வேள்விப் படலம் - 455

bookmark

விசுவாமித்திரமுனிவன் வாமனனை வியத்தல்

455.

‘உலகு எலாம் உள்ளடி
   அடக்கி. ஓர் அடிக்கு
அலகு இலாது. அவ் அடிக்கு.
   அன்பன் மெய்யதாம்.
இலை குலாம் துழாய் முடி
   ஏக நாயகன்.-  
சிலை குலாம் தோளினாய்!
   சிறியன் சாலவே!
 
ஓரடி உலகு எலாம் உள் அடி அடக்கிற்று-  ஊன்றிய  காலாகிய
ஒரு   அடி  உலகத்தை  எல்லாம்  பாதத்துள் அடக்கிவிட்டது;  அலகு
இலா  அவ்வடிக்கு  - அளந்து கொள்ள இடமில்லாத அந்த  மூன்றாம்
அடிக்கு;  அன்பன்  மெய்  அது  ஆம்  - பக்தனாகிய மகாபலியின்
தலையே அளவடியாக  ஆயிற்று;  சிலைகுலாம்  தோளினாய் -  வில்
பொருந்திய  தோளினை  உடைய இராமா!; இலைகுலாம்  துழாய்முடி-
இலைகள்  மிகுந்த  துளப  மாலையை  அணிந்துள்ள;    ஏகநாயகன்-
உலகுக்கு  ஒரு தனி முதல்வனான அத்திருமாலாகிய;  சாலச் சிறியன்-
மிகச் சிறிய வடிவினானா அவ்வாமனன்.   

இது  குளகம்.  அடுத்த  பாட்டுடன் பொருள் முடிவு பெறும். உலகு:
நிலம். உள்ளடி: அடியுள்  என்பது மொழிமாறி நின்றது. அலகு:  அளவு.
மெய்  அது  ஆம்:   மெய்யதாம்.  மாவலியின் உடம்பே அளவடியாக
ஆனது  என்பது  கருத்து.  ஏக நாயகன்: தனிப்பெருந்தலைவன். ஏகம்:
தனிமை.   ‘சாலச்சிறியன்’   திருமால்    கொண்ட  வாமன  வடிவைக்
குறித்ததாம்.   இச்சிறிய  வடிவமா   உலகத்தை   யெல்லாம்  ஓரடியுள்
அடக்கியது என வியந்து கூறியதுமாம். சால: மிக. ஏ: அசை.        36