வேள்விப் படலம் - 461

bookmark

அரக்கர் வருதல்

461.

வார்த்தை மாறு உரைத்திலன்.
   முனிவன். மவுனியாய்;
போர்த் தொழில் குமரனும்.
   தொழுது போந்தபின்.
பார்த்தனன் விசும்பினை;
   பருவ மேகம்போல்
ஆர்த்தனர். இடித்தனர்.
   அசனி அஞ்சவே.
   
முனிவன்   மௌனியாய்   -   விசுவாமித்திர   முனிவன்   வாய்
பேசாதவனாகி;  வார்த்தை   மாறு   உரைத்திலன்   -   மறுமொழி
கூறவில்லை; போர்த்தொழில்  குமரனும்  -  போர்த்  தொழில் வல்ல
இராமபிரானும்;  தொழுது  போந்தபின்  -  (அஃதறிந்து)  முனிவனை
வணங்கிச்   சென்றபின்னர்;  விசும்பினைப் பார்த்தனன் - வானத்தை
நோக்கினான்;  பருவ  மேகம்  போல்   ஆர்த்தனர்  - (அப்போது
அரக்கர் வந்து) பருவகால மேகத்தைப் போல ஆரவாரித்தவராகி; அசனி
அஞ்ச இடித்தனர் - இடியும் அஞ்சும்படி இடித்தார்கள்.   

வார்த்தை   மாறு:   மறு    வார்த்தை    (மறுமொழி).   மௌனி:
மௌனவிரதம்    மேற்கொண்டவன்.   போந்த:  வந்த.  அசனி:  இடி.
ஆர்த்தல்:   ஆரவாரித்தல்.  பருவ  மேகம்:  மழைக்காலத்து  மேகம்.
‘’தீயவர்  என்று வருவது’’ எனக்கேட்ட ராமனுக்கு முனிவன் மறுமொழி
கூறவில்லை.    வணங்கி   மீண்ட.  ராமன்  வானத்தைப்  பார்த்தான்.
அரக்கர் வந்து ஆரவாரித்தனர் என்க.                          42