ஸ்வாமி விவேகானந்தரின் பக்குவம்

ஸ்வாமி விவேகானந்தரின் பக்குவம்

bookmark

ஒரு முறை ஸ்வாமி விவேகானந்தர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் அப்போது சில ஆங்கிலேயர்கள் ஏறினர். விவேகானந்தரின் உடை அவரது முண்டாசு போன்ற கோலத்தைப் பார்த்து சிரித்தனர். ஆங்கிலத்தில் கேலி செய்தனர். எல்லாம் இவரும் கேட்டுக் கொண்டிருந்தார், பின் ரயில் நிலைய அதிகாரி வந்தார் அவருடன் சுவாமி சரளமாக ஆங்கிலத்தில் பேசினார், பின் ஒரு ஸ்டேஷனின் ரயில் நின்று விட்டுக் கிளம்பியதும் அவர்கள் கேட்டனர்' நாங்கள் உங்களைப் பற்றி கேலியாகவும் கிண்டலாகவும் பேசினோமே! நீங்கள் ஏன் ஒன்றும் கேட்கவில்லை? உங்களுக்கு கோபமும் வரவில்லை? நீங்கள் சண்டைக்கும் வரவில்லையே?" என்று

அதற்கு அவர் விடையளித்தார் " நான் முட்டாள்களச் சந்திப்பது இது முதல் தடவையல்ல" என்று ...

இதே போல சுவாமிஜியின் ரயில் பயணத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தைப் பற்றியும் பார்ப்போம் வாருங்கள்

நரேந்திரர் வாழ்வில் ராமபிரானின் பெரும் கருணை:-

விவேகானந்தர் நரேந்திரராக இருந்த காலத்தில், ஒரு நாள் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் மேற்கொண்டு இருந்தார். கடுமையான கோடைக்காலம். தாகம் நாக்கை வரட்டியது. ரயில் நிலையங்களில் காசு கொடுத்தால் தான் தண்ணீர் கிடைக்கும். நரேந்திரரிடம் காசு வைத்துக் கொள்ளும் வழக்கம் இல்லை. அவர் அருகில் உட்கார்ந்து இருந்த ஒருவர் "சின்ன வயது, திடகாத்திரமான உடல்; உழைத்துப் பிழைக்காமல் சந்நியாச வேடம் போடுகிறாயே" என்று நரேந்திரரைக் குற்றம் சாட்டினார்.

நரேந்திரர் அந்த நிலையில் எதுவும் பேசவில்லை. ரயில் நிலையம் ஒன்று வந்ததும் சற்று இறங்கி இளைப்பாற நிழல் தேடினார். நிலைய ஊழியர்களோ அவரை உட்கார விடாமல் விரட்டினார்கள்.

கொளுத்தும் வெய்யிலில் நரேந்திரர் அமர்ந்து இருந்தார். அப்போது ரயிலில் அவருடன் உட்கார்ந்து இருந்தவர் "காசும் பணமும் எதற்கு என்று உபதேசம் செய்கிறீர்களே. இப்போது புரிந்ததோ?" என்று ஏளனம் செய்தார். நரேந்திரர் இதற்கும் மெளனமாக இருந்தார்.

அப்போது அவ்வூரில் வசிக்கும் ஒருவன் விரைந்தோடி வந்து நரேந்திரரை வணங்கினான். அவன் கையிலே பலகார மூட்டை ஒன்றும் தண்ணீர் கூஜாவும் இருந்தன. அவனை, நரேந்திரர் "யாரப்பா" என்று அன்பொழுக வினவினார்.

அவனோ, தரையை சுத்தம் செய்தான். துண்டை விரித்தான். மூட்டையை அவிழ்த்து பூரிகளையும் மிட்டாய்களையும் இலையில் குவித்து, சாப்பிடுங்கள் என்று உபசரித்தான். பசி, தாகம் வாட்டிய போதிலும், உடனே அவர் உண்ணவில்லை. அவன் வேறு யாரையோ தவறுதலாக நினைத்து, தனக்கு உணவு அளிக்கிறானோ என்ற ஐயம் அவருக்கு எழுந்தது.

ஆனால் உணவு கொண்டு வந்த அவனோ நிச்சயமாக இருந்தான்.

"நான் இவ்வூரில் மிட்டாய் கடை வைத்து இருக்கிறேன். பகலில் சற்று தூங்குவேன். இன்றும் தூங்கும் போது ஸ்ரீ ராமர் என் கனவில் தோன்றி உங்களை என் முன்னே காட்டி 'இவர் இரு தினங்களாகப் பட்டினியாக இருக்கிறார். அவருக்குப் பலகாரங்கள் செய்து கொடு" என்று கட்டளை பிறப்பித்தார். ராமரின் கட்டளையை ஏற்றுச் சுடச் சுட பூரி மிட்டாய்களைச் செய்து கொண்டு வந்தேன்" என்று கூறி முடித்தான்.

நரேந்திரர் ஸ்ரீ ராமரின் அருள் பிரசாதமாக அவற்றை உண்ணும் போது, ரயிலில் உடன் பயணம் செய்தவர் சந்நியாசத்தின் மேன்மையை உணர்ந்தவராக நரேந்திரரை மீண்டும் மீண்டும் வணங்கி மரியாதை செய்தார்.