வேள்விப் படலம் - 458

bookmark

விசுவாமித்திரன் வேள்வி தொடங்குதல்

458.

‘ஈண்டு இருந்து இயற்றுவென்
   யாகம். யான்’ எனா.
நீண்ட பூம் பழுவத்து
   நெறியின் எய்தி. பின்
வேண்டுவ கொண்டு. தன்
   வேள்வி மேவினான்.
காண்தகு குமரரைக்
   காவல் ஏவியே.
 
ஈண்டு  இருந்து   இயற்றுவன்   யாகம்   யான்   எனா    -
இவ்விடத்திலிருந்து   நான்   வேள்வியைச்  செய்வேன்  என்று; நீண்ட
பூம்பழுவத்து  - நீண்ட. மலர்  நிறைந்த அச்சோலையிடத்து; நெறியின்
எய்தி -  முறையாகச்  சென்று;  பின்  வேண்டுவ  கொண்டு - பின்
வேள்விக்குரியன  சேகரித்துக்கொண்டு;   காண்   தகு   குமரரை  -
அழகுடைய  அரசிளங்குமரர்களாகிய   இராம  இலக்குவர்களை. காவல்
ஏவி  .  காவல் புரியுமாறு கட்டளையிட்டு; தன் வேள்வி மேவினான் -
தனது வேள்வியைத் தொடங்கினான்.  

ஈண்டு:  இவ்விடம்.  இயற்றுவன்:   செய்வேன்   (தன்மை  ஒருமை
வினை   முற்று).   பூம்பழுவம்:  அழகிய   சோலையுமாம்.   காண்தகு:
காணத்தக்க  ‘நோக்குடை’  என  முன்னும்  கூறியது  காண்க.  காவல்:
காக்கும் செயல்.. மேவி: பொருந்தி. ஏவி: கட்டளையிட்டு.  

அரசிளங்    குமரர்களைக் காவலுக்கு ஏவி. விசுவாமித்திர முனிவன்.
இங்கிருந்து  வேள்வியைச்  செய்து  முடிப்பேன்   என்று.  வேள்விக்கு
வேண்டியவைகளைச்     சேகரித்துக்      கொண்டு     வேள்வியைத்
தொடங்கினான் என்பது கருத்து.                              39