வேள்விப் படலம் - 468
சித்தாச்சிரம முனிவர் இராமபிரானிடம்
அடைக்கலம் புகுதல்
468.
நஞ்சு அட எழுதலும் நடுங்கி. நாள்மதிச்
செஞ் சடைக் கடவுளை அடையும் தேவர்போல்.
வஞ்சனை அரக்கரை வெருவி. மா தவர்.
‘அஞ்சனவண்ண! நின் அபயம் யாம்’ என்றார்.
நஞ்சு அட எழுதலும்- (பாற்கடலைக் கடைந்த போது) நஞ்சு
தம்மை அழிப்பதற்கு எழுந்து வர; நடுங்கி. நாள்மதிச் செஞ்சடைக்
கடவுளை அடையும் தேவர் போல் - நடுக்கம் கொண்டு பிறைச்
சந்திரனை அணிந்துள்ள சிவந்த சடைமுடியினான சிவபிரானை
அடைக்கலம் அடைந்த தேவர்களைப் போல்; வெஞ்சின அரக்கரை
வெருவி - கொடுஞ் சினமுடைய அரக்கர்களுக்கு அஞ்சி; மாதவர் -
வேள்விச் சாலையிலிருந்த முனிவர்கள் எல்லாம்; அஞ்சன வண்ண -
மை போன்ற நிறத்தை உடைய இராம பிரானே!; யாம் நின் அபயம்
என்றனர் - நாங்கள் உன் அடைக்கலம் என்றார்கள்.
அட: அழிக்க. அடல்: தொழிற்பெயர். நாள்மதி: ஒருகலைச்
சந்திரன். செம்மை+சடை: செஞ்சடை. வெருவுதல்: அஞ்சுதல்.
அஞ்சனம்: மை. வண்ணம்: நிறம். பாற்கடலில் நஞ்சுஎழ. அஞ்சிய
வேதர்கள் சிவபெருமானை அடைக்கலம் அடைந்தது போல.
அரக்கர்களுக்கு அஞ்சிய முனிவர்கள் இராமபிரானை அடைக்கலம்
அடைந்தனர் என்பது கருத்து. 49
