வேள்விப் படலம் - 470
இராமபிரான் ஏவிய வாளி
470.
திருமகள் நாயகன் தெய்வ வாளிதான்.
வெருவரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது; அங்கு
ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே.
திருமகள் நாயகன் - இலக்குமி கேள்வனாகிய இராமபிரானுடைய;
தெய்வவாளிதான் - தெய்வத்தன்மை வாய்ந்த அம்பானது வெரு வரு
தாடகை பயந்த - மூவுலகும் அஞ்சும்படியான தாடகை பெற்ற;
வீரர்கள் இருவரில் - வீரர்களான சுபாகு. மாரீசன் என்னும் இரண்டு
பேரில்; ஒருவனைக் கடலில் இட்டது - ஒருவனான மாரீசனைக்
கடலில் தள்ளிவிட்டது; அங்கு ஒருவனை - மற்றவனான சுபாகு
என்பவனை; அந்தக புரத்தில் உய்த்தது - எம்புரியில் கொண்டு
போய்ச் சேர்த்தது.
திருமகள் நாயகன் திருமால்: திருவின் அவதாரமான ராமனை
இப்பெயரால் குறிப்பிட்டார். முன்பும் ‘’திருமாலின் கேள்வன் என்றது
நினைவுகூரத் தக்கது. தெய்வ வாளி: தெய்வத்தன்மை வாய்ந்த அம்பு.
அந்தகன்: எமன். புரம்: ஊர். உய்த்தல்: செலுத்துதல். ராமபிரானது
தெய்வத்தன்மை வாய்ந்த அம்பு தாடகையின் பிள்ளைகளில்
ஒருவனைக்கடலில் சேர்த்தது. மற்றொருவனை அந்தகனூர்க்குக்
கொண்டு போய்ச் சேர்த்தது என்பது கருத்து. 51
