வேள்விப் படலம் - 450
450.
‘’கட்டுரையின். தம கைத்து உள போழ்தே
இட்டு. இசைகொண்டு. அறன் எய்த முயன்றோர்
உள் தெறு வெம் பகைஆவது உலோபம்;
‘விட்டிடல்’ என்று விலக்கினர் தாமே.’
தமகைத்து உள போழ்தே- தமது செல்வம் இருக்கும் காலத்திலே;
இட்டு இசை கொண்டு - இரப்போர்க்கு ஈந்து புகழ் பெற்று: அறன்
எய்த முயன்றோர் - அறத்தை அடைய முயல்பவர்களான அறவாளர்;
உள்தெறு வெம்பகை யாவது உலோபம் - மனத்தை அழிக்கும்
கொடிய பகையாய் இருப்பது உலோப குணமாகும்; விட்டிடல் என்று -
(அதனை) விட்டுவிட வேண்டும் என்று; தாம் கட்டுரையின் விலக்கினர்
- (மேலோர்) நீதி நூல்களில் விளக்கிக் கூறியுள்ளனர்.
கட்டுரை: நீதி நூல் (வரையறுத்த உரைகள் என்பது பொருள்.)
கைத்து: பொருள் (செல்வம்). இட்டு: இரப்போர்க்குக் கொடுத்து. இசை:
புகழ். முயன்றோர்: வினையாலணையும் பெயர். உள்தெறு: உள்ளத்தை
அழித்து. உலோபம்: ஈகையின்மை (உளப்பரும் பிணிப்பு அரு
உலோபம் ஒன்றுமே அளப்பருங்குணங்களை அழிக்குமாறு போல் -
எனத் தாடகை வதைப்படலத்தும் கூறுவது நினைவு கூரத்தக்கது.
விட்டிடல்: விட்டு விடுக. அல்லீற்று வியங்கோள் வினைமுற்று.
செல்வம் இருக்கும் போதே ஏற்பவர்களுக்கு ஈந்து புகழ் பெற வாழ
வேண்டும். உள்ளத்தை அழிக்கும் கொடிய பகை உலோபம். அதனை
விட்டொழிக்க வேண்டும் என்பதே நீதி நூல்களின் துணிவு என்பது
கருத்து. 31
