்பதனால் வகரந் தோன்றியது; [உயிர். சூ. 13ன்] உரையைக் காண்க. பெருஞ் செல்வமும் என உயர்வு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. கொண்மூ - நீரைக் கொள்ளூந் தன்மையால் வந்த காரணப் பெயர் என்னலாம். மூ - விகுதி. இலக்கியங் கண்டதற்கு இலக்கண மியம்ப வேண்டுவது நியாயம். திறந்த - இப்பெயரெச்சம் காரியப் பெயர் கொண்டது.
9. உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ
இழந்தான்என் றெண்ணப் படும்.
(இ-ள்.) உண்ணான் - (ஒருவன்) தான் உண்ணாதவனாயும், ஒளி நிறான் - தன்னிடத்துப் பிரகாசத்தை நிறுத்தாதவனாயும், ஓங்குபுகழ் செய்யான் - வளரும்படியான கீர்த்தியைச் சம்பாதியாதவனாயும், துன் அரு கேளிர் - சேருதற்கு அரிய உறவினருடைய, துயர்களையான் - துன்பங்களை நீக்காதவனாயும், வழங்கான் - (யாசகர்க்குக்) கொடாதவனாயும், கொன்னே - வீணாக, பொருள் காத்திருப்பானேல் -, அ ஆ - ஐயோ! இழந்தான் என்று எண்ணப்படும் - (அப்பொருள்) போக்கடித்துக் கொண்டானென்று (புத்திமான்களால்) எண்ணப்படுவான், எ-று.
செல்வம் நிலையற்றதாகையால் அது கிடைத்தபோதே தானும் அனுபவித்து நல்ல விஷயத்திலும் உபயோகப்படுத்தாமற் போனால் அதை இழந்ததற்குச் சமானம் என்பது கருத்து.
ஒளி நிறான் என்றது ஆடையாபரணங்களாலே தன்னிடத்து ஒரு பிரகாசத்தை உண்டாக்காதவன் என்றபடி, புகழாவது, தேவாலயம் பிரமாலயம் சத்திரம் சாலை முதலிய செய்தலாலாவது. ஓங்கு புகழ் என்றது மேலுலகங்களிலுஞ் செல்லும்படியான புகழ் என்பதற்கு; புகழினால் சொர்க்க முண்டு என்பது சாஸ்திரக் கொள்கை. எப்போதோ ஒரு கால் ஏதோ ஒரு துன்பமடைந்து தம்மவனென்று தன்னிடம் வந்த பந்துக்கள் என்பதற்கு 'துன்னருங்கேளிர்' என்றார்.
நிறான் - நிறு - பகுதி, ஆன் - விகுதி, இடைநிலையின்றி வந்ததனால் எதிர்மறையையுங் காட்டியது; ஆகாரம் புணர்ந்து கெட்டதெனவும், ஆ எதிர்மறையினிடை நிலையும் னகர விகுதியும் வந்தன எனவும் கொள்வது முண்டு. கொன் - இடைச்சொல். அ ஆ - இரக்கக் குறிப்பு. எண்ணப்படும் - "பல்லோர் படர்க்கை" என்கிற சூத்திரத்தினால் செய்யுமென் முற்று ஆண்பாலுக்கு வந்தது [வினை. சூ. 29]
10. உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி.
(இ-ள்.) வான் தோய் மலை நாட - ஆகாயத்தை அளாவிய மலைகளுள்ள நாட்டின் அரசனே! உடாஅதும் - தான் உடுக்காமலும், உண்ணாதும் - உண்ணாமலும், தம் உடம்பு செற்றும் - தமது உடம்பை வருத்தியும், கெடாத நல்லறமும் செய்யார் - அழியாத நல்ல தருமங்களையும் செய்யாராகி, கொடாது - (ஆதுலர்க்கு) கொடாமல், வைத்து ஈட்டினார் - ஈட்டி வைத்தவர்கள், இழப்பர் - அச்செல்வத்தை இழந்து போவர்; உய்த்து - (பல மலரினின்றும்) கொண்டு வந்து, ஈட்டும் - சேர்த்து வைக்கிற, தேன் ஈ - தேனீயானது, கரி - (இதற்கு) சாட்சி, எ-று. [ஈட்டல் - சம்பாதித்தல்]
இதற்கும் முற்பாட்டின் கருத்தே கருத்து. தேனீயானது பல பூக்களிலுஞ்சென்று கொண்டு வந்து தேனைச் சேர்த்து வைக்க அதை யாரோ கொண்டு போவது போல் தனக்கும் பிறர்க்கும் பயன்படுத்தாத பொருளைக் கள்ளர் முதலினோர் கொண்டு போவர் என்பது விசேஷம்.
'தம் உடம்பு செற்றும் கெடாத நல்லறம்' என்றது, தமது உடம்பை அழியும்படி வருத்தினாலும் உடம்பு அழியுமேயன்றி அறம் அழியாமலிருக்கும், அப்படிப்பட்ட தருமத்தை எனச் சிறப்பிக்கும்படி.
உடா அது முதலிய அளபெடைகள் இசை நிறைக்க வந்தவை. செற்றும் - உம்மை இழிவு சிறப்பு, அறமும் - உயர்வு சிறப்பு; மற்ற உம்மைகள் எண்ணும்மை. வைத்து ஈட்டினார் என்பதை ஈட்டி வைத்தார் என விகுதி பிரித்துக் கூட்டிக் கொள்க. உய்த்தீட்டும் என்பதையும் அப்படி பிரித்து உரைக்கலாம். ஒரு காரியத்தைக் கண்டவனேயன்றி அனுபவித்தவனும் சாக்ஷியாவானாகையால், 'தேனீக்கரி' என்றார். தேன் என்பதைப் பிரித்து ஈட்டினார் என்பதற்குச் செயப்படு பொருளாவைத்தும் உரைக்கலாம்.
