வேள்விப் படலம் - 469

bookmark

இராமபிரான் அரக்கரொடு பொருதல்

469.

கவித்தனன் கரதலம்; ‘கலங்கலீர்’ என.
செவித்தலம் நிறுத்தினன். சிலையின் தெய்வ நாண்;
புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்;
குவித்தனன். அரக்கர்தம் சிரத்தின் குன்றமே.
 
கலங்கலீர்  என -  முனிவர்களே!  கலக்கமுறாதீர்கள் என்று  கூறி;
கரதலம்   கவித்தனன்  -  கைகளைக் கவித்து அவர்களை அமர்த்திய
இராமபிரான்;  சிலையின்   தெய்வ   நாண்   -   தனது  வில்லின்
தெய்வீகமான  நாணை; செவித்தலம் நிறுத்தினன் - காதுவரை இழுத்து
நிறுத்தினவனாய்;  புவித்தலம்  குருதியின்   புணரி  ஆக்கினான் -
அந்தக்   காட்டினையே   இரத்தக்  கடலாக்கினவனாய்;  அரக்கர் தம்
சிரத்தின்   குன்றம்   குவித்தனன்   -   அரக்கர்களின் தலைகளை
மலையாகக் குவித்து விட்டான்.   

கவித்தல்:     அமர்த்தல். கரதலம்: உள்ளங்கை. செவித்தலம்:  இரு
பெயரொட்டுப் பண்புத் தொகை. நாண்: கயிறு. குருதி: இரத்தம்.  புணரி:
கடல்.   சிரத்தின்  குன்றம்:  உருவகம்  கலங்காதீர்கள்  எனக்   கூறி.
கையமர்த்தி  வில்லின் நாணைக் காதுவரை இழுத்து நிறுத்தி -  அந்தக்
காட்டையே  இரத்தக்  கடலாக்கி - அரக்கர்களின் தலை  மலைகளைக்
குவித்துவிட்டான் இராமபிரான் என்பது கருத்து.                 50