வேள்விப் படலம் - 471

bookmark

சுவாகுவைக் கொன்று மாரீசனைக்
கடலிலே தள்ளுதல்

471.

துணர்த்த பூந் தொடையலான் பகழி தூவினான்;
கணத்திடை விசும்பினைக் கவித்துத் தூர்த்தலால்.
‘பிணத்திடை நந்து இவர் பிடிப்பர் ஈண்டு’ எனா
உணர்த்தினர். ஒருவர்முன் ஒருவர் ஓடினார்
 
துணர்த்த  பூந்தொடையலான்- கொத்தாக விரிந்தமலர்  மாலையை
அணிந்த   ராமபிரான்; பகழி தூவினான் - (மற்றுமுள்ள அரக்கர்களின்
மேல்) அம்புகளை  ஏவினான்;  கணத்திடை  விசும்பினைக் கவித்து-
அவ்வம்புகள்   ஒரு   கணப்போதில்  வானத்தைச்  சூழ்ந்து  கொண்டு;
தூர்த்து  -  மூடிவிட்டது;   இவர்  பிணத்திடை  நடந்து  -  இந்த
அரசகுமாரர்கள்   பிணங்களின்   மீது   நடந்து   வந்தேனும்;  ஈண்டு
பிடிப்பர்  எனா  இங்கு  -  நம்மைப் பிடித்துக் கொள்வார்கள் என்று;
உணர்த்தினர்  - ஒருவருக் கொருவர் தெரிவித்துக்  கொண்டவர்களாய்;
ஒருவர்முன்  ஒருவர்  ஓடினர் - அந்த அரக்கர்கள் ஒருவருக்கு முன்
மற்றொருவராக ஓடலாயினர்.  

துணர்த்த:   கொத்தாக   விரிந்த.   தொடை: மாலை. பகழி: அம்பு.
கவித்தல்:  சூழுதல்.  தூர்த்தல்: மூடுதல்  அல்லது  மறைத்தல். விசும்பு:
வானம்.  எனா:  என்று.  செயா  என்ற   வாய்பாட்டு   வினையெச்சம்.
உணர்த்தினர்.  -  முற்றெச்சம்.  ராமபிரான்  அம்புகளை  ஏவ  அவை
வானையும்  மறைத்துவிட்டது. அஞ்சிய அரக்கர்கள்  பிணத்தின்  மேல்
நடந்தேனும்   நம்மைப்   பிடித்துவிடுவார்  என   ஒருவருக்கு   முன்
ஒருவராக ஓடலாயினர் என்பது கருத்து.                        52